மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி

11. உத்தம நாயகன்

     நெஞ்சுக்குள்ளேயே கிடைத்த குரு தரிசனத்தை முடித்துக்கொண்டு அவன் கண்களைத் திறந்தபோது அங்கே அவனெதிரில் நீலதாகமறவர் நின்று கொண்டிருந்தார். அவர் கைகளில் ஒரு கருநாகம் படத்தோடு சேர்த்து இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. கீழே சுரமஞ்சரி மயங்கி விழுந்து கிடந்தாள். சுற்றிலும் கூட்டத்தினர் மிரண்ட கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த போதே அந்தச் சர்ப்பத்தைக் கீழே எறிந்து படத்தை மிதித்துக் கொண்டு நின்றார் நீலநாகமறவர். “தொழுத கையுள்ளும் படையொடுங்கும் என்று நேற்று நான் கூறியிருந்ததை இவ்வளவு விரைவில் நீ மறந்துவிடுவாயென்று நான் நினைக்கவில்லை இளங்குமரா! இந்தச் சமயத்தில் நான் இங்கு வந்து சேர்ந்திருக்கவில்லையானால் இதற்குள் நீ பாம்பு கடித்து இறந்துபோயிருப்பாய்” என்று சினத்தோடு அவனைக் கடிந்து கொண்டார் நீலநாகர். அதற்குள் வானவல்லியும், வசந்தமாலையும் ஓடிவந்து சுரமஞ்சரியின் மயக்கத்தைத் தெளிவித்திருந்தார்கள். அவர்களோடு வந்திருந்த யவனப் பணியாளனை மட்டும் காணவில்லை. அவன் எங்கோ ஒடிப் போயிருந்தான்.

     கூடியிருந்த கூட்டத்தினரும் நீலநாகரும் அந்தப் பெண்களைச் சுட்டெரித்து விடுவது போலப் பார்த்தார்கள்; முணுமுணுத்தார்கள். “இவள் பெரிய வஞ்சகப் பெண் பேய்! இல்லாவிட்டால் இவர் மேல் பெரும் பக்தியுள்ளவளைப் போல் நடித்துப் பூக்குடலைக்குள் பாம்பை மறைத்துக் கொண்டு வந்து இவரைக் கொலை செய்ய முயலுவாளா? என்ன அநியாயம்? பூம்புகார் நகரம் எவ்வளவோ கெட்டுப் போய்விட்டது ஐயா! ஒரு பாவமுமறியாத இந்த இளைஞரைக் கொன்று இவளுக்கு என்னதான் ஆகப்போகிறதோ?” என்று கூட்டத்திலிருந்து தன்னைப் பற்றிப் பலவிதமாக எழுந்த குரல்களைக் கேட்டுச் சுரமஞ்சரி நெருப்பைக் கொட்டினாற்போல் துடித்தாள். இளங்குமரனோ புன்முறுவல் மாறாத முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

     “எனக்கு ஒரு பாவமும் தெரியாது, ஐயா! எங்கள் தந்தை கூறியபடி மலரிட்டு வணங்க வந்தேன்...” என்று தொடங்கி உணர்ச்சிகரமாக நெகிழ்ந்து வாய்விட்டு அழுதுகொண்டே ஏதோ சொல்ல வந்த சுரமஞ்சரியை நோக்கி இடி முழக்கக் குரலில் தூற்றிப் பழித்துவிட்டு வெறும் பழிப்பால் மட்டும் அடக்க முடியாத சினத்தில் என்ன செய்கிறோம் என்ற உணர்வே இன்றிக் கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து அவள்மேல் எறியப் பாய்ந்தார் நீலநாகமறவர். அவ்வளவுதான்! அந்தப் பெரிய கூட்டத்துக்கு உணர்ச்சித் தீயை மூட்டிவிட்டாற் போல் ஆயிற்று அவர் செயல். எல்லாரும் அவரவர்களுக்குத் தோன்றியபடி கல்லையும், கட்டையையும் எடுத்து எறியத் துணிந்து விட்டார்கள். தாங்கள் உயிர் பிழைத்துப் பட்டினப்பாக்கத்துக்குத் திரும்பப் போவதில்லை என்று அந்த மூன்று பெண்களும் உணர்வு செத்து உயிர் மட்டும் சாகாமல் மருண்டு நின்றபோது ஒரு விந்தை நிகழ்ந்ததைக் கண்டார்கள். யாரும் எதிர்பாராதவிதமாக “எல்லாவற்றையும் இந்த உடம்பில் எறியுங்கள்!” என்று இளங்குமரன் அவர்களுக்கு அருகில் வந்து முன்புறம் நின்றுகொண்டான். அவர்களை நோக்கி எறியப் பெற்றுப் பாய்ந்து வந்த சில கற்கள் அவன்மேல் விழுந்தன. அடுத்த கணம் கூட்டத்தினரும், நீலநாகரும் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் திகைத்து நின்றார்கள். கற்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவின.

     “வேறு பூக்களை நம்பாமல் என்னையே உயிர்ப் பூவாக உங்கள் பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன்” என்று கண்ணிர் மல்க இளங்குமரன் பாதங்களில் வீழ்ந்தாள் சுரமஞ்சரி. நீலநாகர் புயலாக மாறினார்; இடியாக இடித்தார்: “விலகிப் போ. உனக்கு அந்தப் பாதங்களை வணங்குவதற்கு என்ன தகுதி இருக்கிறது ? குடலைக்குள் நாகப்பாம்பைக் கொணர்ந்தது போல உன் இதயத்தில் நீ என்னென்ன நச்சு எண்ணங்களை அடைத்துக் கொண்டு வந்திருக்கிறாயோ?” என்று இரைந்து கத்திக் கொண்டே ஓடி வந்து அவளை அவன் பாதங்களிலிருந்து அவர் விலக்க முயன்றபோது அவள் தானாகவே விலகுவதற்காக நிமிர்ந்தாள். அப்படி அவள் விலக நிமிர்ந்தபோது கல்லெறிபட்டு இளங்குமரன் நெற்றியில் காயமாயிருந்த இடத்திலிருந்து இரத்தத்துளி ஒன்று சிவப்பு இரத்தின மணிபோல் உருண்டு சரிந்து நழுவி, அவளுடைய நெற்றியில் திலக மிட்டாற் போல் உதிர்ந்தது. அவனுடைய அந்த நெற்றிக் காயத்தைத் தன் கைகளால் தானே துடைக்க வேண்டு மென்று சுரமஞ்சரியின் இதயம் தவித்தது.

     “உத்தம குணமே நிறைந்து சத்திய தரிசனம் தரும் உன்னதமான மனிதர்களைக் காவியங்களில்தான் காண முடியும் என்று நீங்கள் கூறியது தவறு. இதோ வாழ்விலேயே என் கண்முன் உங்களை அப்படி உத்தமராக நான் காண்கிறேனே!” என்று அவனிடம் சொல்வதற்கு அவள் நாவு துடித்தது, ஆனால் சொல்வதற்கு வேண்டிய வார்த்தைகள் வரவில்லையே, அவள் தவித்தாள்.

     “இதென்ன அநியாயமடி, வசந்தமாலை? பூக்கூடையில் பாம்பு எப்படி வந்தது?” என்று பேயறைந்தாற்போல் அரண்டுபோய் நின்று கொண்டிருந்த வானவல்லி வசந்தமாலையின் காதருகே மெல்லக் கேட்டாள்.

     “ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறது, அம்மா. யார் செய்ததென்றுதான் சொல்ல முடியவில்லை. நான் இதை அப்போதே நினைத்தேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் உங்கள் தந்தையார், இங்கே போய் வருமாறு நம்மை அனுப்பிய போதே இதில் ஏதோ சூது இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது” என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே முணுமுணுத்தாள் வசந்தமாலை.

     இடது கையை நெற்றிக் காயத்தின் மேல் வைத்து அடைத்துக் கொண்டு, புன்னகை குன்றாத மலர்ச்சி முகமெங்கும் முன்போலவே இலங்க இளங்குமரன் சுரமஞ்சரியைப் பார்த்தான். மெல்ல வலது கையை உயர்த்திச் செந்தாமரைப் பூவின் உள் இதழ் போன்ற அகங்கையை அசைத்து நீங்கள் போகலாமே என்று குறிப்பைப் புலப்படுத்தினான். அவள் அதைப் புரிந்து கொண்டாலும் தயங்கி நின்றாள். கண்களிலும் இதழ்களிலும் எதையோ பேசவேண்டுமென்ற உணர்வும் தயங்கி நின்றது.

     “நான்... நான்... ஒரு பாவமும் அறியாதவள்... இப்படி யாரோ சூது செய்திருக்கிறார்கள்... என்னை மறுபடியும் மன்னிக்க வேண்டும்” - அவள் சொற்களைக் குழறினாள். தண்ணிரில் நனைந்த புதிய பட்டுப்போல் முழுமை தோயாமல் சொற்களைப் பேசியது அவள் சோகம். அவன் நன்றாக வாய்விட்டுச் சிரித்தான். நீண்ட நாட்களுக்குப் பின் இன்று தான் முதன் முறையாக இப்படிச் சிரிக்கிறான் அவன்.

     “நான் இதைக் குற்றமாக எடுத்துக் கொண்டு வேதனைப் பட்டால்தானே உங்களை மன்னிக்கலாம். நான் இதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லையே?”

     “நீங்கள் மகாகவிகளுக்கும் உத்தம நாயகனாகக் காவியங்களில் வாழவேண்டிய பேராண்மையாளர். அதனால் எதையும் பிறர் குற்றமாக எடுத்துக்கொள் வதில்லை. ஆனால் நான் சாதாரணப் பெண். நான் செய்தது குற்றமென்று என் மனமே உறுத்துகிறது.”

     இதற்கு அவனிடமிருந்து பதிலே இல்லை. மெளனம் தான் நிலவியது. சிரித்துக்கொண்டே பழையபடி அவளை நோக்கி கையை அசைத்தான் அவன்.

     சுரமஞ்சரி கூட்டத்தினரின் வசை மொழிகளைச் செவிகளில் நிரப்பிக்கொண்டு பல்லக்குத் தூக்கிகள் காத்துக் கொண்டிருந்த இடத்துக்கு நடைப் பிணமாகச் சென்றாள். வசந்தமாலையும் வானவல்லியும் பின் தொடர்ந்தனர். கூட்டத்தில் சிலர் அவர்களைக் கண்டு வெறுப்புடனே வேறு புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு காறியுமிழ்ந்தனர். கைகளைச் சொடுக்கி முறித்தனர்.

     “இப்படிக் கெட்ட குணம் படைத்த பெண்களை ஏழு செங்கல் தலையிட்டுக் கழுதை மேலேற்றிப் பூம்புகார்த் துறைமுகத்துக்கு எதிரேயுள்ள வெள்ளிடை மன்றத்தைச் சுற்றிவரச் செய்ய வேண்டும்” என்று அந்த ஊர் வழக்கமான தண்டனையை அவர்களும் கேட்கும் படி இரைந்து கத்தினான் கூட்டத்தில் ஒருவன். கலகலப்பிலிருந்து விலகிப் பல்லக்கின் அருகில் வந்ததும் சுரமஞ்சரி சூறாவளியானாள்.

     “அடி வானவல்லி! இந்தப் பல்லக்கு பரிவாரம் எடுபிடியாட்கள் பொன்னும் மணியுமாக மின்னும் அணிகலன்கள் எல்லாவற்றையும் இடித்து நொறுக்கிக் கொண்டுபோய் நேர்கிழக்கே கடலில் கொட்டுங்கள்! என்னை விட்டுவிடுங்கள். இந்தப் பல்லக்கு நரகத்துக்குப் போகும் வாகனம். நான் இதில் ஏறி வர மாட்டேன். இந்தா! எப்போதோ செய்த பாவங்களைப் போல் என் உடம்பைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பொன்னரிமாலை, மின்னிடை ஒட்டியாணம் முன் கை வளையல்கள் எல்லாவற்றையும் கொண்டுபோ, என் தந்தையாகிய கொடும்பாவியிடம் கொடு” என்று வெறியோடு அறைகூவியவளாய்த் தன் உடம்பில் அங்கங்கே இருந்த அணிகலன்களைத் தாறுமாறாகக் கழற்றிப் பல்லக்கில் எறியலானாள் சுரமஞ்சரி. “அம்மா! அம்மா! இதென்ன காரியம்? பொது இடத்தில் எல்லாரும் காண இப்படி?” என்று தன்னைத் தடுக்க முன்வந்த வசந்தமாலையைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.