இரண்டாம் பருவம் - ஞானப் பசி

1. முதல் நாள் பாடம்

     நிலத்தைப் போல் தன்னை அடைந்தவர்களைத் தாங்கும் பொறுமையையும், மலையைப் போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ளக் குறையாத வளமும், மலரைப் போல் மென்மையும், துலாக்கோலைப் போல் நடுநிலை பிறழாத தன்மையும் உடையவர்கள் தாம் பிறருக்குக் கற்பிக்கும் ஆசிரியராக தகுதியுடையவர்கள் என்று இளங்குமரன் பலமுறை பலரிடம் கேட்டிருக்கிறான். ஆனால் அத்தகைய முழுமையான ஆசிரியப் பெருந்தகை ஒருவரை நேற்று வரை அவன் சந்திக்க நேர்ந்ததில்லை. நீலநாகமறவர் அவனுக்குப் போர்த்துறைக் கலைகளைக் கற்பித்த ஆசிரியரானாலும் அவரிடம் நாங்கூர் அடிகளிடமிருந்ததைப் போன்ற மென்மையையும் குழந்தையுள்ளத்தையும் அவன் கண்டதில்லை. நீலநாக மறவர் வீரத்தின் ஆசிரியராக அவன் கண்களுக்குத் தோன்றினாரேயன்றி ஞானாசிரியராகத் தோன்றியதில்லை. கல்லைப் போல் உடம்பும் மனமும் இறுகிப் போன மனிதரான அவரிடம் நாங்கூர் அடிகளின் மென்மையை எதிர்பார்க்க இயலாது என்பதையும் அவன் இன்று தன் மனத்துள் ஒப்பிட்டுப் பார்த்து உணர்ந்தான். அப்படிப்பட்ட இரும்பு மனிதரும் நாங்கூர் அடிகளின் மாணவர் தாம் என்பதை நினைக்கும் போது அவனுக்கு வியப்பாயிருந்தது.

     அருட்செல்வ முனிவர் பெரிய ஞானியாயிருந்தாலும் அவரிடமே வளர்ந்ததனால் அவர் மேல் அவனுக்கு அன்பும் பாசமும் தான் உண்டாயின. அவரிடமிருந்து அன்புக்காகவும், பாசத்துக்காகவும் அவன் மனம் ஏங்கியதே அல்லாமல் ஞானத்துக்காக ஏங்கியதே இல்லை! ஞானத்துக்காக ஏங்குகின்ற மனப் பக்குவம் அப்போது அவனுக்கு இல்லை. ஆயிரம் கதிர் விரிக்கும் ஞாயிற்றொளி அலைகடற்கோடியில் மேலெழுந்து விரிவது போல் நாங்கூர் அடிகளின் முகத்தில் கண்டு கனிந்த ஞான மலர்ச்சியை இதற்கு முன் தான் யாரிடமும் கண்டதாக நினைவே இல்லை இளங்குமரனுக்கு. “அறியாமையையும் ஆணவத்தையும் தவிர என்னோடு வேறெவற்றையும் நான் கொண்டு வரவில்லையே, ஐயா!” என்று அந்தப் பேரறிஞருக்கு முன் தலைவணங்கி ஒடுங்கித் தளர்ந்து தான் கூறிய போது அவர் தனக்கு மறுமொழியாகக் கூறிய வார்த்தைகளை நினைத்து நினைத்து மகிழ்ந்தான் இளங்குமரன். நம்பிக்கையளிக்கும் அந்தச் சொற்கள் அவன் மனத்திலேயே தங்கி ஒலித்துக் கொண்டிருந்தன.

     “உன்னையே எனக்குக் கொடு; என்னுடைய ஞானத்தைப் பயிர் செய்யும் விளைநிலமாக இரு. இதுவே போதும்” இந்தச் சொற்களை எவ்வளவு குழைவாக எவ்வளவு தணிவாக வெளியிட்டார் அந்த ஞானச் செல்வர்! அவர் வாய் திறந்து நிதானமாகப் பேசிய போது இந்தச் சொற்களில் தான் எத்துணை நிறைவுடைமை!

     உலகத்தையெல்லாம் விலை கொள்ளும் பெரிய ஞானமும், கள்ளங்கபடமில்லாத பச்சைக் குழந்தை போன்ற மனமும், பழுத்த சொற்களாகத் தேர்ந்து முத்துத் தொடுப்பது போல் கவிதை நயமுள்ள பேச்சும் கண்டு இளங்குமரன் அவருக்கு ஆட்பட்டான். அவர் கேட்டுக் கொண்டாற் போல் தன்னையே அவன் அவருக்குக் கொடுத்துவிட்டான். காவிரிப்பூம்பட்டினத்தில் நேற்று வரை கழிந்த தன் நாட்கள், அந்த நாட்களோடு தொடர்புடைய மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் - எல்லாம் மெல்ல மெல்ல நீங்கி நாங்கூர் அடிகள் என்னும் ஞானக்குழந்தைக்கு வீரவணக்கம் புரியும் மற்றொரு ஞானக்குழந்தையானான் அவன்.

     இளங்குமரன் அங்கு வந்து சேர்ந்த மறுநாள் வைகறையில் போது விடிகையிலேயே அவனுடைய புது வாழ்வும் விடிந்தது. பறவைகள் துயில் விழித்துக் குரல் எழுப்பும் பனி புலராத காலை நேரத்தில் நாங்கூர் அடிகள் அவனை எழுப்பினார். அவர் அருகில் வந்து நின்றதுமே அவன் விழித்து எழுந்து விட்டான்.

     அந்தப் பெரியவர் அருகில் வந்து நின்றாலே விழிப்பும், எழுச்சியும் தானே உண்டாகும். அவர் நிற்கிற இடத்தில் பச்சைக் கர்ப்பூரமும் பவழமல்லிகையும் சேர்ந்து மணப்பது போல் ஒரு புனித மணம் நிலவும். மூப்பும், தளர்ச்சியும் ஒடுக்கியிருந்த அந்த உடம்புக்கே அத்தனை காந்தியானால் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி விளங்கியிருப்பார் என்று கற்பனை செய்தான் இளங்குமரன்.

     விலகும் இருளும், புலரும் ஒளியும் சந்திக்கும் சிற்றஞ்சிறு காலை நேரத்தில் இளங்குமரனை எழுப்பி, “என்னோடு வா!” என்று அழைத்துக் கொண்டு மலர் வனங்களிடையே நடந்து புறப்பட்டார் அவர். இளங்குமரன் அடக்கமாக அவரைப் பின் தொடர்ந்து சென்றான். இரண்டு பக்கங்களிலும் வழியை ஒட்டி மலர்ப் பொழில்களாதலால் காற்றே மண மண்டலமாகி வீசியது. அந்த நேரத்தில் அந்த வழியில் காற்று, பனி, ஆகாயம், பூமி எல்லாமே மணந்தன. பக்கத்துச் சிற்றோடைகளில் நீர் சிரித்தது. வாகை மரக்கிளைகளில் காகங்கள் கரைந்தன. கீழே நடந்து செல்லும் வழியில் மண் ஈர மணம் கமழ்ந்தது.

     சிறிது தொலைவு அமைதியாக நடந்து சென்ற பின், “உன்னுடைய மனமும் இப்போது இந்த நேரத்தைப் போல் இருக்கிறதல்லவா! இருளை அழித்துப் போக்கி விடுவதற்கும் ஒளியை வளர்த்துப் பெருக்கிக் கொள்வதற்கும் தானே தவிக்கிறாய் நீ” என்று இளங்குமரனைக் கேட்டார் அடிகள். இளங்குமரன் சிரித்தவாறு பதில் கூறினான்:

     “ஆனால் ஒளியின் அருகே ஒளியைப் பின்பற்றித்தான் நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் ஐயா!”

     “நல்லது தம்பீ! முதலில் நீ ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். என்னிடமே என்னைப் பற்றி அடிக்கடி நீ புகழ்ந்து சொல்லக் கூடாது. உலகத்தில் நல்ல அறிவாளிகள் எல்லாரும் முதலில் தாங்கள் அத்தகைய பேரறிவைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் என்ற நினைவே இன்றிக் குழந்தைகள் போல் இருக்கிறார்கள். பாமரர்கள் அவர்களிடமே அவர்களைப் புகழ்ந்து சொல்லிச் சொல்லி இழக்கக் கூடாத அந்தக் குழந்தைத் தன்மையை அவர்கள் இழக்கும்படி செய்துவிடுகிறார்கள். புகழைக் கேட்டுக் கேட்டு மனம் மூப்படைந்து விடுகிறது. அதனால் நான் அதை விரும்புவதே இல்லை. என்னுடைய ஞானத்துக்காக எல்லாரும் என்னைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டுமென்று நான் நினைப்பதேயில்லை. நான் வெறும் வாய்க்கால் தான். ஏரியிலிருந்து வாய்க்கால் வழியாகப் பாய்ந்து நிலத்துக்கு நீர் போவதில்லையா? ஞானம் எங்கோ நிரம்பியிருக்கிறது. அதைப் பாய்ச்ச வேண்டிய விளை நிலம் வேறெங்கோ கிடக்கிறது. அந்த விளைநிலத்தைத் தேடி அதில் போய்ப் பாயும்படி செய்யும் வாய்க்காலுக்குத் தனிப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? எங்கிருந்தோ வருகிற நீர் எங்கோ பாயப் போகிற நீர்! வாய்க்காலுக்கு ஏது பெருமை?”

     ஞானப்பசியோடு வந்திருந்த இளங்குமரனுக்கு முதல் பாடம் கிடைத்துவிட்டது. ‘தன்னை வியந்து கொள்ளும் மனத்திலிருந்து குழந்தைத் தன்மை போய்விடும். புகழுக்கு ஆட்பட்டுத் தவிக்கிற மனத்தில் இளமை குன்றி மூப்புச் சேரும்.’

     இருவரும் மறுபடி சிறிது தொலைவு வரை மௌனமாக நடந்தனர். சிறிது சிறிதாக ஒளிபரவி விடிந்து கொண்டிருந்தது. நாங்கூர் அடிகள் மீண்டும் அவனை நோக்கிக் கூறினார்:

     “தம்பீ! உன்னையும், என்னையும் சுற்றி இத்தனையாயிரம் பூக்கள் மலர்ந்து மணம் பரப்புகின்றனவே, இவ்வளவு அழகையும் இவ்வளவு மணத்தையும் இவற்றுக்கு அளித்திருப்பவனை யார் புகழ முடியும்? எப்படிப் புகழ முடியும்?”

     அவர் கூறுவனவற்றைக் கேட்கக் கேட்க இன்பமாக இருந்தது இளங்குமரனுக்கு. போகிற வழியில் ஒரு பெரிய தாமரைப் பொய்கை வந்தது.

     “வா! நீராடி விட்டுச் செல்லலாம்” என்று இளங்குமரனையும் உடனழைத்துக் கொண்டு நீராடச் சென்றார் நாங்கூர் அடிகள். படிகம்போல் தெளிந்த அந்தப் பொய்கையின் நீர்ப்பரப்பில் சிறுபிள்ளை போல் நீந்தி விளையாடிக் குளித்தார் அடிகள். இருவரும் நீராடி முடித்தபின் வந்த வழியே திரும்பி நடந்து சென்றார்கள். அடிகள் தம் பூம்பொழிலை அடைந்ததும், “இங்கே நீ கற்க வேண்டிய சுவடிகளை எல்லாம் காண்பிக்கிறேன் வா. என்னுடைய பூம்பொழிலில் மலர்களுக்கு அடுத்தபடி அதிகமாக இருப்பவை ஏட்டுச் சுவடிகள் தாம். இங்குள்ள மலர்களுக்கு மணம் அதிகம். திருநாங்கூர் மண்ணுக்கே மணம் மிகுதி. இங்குள்ள ஏட்டுச் சுவடிகளிலோ அறிவின் மணம் கொள்ளக் குன்றாமல் நிறைந்திருக்கிறது” என்று இளங்குமரனைத் தம்முடைய ‘கிரந்த சாலைக்கு’ (சுவடிகள் நிறைந்திருந்த சாலை) அழைத்துச் சென்றார் அவர். உடலில் ஈரம் புலராத ஆடையும், நீராடிய பவித்திரமுமாகக் கிரந்த சாலைக்குள் அவரோடு நுழைந்தான் அவன். வரிசை வரிசையாய்ப் பிரித்து அடுக்கியிருந்த ஆயிரக்கணக்கான சுவடிகளைப் பார்த்ததும், ‘இவற்றையெல்லாம் கற்று ஞானப் பசிக்கு நிறைவு காண என்னுடைய வாழ்நாள் போதுமா?’ என்ற மலைப்பு அவன் உள்ளத்தில் உண்டாயிற்று.

     “இவை எழுத்திலக்கணச் சுவடிகள், இவை சொல்லிலக்கணச் சுவடிகள், இவை பொருளிலக்கணச் சுவடிகள், இவை செய்யுளிலக்கணச் சுவடிகள். இதோ, இவையெல்லாம் தர்க்கம், இவையெல்லாம் சமய நூல்கள், இவை வைத்திய நூல்கள், இவை அலங்கார நூல்கள்” என்று ஒவ்வோர் அடுக்காகக் காண்பித்துச் சொல்லிக் கொண்டே போனார் அடிகள். அவர் முகத்தில் அவற்றையெல்லாம் கற்பிக்கத் தகுதியான மாணவன் கிடைத்துவிட்ட உற்சாகம் தெரிந்தது.

     அப்போது அந்தக் கிரந்த சாலையில் தூபப்புகை நறுமண அலைகளைப் பரவச் செய்து கொண்டிருந்தது. நெய்யிட்டு ஏற்றிய தீபங்களின் ஒளி அங்கங்கே பூத்திருந்தது. தணிவாகக் கூரை வேய்ந்திருந்த சாலையாதலால் அங்கே எப்போதும் தீப ஒளி தேவையாயிருந்தது போலும்.

     “இவ்வளவு சுவடிகளுக்கும் மீறி அறிவைப் பற்றிய சிந்தனைத் தலைமுறை இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது, தம்பீ. இவ்வளவையும் எந்தக் காலத்தில் கற்று முடிப்பது என்று நீ மலைப்பு அடையாதே! தைரியத்தை அடைவதற்காகத்தான் கல்வி. துணிந்து கற்க வேண்டும். கற்றுத் துணிய வேண்டும்.”

     “அந்தத் துணிவைத் தாங்கள் தான் எளியேனுக்குத் தந்தருள வேண்டும்” என்று கூறியபடியே அவருடைய கால்களில் வீழ்ந்து வணங்கினான் இளங்குமரன். ‘இந்தப் பாதங்களை விட்டு விடாதே! இவற்றை நன்றாகப் பற்றிக் கொள்’ என்று போகும் போது நீலநாகமறவர் கூறிய சொற்களை இப்போதும் நினைத்துக் கொண்டான் அவன். அவனைத் தம் கைகளாலேயே எழுப்பி நிறுத்தி, “இந்தா இதைப் பெற்றுக் கொள்” என்று முதற்சுவடியை அளித்தார் அடிகள்.