![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 7. பூக்களும் பேசின! தன் கழுத்தை நெரிக்கும் வலிய கைகளின் பிடியில் சிக்குண்டு அந்தக் கபாலிகை விகாரமாகக் கூக்குரலிட்ட மரண ஒலம் சக்கரவாளத்தைச் சூழ்ந்திருந்த காடெல்லாம் எதிரொலித்தது. இளங்குமரன் வியப்படைந்து பார்த்தான். கபாலிகைக்குப் பின்புறம் நீலநாகமறவருடைய முகம் தெரிந்தது. அவள் கழுத்தை இறுக்கும் கரங்கள் அவருடையவை என்று கண்டான். “ஐயா! விட்டுவிடுங்கள்... பாவம்... இவள் நமக்கு என்ன கொடுமையைச் செய்வதற்கிருந்தாளோ அந்தக் கொடுமையையே இவளுக்கு நாம் செய்து பழி சுமக்க வேண்டாம்” என்றான் இளங்குமரன். “கொலை வெறி பிடித்த பேய் மகளே! இனி இத்தகைய செயலைச் செய்யவும் நினைக்காதே. செய்ய நினைத்தாயோ நீ செய்ய நினைத்தது உனக்கே செய்யப்படும். இதோ இப்படி ஒரு விநாடி என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போய்த் தொலை...” என்று இடி முழக்கக் குரலில் எச்சரித்துவிட்டுக் கீழே தள்ளுவது போலக் கைகளின் பிடியிலிருந்து அவளை உதறினார் நீலநாக மறவர்! நிலைகுலைந்து விழுந்த பைரவி எழுந்து ஓடுவதற்கு முன்னால் தன்னை ஒடுக்கிய பெருவலிமை எது என்று காண்பவள் போல் ஒருகணம் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக நின்ற அந்தக் கம்பீர ஆகிருதியைப் பார்த்தாளோ இல்லையோ, அலறி யடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓட்டமெடுத்தாள் அவள். “ஒடிப் போய்விடு!... மறுபடி திரும்பிப் பார்த்தாயோ எல்லாக் கபாலங்களுக்கும் நடுவே உன்னுடைய கபாலமும் கிடக்கும்” - நீலநாகருடைய இந்த வார்த்தைகள் அவளை இன்னும் வேகமாக விரட்டின. குதிகால் பிடரியில் படுகிறாற்போல் ஓடி மறைந்தாள் கபாலிகை. “நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று இளங்குமரன் தன்னைக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இடியிடித்து ஓய்ந்ததெனப் பெரியதாய்ச் சிரித்தார் நீலநாக மறவர். அவரிடம் மேலும் கூறினான் இளங் குமரன்: “என் மனத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று சிறிதும் சந்தேகமே உண்டாகவில்லை, ஐயா! ஏதோ இவள் வந்து சொன்னாள், நம்பிவிட்டேன். சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே தன்னுடைய குரு காத்துக் கொண்டிருப்பதாகவும், அவருடனே சமயவாதம் புரிவதற்கு நான் வரவேண்டும் என்றும் அழைத்தாள். உடனே புறப்பட்டு விட்டேன்.” “நீ புறப்பட்டது தவறில்லை, இளங்குமரா! அறிவின் முடிந்த எல்லை கருணை. பிறர் மேல் இரக்கம், எவ்வளவு தீயவுண்மை பொதிந்ததாயிருந்தாலும் நல்லதாகவே பாவித்தல் இவைதாம். ஆனால் சூழ்ச்சியின் முடிந்த எல்லையோ சந்தேகம் மட்டும்தான். நீயும் நானும் இப்போது வேறு எல்லைகளில் வந்து நிற்கிறோம், நீ ஞானத்தையே வீரமாகக் கொண்டு ஞானவீரனாக வந்து நிற்கிறாய். நான் எப்போதும் போல் வீரத்தையும் ஞானமாகவே கொண்டு நிற்கிறேன். எதையும் எதிர் மறையாக எண்ணிப் பார்த்துவிட்டுப் பின்புதான் உடன்பாடாக எண்ணிப் பார்க்க வேண்டுமென்பது வீரனின் சிந்தனைச் சூழ்ச்சிகளில் முதன்மையானது. உடன்பாடாகவே எண்ணிப் பார்ப்பது ஞானியின் பாவனை. கொடியும் கையுமாக யானைமேல் ஏறிக் கொண்டு நீ படைக்கலச் சாலையிலிருந்து புறப்பட்ட சிறிது நாழிகைக் கெல்லாம் நானும் உன்னைப் பின்தொடர்ந்து புறப் பட்டேன் என்பது உனக்குத் தெரியாது. நாளங்காடியில் நீ நின்ற இடங்களிலும் சென்ற இடங்களிலும் மறைந்து மறைந்து, தோன்றாத் துணையாக உன்னைப் பின் தொடர்ந்தேனென்பதும் உனக்குத் தெரிந்திருக்க முடியாது. நீ எதையும் சத்தியமாகவே உடன்பட்டுப் பாவனை செய்து கொண்டிருப்பதால் அங்கிருந்து புறப்படுகிறபோது சமயவாதம் புரியப் போவதையும் வேறுபட்ட கருத்துடைய அறிஞர்களைச் சந்திக்கப் போவதையும் மட்டும்தான் நினைத்துக் கொண்டு. புறப்பட்டாய். நானோ உன்னுடைய பகைவர்கள், உன்னைக் கொல்ல நினைத்துத் திரிந்து கொண்டிருப்பவர்கள், எல்லாரையும் எண்ணிப் பின் தொடர்ந்தேன். நீ உன்னுடைய அறிவுக்குப் பகைவர்களாக எதிரே வந்து கொடி நடப் போகிறவர்களை மட்டும் எதிர்பார்த்து வந்தாய். நானோ உன்னுடைய உயிருக்குப் பகைவர்களை எதிர்பார்த்தும், எதிர்த்துப் பார்க்கவும் வந்தேன். நீ பிரமவாதியைச் சொற்களால் மடக்கி வென்றதையும் சாருவாகனனின் செருக்கை வேரோடு சாய்த்து வென்றதையும், ‘கருணைதான் செல்வம்’ என்று அந்தப் பல்லக்குச் செல்லக் குமரிக்குப் பதில் சொல்லிவிட்டுக் கீழே விழுந்த முதுமகளைத் தூக்கி வழியனுப்பியதையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த நான் கடைசியில் இந்தக் கபாலிகையின் பொய்யான வேண்டுகோளுக்கு நீ செவி சாய்த்தபோது தான் மகிழ்வதை நிறுத்திக் கொண்டு சந்தேகப்படத் தொடங்கினேன். இவள் உன்னிடம் பேசிய விதமும், அந்த அகாலத்தில் வன்னி மன்றத்துக்கு அழைத்த முறையும் எனக்குச் சந்தேகமூட்டின. நீ இவளோடு புறப்பட்டால் நானும் பின்தொடர்வதென்று முடிவு செய்தேன். அப்படியே நடந்தது.” “ஐயா! எதிர்மறையாக எண்ணிப் பார்ப்பதற்கும் சந்தேகப்படுவதற்கும் எனக்குத் தோன்றவே இல்லையே? கையைக் கூப்பி வணங்கினாற் போன்ற மதிப்போடு இவள் கூப்பிட்டவுடனே மெய்யென்று நம்பிவிட்டேன்.” “ஞானம் உலகத்தை நம்பிக்கை மயமாகவும் கருணை மயமாகவும் பார்ப்பதற்கு உன்னைப் பழக்கியிருப்பது நல்லதுதான். ஆனால் கையை ஓங்கிக்கொண்டு அறைய வருகிற பகைவர்களைக் காட்டிலும் கைகூப்பிக் கொண்டு மனம் கூசாமல் வருகிற பகைவர்கள் பயங்கர மானவர்கள். உலகத்தில் கையைக் கூப்பிக்கொண்டு நண்பர்போல் வரும் பகைவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ‘தொழுத கை உள்ளும் படை நடுங்கும் ஒன்னார் அழுத கண்ணிரும் அனைத்து’ என்று படித்திருப்பாயே?” “படித்திருக்கிறேன். ஆனால் அது அரச தந்திரிகளுக்கும் மதி அமைச்சர்களுக்கும் சொன்ன உண்மை அல்லவா?” “ஒவ்வொரு மனமும் ஓர் அரசுதான். அது அரச தந்திரமும் அமைச்சும் இருந்தால் மனத்தையும் மனோ ராச்சியத்தையும் அற்புதமாக ஆளலாம்.” “எல்லாவற்றையும் விட வேண்டுமென்று நான் கற்று வந்திருக்க, எல்லாவற்றையும் ஆள்வதற்கு நீங்கள் வழி சொல்லிக் கொடுக்கிறீர்கள் ஐயா!” என்றான் இளங்குமரன். இதைக்கேட்டு நீலநாக மறவர் புன்னகை புரிந்தார். “ஒன்றைப் பற்றிக் கொள்ள முடியாமல் மற்றொன்றை விட முடியுமா, இளங்குமரா? கவலையில்லாமல் உன்னுடைய அறிவுப் போராட்டத்தை நடத்து. அறிவுடையவனுக்கு அந்த அறிவே பெரிய அரண். வேறு பாதுகாப்பு அவசியமில்லை. ஆனால் கண்ணுக்கு அழகாயிருக்கிறதென்று மற்றவர்கள் புகழும் மையைக் கண்ணே கண்டு அநுபவிக்க முடியாதது போல அறிஞனுக்கும் மயக்கங்கள் வருவதுண்டு. இதுபோல் உயிர் போகிற ஆபத்துக்களும் அப்படி மயங்கி வரும். இன்று நீ இந்தக் கபாலிகையிடம் சிக்கிக்கொண்டதற்கும் அப்படிப் பிறழ்ந்த அநுமானம்தான் காரணம்! இந்த நகரத்து எல்லைக்குள் நான் ஒருவன் உயிரோடு இருக்கிற வரை உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. வா, போகலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார் நீலநாக மறவர். இருவரும் யானைமேல் ஏறிக்கொண்டு படைக்கலச் சாலைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அப்போது பின்னிரவு தொடங்கும் நேரமாகியிருந்தது. மேகங்களே இல்லாத தெளிந்த வானத்தில் ஆலமுற்றத்துக் கோவிலுக்கு அப்பால் முழுநிலா அற்புதமாகத் தோன்றிக் கொண்டிருந்தது. வானில் ஊர்ந்து திரிந்து வந்து அலுத்ததுபோல் அந்தப் பின்னிரவு நிலாவில் சற்றே ஒளிமங்கியுமிருந்தது. ஏமாற்றத்தால் அன்று யாரிடமோ சாவதற்கிருந்த தன் உயிரைக் காத்த திருவருளை எண்ணி ஆலமுற்றத்தை நோக்கிக் கைகூப்பி வணங்கினான் இளங்குமரன். அந்த நேரத்துக்குப் பின்பும் நீலநாக மறவர் சில நாழிகைகள் உறங்கினார். இளங்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. கண்களை மூடியபடி அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்தவாறே படுத்திருந்தான் அவன். விடிகிற நேரம் நெருங்கியது. ஆலமுற்றத்து மரத்தில் காகங்கள் கரைந்தன. எங்கோ கோழி ஒன்று விடிகாலைக் குரல் எழுப்பியது. விடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாழிகைகள் இருக்கும் என்று தோன்றியது. அப்போது நீலநாக மறவர் அவனை எழுப்பி அழைத்துக் கொண்டு ஆலமுற்றத்துக் கடற்கரை ஓரமாக உலாவப் புறப்பட்டுவிட்டார். கரையோரத்து நெய்தற் கழிமுகங்களில் பூத்திருந்த தாழம்பூக்களின் நறுமணம் வெள்ளமாய்ப் பரவிக் கொண்டிருந்தது. “பூக்களுக்கு மணம்தான் பாஷை, மணம்தான் அர்த்தம். மணம்தான் இலக்கணம். மணம்தான் கவி, மணம்தான் அலங்காரம்” என்று பூம்பொழிலில் குருகுல வாசம் செய்த காலத்தில் திருநாங்கூர் அடிகள் அடிக்கடி கூறிய வாக்கியங்களை இன்றும் இளங்குமரன் நினைவு கூர்ந்தான். திருநாங்கூரில் இருந்தபோது அடிகளும் இதேபோல வைகறையில் அவனை அழைத்துக்கொண்டு உலாவப் புறப்பட்டு விடுவார். அப்படிப் பனிபுலராக் காலையில் அடிகளோடு புறப்பட்டுப் போகும்போது இப்படி எத்தனை எத்தனையோ அழகிய சிந்தனைகள் அவரிடமிருந்து பூத்து அவன் செவிகளில் உதிர்ந்திருக்கின்றன. தாழம்பூக்களின் மணத்தை உணர்ந்தபோது அவனுக்கு ஏதேதோ பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. அந்த நினைவுகளும் புதரில் பூத்த தாழம்பூக்களைப் போலப் பூத்திருக்கும் இடம் தெரியாமல் மணத்தையே பாஷையாகக் கொண்டு அவனிடம் பேசின. |