மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 24. இணையில்லா வெற்றி நீலநாக மறவர் பைரவியைத் துரத்திக் கொண்டு சென்றபோது, எவ்வளவு பரபரப்போடு சென்றாரோ அவ்வளவிற்குச் சிறிதும் குறைவில்லா நிதானத்தோடு படைக்கலச் சாலைக்குத் திரும்பியிருந்தார். அவர் படைக்கலச் சாலைக்குத் திரும்பியபோது விடிவதற்குச் சில நாழிகைகளே இருந்தன. அந்த நேரத்தில் அந்தப் படைக்கலச் சாலையின் மகிழமரமும் பவழ மல்லிகையும் தங்களை வளர்த்து அரும்பிப் பூக்கச் செய்த மண்ணுக்கு அர்ச்சனை புரிந்துவிடுவன போலத் தத்தம் மலர்களை உதிர்த்திருந்தன. விடிவை நோக்கி ஓடுகிற நேரத்துக்கே உரிய இங்கிதமான குளிர்ச்சியும் பூக்களின் கன்னி கழியாத புது மணமும், இந்த உலகத்தில் நிரந்தரமாக நேர்ந்து நிலைத்துவிட்ட ஏதோ ஓர் அநியாயத்துக்காக நிரந்தரமாக ஓலமிட்டுக் கொண்டிருப்பது போன்ற கடல் அலைகளின் ஓசையும் சேர்ந்து இயற்கையின் சங்கேத சப்தங்களே மொழியாக மாறி வழங்கும் மெளனத் தீவு ஒன்றிற்கு வந்துவிட்டாற் போன்ற சூழ்நிலையை அடைந்தார் நீலநாகமறவர். இப்படிச் சூழ்நிலை இந்த வைகறை நேரத்தில் எல்லா நாளிலும் நிலவுமாயினும் அவருடைய இன்றைய மனநிலைக்கு இது முகவும் இதமாயிருந்தது. ஆழ்ந்த தூக்கமும் இல்லாமல் ஆழ்ந்த விழிப்பும் இல்லாமல், பூக்கள் உதிர்ந்திருந்த அந்த மரத்தடியிலேயே அமர்ந்து நடந்தவற்றை ஒவ்வொன்றாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார் அவர். சுனைநீரில் மூழ்குவது போலக் காற்று உடம்பில் உராய்ந்து கொண்டிருந்தது. அன்று பைரவியைச் சந்தித்து இரகசியங்களை அறிய முடிந்திருந்தால் அவளிடமிருந்து அறிய முடிந்த இரகசியங்களுடன் படைக்கலச் சாலைக்குத் திரும்பி அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் ஓவியன் மணிமார்பனை எழுப்பி அவனையும் அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குச் செல்ல வேண்டுமென்று திட்ட மிட்டிருந்தார் நீலநாக மறவர். முதலில் இருந்தே திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. எல்லாம் வேறுவிதமாக மாறியிருந்தன. பெருந்தன்மையும் நல்லவர்களுக்கு இருந்தே தீரவேண்டிய நாணமும் சேர்ந்து தன்னுடைய தீர்மானங்களையெல்லாம் மாற்றி விட்டதை எண்ணிப் பார்த்து நெட்டுயிர்த்தார் அவர். மாலையில் வீரசோழிய வளநாடுடையார் தம்மிடம் கூறியிருந்த செய்தி இப்போது மீண்டும் நினைவு வந்தது அவருக்கு. ‘எப்படியோ இந்த வைகாசி விசாகம் வரை இளங்குமரனைக் காப்பாற்றுங்கள். வைகாசி விசாகத்துக்கு முன்னால் இளங்குமரனை அழைத்துக்கொண்டு மணிபல்லவத்துக்கு யாத்திரை போகத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு அப்பால் எல்லாத் துன்பங்களுக்கும் வழி பிறந்துவிடும்’ என்று வளநாடுடையார் கூறியது, பொதுவாக இருந்தபோதிலும் இந்தச் செய்திக்குள் அடங்கியிருக்கும் வேறு செய்தி ஒன்றும் இலைமறை காயாக நீலநாகருடைய சந்தேகத்தில் புலப்பட்டது. வீரசோழிய வளநாடுடையார் தன்னைச் சந்திக்க நேருகிறபோதெல்லாம் இளங்குமரனை மணிபல்லவத்துக்கு அழைத்துக்கொண்டு போவது பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கூர்ந்து உணர்ந்து அந்தச் செய்திக்கு ஏதோ ஒரு முக்கிய விளைவு இருக்க வேண்டுமென அநுமானித்துக் கொண்டிருந்தார் நீலநாகமறவர். இப்போது அந்த அநுமானமே மேலும் வலுப்பெற்றது. மகிழம், பவழமல்லிகை ஆகிய மரங்களின் கீழே இவ்வாறு சிந்தித்துக்கொண்டே மிகுதியான எண்ணங்களிலும் குறைவான உறக்கத்திலும் மூழ்கி இருந்த நீலநாகர் தாம் வழக்கமாகக் காலைக்கடன்களைத் தொடங்கும் நேரம் நெருங்கியதை உணர்ந்து உள்ளே போய் இளங்குமரனையும் எழுப்பி அழைத்துக் கொண்டு புறப்பட்டார். முதல் நாள் இரவு படைக்கலச் சாலைக்குத் தன்னைத் தேடிக்கொண்டு வந்த நண்பர்களிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்த காரணத்தால் அப்போது இளங்குமரன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். களைப்பாகவும் இருந்தான். அதனால் அன்று பகலில் அவன் நாளங்காடிக்குச் செல்லவில்லை. அவன் தேடிக்கொண்டு போக வேண்டிய சமயவாதிகளின் கூட்டம் ஒன்று அவனையே தேடிக்கொண்டு, படைக்கலச் சாலைக்கு வந்திருந்தது. உறையூருக்கு அருகில் இருந்த சமதண்டம் என்ற ஊரிலிருந்து இந்திர விழாவுக்காக காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்திருந்த ஆசீவகர்களின் கூட்டம் ஒன்றை அவனோடு வாதிடுவதற்காக விசாகை அங்கே அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். விசாகை தனக்கு இருக்கும் ஞானத்தினால் தானே அந்த ஆசீவர்களை வென்றிருக்க முடியு மாயினும், அவர்களை வெற்றிகொள்ளும் பெருமையை இளங்குமரனுகே அளிக்க வேண்டுமென்று கருதியது போல அங்கே கூப்பிட்டுக் கொண்டு வந்திருந்தாள். இளங்குமரனை வாதத்தில் வென்றால், அந்த ஆண்டு பூம்புகாரின் இந்திரவிழாவில் கூடிய அத்தனை சமயவாதிகளையும் வென்றாற்போன்ற பெருமையை அடையலாம் என்ற ஆசையோடு வந்திருந்தனர். சமதண்டத்தைச் சேர்ந்த ஆசீவக அறிஞர்கள் பலரைத் தோற்கச் செய்த ஒருவனை வெல்வதில் இரண்டு விதமான நன்மைகள் உண்டு. வெற்றி வீரனான இளங் குமரனை வெல்வதினால் அவனால் ஏற்கெனவே வெற்றி கொள்ளப்பட்டவர்களையும் சேர்த்து வென்று விடும் பெருமையை எதிர்பார்த்தனர் சமதண்டத்தார். மேலைச் சோழ மண்டலத்தினரான சமதண்டத்து அறிஞர்களின் வாதத் திறமையைப் பற்றி இளங்குமரன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். எதிராளி பேசும் சொற்களில் ஒரு மாத்திரை மிகுந்து ஒலித்தாலும் குறைந்து ஒலித்தாலும், அந்த ஒலி மிகுதிக்கும் குறைவுக்கும் கூடக் காரணம் கற்பித்து வாதமிடும் நுணுகிய வாதத்திறமையுடைய சமதண்டத்து ஆசீர்வகர்கள் ஐம்பதின்மர் அவனிடம் வந்திருந்தனர். ‘இந்த ஐம்பது பேரும் வலுவில் தேடிக் கொண்டு வாதுக்குப் போவது அருமை. இன்றியமையாத காரணம் இருந்தால்தான் வாதத்துக்குரிய எதிராளியை அவர்கள் தாங்களே நேரில் தேடிக்கொண்டு வருவார்கள். அவர்கள் ஐம்பதின்மரையும் தனித்தனியே வாதிட்டு வெல்ல வேண்டும். அப்படி வெல்வதற்குக் குறைந்த பட்சம் நூறு நாட்களாவது செலவழியும்’ என்று இளங்குமரன் பலரிடம் பலமுறை கேள்விப்பட்டிருந்தான். ‘இந்த ஐம்பது பேரறிஞர்களையும் இவர்களுடைய திறமையைப் பற்றிக் கேள்வியுற்றிருப்பதையும் எண்ணுகிறபோது என் மனத்தில் இப்போது தோன்றி விடுவதற்குப் பார்க்கிற ஆற்றாமையை நீக்கிக்கொள்ளும் வலிமையை உடனே எனக்கு அளியுங்கள்’ என்று நினைத்தபடியே தன் ஆசிரியரைத் தியானம் செய்து கொண்டான் இளங்குமரன். படைக்கலச் சாலையின் முற்றத்தில் அந்த அறிவுப் போர் தொடங்கியது. விசாகை, நீலநாகமறவர், மணிமார்பன் அவனுடைய மனைவி ஆகியவர்கள் இளங்குமரனோடு அருகில் நிற்கும் துணைகளாக இருந்தனர். ஆசீவகர்களின் தலைவர் தங்கள் சுமய நூலாகிய நவகதிர் என்னும் கிரந்தத்திலிருந்து சான்றுகளைக் கூறி வாதத்தைத் தொடங்கினார். இளங்குமரன் அவர் கூறுவனவற்றையெல்லாம் கவனித்துக் கேட்கலானான். “இன்னவாறு இன்ன காரணத்தால் தோன்றுமென இல்லாமல் வானத்தில் இந்திர வில் தோன்றுவதுபோல் தோன்றிக் காரணமின்றி விளங்கும் மற்கலிதேவன் எங்கள் இறைவன். நில அணு, நீர் அணு, தீ அணு, காற்று அணு, உயிர் அணு என்னும் ஐந்து அணுக்களும் இவ்வுலகு நிகழ்வதற்கும் காரணமாக நாங்கள் கருதும் அணுக்கள். உள்ளது கெடாது. இல்லாதது தோன்றாது. எல்லாப் பொருள்களின் நிகழ்ச்சியும் ஆழ்தல், மிதத்தல் என்னும் இரு தொழிலில் அடங்கும் என்பதும் எங்கள் சமயத்தின் கருத்து.” இவ்வாறு தொடங்கி நவகதிர் நூலிலிருந்து வேண்டிய மேற்கோள்களைச் சொல்லி தன்னுடைய வாதத்துக்குப் பூர்வபட்சமாக வலுவான தோற்றுவாய் செய்தார் ஆசீவக முதல்வர்.
“ஐயா தாங்கள் கூறும் உவமை தங்களுடைய கருத்துக்கு அரண் தருவதாயில்லை. இந்திர வில்லாகிய வானவில் காரணமும் பிறப்பும் அற்றது என்று தாங்கள் கருதுவது பிழை. சூரிய கிரணங்கள் மேகபடலத்தில் படுவதால்தான் வானவில்லும் அதில் நிறங்களும் பிறக்கின்றன. எனவே தாங்கள் கூறும் காரணம் பிறழ்வுடையதாகிறது. பிறழ்வுடைய காரணம் ‘அநைகாந்திகம்’ என்னும், தருக்கக் குற்றமாய் அடங்கும்...” என்று இவ்வாறு பல காரணங்களையும் சொல்லி நவகதிரின் முரண்பாடுகளை விளக்கினான் இளங்குமரன். அவனுக்கும் அவருக்கும் நிகழ்ந்த வாதம் மட்டும் முடியவே ஆறு நாட்கள் கழிந்தன. ஏழாவது நாள் சூரியோதயத்தில் அவர் இளங்குமரனுக்குத் தாம் தோற்றதாக ஒப்புக் கொண்டார்.
இளங்குமரன் அடுத்த மூன்று நாட்களில் அந்தக் கூட்டத்தில் மேலும் நான்கு ஆசீவகர்களை வென்றான். கருத்துக்களில் முரண்பாடு இருந்தாலும் சமதண்டத்தாருக்கு உரிய தருக்க ஞான நுணுக்கத்தால் வாதத்துக்குரியவற்றை வளர்த்து வளர்த்து இளங்குமரன் விரைவில் முழுவெற்றியும் பெற்றுவிட முடியாதபடி செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். நூற்றுக்கணக்கான போர் வீரர்களைத் தனியே எதிர்த்து நின்று வெற்றி கொள்ள முடிந்த இரும்பு மனிதரான நீலநாகமறவர் ஐம்பது முதிய அறிஞர்களை வெற்றி கொள்ள ஓர் இளம் அறிஞன் படுகிற துன்பத்தைக் கண்டு வியப்பு அடைந்தார். ஒவ்வோர் அறிஞனையும் நாட்கணக்கில் செலவழித்து வெற்றி கொள்ளும்படி நேர்ந்து வருவது அவருக்குத் திகைப்பை அளித்தது. ஆசீவக வாதம் தொடங்கிப் பத்தாவது நாளும் வந்துவிட்டது. வாதம் ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. “எங்கள் இறைவனான மற்கலிதேவன் முழுதும் உணர்ந்து பேச்சின்றி மெளனமே உருவாயிருப்பவன்” என்று அன்றைய வாதம் தொடங்கப்பட்டது. “பேச்சின்றி மெளனமாயிருக்கும் உங்கள் இறைவனே வாய்திறந்து ‘நான் முழுதும் உணர்ந்தேன்’ என்று கூறியிருந்தாலொழிய அவன் முழுதும் உணர்ந்தவன் என்பதை நீங்கள் அறிந்திருக்க இயலாது. அவன் வாய் திறந்து அப்படிக் கூறியிருப்பானானால் அவன் மெளனமாயிருப்பான் என்று நீங்கள் கூறுகிற இலட்சணம் பொய்யாய் முடியும். முழுவதும் உணர்வதை அநுமானம் பண்ணிக் கொள்வதற்கு மெளனமாய் ஓசையின்றி இருப்பதே தன்மையானால் பேசாப் பருவத்துக் குழந்தைகளும் ஊமைகளும் மலையும் கல்லும் கட்டையும் முழுவதும் உணர்ந்தவை என்பதாக முடிவு செய்ய நேரிடும்” என்று அந்த வாதத்தைச் சாதுரியமாக மறுத்தான் இளங்குமரன். இதற்கு அடுத்த பத்து நாட்களில் ‘உள்ளது கெடாது இல்லாதது தோன்றாது’ என்னும் ஆசீவக தத்துவத்தை நிறுவ முயன்ற வாதத்தை மறுத்து வென்றான் இளங்குமரன். “விழுதாய் உறைந்துள்ள நெய் நெருப்புப் பட்ட போது கெட்டு இளகுதலும், நெய்யில் இல்லாத நெருப்பு வேள்விக் குழியில் நெய் பட்டபோது நெய்யால் வளர்ந்து தோன்றுதலும் காண்கிறோம். எனவே உள்ளது கெடாது, இல்லாதது தோன்றாது என்று கூறுவது எப்படிப் பொருந்தும்?” என்று தன் கருத்தை இளங்குமரன் நிறுவினான். உள்ளது கெடாது, இல்லாதது தோன்றாது என்னும் தத்துவத்தை மறுப்பதற்கு மட்டும் புத்தி பூர்வமாகவும், யுக்தி பூர்வமாகவும் இளங்குமரன் எத்தனையோ வாதங்களைச் செய்ய வேண்டியிருந்தது. கையாய்த் தோன்றிய வழி விரல்களாய்த் தோன்றாமையும், விரல்களாகத் தனித்தனியே பிரிந்து தோன்றிய வழிக் கையாய்த் தோன்றாமையும் - எனக் கைக்கே இரு நிலைமையும் உள்ளதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி இளங்குமரன் யுக்தி வாதம் புரிந்தான். மொழி எழுத்துக்களாகத் தனித்தனியே பிரிந்த போது சொல் ஆகாமையையும் சொல்லாய்க் கூடிய வழி எழுத்தாகாமையையும் விளக்கினான். ஆசீவகர்களுடைய பிடிவாதம் சிறிது சிறிதாகத் தளர்ந்தது. சமதண்டத்திலிருந்து இந்திர விழாவுக்கு வந்திருந்த ஆசீவகர்கள் இந்திர விழா முடிந்த பின்னும் சில நாட்கள் வரை இளங்குமரனை விடவில்லை. சித்திரைத் திங்கள் முடிந்து வைகாசித் திங்களின் முதற்கிழமை வரை இளங்குமரன் அவர்களோடு செலவழிக்கும்படி ஆகிவிட்டது. அந்த ஐம்பது முதியவர்களையும் வென்று முடிக்கிறவரை படைக்கலச் சாலைக்கு அப்பால் இருந்த உலகத்தை இளங்குமரன் மறந்து போய்விட்டான் என்றே கூற வேண்டும். அவர்களை வாதத்தில் வெல்ல வேண்டுமென்கிற முயற்சி ஒன்றுதான் அப்போது அவனுடைய உலகமாயிருந்தது. நூற்றுக்கணக்கான நாட்கள் செலவழித்து வாதிட்டாலும் வெற்றி கொள்ள முடியாத சமதண்டத்து அறிஞர்களை மிகச் சில நாட்களிலேயே அவன் வென்ற பெருமையை உடனிருந்த விசாகை வெகுவாகப் பாராட்டினாள். “இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும் என்று நான் அன்று வாழ்த்தியதின் பயனை இன்றுதான் கண்ணாரக் கண்டேன் ஐயா!” என்று ஆவல் பொங்கும் குரலில் விசாகையினிடமிருந்து இளங்குமரனை நோக்கிச் சொற்கள் பிறந்தன. இணையிலாத் தருக்க ஞானிகளாகிய சமதண்டத்து ஞான வீரர்களை வென்று விசாகையின் மனம் நிறைந்த வாழ்த்துக் களையும் ஏற்றுக் கொண்ட நல்ல நாளாகிய அன்று மாலையில் அவளோடு காவிரிப் பூம்பட்டினத்து இந்திர விகாரத்துக்குச் சென்று தன் வாழ்வு இப்படி மாறி அமைவதற்குக் காரணமாயிருந்த பழைய பெளத்த சமயத் துறவியைச் சந்தித்தான் இளங்குமரன். அவனை அடையாளம் புரிந்து கொண்டு புன்முறுவல் பூத்தார் அவர். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்பு தோற்றத்தால் மேலும் முதுமையடைந்திருந்த அந்தத் துறவியின் புன்முறுவல் மட்டும் மூப்படையாமல் பழைய அழகோடு - அறிவின் அழகோடு அன்றிருந்தாற் போலவே விளங்கிற்று. அன்பிலே குழைந்த குரலோடு அவர் அவனை நோக்கிக் கூறினார்: “நீதான் அப்பா மெய்யான ஞானி! ஒரு நல்ல உண்மை அதன் முழு ஆற்றலுடன் மனத்தில் உறைத்து அதைச் செயற்படுத்தத் தவிப்பதுதான் புத்தி என்பார்கள். ‘இப்படி உடம்பை மட்டும் மற்போற் வீரனைப் போல் வலிதாக்கிக் கொண்டு வந்து நின்று பயனில்லை. மனத்தை வலியதாக்கிக் கொண்டு வா’ என்று நான் என்றோ உன்னிடம் கூறியதைச் செயற்படுத்தி விட்டாய். என்னுடைய சொற்களைச் செயலாக்கிய உன் மானத்திற்கும் அதன் விளைவாகிய உன் ஞானத்திற்கும் இப்போது நான் தலை வணங்குகிறேன் அப்பா!” இளங்குமரன் அவரைப் பதிலுக்கு வணங்கிவிட்டுச் சிறிது நேரத்து உரையாடலுக்குப் பின் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினான். விசாகையும் அவனோடு திரும்பினாள். படைக்கலச்சாலையில் வளநாடுடையார் ஆவலோடும் அவசரத்தோடும் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் வந்திருக்கிற காரியம் முக்கியமானதென்று அவரிருந்த நிலைகண்டு அவனாலேயே புரிந்துகொள்ள முடிந்தது. |