![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 12. குறுகிய பார்வை இந்திர விழாவின் இரண்டாவது நாள் காலையில் நாளங்காடியில் இவ்வளவு நிகழ்ச்சிகளும் பரபரப்பாக! நிகழ்ந்து கொண்டிருந்தபோது இவற்றுக்குக் காரணமான இருவரோ பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையிலிருந்தே வெளியேறாமல் தங்களுக்குள் அந்தரங்கமாகப் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். வெயில் குறைவாக இருந்த அந்தக் காலை நேரத்தில் மேக மூட்டத்தினால் கவிந்திருந்த வானத்தின் கீழே பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகையின் ஏழாவது மாடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் பெருநிதிச் செல்வரும், நகைவேழம்பரும். தாங்கள் நின்று கொண்டிருந்த உயரத்திலிருந்து பார்த்தபோது கடல், காவிரிப் பூம்பட்டின நகர் ஆகியவற்றின் தோற்றம் கீழே அவர்களுக்கு மிகத் தாழ்ந்து தெரிந்தது. தொலைவில் நீலநிறம் கன்றிப் பாளம்பாளமாக மின்னும் கடல் அலைகள் வரை நீண்டு படரும் பார்வையைத் திருப்பிக் கொண்டு பக்கத்தில் நின்ற நகைவேழம்பரைப் பார்த்துக் கேட்டார் பெருநிதிச் செல்வர்: “சமய நூல்களின் முடிந்த பயன் மோட்சத்துக்குப் போவதுதானே? அந்தப் பயன் இதற்குள் அவனுக்குக் கிடைத்திருக்கும். பூக்குடலைக்குள் சிறைப்பட்டுக் கிடந்த கருநாகம் குடலை கவிழ்ந்ததும் சீறிக்கொண்டு பாய்ந்தி ருக்கும். நாம் எதிர்பார்த்த காரியத்தையும் தவறாமல் செய்திருக்கும்.” “ஆனால் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போனவனைத் தவிர மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். பாவம்! உங்கள் பெண் சுரமஞ்சரி நன்றாக ஏமாந்து போயிருப்பாள். தன் மனத்தைக் கவர்ந்தவனுடைய பாதங்களில் மலர்களைக் குவிக்கப் போவதாய் எண்ணிக் கொண்டு சென்றிருப்பாள்.” “எல்லாம் உங்களுடைய சூழ்ச்சிப் பயன்தான் நகை வேழம்பரே. அழிப்பதற்கும் கெடுப்பதற்கும் பாழாக்குவதற்கும் வேண்டிய சிந்தனைகளை நயமாக உருவாக்கிச் சொல்வதில் உங்களுக்கு இணைதான் இல்லவே இல்லையே?” என்று பெருநிதிச்செல்வர் கூறிய வார்த்தைகளில் பாராட்டோடு சிறிது குத்தலும் இருப்பதை நகைவேழம்பர் உணர்ந்தார். அதாவது, ‘உன்னை வைத்து ஆதரித்து வளர்த்துக் கொண்டு வரும் என்னைக் கவிழ்க்க வேண்டுமென்று உனக்குத் தோன்றினால்கூட அதற்கும் இப்படி ஏதாவது நயமான சூழ்ச்சியைச் செய்வதற்கு நீ தயங்கமாட்டாய்’ என்று அவருடைய வார்த்தைகளில் தனக்கும் ஒரு தொனி இருப்பதை நகைவேழம்பரால் ஊடுருவிக் காணமுடிந்தது. “சூழ்ச்சிகளைக் கேட்பதற்கும், செயலாக்குவதற்கும் உங்களைப்போல் துணிந்த கட்டைகள் இருக்கும்போது நான் சொல்லிக் கொடுப்பதுதானா பெரிய காரியம்?” என்று தொனிப் பொருள் உள்ளடங்குகிற விதத்திலேயே பதிலும் கூறினார் நகைவேழம்பர். ‘துணிந்த கட்டை’ என்ற பதச் சேர்க்கைக்கு மட்டும் ‘துணிவில்லாத கட்டை’ என்கிற குறிப்புக் கொடுத்து ஒலித்தாற் போலிருந்தது. தங்கள் இருவருக்கும் இடையே உரையாடல் தொடங்கியதும் தொடர்வதும் விரும்பத்தக்க வழியில் அமைந்ததாகப் படாததனால் பேச்சை நிறுத்திக் கொண்டு மறுபடியும் பார்வையைத் தொலைவில் கடல் அலைகள் வரை படர விட்டார் பெருநிதிச் செல்வர். ஆனால் நகைவேழம்பர் அவரை அப்படியே விடவில்லை. உரையாடலைத் தொடர்வதன் மூலமாக அவருடைய கவனத்தை மறுபடியும் தம் பக்கமாகத் திருப்பினார். “இப்போது செய்திருக்கும் சூழ்ச்சியில் இரண்டு வகையிலும் பயன் உண்டு. யார் கடியுண்டு சாக வேண்டுமென்று பாம்பை மலர்களில் சிறை செய்து அனுப்பினோமோ, அவனைக் கடிக்காமலே அது அடிபட்டு இறந்து போனாலும், வேறு ஒரு பயன் நாம் நினைத்தது போல் விளையும். அந்தப் பயல் உங்கள் புதல்வி சுரமஞ்சரியை இனிமேல் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான். சுரமஞ்சரி மிகக் கொடியவள் என்று இந்த நிக்ழ்ச்சி அவனை எண்ணச் செய்யும்.” “எப்படிச் செய்யுமோ? எப்படிச் செய்யாமற் போகுமோ? பாம்போடு விளையாடுவது என்று கேள்விப் பட்ட தில்லையா? என்ன நடந்ததென்று முடிவாகத் தெரிகிற வரை என் நெஞ்சு அடித்துக் கொண்டுதான் இருக்கும். அந்தப் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போன யவனத் தடியனிடம் நன்றாகச் சொல்லியிருக்கிறீரோ இல்லையோ? அயர்ந்து மறந்து குடலையை அவன் இந்தப் பெண்களில் யார் கையிலாவது கொடுத்துத் தொலைக்காமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை...” “எதை எதிர்பார்த்துச் செய்கிறோமோ அதுவே நடக்குமென்று பிடிவாதமாக நம்புவதோடு சிந்தனையை நிறுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மேலும் ஒருபடி அதிகமாகப் போய் ‘இப்படியும் இது நடக்கலாமே?’ என்று நினைத்தாலே வம்புதான். வேறு வேறு கோணங்களில் மாறிச் சிந்திக்கும் போது கவலையும் பயமும்தான் அதிகமாகும். அதிகமாகச் சிந்தனை செய்தால் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியம் உண்டாகும்.” “இது நீர் அடிக்கடி சொல்கிற வார்த்தைதான் நகைவேழம்பரே, ஆனால் எதை எதிர்பார்த்துச் செய்கிறோமோ அதுவே நடக்கும் என்று எதிர்பார்த்து இரண்டு மூன்று முறை ஏமாந்து விட்டோம் நாம்! சுடுகாட்டுக் கோட்டத்து பேய்மகளாகிய பைரவியே எதிர்பார்த்ததைச் செய்ய முடியாமல் அலறிக் கொண்டு ஓடி வந்ததை அதற்குள் மறந்து போய்விட்டீரா?” என்றார் பெருநிதிச் செல்வர். மேகமூட்டம் கலைந்து மேல்மாடத்தில் வெயில் பரந்தது. நகைவேழபர் மறுமொழி கூறாமல் இருந்தார். தொலைவில் கடல் அலைகள் வெள்ளியம் உருகினாற் போல நன்றாக மின்னின. நகரத்தின் நாற்புறமும் மரங்களிலும் மன்றங்களிலும் சிறு வீடுகளிலும், பெரு மாளிகைகளிலும், அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் இந்திர விழாவுக்காக ஏற்றிய கொடிகள் வெயிலில் பட்டொளி வீசின. தனித்தன்மை தெரியாமல் கலப்புற்ற பலவகை ஒலிகள் காற்றில் மிதந்து வந்தன. கண்களுக்கு எட்டின. தொலைவில் தென்பட்ட நாளங்காடி மரக் கூட்டத்தின் மேற்பரப்பைப் பார்த்தபோது அவற்றின் கீழேயிருந்து பாம்பு கடிக்கப் பெற்று அலறும் இளைஞன் ஒருவனுடைய குரல் பெரிதாய் எழுந்து ஒலித்தது. நகரத்தின் நான்கு காதமும் பரவுவது போன்ற பிரமையை உணர்ந்தார் பெருநிதிச் செல்வர். நாளங்காடியில் ஒலிக்கின்ற குரல் அந்த மரக்கூட்டத்தைக் கடந்து இவ்வளவு தொலைவுக்குக் கேட்காதென்று நிச்சயமாகத் தெரிந்திருந்தும் அப்படிக் கேட்பது போல அவர் நினைத்துப் பார்க்க விரும்பியதாலோ அல்லது செய்த கொடுமையின் பயத்தினாலோ அந்தப் பிரமை உண்டாக்கியது. பூம்புகார் நகரத்திலேயே உயரமான ‘நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம்’ என்ற சதுக்கத்தின் தூண், நகர் பரப்பின் ஒரு பகுதியில் தனியாகத் தெரிந்தது. இன்னொரு பக்கம் தரை வழியாகப் பூம்புகாருக்கு வருவோர் நுழையும் கட்டளை வாயில் தொலைவில் தோன்றியது. ‘இந்த இடத்துக்கு உள்ளே இனிமேல் சோழ நாட்டுக் கோபுரத்தின் கட்டளைக்கு உட்படுகிறீர்கள்’ என்று வருகிறவர்களுக்கு எல்லாம் தன் பெயராலேயே சொல்லுவது போலக் கட்டளை வாயில் என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தது அது. வேறு எதைப் பேசி நகைவேழம்பரோடு உரையாடலை வளர்ப்ப தென்று தோன்றாமல் முன்பு பார்த்துக் கொண்டிருந்த திசையிலிருந்து திரும்பி நெடுந்துண் நின்ற மன்றத்தையும், வெளிப் பக்கம் போகிறவனுக்கு அந்தக் கோநகரத்தின் கட்டளைகள் முடிகிற இடமாகவும், உள்ளே வருகிறவனுக்கு அதே கட்டளைகள் தொடங்கு கிற இடமாகவும் இருந்த கட்டளை வாயிலையும் மாறிமாறிப் பார்த்தார் பெருநிதிச் செல்வர். ‘உண்மைகள் எல்லாம் வெளிப்படுமானால் இவ்வளவு உயரமான மாளிகையின் மேலிருந்து இந்த அழகிய நகரத்தைப் பார்க்க முடியாதவனாகப் போய் விடுவேன் நான்’ என்று ஒருகணம் நினைக்க, வேண்டாததும், நினைத்தாற் கசப்புத் தருவதுமான ஞாபகம் ஒன்று தன்னைப் பற்றியே அவருக்கு உண்டாயிற்று. மேல்மாடத்திலிருந்து கீழே இறங்கிப் போனாலொழிய அந்த ஞாபகத்தை மறக்க முடியாது போலிருந்தது. கண்ணுக்கு முன்னால் தென்படும் விரிவான காட்சி களிலிருந்து பார்வையைக் குலுக்கிக் கொண்டு விரிவாக எதுவும் தென்படாத இடமாகத் தேடி மாளிகையின் கீழ்ப்பகுதிக்குப் போய்விட்டால் நிம்மதியாக இருக்கலாமென எண்ணினார். பூனை கண்ணை மூடிக்கொள்வது போல் மனத்தில் எண்ணமாய் இறுகியிருந்த புற்றுக்களை உடைத்துக் கொண்டு கிளர்ந்த பழைய பாவ உணர்வுகளை ஒளித்து வைக்க ஏதோ ஓர் இருள் அந்தச் சமயத்தில் அவருக்குத் தேவையாக இருந்தது. பார்வையையும் பார்க்கப் படுகிறவற்றையும் குறுக்கிக் கொண்டு விட்டாலே அந்த இருள் கிடைக்கும் என்று நம்பியவராய், “வெப்பம் மிகுதியாகிவிட்டது. கீழே போகலாம், வாருங்கள்” என்று நகைவேழம்பரையும் அழைத்துக் கொண்டு படிகளில் இறங்கினார் பெருநிதிச் செல்வர். அப்படி இறங்கிக் கீழே செல்லும் சமயத்தில் சுடுகாட்டுக் கோட்டத்திலிருந்து திரும்பிக் கொண் டிருக்கும்போது நகைவேழம்பர் தன்னைக் கேட்ட கேள்வியொன்றை மீண்டும் நினைவு கூர்ந்தார் அவர். ‘பயப்படுகிற எதையுமே நீங்கள் செய்வது இல்லையோ?’ இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஒற்றைக்கண் கொலைகாரன் இதைச் சொல்லியதன் மூலமாகத் தனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்பினான் என்ற சந்தேகம் மீண்டும் வந்தது. தன்னுடைய வாழ்க்கை இரகசியம் மட்டுமல்லாமல் வேறு பல இரகசியங்களையும் இந்தக் கேள்வி அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அந்த இரகசியங்களில் பெரும் பகுதி அவரைப் போலவே நகைவேழம்பருக்குத் தெரிந்தவை என்பதனால்தான் கேள்வியினால் ஞாபகப்படுத்தப் பெறுகிற ‘பயங்கர நிகழ்ச்சி’ - எதுவாக இருக்குமென்று அவர் சந்தேகப் பட்டார். நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் கீழே இறங்கி, மாளிகையின் முன்பகுதிக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பூக்குடலையைச் சுமந்துகொண்டு போன யவனப் பணியாளன் வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்து அவர்களுக்கு முன்னால் நின்றான். நெஞ்சு வேகமாக அடித்துக் கொள்ள மனமும், கை கால்களும் நடுங்கிப் பதற, “போன காரியம் என்ன ஆயிற்று” என்று அவனைக் கேட்டார் பெருநிதிச் செலவர். அவன் நாளங்காடியில் நடந்ததை எல்லாம் சொன்னான். சுரமஞ்சரி, வானவல்லி முதலியவர்கள் பூக்குடலை கீழே விழுந்ததும் ஏற்பட்ட பரபரப்பிலேயே அந்தப் பணியாளன் ஒடிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அவன் அதற்கு அப்புறமும் நடந்தவற்றை அங்கிருந்து கவனித்துவிட்டே வந்திருந்தான். பூக்குடலையுடன் அங்கே போனதிலிருந்து சுரமஞ்சரி பல்லக்கின் அருகே வந்து தன் அணிகலன்களைக் கழற்றி எறிந்து, ‘மாளிகைக்கு வரமாட்டேன்’ என்று இப்போது முரண்டு பிடித்துக் கொண்டிருப்பது வரை எல்லாவற்றையும் அவருக்குச் சொன்னான் யவனப் பணியாளன். “பாம்பாட்டிக்குக் கொடுத்தனுப்பிய பொற்கழஞ்சுகள் தண்டமாகப் போனதுதான் கண்ட பயன்” என்று நகைவேழம்பருக்கு உறைக்கிறாற்போல அவரைப் பார்த்துச் சினத்தோடு இரைந்து சொன்னார் பெருநிதிச் செல்வர். “நான் என்ன செய்வேன்? எல்லா இடத்திலும் அந்த ஆலமுற்றத்து முரடன் உதவிக்கு வந்து நின்று காரியத்தைக் கெடுக்கிறானே!” என்று பதிலுக்குச் சீறினார் நகைவேழம்பர். “தேரில் குதிரையைப் பூட்டிக் கொண்டு வாரும். அந்தப் பெண் எதையாவது உளறி, அங்கே நாளங்காடிக் கூட்டத்தில் என் மானத்தைக் கப்பலேற்றி வைக்கப் போகிறாள். உடனே போய் அவளைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு வரலாம்” என்று அப்போது நாளங்காடிக்குப் போவதற்குப் பறந்தார் பெருநிதிச் செல்வர். அவர் அவசரப் படுத்தியதற்குச் செவி சாய்த்தும் அவசரம் அடையாதது போல - அதே சமயத்தில் அந்தக் கட்டளையை மறுக்கவும் துணியாதவராக நகைவேழம்பர், தனது இயல்பான நடையிலேயே தேரில் குதிரைகளைப் பூட்டிக் கொண்டு வருவதற்காகச் சென்றார். வந்து நிற்கும் பணியாளனுக்கு முன்னால் அவர் இப்படி அலட்சியமாக நடந்து கொண்டது பெருநிதிச் செல்வரைத் திகைக்கச் செய்தது. |