![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
இரண்டாம் பருவம் - ஞானப் பசி 10. தலைவணங்கிய தன்மானம் விசாகையின் கதையை முற்றிலும் கேட்டு முடித்ததும் தான் மீண்டும் இளைத்துப் போய்விட்டதாக உணர்ந்தான் இளங்குமரன். மனத்தின் வலிமையால் உலகத்தை வென்று நிற்பவர்களைப் பற்றி அறிந்தாலும், நினைத்தாலும் அந்தக் கணத்தில் தான் குன்றி ஒடுங்கிப் போனதாக ஏற்படும் மனத்தாழ்வை அவனால் மீற முடியவில்லை. ‘உலகில் மிகச் சிறந்த வலிமை மனத்தின் வலிமைதா. மிகச் சிறந்த விடுதலையும் மனத்தின் விடுதலைதான். புலன்களிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கும் தூய மனம் தான் பெரிய சுதந்திரம். புலன்களுக்கும், உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்கள் உடம்பினால் விடுதலை பெற்று என்ன பயன்?’ என்றெல்லாம் விசாகையின் வரலாற்றைக் கேட்டிருந்த கிளர்ச்சியில் எண்ணினான் இளங்குமரன். அவள் வரலாறு அவன் மனத்தில் தூய்மைக் கிளர்ச்சியைத் தூண்டியிருந்தது. உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தாமும் கண்ணீர் சிந்திய அந்த விழிகளை இன்னொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமென்று நிமிர்ந்தான் அவன். விசாகையின் அழகிய கண்களில் இப்போதும் நீர் நெகிழ்ந்திருந்தது. பழைய நிகழ்ச்சிகளைக் கேட்க நேர்ந்ததால் சிறிதளவு அவள் கலங்கியிருந்தாள். அடிகள் இளங்குமரனைக் கேட்டார்: “இவளுடைய வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறாய் இளங்குமரா?” “நினைப்பதற்குரிய வாழ்க்கை அன்று இது! வணங்குவதற்குரிய வாழ்க்கை ஐயா! இந்த அம்மையாருடைய மனத்தின் வலிமையைப் பற்றிக் கூறிய போது என்னுடைய மனத்தின் ஏழ்மையை நான் உணர்ந்தேன்.” “நல்லது! இவளுடைய கதையை எந்த விளைவுக்காக உன்னிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பினேனோ அந்த விளைவு உன்னிடம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் கேள். சாவக நாட்டிலிருந்து இவள் மணிபல்லவத்திற்கு வந்தாள். அங்கே புத்தபீடிகையைத் தரிசனம் செய்தாள். கோமுகிப் பொய்கையைக் கண்டாள். சமந்தகூட மலைக்குச் சென்று அங்குள்ள என் நண்பரான புத்த தத்தரிடம் சமய ஞானம் பெற்றாள். ‘மண் திணிந்த இவ்வுலகத்தில் வாழ்கிறவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகிறவர்கள் உயிர் கொடுப்பதற்கு இணையான செயலைச் செய்பவர்கள்’ என்ற கருத்துடன் தன் அட்சய பாத்திரத்தைப் பலரிடம் ஏந்தி உணவை நிரப்பி வந்து, நிரம்ப வழியின்றி தவிக்கும் ஏழை வயிறுகளுக்கு அளித்து மீந்ததைத் தான் உண்ணும் தியாக வாழ்வை இவள் தொடங்கினாள். சமயவாதத்திலும், இன்னும் சில நுணுக்கமான ஞான நூல்களிலும் இவள் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று கருதிப் புத்த தத்தர் சமந்த கூட மலையிலிருந்து இவளை இங்கு அனுப்பியிருக்கிறார். புத்த தத்தரின் அறிமுக ஓலையோடு மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு கார்த்திகை மாதத்து அடைமழை நாளில், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ என்று அரும் பெரும் தத்துவ வாக்கியத்தை ஒலித்துக் கொண்டே இவள் இந்தக் கிரந்த சாலைக்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்தாள். இன்று சோழ நாட்டிலே இவள் பாதங்கள் பட்ட இடமெல்லாம் ஏழைகளுக்குப் பசி தீர்கிறது. நோயாளிகளுக்கு நோய் தீர்கிறது. துன்பப் படுகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்கிறது...” “மற்றவர்கள் உங்களிடம் உங்களைப் பற்றியே புகழும் போது அதை விரும்பாத நீங்கள் இப்போது நான் எதிரே இருக்கும் போதே என்னை இப்படி மிகையாகப் புகழ்கிறீர்களே தாத்தா” என்று விசாகை குறுக்கிட்டாள். “இந்தப் புகழ் எல்லாம் உனக்கு அல்ல, விசாகை! நீ செய்கிற அறங்களுக்கு மட்டுமே உரியது. உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக உன் கண்களில் நீரைச் சுமக்கிறாயே, அந்தப் பண்புக்கு உரியது...” என்று பொருத்தமான மறுமொழி அடிகளிடமிருந்து வந்தது. “அதுதான் ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ என்று நீங்களே தத்துவம் சொல்லியிருக்கிறீர்களே” என்று முதன் முறையாக விசாகையிடம் பேசினான் இளங்குமரன். “தத்துவம் என்னுடையதன்று, நியாய நூல்களிலிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் நான் கற்றது.” “தத்துவங்களைக் கண்டுபிடிக்கிறவர்களை விடக் கடைப்பிடிக்கிறவர்கள் தான் பெரியவர்கள். கடைப்பிடிக்கிறவர்கள் வாழும் தத்துவமாக உயிருடன் நிற்கிறார்கள். கண்டுபிடிக்கிறவர்கள் ஏட்டளவில் மட்டுமே நிற்கிறார்கள். நீங்கள் வாழும் தத்துவமாக என்முன் இருக்கிறீர்கள்” என்றான் இளங்குமரன். “வாழும் தத்துவம் என்று என்னைச் சொன்னால் பொருந்தாது ஐயா! நமக்கெல்லாம் ஞானப் பசி தீர்த்து வாழும் அடிகள் தான் மிகப் பெரிய தத்துவம். அடிகளைச் சுற்றியிருக்கிற ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு சிறிய காவியம். அவர் இவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் மகாகாவியத்தைப் போன்றவர்” என்று விசாகை இளங்குமரனிடம் தன்னைப் புகழ்ந்து சொல்லியதைக் கேட்டுச் சிரித்தபடி இருந்தார் நாங்கூர் அடிகள். “நான் உன்னைப் புகழ்ந்ததற்கு நீ என்னைப் பழிவாங்குகிறாயா, விசாகை?” “இந்தப் புகழ் எல்லாம் உங்களுக்கு அல்ல தாத்தா! உங்களுடைய ஞானத்துக்கு மட்டுமே உரியது. பலருடைய ஞானப் பசியைத் தீர்ப்பதற்காக உங்களுடைய மனமாகிய அட்சய பாத்திரத்தில் ஞானத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அந்த நிறைவுக்கு உரியது.” அவர் தனக்குக் கூறிய பழைய சமாதானத்தை அவரிடமே திருப்பினாள் விசாகை. அவர் குழந்தையைப் போல் சிரித்தவாறு தலைகுனிந்தார். பல நூறு பட்டிமண்டபங்களில் பல நூறு சமயவாதிகளை வென்று அவர்கள் நாட்டிய நாவல் மரக்கிளைகளைப் பறித்து ‘நாவலோ நாவல்’ என வெற்றி முழக்கமிட்டிருக்கிற அந்தப் பெரியவருக்கு விசாகையிடம் விளையாட்டுக்காகத் தோற்றுப் போனதைப் போன்று விட்டுக் கொடுப்பதில் ஒரு திருப்தி உண்டு. இளங்குமரன் சிரித்தான். ‘இணையிலாத அழகின் வலிமையால் என்னை நெகிழச் செய்திட முயன்ற சுரமஞ்சரியிடம் நான் தோற்கவில்லை. நான் தன்னுடைய உடைமை என்று பேதைத்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் வீரசோழிய வளநாடுடையார் பெண் முல்லையிடம் நான் தோற்கவில்லை. அவர்களெல்லாம் என்னுடைய காதலைக் கூடச் சம்பாதிக்க முடியவில்லை. எண்ணெயின்றீ முடிந்த சடையும், துறவுக்கோலமுமாக இப்போது என் எதிரே இருக்கும் விசாகை என்ற இந்தப் பெண்ணோ என்னைத் தன்மேல் பக்தி செலுத்துவதற்கே தூண்டுகிறாளே! இது என்ன விந்தை!’ உடம்பும், மனமும், புலன்களும், எல்லாமே வலிமையாக இருக்க வேண்டுமென்று கூறும் விசாகை, வாழும் தத்துவமாகத் தோன்றும் பூம்பொழில் நம்பியாகிய நாங்கூர் அடிகள், எல்லாரையும் இணைத்து நினைத்தது இளங்குமரனின் மனம். தான் கற்பதற்கிருந்த சுவடிகள் தவிர உலகமே பக்கத்துக்குப் பக்கம், ஏட்டுக்கு ஏடு வேறுபாடுள்ள மாபெருஞ் சுவடியாகத் தோன்றியது அவனுக்கு. சிறிது நேரம் கழித்து நாங்கூர் அடிகள் பூம்பொழிலில் உலவச் சென்றார். கிரந்தசாலையில் விசாகையும் இளங்குமரனும் மட்டுமே இருந்தார்கள். அப்போது விசாகை, இளங்குமரன் சற்றும் எதிர்பாராத காரியமொன்றைச் செய்தாள். “இதில் ஏதேனும் இடுங்கள்! இன்றைக்கு முதல் பிட்சை உங்களுடையதாக இருக்கட்டும்” என்று அட்சய பாத்திரத்தை அவனுக்கு முன் நீட்டினாள். கையில் சுவடிகளைத் தவிர இளங்குமரனிடம் அப்போது வேறு ஒன்றும் இல்லை. இளங்குமரன் எழுந்து நின்றான், அவனுக்கு மெய் சிலிர்த்தது. “என் இதயத்தில் உங்கள் மேல் எல்லையற்றுப் பெருகும் தூய்மையான பக்தியையே இந்த அட்சய பாத்திரத்தில் இடுகிறேன். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி பிட்சைப் பாத்திரத்தின் விளிம்பைத் தொட்டு வணங்கினான் அவன். விசாகை கண்கள் மலர அவன் முகத்தைப் பார்த்தாள். “அவ்வளவு பெரிய பொருளை ஏற்றுக் கொள்கிற சக்தி இந்தப் பாத்திரத்துக்கு இல்லை ஐயா!” “பாத்திரமறிந்து பிச்சையிடு என்று சொல்லியிருக்கிறார்கள், அம்மையாரே! இந்தப் பாத்திரத்தில் இடுவதற்கு ஏற்ற பொருள் பக்திதான்.” இதைக் கேட்டு விசாகை சிரித்தாள். பொய்ம்மையைச் சிதைக்கும் அந்தச் சிரிப்பில் சத்தியம் ஒளிர்ந்தது. “உங்களை இதற்கு முன்பே நான் ஒரு நாள் பார்த்திருக்கிறேன் ஐயா! ஆனால் அப்போது உங்களிடம் இவ்வளவு பணிவையும், பண்பையும் விநயத்தையும் என்னால் பார்க்க முடியவில்லையே?” “எங்கே பார்த்தீர்கள் அம்மையாரே?” “காவிரிப்பூம்பட்டினத்து இந்திர விகாரத்து வாயிலில், ஒரு துறவியை முரட்டுத்தனமாக நீங்கள் கைப்பற்றி இழுத்துப் போன போது பார்த்தேன். இன்று பாத்திரமறிந்து இடும் பக்திப் பிச்சையில் சிறிது அன்றும் அவருக்கு இட்டிருக்கலாமே?” இளங்குமரன் முதல் அநுபவமாக ஒரு பெண்ணின் கேள்விக்கு முன் நாணித் தலைகுனிந்தான். |