![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 10. ஆத்ம தரிசனம் அந்தப் பெருங்கூட்டத்தின் இடையே அப்படி ஒரு சூழ்நிலையில் இளங்குமரனிடமிருந்து சுரமஞ்சரி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. நேற்று மாலை இதே நாளங்காடியில் தன்னைக் கண்டு ‘சுரமஞ்சரியா?’ என்று கேட்டபோது, ‘நான் சுரமஞ்சரி இல்லை. அவள் சகோதரி வானவல்லி’ என்று தான் கூறியிருந்த பொய் அவன் மனத்தில் சிறிதும் சந்தேகத்தை உண்டாக்கியிராது என்றே அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவன் ஒன்றை மெய்யென்று உணர்வதால் ஏற்படுகிற மகிழ்ச்சியையோ பொய்யென்று உணர்வதால் ஏற்படுகிற காழ்ப்பையோ முகத்தில் தெரிய விடுகிற சாமானிய இளைஞனாக இப்போது இல்லை என்பதை நினைத்தபோது நேற்று அவனை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு தானே ஏமாந்து போயிருப்பது அவளுக்கு இன்று விளங்கியது. கேள்வியைக் கேட்டவன் பதறாமல் கேட்டுவிட்டுச் சலனமின்றி நின்று கொண்டிருந்தாலும் கேட்கப்பட்டவளால் அப்படிப் பதறாமல் நிற்க முடியவில்லை. சந்தனக் கல்லில் அரைத்த சந்தனம் சரிவு சரிவாய் இழைத்து மடிந்தாற்போல் அவள் முகம் சுருங்கியது. வாட்டமும் கண்டது. ஆனால் அந்த வாட்டமும் பதற்றமும் தன்னிடம் நீடிக்க விடவில்லை அவள். எதிரே படிப்பினாலும் தவத்தினாலும் இளைத்து வெளுத்துத் தூய்மையால் செழித்து அவன் நிற்கும் தோற்றம் என்ன மறுமொழி கூறுவதென்ற திகைப்பை அவளுக்கு உண்டாக்கினாலும் மெல்லிய குரலில் அவள் பேசினாள்: “மன்னிக்க வேண்டும். நேற்றிருந்த சூழ்நிலையில் நான் எதை எப்படி மாற்றிக் கூறியிருந்தாலும் அதை இன்று மறந்து விடுங்கள். நேற்று நிகழ்ந்ததைப் பற்றி இன்று பேச்சு எதற்கு? நேற்றைக்கு நானும் வசந்த மாலையும் இங்கு வந்திருந்த சூழ்நிலை வேறு. இன்றைக்கு நாங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கிற சூழ்நிலை வேறு. இப்போது இந்த இடத்தில் அந்த வேறுபாட்டை விளக்கிக் கூற முடியாமல் இருப்பதற்காக அருள்கூர்ந்து எங்களைப் பொருத்தருள வேண்டும்” என்று அவள் கனி இதழ்களில் இருந்து வார்த்தைகள் பிறந்தபோது இளங்குமரனுடைய இதழ்களில் நிர்விகாரமான் புன்னகை ஒன்று அரும்பியது. “நேற்று நிகழ்ந்ததை இன்று பேசக்கூடாது. ஆனால் ‘என்னைத் தெரியவில்லையா?’ என்று நீங்கள் பேச்சைத் தொடங்கியதே தவறாயிற்றே அம்மணீ! ‘தெரிய வில்லையா?’ என்று நீங்கள் கேட்டதனால்தான், ‘உங்களை எப்படித் தெரிந்துகொள்வது? நேற்றுத் தெரிந்தது போலவா, இன்று தெரிவது போலவா?’ என்று நானும் கேட்க நேர்ந்தது.” “நீங்கள் கேட்க நேர்ந்ததைப் பற்றி மகிழ்ச்சி. இன்று தெரிவது போலவே என்றும் நான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பது தான் என் விருப்பம். யாருக்கு எப்படித் தோன்றினாலும் உங்களுக்கு நான் சுரமஞ்சரி யாகவே தெரிய வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.” “உங்கள் விருப்பம் அப்படி இருக்கலாம். ஆனால் இந்த உலகத்தில் சித்திரங்களிலும், சிலைகளிலும், மகாகவிகளின் காப்பியங்களிலும்தான் இன்றுள்ளது போன்ற குணத்தை என்றும் காண முடிந்த வகையைச் சேர்ந்த உத்தம மனிதர்களைப் பார்க்க முடிகிறது. வாழ்வில் கண்முன் காண்கிற மனிதர்களின் குணம் என்னவோ மாறிக் கொண்டேதான் இருக்கிறது. தீ சுடுமியல்பை உடையது. நீர் குளிர்ந்தே இருப்பது என இயற்கைப் பொருள்களின் பொதுக் குணத்தை உறுதிப் படுத்திச் சொல்ல முடிந்தாற்போல மனிதர்களுடைய குணத்தை எப்படி உறுதிப் படுத்திச் சொல்ல முடியும்? அந்தந்த விநாடிகளின் நினைவுகளே அந்தந்த விநாடி களுக்குரிய குணங்களாகவும் சத்தியங்களாகவும் கொண்டு எந்த விநாடியில் இருந்தது சொந்தக் குணமென்று தெரியாமல், எந்த விநாடியில் எண்ணியது எல்லா விநாடிகளுக்கும் சத்தியம் என்றும் தெரியாமல் வாழ்கிறவர்களுக்கு நிலையான குணம் இது என்று எதைச் சொல்வது?” “இப்பொழுது கூறிய வார்த்தைகள் யாருக்காகவோ?” “தனியாக யாருக்கென்று சொல்வது? உனக்காக, உங்களுக்காக, எனக்காக, எல்லாருக்காகவும்தான். ஓடுகின்ற ஆற்று நீர் போல் சென்ற கணத்தில் இங்கு நின்றது அடுத்து கணத்தில் எங்கு நிற்பதெனத் தெரியாத தாய் எங்கும் நில்லாமல் ஓடிக்கொண்டே எல்லா இடத்திலும் நிற்பது போல் தெரிவதனால் குணம் ஓர் இயக்கம். இயக்கமில்லாத நிலையான சத்துவ குணத்தை அருட்கவிகளின் தெய்வீகமான காப்பியங்களில் வரும் உத்தமமான பாத்திரங்களிடம்தான் காண முடியும். மனம் சத்துவ குணமே நிரம்பியதாகும் போது உலகம் சுகரூபமாகவும், இராஜச குணமே நிரம்பியதாகும் போது அதே உலகமே துக்க ரூபமாகவும், தாமத குணமே நிரம்பியதாகும் போது மோக ரூபமாகவும் தெரிகிறது. ஒரு சமயம் சுகமாய்த் தோன்றியது மற்றொரு சமயம் துக்கமாகவும், துக்கமாகத் தோன்றியது சுகமாகவும், மனத்துக்கும் அங்கு நிற்கும் குண நிலைக்கும் ஏற்ப மாறித் தோன்றுவதை எப்படி வரையறுக்க முடியும்?” “வரையறைகளையும் இலக்கணங்களையும் பற்றி நீங்கள் என்னிடம் பேசுவதைப் பார்த்தால் என்னையும் உங்களோடு வாதிட வந்தவளாக நினைத்துக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது. நானும், என்னோடு வந்திருப்பவர்களும் உங்களை வாதுக்கு அழைக்க வரவில்லை. வணங்கிச் செல்வதற்கே வந்தோம்.” “அப்படியா? மற்றவர்கள் என்னை வணங்குவதையும் சேர்த்து என்னால் வணங்கப்படுகிறவர்களுக்குப் பாவனையால் அனுப்பிவிடுகிறவன் நான். இப்படி வணக்கங்களையும் கூட ஏற்று மகிழ முடியாதவனைத் தேடி வந்து வணங்குவதில் உங்களுக்கு என்ன தான் சுகம் கிடைக்கப் போகிறது?” “உலகத்தில் சுகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தே எல்லாக் காரியங்களையும் செய்ய முடியுமோ? தொடர்ந்து துக்கமும், வெறுப்பும், அலட்சியமும் கிடைக்கிற இடத்தில் வந்து நிற்கும்போது அங்கே சுகம் கிடைக்காதென்று உணர்ந்திருந்தும் மனம் அந்த அவநம்பிக்கையிலே தான் சுகம் ஒளிந்திருப்பது போல துரத்திக் கொண்டு வந்து நிறுத்துகிறதே...?” சுரமஞ்சரி இந்தச் சொற்களைச் சொல்லும்போது அவள் விழிகளில் நீர் சுழன்று ஈரம் மின்னுவதை இளங்குமரன் கண்டும் அமைதியாகவே நின்றான். நன்றாக நிமிர்ந்து அதுவரை இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தைத் தானும் பார்த்தான் அவன். சுரமஞ்சரி நெகிழ்ந்த குரலில் மேலும் கூறலானாள். “இன்று நாங்களாக வரவில்லை. எங்கள் தந்தையாருடைய வேண்டுகோளின்படி இங்கே உங்களைத் தேடி வந்தோம்.” “உங்கள் தந்தையார் என்ன வேண்டுகோள் விடுத்தார்?” “‘நாளங்காடியில் யாரோ ஓர் இளைஞர் காண்போர் வியந்து வணங்கும்படி அழகாக வாதிடுகிறார். அவரை இந்த நகரத்து அறிவுடைப் பெருமக்கள் எல்லோரும் போற்றுகிறார்கள். புண்ணிய சீலராகிய அந்த இளைஞரை வணங்கி வாழ்த்துப் பெறுவது பெரும் பேறு எனக் கருதுகிறார்கள். நீங்களும் இன்று போய் அவர் பாதங்களில் பூக்களைக் குவித்து வணங்கி வாழ்த்துப் பெற்று வாருங்கள்’ என்று எங்கள் தந்தையார் எங்களிடம் கூறியனுப்பினார்.” “உங்கள் தந்தையார் பிறரை வணங்கவும் விரும்புவது உண்டு போலும். மற்றவர்களை வணக்குவித்து மகிழ்கிறவர்களால் வணங்கி மகிழவும் முடியுமோ, அம்மணீ?” இளங்குமரனின் இந்தக் கேள்வி தனக்குக் கொடுக்கப்பட்ட சூடு என்பதைச் சுரமஞ்சரி உணர்ந்தாலும் இதற்குப் பதில் கூறாமல், பின்புறம் சற்றே விலகி நின்ற யவனப் பணியாளனிடமிருந்து பூக்கூடையை வாங்குவதற்காகத் தன் பூங்கரங்களை வளைகள் குலுங்க நீட்டினாள். கூடியிருந்தவர்கள் அந்தப் பெரிய பூக்கூடையைப் பார்த்து வியப்பில் மூழ்கினார்கள், அடடா! எவ்வளவு பெரிய பூக்கூடை இது! “இவ்வளவு பெரிய கூடை நிறையப் பூக்களைக் கொண்டு வந்திருக்கிறவர்களுக்கு இந்த இளைஞர்மேல் எவ்வளவு மதிப்பு இருக்க வேண்டும்!“ என்று கூட்டத்தில் யாரோ வியந்த குரல் இளங்குமரனுடைய செவிகளில் இலேசாக ஒலித்தது. பக்தியின் அளவைப் பூக்களின் அளவால் கணக்கிடும் பேதமையை எண்ணி மனதுக்குள் சிரிக்கும் உணர்வு பிறந்தது அவனுக்கு. பட்டினப் பாக்கத்துப் பெருமாளிகைச் செல்வர் தன்னை நேற்று நாளங்காடி வழியில் தேரிலிருந்தபடியே சந்தித்ததையும் தான் போக வழியில்லாமல் மறித்ததையும் நினைத்து இன்று அவரே தன்னை வணங்கி வருமாறு கூறிப் பெண்களைப் பூக்கூடையுடன் அனுப்பியிருப்பதைத்தான் எப்படி நம்புவது என்றும் நினைத்துச் சிலகணங்கள் சிந்தனையில் சந்தேகங்கள் பட இருந்தான் இளங்குமரன். ‘உலகம் முழுவதும் சத்தியமும் நம்பிக்கையுமே நிறைந்திருப்பதாகப் பாவித்த ஞானம்’ நினைவில் மேல் நின்ற காரணத்தால் நீரில் எழுதினவை போல் அந்தக் கீழான சந்தேகங்கள் மிக விரைவில் அவன் மனத்திலிருந்து அகன்று பழக்கப்பட்டு இருந்த சத்துவ குணமே விஞ்சி நின்றது. அதனால் மகா கவிகளின் காவியங்களில் பிறந்த உத்தம குணமே நிறைந்த உன்னதமான கதாபாத்திரங்கள் என்று அவன் சற்றுமுன் சுரமஞ்சரியிடம் கூறியிருந்தாற்போலத் தானே ஓர் உத்தம கதாபாத்திரமாகி நின்றான். அவளுடைய கைகளும் பூக்களும் குவிந்து வணங்கப் போவதை எதிர்பார்த்தும் அந்த மென்மையான வணக்கத்தில் விருப்போ வெறுப்போ இல்லாமல் உதாசீனனாகக் கண்களை மூடித் தன் ஆசிரியரை நினைத்துத் தியானத்தில் மூழ்கினான். ஆனால் பூக்கூடைக்குக் கைகளை நீட்டிய சுரமஞ்சரியிடம் பணியாளன் கூடையை தர மறுத்தான்: “நீங்கள் விலகி இருங்களம்மா! இவ்வளவு பெரிய கூடையைத் தூக்கித் திறந்து பூக்களைக் கொட்டுவதற்கு உங்களால் முடியுமா? நானே கூடையைத் திறந்து பூக்களை இவர் பாதங்களில் படைக்கிறேன்” என்று பணிவான குரலில் கூறிவிட்டுத் தானே கூடையோடு முன் வந்து இளங்குமரனை நெருங்கினான் பணியாளன். “நீ பூக்கூடையைக் கொடு! நான்தான் இவர் பாதங்களில் பூக்களைப் படைக்க வேண்டும். புண்ணியத்தையெல்லாம் நீ பெற்றுக் கொள்ளலாம் என்று பார்க்கிறாயா அது முடியாது” என்று வேடிக்கையாகவும் பிடிவாதமாகவும் கூறிப் பணியாளனை மறித்து சுரமஞ்சரி கூடையைப் பிடித்தாள். அவன் உடனே சற்றுப் பயந்து பதறினாற்போன்ற குரலில், “வேண்டாம் அம்மா! விட்டுவிடுங்கள்” என்று சொல்லிக் கூடையை இறுகப் பற்றிக் கொண்டான். அவள் அவன் கூறியபடி கேட்காமல் கூடையைத் தன் பக்கமே இழுத்தாள். உயரமும் அகலமுமான அந்தப் பெரிய பூக்குடலையை இருவரும் மாறி மாறித் தம் பக்கம் இழுத்ததனால் குடலையே இருவருக்கும் மாறி பொதுவில் கீழே விழுந்து சரிந்தது. பூக்கள் சிதறின. அவ்வளவில் யாரும் எதிர்பாராத குடல்நடுக்கும் காட்சியொன்றைக் கூடியிருந்தவர்கள் கண்டார்கள். ஆ! இதென்ன? சரிந்த பூக்களோடு குடலைக்குள்ளிருந்து கருநாகம் ஒன்று சீறிக்கொண்டு வருகிறதே! கரி பூசிய அரசிலை போல அதன் படம் இளங்குமரனின் பாதங்களுக்கு மேலே உயர்கிறதே! ஐயோ! கூட்டம் நிலைகெட்டு ஓடியது. சுரமஞ்சரி ஒன்றும் புரியாமல் ‘வீலெ’ன்று அலறிப் பின்வாங்கினாள். பூக்களின் அடியிலிருந்து முடிவற்ற நீளமாய்க் கருமை பெருகிவரச் சர்ப்பம் தன் முழு உருவமும் தெரிய வெளியேறிப் பொன் மெருகிட்டாற் போன்ற அவன் பாதங்களில் நெளிந்து படத்தைத் தூக்கிக் கொண்டு நின்றது. சுரமஞ்சரி பயங்கரமாக அலறிவிட்டு மூர்ச்சையாகித் தான் நின்ற இடத்திலேயே மயங்கிச் சுருண்டு விழுந்தாள். இந்த உலக நினைவே இல்லாதவனாகி இளங்குமரன் சிலையாய் நின்றான். அவனுடைய கண்கள் மூடிய நிலை மாறாமல் அப்படியேயிருந்தன. பிளந்த நுனி நாக்குகள் இரண்டும் அக்கினிக் கொழுந்தாய் நெளிய ‘என் நஞ்சையெல்லாம் இந்த அழகிய பாதங்களில் அர்ப்பணம் செய்துவிட்டு நான் தூய்மை யடைந்து விடட்டுமா?’ என்பது போல் படந்தூக்கி நின்றது நாகம். யாருடைய பாதங்களில் அந்தப் படம் நின்றதோ? அவன் மனத்தில் வேறொரு படம் அதாவது அவனை இப்படி ஆக்கிய ஞான குருவின் படம் நின்றது. |