மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 1. புதிய பூம்புகார் அவ்வளவு காலம் திருநாங்கூரில் இருந்த பின் இன்று மறுபடியும் வந்து பார்க்கிறபோது காவிரிப்பூம்பட்டினம் முன்பிருந்ததைக் காட்டிலும் பெரிய நகரமாக வளர்ந்திருந்தது போல் காட்சியளித்தது இளங்குமரனுக்கு. நீலநாக மறவருடைய படைக்கலச் சாலையில் அன்று மாணவர்களாக இருந்த பலர் இன்று பயிற்சி முடிந்து வெளியேறி யிருந்தார்கள். இன்று புதிய மாணவர்கள் வந்தி ருந்தார்கள். படைக்கலச் சாலையில் அன்று செடிகளாயிருந்த மாங்கன்றுகள் இன்று மாமரங்களாகிப் பூத்திருந்தன. ஆலமுற்றத்து மரத்தில் ஏற்கனவே இருந்த எண்ணற்ற வீழ்துகள் தவிர இன்னும் புதிய வீழ்துகள் மண்ணில் இறங்கி ஊன்றிக் கொண்டிருந்தன. படைக்கலச் சாலையின் தோட்டத்தில் அன்று சின்னஞ்சிறு குட்டிகளாகத் தாவித் திரிந்து கொண்டிருந்த மான்கள் இன்று கொம்பு கிளைபடரக் குட்டிகள் துணைபடரத் தோன்றின. அவனுடைய மனத்தைப் போலவே உலகமும் வளர்ந்திருந்தது. மாறியிருந்தது. ஒரு பக்கத்தில் கொல்லர்கள் பழைய வேல்களுக்குத் துரு நீக்கியும் புது வேல்களை வார்த்தும் - பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அவற்றைப் பார்த்தவுடன் வேலையும் பெண்ணின் விழியையும் ஒப்பிட்டுக் கூறிய நீலநாகமறவர் தனக்கு அறிவுரை சொல்லிய நாளை நினைத்துக் கொண்டான் இளங்குமரன். படைக்கலச் சாலையில் நீலநாக மறவருடைய இருக்கையில் தன்னுடைய ஓவியம் இருப்பதைக் கண்டு அது அங்கே எப்படி வந்தது என்று அவன் வியந்தபோது நீலநாகமறவரே அது படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சியை அவனுக்குக் கூறினார்: “நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் நீ திருநாங்கூருக்குப் போய்ச் சேர்ந்திருந்தாய். இந்தப் படத்தை எடுத்துக் கொண்டு வந்தவர்கள் உன்னைக் கொலை செய்யும் நோக்கத்தோடு தேடி வந்ததாக அந்த ஓவியன் எனக்குச் சொன்னான்” என்றார் நீலநாகமறவர். அதைக் கேட்டு அவன் அதிர்ச்சி கொள்ளவில்லை. பழைய நாட்களாயிருந்தால், “என்னைக் கொலை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்களா?” என்று திமிரோடு எண்ணியிருக்கும் அவன் மனம். இன்றோ, ‘நான் என்றால் எனது உடல் அன்று. நான் என்பது எனது ஆன்மா. ஆன்மாவை எவராலும் கொலை செய்ய முடியாது’ என்று சிந்தித்தது அவன் மனம். இளங்குமரன் இந்திரவிழாவின் முதல் நாளாகிய அன்று மாலை படைக்கலச் சாலையை சேர்ந்த பெரிய யானை ஒன்றில் ஏறிக் கொண்டு வாதிடுவதற்காக உயர்த்திய கொடியுடனே புறப்பட்டபோது அவனால் வெற்றி கொள்ள முடியாத வாதத்தையும் முல்லையையும் உடன் கொண்டு வாயிலில் வந்து வழி மறித்தார் வீரசோழிய வளநாடுடையார். “நலமாக இருக்கிறீர்களா ஐயா? உங்களோடு கதக்கண்ணன் வரவில்லையா?” என்று புன்முறுவல் பூத்தவாறு விசாரித்த அவனை நோக்கிச் சீறினார் அவர்.
“நலத்துக்கென்ன கேடு? சாகாததுதான் பெரிய குறை தம்பீ! நீ இன்னும் சிறிது காலம் என்னையும், இந்தப் பெண்ணையும் ஏமாற்றிக் கொண்டு திரிந்தால் அந்தக் குறையும் தீர்ந்துவிடும்.”
அந்தக் கிழவர் தன்மேல் பெருங்கோபத்தோடு வந்திருக்கிறார் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. நிர்விகாரமான நோக்குடன் அவன் பக்கத்தில் நின்ற முல்லையைப் பார்த்தான். அவள் வளர்ந்து நிறைந்திருந்தாள். அவன் பார்வையில் நாணிக்குழைந்து முல்லை தலைகுனிந்தாள். இளஞ்சூரியனின் ஒளியோடு திகழும் இளங்குமரன் முகத்தையும் கண்களையும் காணக்கூசின அவள் கண்கள். உலகில் உள்ள அறிவின் பரிசுத்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிரே யானை மேல் அமர்ந்திருக்கக் காண்பதுபோல் அவளுக்குப் பயமாகவும் இருந்தது. இப்போது கொடியை ஏந்திக் கொண்டிருக்கும் அவனுடைய இதே கையில் எத்தனையோ புண்களுக்குத் தன் கைகளால் மருந்து தடவி ஆற்றிய நாட்களை நினைத்துக் கொண்டாள் முல்லை. இந்தக் கைகளையும் தோளையும் தொடுவது விளையாட்டாக இருந்த காலம் போய், தொட நினைப்பது தயக்கத்துக்குரிய காரியமாகி விட்ட நிலையில் தான் இருப்பதை அவள் உணர்ந்தாள். வளநாடுடையார் முன்பிருந்ததை விடத் தளர்ந் திருந்தார். தலை நாணற் பூவைப்போல் நரை கண்டு வெளுத்திருந்தது. ஆயினும் எரிந்தாலும் போகாத சந்தனக் கட்டையின் மணம்போல் குடி வழி வந்த வீரக்களை சுருங்கிய முகத்தில் இன்னும் ஒடுங்காமல் விரிந்து தெரிந்தது. சண்டைக்குக் கொடி கட்டிக் கொண்டு வந்து நிற்கும் அவரிடம் இளங்குமரன் அமைதியான முறையில் பேசினான். “ஐயா! பட்டி மண்டபத்தில் சமயவாதம் புரிவதற் காக நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த நகரத்தில் பல நாட்டு அறிவாளிகள் சந்தித்துப் போரிடுவதற்கு இந்திரவிழா நாட்கள்தாம் வாய்ப்பு ஏற்படுத்துகின்றன. நம்முடைய சொந்த விவாதத்தை என்றைக்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமே? நானும் குருகுல வாசம் முடிந்து காவிரிப்பூம்பட்டினத்துக்கே திரும்பி விட்டேன். இனிமேல் நாம் சந்தித்துக் கொள்வதும் அரிய காரியம் இல்லையே...” “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை தம்பீ! அந்தத் திருநாங்கூர்க் கிழவனும் இந்த ஆலமுற்றத்து மனிதனும் சேர்ந்து உன்னைச் சரியான பித்தனாக மாற்றியிருக்கிறார்கள். உன்னிடம் மிக முக்கியமான செய்தியொன்று பேச வேண்டும்.இந்திரவிழா முடிந்ததும் ஒரு நாள் தனியாக வந்து சேர்” என்று வேண்டா வெறுப் புடன் கூறிவிட்டு முல்லையோடு திரும்பிச் சென்றார் வளநாடுடையார். ஆலமுற்றத்துக் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, தான் வந்திருப்பது தெரிந்து தந்தையும் மகளும் படைக்கலச் சாலைக்குள்ளும் வந்து சென்றிருக்க வேண்டும் என்று அவர்கள் வரவைப் பற்றி அதுமானம் செய்தான் இளங்குமரன். யானையைச் செலுத்திக் கொண்டு இரண்டு மூன்று வீதிகளைக் கடந்து நாளங்காடியை நோக்கித் திரும்பிய போது அவனுடைய பழைய நண்பர்கள் சிலர் கை கோர்த்தபடி எதிரே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. இப்போது அவர்கள் யாவரும் வளர்ந்து உடற்கட்டும் பெற்றிருந்தனர். அவர்கள் தன்னை அடையாளம் தெரிந்து கொள்வார்கள் என்ற நினைப்போடு யானையின் நடையை மெதுவாக்கி நிற்கச் செய்தான் இளங்குமரன். ஆனால் அவர்கள் அவனை யாரோ பெரிய ஞானி என்ற வழக்கமான மதிப்புக்காக உற்றுப் பாராமல் மேல் நோக்கிக் கைகூப்பிவிட்டு முன்னே நடந்து சென்றார்கள். அவனுக்கு அவர்கள் எல்லாரையும் எல்லாவற்றையும் நினைவிருந்தது. அவனை அவர்கள் எல்லாருக்கும் நினைவில்லை. அவன் மாறியிருந்தான். எதிரே வருகிறவர்கள் செலுத்திய வணக்கங்களையும் மதிப்புகளையும் தன் குருவின் பிரதிநிதியாயிருந்து அவர்கள் சார்பில் வாங்கி அவற்றை அவருக்கே அனுப்பி வைக்கப் பட்டதாகப் பாவித்துக் கொண்டு சென்றான் அவன். தெருத் திருப்பங்களிலும், நான்கு வீதிகள் சந்திக்கும் சதுக்கங்களிலும் இளைஞர்கள் பலப்பரீட்சை செய்து கொள்வதற்காகக் கிடந்த இளவட்டக் கற்களைக் கண்ட போது மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் இளங்குமரன். யானை நாளங்காடியை அடைந்தபோது வானில் நிலா எழுந்தது. ஒரு கையில் மதுக் கலயத்தையும் இன்னொரு கையில் இளம் பருவத்தினளான ஆடல் மகள் ஒருத்தியையும் பற்றிக் கொண்டிருந்த களி மகன் ஒருவன் வந்து இளங்குமரனை வளைத்துக் கொண்டான். “இந்த உலகம் பொய். உயிர்கள் பொய். இதை எவரும் படைக்கவில்லை. மதுவினால் உண்டாகும் மயக்கம் போலப் பஞ்ச பூதங்களின் மயக்கம் இது. இதற்குக் காரணமும் இல்லை. காரணனும் இல்லை” என்று மது வெறியில் உளறிய அந்தப் பூதவாதிக்குப் பதில் சொல்லாமல் சிரித்தான், இளங்குமரன். இந்திர நீலம்போல் இருண்ட கூந்தலும், வெறியிற் சிவந்த கண் களுமாக அந்தக் களிமகனின் பிடியிலிருந்த கணிகைப் பெண், “நீ என் அன்பனுக்குப் பதில் சொல்ல முடியாமல் தோற்றாய்!” என்று இளங்குமரனை நோக்கிக் கைகொட்டிச் சிரித்தாள். ‘தன் உணர்வோடு பேசாதவர்களுடைய வாதத்தைச் செவிமடுத்து மறுப்பதுதான் தோல்வி. உங்கள் வாதத்துக்கு நான் மறுமொழி கூறாமலிருப்பதனாலேயே நீங்கள் எனக்குத் தோற்றீர்கள்’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டே மேலே சென்றான் இளங்குமரன். அந்தப் பெண்ணும், களிமகனும் முகத்தைக் கோணிக் கொண்டு அவனுக்கும் அவன் அமர்ந்திருந்த யானைக்கும் அழகு காண்பித்துச் சிரித்தார்கள். இப்படி விடரும், தூர்த்தருமான களிமக்கள் பலர் நாளங்காடியில் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம்தான். இந்திரவிழா நாட்களில் இந்தக் கீழ் மக்களைச் சாதாரண நாட்களிலும் அதிகமாகக் காணலாம். நாளங்காடியிற் முன்பு ஒரு காலத்தில் தன்னை நிற்கச் செய்து மணிமார்பன் என்ற பாண்டிய நாட்டு ஓவியன் சித்திரம் தீட்டிய மரத்தருகில் வந்ததும், அந்த நினைவால் கவரப்பட்டு அங்கே யானையை ஒரு கணம் நிறுத்தினான் இளங்குமரன். அன்றிருந்தது போலவே அந்த மரத்தில் முல்லைக்கொடி புதராகப் படர்ந்திருந்தது. அதன் கீழே ஓர் அழகிய இளைஞன் மனைவியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். யானை அருகே வந்து நின்றதும் பயந்தாற்போல் எழுந்தார்கள் அவர்கள். அப்படி எழுந்தபோது அந்த இளைஞனின் முகத்தை நன்றாகப் பார்த்த இளங்குமரன். சற்றே வியப்புடன் “மணிமார்பா” - என்று மெல்லக் கூப்பிட்டான். திகைப்போடு அண்ணாந்து பார்த்தனர் அந்த இளைஞனும் அவன் மனைவியும். இளைஞனுக்கு யானை மேலிருந்த இளங்குமரனைப் புரிந்து கொள்ளச் சிறிது நேரமாயிற்று. புரிந்ததும் அவன் ஆவல் மேலிட்டவனாகப் பேசலானான்: “ஐயா! வணங்குகிறேன். இவள் என் மனைவி. ஊர் திரும்பிய சில நாட்களில் எனக்குத் திருமணமாகிவிட்டது. மனைவியோடு மீண்டும் இந்திரவிழாப் பார்க்க இங்கே வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் பழைய நினைவுகள் எல்லாம் எழுந்தன. அந்தப் பழைய கதையைத்தான் இப்போது இவளிடம் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்கள் எப்படியோ மாறிவிட்டீர்களே! முதலில் எனக்கு அடையாளமே தெரியவில்லை. இவ்வளவு குறிப்பாக நம் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது யார் என்று பார்த்தால் நீங்கள் யானைமேல் உட்கார்ந்திருக்கிறீர்கள்.” “சித்திரக்காரனுக்குக் கூடப் பழகிய முகம் மறப்பதுண்டோ, மணிமார்பா? பார்த்த முகங்களையெல்லாம் நினைவிலும் கண்ணிலும் பதிய வைத்துக் கொள்கிற கலை அல்லவா உங்களுடையது.” “மறந்தது என் தவறு இல்லை ஐயா, இவள் வந்த பின்புதான் இப்படி ஆகிவிட்டது. தன் முகத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் தங்காமல் செய்து விட்டாள் இந்தப் பொல்லாத பெண்” - என்று மனைவியை வம்புக்கு இழுத்தான் மணிமார்பன். அந்தப் பெண்ணின் அழகிய கன்னங்களில் நாண ரேகைகள் நளினமாக ஓடின. இளங்குமரன் சிரித்தபடி மணிமார்பனை மேலும் கேட்டான்: “மறுபடியும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு பயப்படாமல் இந்த நகரத்துக்குள் நுழையும் தைரியம் உனக்கு எங்கிருந்து கிடைத்தது அப்பனே?” “இவளுடைய கண்களிலிருந்து” என்று மனைவியைச் சுட்டிக் காண்பித்தான் மணிமார்பன். சித்திரக்காரனுக்கென்றே பிறந்த எழிலோவியம் போன்ற அந்தப் பாண்டி நாட்டுப் பெண் மேலும் நாணமடைந்தாள். “இவரை வணங்க வேண்டும். பெண்ணே! ‘உன் பெயருக்குப் பொருத்தமாக மார்பில் மணிமாலை அணியச் செய்கிறேன்’ -என்று இந்த மனிதர் அன்றைக்கு என்னை வாழ்த்திய வாழ்த்துக்கள்தாம் எனக்கு இன்று இந்த வாழ்வை அளித்திருக்கின்றன” என்று தன் மனைவியிடம் உணர்ச்சி பொங்கக் கூறினான் மணிமார்பன். அந்தப் பெண் தரை மண் தோய வீழ்ந்து இளங்குமரனை வணங்கினாள். மணிமார்பனும் சேர்ந்து வணங்கினான். கொடியைச் சற்றே இடக்கரத்துக்கு மாற்றிக் கொண்டு யானை மேலிருந்தே அவர்களை வாழ்த்தினான் இளங்குமரன். வாழ்த்திவிட்டு வாழ்த்திய கையை அப்படியே வைத்துக் கொண்டு, “என்னுடைய மனத்திலும் உடம்பிலும் சத்துவ குணமும், சத்துவ குணத்துக்குரிய தூய இரத்தமும் ஓடாத காலத்தில் இதே கையினால் உன்னை ஒரு முறை அறைந்தனுப்பியிருக்கிறேன். மணிமார்பா! அதை நீ மறந்து என்னை மன்னித்திருப்பாய் அல்லவா?” என்று கேட்டான் இளங்குமரன். “பழைய புண்ணைக் கீறாதீர்கள். அது முன்பே ஆறிவிட்டது” என்று கைகூப்பினான் ஓவியன். அந்த இளங் காதலர்களுடைய மகிழ்ச்சி உரையாடலைத் தான் தலையிட்டு அழித்திட விரும்பாமல் மேலே புறப்பட்டான் இளங்குமரன். அப்போது, “ஐயா! இந்திரவிழா முடிந்து ஊருக்குப் போவதற்குள் நானும் என் மனைவியும் ஆலமுற்றத்துக்கு ஒருநாள் வருகிறோம். அந்தப் பெரியவர் அன்று என்னைக் காப்பாற்றித் தக்க வழித்துணையோடு பாண்டிய நாட்டுக்கு அனுப்பியிராவிட்டால் இன்று நான் இப்படி மங்கல வாழ்வு வாழ முடிந்திராது. அவரையும் பார்த்து வணங்க வேண்டும்” என்றான் மணிமார்பன். “ஆகா, அவசியம் வாருங்கள்” என்று கூறிவிட்டு யானையைச் செலுத்திக் கொண்டு சென்றான் இளங்குமரன். பூதச் சதுக்கத்துக்கு எதிரே வந்தபோது கூட்டத்தின் நெருக்கடியினால் ஒரு தேரும் அவனுடைய யானையும் ஒன்றிற்கொன்று விலகி வழிவிட முடியாமல் எதிரெதிரே நின்றன. நெருக்கடி தீரட்டும் என்று சிறிது நேரம் காத்திருந்தான் அவன். வழி விலகலாம் என்ற நிலை ஏற்பட்ட பின்பும் எதிரேயிருந்த தேர் விலகாமல் நிற்பதைக் கண்டு அதிலிருந்தவர்களைப் பார்த்தான் இளங்குமரன். அதிலிருந்தவர்கள் தேரை நிறுத்திக்கொண்டு தன்னைச் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை யாரென்று இன்னும் நன்றாகப் பார்த்தான். அவர்கள் யாரென்று விளங்கிக் கொண்டுகூட அவன் மனம் அமைதி யிழக்கவில்லை. முகம் மலர்ச்சி இழக்கவில்லை. “வழியை விடுகிறீர்களா? போக வேண்டும்?” என்றான் இளங்குமரன். “நன்றாகப் போகலாமே! உங்கள் வழியை நாங்கள் ஒன்றும் இடுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கவில்லையே?” இந்தப் பதிலைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான். “இரண்டு கண்களாலும் நன்றாகப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் பிறர் வழியை மறித்துக் கொண்டிருப்பது உங்களுக்கே தெரியும். ஆனால் உங்களுக்குத்தான் ஒரு கண் இல்லையே?” இதைக் கேட்டுக் கீழே தேரின் முன்புறம் நின்று கொண்டிருந்த நகைவேழம்பரின் ஒரு கண்ணும், பின்புறமிருந்த பெருநிதிச் செல்வரின் இரண்டு கண்களும் சினத்தால் சிவந்தன. |