![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 15. மலையோடு வாதம் அவனை அழைத்த முதற் சொல்லிலேயே ஏளனம் ஒலிக்க அலட்சியமாக அழைத்தது அந்த அறிவுச் சிங்கம். “குழந்தாய்! ஒன்று இரண்டு மூன்று எனப்படும் எண்கள் எண்ணுவதற்கு மட்டும் பயன்படும் குறிகளா? அல்லது அவைகள் குணங்களாதலும் உண்டா?” “ஐயா! எண்கள், ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணுவதற்குரிய குணத்தைப் பெற்றுப் பொருள்களை எண்ணும் தொழிலைச் செய்யும்போது குறியீடுகள். ஒருமை, இருமை, மும்மை என எண்ணும் தன்மையாகிய மூலப் பண்பாகவே நிற்கும்போது குணங்கள். எண்ணுவதைக் குணமாகச் சொல்லும்போது சங்கை என்று சொல்கிறார்கள் தருக்க நூலார். அணியாகச் சொல்கிறார்கள் அலங்கார நூலார், கருவிகளாகச் சொல்கிறார்கள் கணித நூலார். எண்களில் ஒருமைதான் அழிவில்லாதது என்பது தருக்க நூல்களின் முடிவு. ஒருமைக்குமேல் யாவும் எல்லையற்றவை. எல்லையற்றவை யாவையோ அவை அளக்க முடியாதவை. ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணத் தொடங்கி ஒவ்வொன்றாக வளர்ந்து வளர்த்துக் கொண்டு போய் எண்ணும் ஆற்றல் இறுதியாகச் சோர்ந்து முடங்கிய முடிவான மூலைக்குக் ‘கோடி’ என்று பெயரிட்டு விட்டுத் தளர்ந்து போனார்கள். தெரு முடிகிற இடத்திற்குத் தெருக்கோடி என்று பெயர் சொல்கிறாற்போல் எண் முடிகிற இடத்துக்கும் கோடி என்று பெயர். ஒருமை, அல்லாதது எல்லாம் பன்மை என்பது எங்கள் தமிழ் வழக்கு. ஒருமை, இருமை பன்மை என்பது வடமொழி வழக்கு. எண்களில் ஒன்றுதான் நித்தியம். ஏனையவை அநித்தியம் என்ற கருத்து காத்தியாயனர், தொல்காப்பியர், பாடியகாரர் எல்லோருக்கும் உடன்பாடு. பதினொன்று என்பதை ஒன்றை மிகுதியாக உடைய பத்து என்றும், முப்பத்தி ஒன்று என்பதை ஒன்றை மிகுதியாக உடைய முப்பது என்றும் காத்தி யாயனர், தொல்காப்பியர் ஆகியோர் பிரிப்பர். எண்ணால் அளக்க முடியாதவற்றை அளப்பதற்குத் தான் தருக்கத்தில் பரிமாணம் என்று மற்றொரு குணம் வகுத்தார்கள். ஒன்று, இரண்டு, என எண்ணி அளக்க முடியாமல் நுண்மை பெருமை, குறுமை, நெடுமை எனக் கருதியே அளக்க முடிந்தவற்றை பரிமாணத்தால் அளக்க வேண்டும்.” “நல்லது! நீயும் ஏதோ விவரங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறாய். இதோ, இந்தக் கேள்விக்குப் பதில் சொல். ஒருமை அல்லாதன எல்லாம் பன்மை என்பது தவிர ஒருமையிலும் பன்மை உண்டோ?” “உண்டு! ஒன்றில் இரண்டு அரைப் பகுதிகளும் நான்கு கால் பகுதிகளும், எட்டு அரைக்கால் பகுதிகளும் கூறுபடுத்தினால் இன்னும் பல பகுதிகளும் அடங்கியிருக்கின்றன. ஒருமையிலும் பின்ன வகையால் பன்மை காணலாம். ஆனால் பின்னப்படும்போது பொருளின் குணம் சிதையுமாதலால் முறைப்படி அவற்றைப் பன்மை என ஒப்புக்கொள்ள இயலாது. குணம் பொருளுக்கு உரியதாகச் சொல்லப்பட்டது. ஒன்றாயிருந்த பொருள் இரண்டாகவும், நான்காகவும், எட்டாகவும் சிதைந்தபின் அவற்றை எண் என்னும் குணத்தால் அளப்பது நியாயமாகாது ஐயா! தருக்கத்தில் பொருள் சொல்லி பின்புதான் குணம் சொல்லியிருக்கிறார்கள்.” பக்கத்தில் நின்ற நீலநாகருக்கு ஒரே ஆச்சரியம். ‘இந்தப் பிள்ளையை நாங்கூர் அடிகள் மறுபிறவி எடுக்கச் செய்து அனுப்பினாற்போல அறிவின் அவதாரமாய் ஆக்கி அனுப்பிவிட்டாரே!’ என்று எண்ணி எண்ணி வியந்தார் அவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் மாமரத்துக் காய்களின் சாயலைக் கீழே நீர்ப்பரப்பில் பார்த்துக் கொண்டே குறி தவறாமல் இளங்குமரன் அம்பெய்து வீழ்த்திய நாளில், ‘குறி தவறாமல் பார்க்கும் கண்களுக்கு வில்லாற்றல் வளர்வதைப்போல் குறி தவறாமல் நினைத்து நினைத்து அடைய வேண்டிய இலட்சியம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதற்கருகில் போய்விடுகிற மனம் உடையவனுக்குத் தவத்தினால் சித்திகள் எல்லாம் கிடைக்கும். அந்தத் தவம் இந்தப் பிள்ளையிடம் இருக்கிறது’ என்று இளங்குமரனைக் காண்பித்து மற்ற மாணவர்களுக்கு முன்னால் தான் அவனைப் புகழ்ந்த வார்த்தைகள் இன்று தன் முன்னாலேயே நிதரிசனமாக அர்த்தம் பெற்று விளங்குவதை நீலநாகர் உணர்ந்தார். அந்தப் பன்மொழிப்புலவர் தமது தோளிலிருந்து வழுகி நழுவும் பட்டுப் போர்வையையும், மனத்திலிருந்து வழுகி நழுவப் பார்த்த அகம்பாவத்தையும் இவ்வளவு விரைவாக விட்டுவிடத் துணியாமல் ஒரே சமயத்தில் இழுத்து நிறுத்திப் போர்த்திக் கொண்டவராக மேலும் இளங்குமரனைக் கேட்டார். “பாகதமும், பாலியும், தெய்வ மொழியும் உலகமெல்லாம் புகழ்பெற்றிருக்கின்றன. வேங்கடத்துக்கும் குமரிக்கும் நடுவிலுள்ள சிறிது நிலப்பகுதியில் மட்டும் தானே உங்கள் தமிழ் வழங்குகிறது! பெளத்த சமய கிரந்தங்கள் பாலியில் மிகுதியாயிருக்கின்றன. தரிசனங்கள் தெய்வமொழியில் இருக்கின்றன. இப்படியெல்லாம் இருக்கும்போது தமிழ் மொழிக்கென்று தனியாக எழுத்து, இலக்கணம் எல்லாம் எதற்கு? பாலி வடிவிலோ, தெய்வ மொழி உருவிலோ, தமிழையும் எழுதிவிட்டால் என்ன?” “சுவாமி! என்னிடம் இந்தக் கீழ்மை நிறைந்த கேள்வியைக் கேட்பதற்காகத் தெய்வங்கள் உங்களை மன்னிக்க வேண்டும் என்று உங்கள் அறியாமைக்காக உங்கள் பொருட்டு நான் பிரார்த்தனை செய்கிறேன். எழுத்து என்பது சப்தத்தின் ஆடை. அது இல்லா விட்டால் சப்தம் நிர்வாணமாக நிற்கும். ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்துக்கள் ஆடை, அவற்றை நீக்குவது மானபங்கம் செய்வதற்கு ஒப்பானது, அகத்தியரும், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் எந்த எழுத்துக்களைத் தங்கள் தெய்வக் கைகளால் எழுத்தாணி பிடித்து எழுதினார்களோ அந்த எழுத்துக்கள் கண்ணில் தெரிவதாலேயே இன்றும் என் கண்கள் சூரிய ஒளியில் குளித்தது போல் புனிதமடைகின்றன. இந்த நகரின் ஆலமுற்றத்துக் கோவிலில் இருக்கிற தெய்வ பிம்பம் எப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக வணங்கப்பட்டு வணங்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறையின் பக்தியையும் வணக்கத்தையும் ஏற்றுத் தாங்கிக் கொண்டு தன் தெய்வ சக்தியை வளர்த்துக் கொண்டிருக்கிறதோ, அப்படியே தமிழும் பல கோடித் தலைமுறைகளின் பழக்கத்தில் எழுத்தும் சொல்லுமாக வணங்கப்பட்டு, வணங்கப்பட்டு மந்திரமாக நிறைமொழியாக வளர்ந்து நிற்கிறது! அதன் எழுத்துக்களை மாற்றலாமென்று நினைப்பதே பல தலைமுறைகளாக வணங்கப்பட்டு வரும் தெய்வ பிம்பத்தைக் கோவிலுக்குள்ளிலிருந்து வெளியே எடுத்து எறிய நினைப்பதற்கு ஒப்பாகும்.” இளங்குமரன் எவ்வளவோ சான்றாண்மையையும் சம்சித்தத்துவத்தையும் பெற்றிருந்தும் அந்த வட தேசத்துப் புலவரின் இந்தக் கேள்விக்கு இப்படி மறு மொழி கூறியபோது சற்றே கண்கள் சிவந்து முகம் சிவந்து உதடுகள் துடித்திட உணர்ச்சி வசப்பட்டு விட்டான். “கோபப்படாதே குழந்தாய்! வாதம் செய்கிறவன் சுயமாக உணர்ச்சி வயப்பட்டால் அந்தக் கணமே வாதத்துக்குரிய விஷயம் உணர்ச்சியிழந்து போகும் என்பது தருக்கத்தின் முறைகளில் ஒன்றல்லவா? வாதி தன்பலம் காட்டினால் வாதம் பலமில்லாதது என்றாகிவிடும். இப்போது உன்னை வேறொரு கேள்வி கேட்கிறேன். இதிகாச நாயகர்களாகிய இராமன், தருமன், கண்ணன், இவர்களைக் காவியக் குணங்களுக்காக வணங்குகிறாயா? அற்புதச் செயல்களைச் செய்தவர்கள் என்பதற்காக வணங்குகிறாயா?” “அற்புத செயல்களைச் செய்கிறவர்கள் வணங்கத் தகுதியுடையவர்களானால் இதோ இந்த நாளங்காடியில் இந்திரவிழாக் கூட்டத்திலே வயிற்றுப் பிழைப்புக்காகத் கண் கட்டி வித்தை காட்டிக் கொண்டிருக்கும் சாதாரண மாந்திரீகர்களையும் வித்தைக்காரர்களையும் கூட நான் வணங்க வேண்டியிருக்கும். வியாசரும், வான்மீகியும் காவியக் குணங்களால் தூய்மையாய் வரைந்து நம்முன் நிறுத்தும் நாகர்கள் சுயமாகவே தங்களுக்குள்ள தெய்வீக ஆற்றலையும் பெற்றுப் பால் வைத்திருந்த பேழையில் தேன் வைத்திருந்த பேழை கவிழ்ந்தாற்போல் இரட்டைச் சுவைகள் இணைந்து தேர்ந்த தெய்வங்களாய்த் தோன்றுகிறார்கள். ஆனால் பாமரர்களுக்குக் கதை சொல்லும் பெளராணிகர்களுடைய இராமனை என்னால் வணங்க முடியவில்லை. வியப்பதற்கு மட்டும்தான் முடிகிறது. காவியத்தில் வருகிற இராமன் வில்லை ஒடிப்பதற்கு ஒரு கணத்தில் நூற்றுள் ஒரு பங்கு நேரம்கூட ஆகவில்லை என்று கவி சொல்கிறார். வில்லை எடுத்ததையே காண முடிந்ததாகவும் ஒடித்ததைக் கேட்க மட்டுந்தான் முடிந்ததாகவும் கூறிய கவியைக் கற்கும்போது ஒடிப்பதற்கு ஆகிய நேரத்தை உணரவும் முடியவில்லை, உணரவும் முடியாத சிறிய அணு அளவு நேரம் அது என்று எண்ணி அதைச் செய்த காவிய நாயகனை என்னால் வணங்க முடிகிறது. பெளராணிகருடைய இராமனோ வில்லை ஒடிப்பதற்கே மூன்று நாள் ஆகிறது. முடிசூட்டு விழாவுக்காகக் கதை கேட்பவர்களிடமிருந்து பெளராணிகருக்குக் கிடைக்க வேண்டிய கணையாழியும் பிறவும் செய்யப் பெற்று வருகிறவரை அவருடைய இராமன் தாமச ராமனாய் வில்லைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடித்துக் கொண்டே இருக்கிறான். காவிய குணங்களைப் பெற்ற தெய்வ கணங்களாக இருப்பதனால்தான் இதிகாச நாயகர்களை அவர்களுடைய காவிய குணங்களுக் காகவே ‘பாவிகம்’ என்று பெயர். அவை எல்லார்க்கும் பொதுவான ஞான நிதி. அவை எந்த ஒரு தனிக் காவிய கருத்தாவுக்கும் தனிச் சொத்து இல்லை. பாரதத்தில் தருமன் வந்தபின் தருமம் செய்கிற மனிதனைக் காவிய நாயகனாக வைத்து யாருமே காவியம் செய்யலாகாதென வாதிடுவது பேதைமை.” எதிரே மகர குண்டலங்கள் அசைய, மணிமாலை சுடர் விரிக்க நின்றவருடைய கண்களில் நீர் மல்கிற்று. அவருடைய கம்பீரமான உடல் நடுங்குவதையும், சிலிர்ப்பு அடைவதையும் பார்த்து இளங்குமரனுக்கும் நீலநாகருக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் வியப்புடனேயே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் வியப்பானதொரு காரியத்தைச் செய்யத் தொடங்கினார். |