![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பருவம் வெற்றிக்கொடி கலந்து நிறைவடைய வேண்டிய கடலைச் சார்வதற்கு முன்னால் தமக்கெனத் தனிப்பெயரும் தனித் தனித் துறைகளும் ஓட்டமும் கொண்டு அலைந்துவரும் ஆறுகளைப்போல உணர்ந்திருப்பதற்கும் உணர வேண்டிய நிறைவுக்கும் நடுவிலுள்ள இடைவெளி தான் மனித வாழ்க்கை. பாயும் நதிகள் கடலோடு கலந்து நிறைந்த பின் தனிப் பெயரும் இல்லை துறையும் இல்லை. நிறைவுக்கு அளவும் இல்லை. எழுவாயாகிய தொடங்குமிடமும் இல்லை. இறுவா யாகிய முடியுமிடமும் இல்லை. குறைவைத் துணைக் கொண்டு நிறைவை அளக்க இயலுமோ? பின்னமும், சிதைவும் உடையதனைக் கொண்டு பின்னமும் சிதைவும் இல்லாத முழுமையை அளப்பது எப்படி? கணிப்பதுதான் எப்படி? தனியே பிரித்துப் பார்த்தால் ஒன்றாகி விடுவதும், ஒன்றாக்கிப் பார்த்தால் தனியே பிரிந்து விடுவதுமாக இந்த உலகத்தில்தான் எத்துணைத் தத்துவங்கள்! நீர் இல்லாத வெறுங்குடத்தில் வெறுமை என்று சுட்டிச் சொல்லப்படுவதும் ஆகாயமே. குடம் உடைந்து போனால் உடைகிறவரை குடத்துள்ளே இருந்த சிறு வெளியும் பெருவெளியாகி ஆகாயத்தில் கலந்துவிடுகிறது. ஓடுகின்ற ஆற்று நீரிலும், எரிகின்ற தீபத்திலும், பாயும் தண்ணிரும். எரியும் சுடரும் ஒன்றாகவே தெரிந்தாலும், அத்தந்த வினாடிகளில் பாய்வதும் எரிவதுமான நீரும் சுடரும் வேறு வேறுதான். உயிரியக்கமும், இப்படிப் புடை பெயர்வது தெரியாமல் மாறிக் கொண்டிருப்பதுதான் என்பதை ஞானப்பசி தீர்ந்தவனாகத் திருநாங்கூர்ப் பூம்பொழிலிலிருந்து புறப்பட்டு காவிரிப் பூம்பட்டினத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது இளங்குமரன் நினைத்தான். அதிகாலைப் பூவைப்போல் இப்போது அவன் மனம் தூயதாக இருந்தது. கூர்மையான ஊசியின் முனையிற் மிகச் சிறிய கடுகும் தங்கி நிற்க முடியாதது போல ஞானத் தெளிவினாலே துணுகிச் சிந்திக்கப் பழகியிருந்த அவன் மனத்தில் சிறிது எண்ணங்களும் குறுகிய ஆசைகளும் தங்க இடமின்றி நழுவி முன்பு உடல் வலிமையோடு பார்த்த உலகத்துக்கும், இன்று மனவலிமையோடு பார்க்கிற உலகத்துக்கும் நடுவேதான் எவ்வளவு வேறுபாடுகள்! அந்த வலிமையோடு பார்த்த உலகத்தில் தானே எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்ற தன் ஆணவமே மிகுந்து தோன்றியது. இந்த வலிமையோடு பார்க்கிற உலகத்தில் தானும் எல்லாவற்றையும் வளர்க்கவும் வாழ்விக்கவும் முடியும் என்று தோன்றுகிறது. உலகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற எல்லாருடைய துன்பங்களும் நீங்கிச் சமமான மகிழ்ச்சி எங்கும் பரவ வேண்டுமென்று இதயத்தில் எல்லையற்ற கருணை பொங்குகிறது. எல்லையற்ற அனுதாபம் பெருகுகிறது. தன் முதுகு நிறையச் சுமையைத் தாங்கிக் கொண்டு நடக்கிறவன் அந்தச் சுமையால் கூனிக் குறுகி நடப்பதைப்போல் ஆசைகள் கனத்து அழுத்தும்போது அறிவும் தயங்கி மந்தமடைவதுண்டு. வினையின் நீங்கி விளங்கிய அறிவினால் மனத்தில் ஆசைச் சுமைகளேயின்றிக் குறைத்துக் கொண்டு புறப்பட்டிருந்த இளங்குமரன் பூம்பொழிலின் வாயிற்புறம் விசாகை தன்னை வாழ்த்திய விதத்தை நினைத்துக் கொண்டான். ‘இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும்’ என்று அவன் வலக் கரத்தில் தாங்கியிருந்த ஞானக்கொடியைக் காண்பித்து வாழ்த்தியிருந்தாள் அவள். விசாகையின் வாழ்த்தை நினைத்துக் கொண்டு தன் கையிலிருந்த கொடியைத் தானே உற்றுப் பார்க்கிறான் இளங்குமரன். ஞானத்தின் ஒளிக்கு அடையாளம் போல் ஒரு தீபம், சில ஏடுகள் - இவை அந்தக் கொடியில் இலங்கும் உருவங்களாய் வரையப் பெற்றிருக்கின்றன. எது வெற்றி? எது தோல்வி: ஓர் எல்லையில் நின்று பார்க்கும்போது வெற்றியாகத் தெரிவது, மற்றோர் எல்லையில் நின்று பார்த்தால் தோல்வியாகத் தெரி கிறதே! மனிதர்களின் நியதிப்படி பார்த்தால் தங்கள் மனம் நினைத்தது நினைத்தவாறே, விரும்பியது விரும்பிய வண்ணமே விளைந்தால் அது வெற்றி, அல்லாதது தோல்வி. ஒரு விளைவை வெற்றியாகவும் தோல்வியாகவும் எடுத்துக் கொள்வது அந்த விளைவை அனுபவிக்கும் மனப்பக்குவத்தைப் பொறுத்ததுதான். காவிரிப்பூம்பட்டினத்தை நெருங்க நெருங்கச் சாலைகளில் கூட்டம் நிறைந்திருந்தது. நீலநாகமறவர் தேரை மெல்லச் செலுத்தினார். தீபாலங்காரங்களும் வாண வேடிக்கைகளுமாக எதிரே மாபெரும் கோநகரம் தெரிந்தது. கடல் அலைகளின் ஓசையோடு இந்திரவிழா ஆரவாரங்களும் கேட்டன. நகரத்தின் ஒளி அலங் காரங்கள் நீர்ப்பரப்பில் பிரதிபலித்து மேலும் அழகு உண்டாக்கிக் கொண்டிருந்தன. இனிமையான இசை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. பூம்புகாரின் எல்லைக்குத் தேர் வந்ததும் இளங்குமரன் தன் மனத்தில் ஒரு சங்கல்பம் செய்யத் தொடங்கினான்: தங்கள் தேர் செல்லும் வழியின் இரு புறமும் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் தேருக்குள்ளே நோக்கிக் கை கூப்பி வணங்குவதையும் முகம் மலர்வதையும் நீலநாக மறவர் பார்த்துக் கொண்டே குதிரைகளைச் செலுத்தினார். தாமே அடிக்கடி பின்புறம் திரும்பி இளங்குமரனைப் பார்த்தார் அவர். பவழச் செஞ்சுடர் மேனியும் பன்மடங்கு பெருகிய அழகோடு காந்தி திகழும் கனிந்த முகமண்டலமுமாகக் கொடியேந்தி நிற்கும் குமரக்கடவுளைப் போலத் தேரில் நின்று கொண்டிருந்தான் இளங்குமரன். பிறரால் வணங்கப்படும் தன்மை அல்லது பிறரை வணங்குவிக்கும் தன்மை எதுவோ அது அவன் தோற்றத்திலேயே இரண்டறக் கலந்திருந்தது. புனிதமான சகல சக்திகளும் வாய்ந்த இளந்துறவியொருவனை வணங்குவதாக நினைந்து அவனை வணங்கினார்கள் வழிப் பயணம் செய்த மக்கள். அவன் பயணம் செய்த தேர் ஆலமுற்றத்தில் வந்து நின்றபோது, அவனுடைய வாழ்க்கைத்தேர் மூன்றாவது பருவத்தில் வந்து நின்றது. வலது பாதத்தை முன் வைத்து கீழே இறங்கினான் இளங்குமரன். கடற்காற்றிலே அவன் கரத்திலிருந்த கொடி அசைந்தாடியது. மேலே வாகை மரத்திலிருந்து தற்செயலாக உதிர்ந்த பூக்கள் அந்தக் கொடியின் மேலே விழுந்தன. “இந்தப் பூக்கள் போரைத் தொடங்கும் முன்பே உனது கொடிக்கு வெற்றிவாகை சூடுகின்றன” என்றார் நீலநாக மறவர். “இந்த விநாடியில் இங்கே உதிர்ந்த இதே பூக்களை மானசீகமாக எடுத்துக் கொண்டு போய் என் குருவின் பாதங்களில் உதிர்க்கிறேன் நான்” - என்று சொல்லி வணங்கினான் இளங்குமரன், அவன் கண்கள் குருவின் உருவத்தை பாவனை புரிய மூடின. |