மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 8. நச்சுப் பாம்புகள் போது நள்ளிரவையும் கடந்து விட்டது. வெறி ஒடுங்கிச் சோர்வு மிகுந்ததால் வன்னிமன்றத்தில் கபாலிகர்களும் உறங்கிப் போய்விட்டார்கள். மரக்கிளைகள் ஆடி உராயும் மர்மச் சப்தமும் காற்று சுழித்துச் சுழித்து வீசும் ஒசையும் இடை இடையே - அந்த ஒசைகளைக் கலைத்துக் கொண்டு ஆந்தையும், கோட்டானும் அலறுகிற விகாரமும், கூகை குழறும் குரலும் சேர்ந்து வன்னி மன்றத்துக்குக் கணம் கணமாகப் பயங்கரச் சூழ்நிலையைப் படைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தன. தொடங்கினால் முடிவதற்குச் சிறிது நேரமாகும்படி நீண்டு இழுபட்டுக் கேட்கும் நரியின் ஊளைக் குரல்வேறு. ஆண்டலை என்னும் பிணம் தின்னிப் பறவைகள் உயரமும் தோற்றமுமாக ஆள் நடந்து வருவது போலப் பறவை உடலும் மனிதத் தலைபோன்ற சிரமும் கொண்டு சுற்றித் திரிந்தன. இரவில் நெருப்புக் கனிகளாகத் தோன்றும் அவற்றின் கண்கள் காண்பதற்கு அச்ச மூட்டுவனவாயிருந்தன. இந்தச் சூழ்நிலையில் நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் பைரவியின் குடிசை வாயிலில் காத்துக் கொண்டிருந்தார்கள். பைரவி இன்னும் திரும்பவில்லை. பெருநிதிச் செல்வருக்குப் பயத்தினால் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கைகள் எதையும் செய்யாம லிருக்கும் போதே நடுங்கின. மெளனமாக இருக்கும் போது பேசிக் கொண்டிருந்தால் பயம் தீரும் போலவும், பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சை நிறுத்திவிட்டு மெளனமானால் பயம் தீரும் போலவும் மாறி மாறிப் பேசியும், பேசாமலும் பயந்து கொண்டே இருந்தார் அவர். “இப்படிப்பட்ட செயல்களுக்குப் பைரவிதான் முற்றும் பொருத்தமானவள். அவளை இத்தகைய செயலுக்கு அனுப்பினால் நிச்சயமாக வெற்றியை எதிர்பார்க்கலாம். அவளுடைய கைகளுக்கு முடியாத காரிய மென்று எதுவும் இல்லை” என்று நகைவேழம்பர் புகழ் பாடிக் கொண்டிருந்த போதே பைரவி அலறிப் புடைத்தவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கி இரைத்துக் கொண்டு நின்றாள். பதற்றத்தில் நிகழ்ந்ததைத் தொடர்பாகச் சொல்ல வர வில்லை அவளுக்கு. தயங்கித் தயங்கி ஏதோ சொன்னாள். சொல்லில் தெளிவில்லை. சொல்லப்பட்டவற்றிலும் துணிவில்லை. சொற்களை முழுமையின்றி அரற்றினாள். கொடுமையே வடிவான அவளும் தோற்றுப் போய் வந்தாள் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. “நிற்கவும் நிலைக்கவும் வேண்டிய காரியத்துக்குத் தடையின்மையே பெரிய அவலட்சணம் என்று சற்று முன் கூறினீர்களல்லவா அந்த அவலட்சணம் ஏற்பட்டுவிடாமல் தடை நேர்ந்துவிட்டது” என்று குத்தலாகச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். இதைக் கேட்டுப் பெருநிதிச் செல்வருக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. “என் சித்தப்படியே எல்லாம் நடக்கிறதென்று வீறாப்பு பேசினர்களே! உங்கள் சித்தப்படி, இதுவும் நடப்பது தானே?” என்று நகைவேழம்பரைப் பதிலுக்குச் சாடினார் அவர். இருவரும் ஒருவரையொருவர் சொற்களால் சாடிக்கொண்டே திரும்பினார்கள். சக்கர வாளத்தைக் கடந்து மதிற்சுவருக்கு இப்பால் பூதம் நின்ற வாயிலுக்கு வெளிப்புறம் அவர்களிருவரும் வந்தபோது எங்கிருந்தோ ஒர் ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தது. “ஆந்தை ஒற்றைக்குரல் கொடுக்கிறது. நல்ல சகுனம்தான். இன்று தோல்வி அடைந்து விட்டாலும் நம் முயற்சிக்கு என்றாவது வெற்றி கிடைக்கும்” என்று தேரில் ஏறிக்கொண்டே சொன்னார் நகைவேழம்பர்.
“உமக்குப் பட்சி சாத்திரம் கூடத் தெரியுமோ நகைவேழம்பரே” - பெருநிதிச் செல்வர் இயல்பாக இப்படி வினாவுகிறாரா, ஏளனம் செய்யும் குரலில் வினாவுகிறாரா என்பைதப் புரிந்து கொள்ள முயன்று சில வினாடிகள் ஒன்றும் புரியாமல் திகைத்தார் நகைவேழம்பர். பின்பு திகைப்பு நீங்கியவராக “ஆகா! பட்சி சாத்திரம் மட்டுமில்லை. பட்சிகளுக்கு வலை விரிக்கும் சாத்திரமும் தெரியும். ஆந்தை ஒற்றைக் குரல் கொடுத்தால் சாவு என்று பொருள். நாம் யாரைக் கொல்ல முயன்று கொண்டிருக்கிறோமோ அவனுக்குச் சாவு நெருங்குகிறது என்பதைத்தான் இந்த ஆந்தை சொல்கிறது” என்றார்.
“நீர் விளக்கம் சொல்வது போல் அல்லாமல் ஆந்தையின் குரலைக் கேட்ட உமக்கோ, எனக்கோ அது சகுனம் சொல்லியிருந்தால்...” “சொல்லியிருந்தால் இந்தக் கணமே அந்த ஆந்தைக்குச் சாவு என்று பொருள். சகுனங்களை நமக்கு ஏற்றாற்போல் இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிரச் சகுனங்களுக்கு ஏற்றாற்போல் நாம் மாற்றிக்கொண்டு வேதனைப்படலாமோ...?” “ஓகோ! எதையும் உமக்கு ஏற்றாற்போல வளைத்து மாற்றிப் பார்க்கிறவரா நீர்...?” பெருநிதிச் செல்வரின் இந்தக் கேள்விக்கு நகைவேழம்பரிடமிருந்து மறுமொழியில்லை. அவர் விழிப்படைந்தார். தேர் விரைந்து போய்க் கொண்டிருந்தது. அமைதியான அந்த நேரத்தில் தேர்ச் சக்கரங்களின் ஒசையே எங்கும் பரவி நிறைவது போல் அதுவே பெரிய ஒசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது தொலைவு சென்றதும் ஒரு தாழம் புதரருகே புற்றுக்களின் நடுவே மகுடி வாசித்துக் கொண்டிருந்த பாம்புப் பிடாரன் ஒருவனை அவர்கள் கண்டார்கள். தேரிலிருந்தபடியே நிலவொளியில் அந்த நாகரினத்துப் பாம்பாட்டி மகுடி வாசிப்பதை அவர்கள் கண்டுகொண்டே செல்ல முடிந்தது. இந்த இடத்திலிருந்து தேர் சிறிது தொலைவு சென்றபின் எதையோ அவசரமாக நினைத்துக் கொண்டவர் போல் தேரை மறுபடியும் திருப்பி அதே இடத்துக்குச் செலுத்தினார் நகைவேழம்பர். எதற்காகத் தேர் திருப்பப்படுகிறது என்பதைப் பெருநிதிச் செல்வரிடமும் கூறவில்லை. தம்மிடம் கூறாமலே தேர் திருப்பப்படுவதைக் கண்டு அவர் பயமும் திகைப்பும் ஒருங்கு அடைந்தாலும், பயத்தைச் சற்றே மறைத்துக் கொண்டு திகைப்பு மட்டும் வெளிப்படுகிற குரலில், “ஏன்? எதற்காகத் தேரைத் திருப்புகிறீர்கள் நகைவேழம்பரே! வன்னி மன்றத்தில் எதையாவது மறந்து வைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். அவருடைய கேள்விக்குப் பதில் கூறாமல் குதிரைகளை விரட்டியடித்துக் கொண்டு போனார் நகைவேழம்பர். நாகர் இனத்துப் பாம்புப் பிடாரன் மகுடி வாசித்துக் கொண்டிருந்த புற்றருகே போய்த் தேர் நின்றது. அதற்குள் குதிரைகளுக்கு வாயில் நுரை தள்ளியிருந்தது. அவ்வளவு வேகத்தில் விரட்டியிருந்தார் அவர். அந்த இடத்துக்கு வந்ததும் தாம் தேரிலிருந்து முதலில் கீழே குதித்து நின்றுகொண்டு “இறங்கி வாருங்கள்! இவனிடத்தில் ஒரு காரியம் இருக்கிறது” என்று பாம்பாட்டியைச் சுட்டிக் காண்பித்துப் பெருநிதிச் செல்வரை அழைத்தார் நகைவேழம்பர். ‘எதற்காகத் தேரைத் திருப்புகிறாய் என்று நான் கேட்டபோது என்னை மதித்துப் பதில் சொல்லாத இவனுடைய அழைப்பை மதித்து நான் ஏன் கீழே இறங்க வேண்டும்’ என்று நினைத்தவராய்ச் சில கணங்கள் நகைவேழம்பருடைய வார்த்தைகளையே கேட்காதவர் போலத் தேரிலேயே இருந்தார் பெருநிதிச் செல்வர். பின்பு நகைவேழம்பரைப் போலக் கொடுமையானவர்களை நேருக்கு நேர் அலட்சியம் செய்வது சமயோசிதமாகாது என்று தமக்குத்தாமே உணர்ந்தவராகத் தேரிலிருந்து கீழே இறங்கினார். “இவனுடைய மகுடி ஒசையால் இந்தப் பகுதியில் மூலைக்கு மூலை நாகங்கள் புறப்பட்டு ஊர்ந்து கொண்டிருக்குமே? இங்கு எதற்காகத் தரையில் இறங்க வேண்டுமென்கிறீர்கள்? தாழம் புதரும், புற்றுக்களும், பிடாரனும் பார்த்தாலே பயமாக இருக்கிறதே...?” என்று வார்த்தைகளை நீட்டி இழுத்த பெருநிதிச் செல்வரை ஏறிட்டுப் பார்த்தார் நகைவேழம்பர். விஷமமாகச் சிரித்துக்கொண்டே பார்த்தார். பார்த்துவிட்டுப் பதறாத குரலில் உள்ளர்த்தமாகப் பல செய்திகளையெல்லாம் நிறைத்து நிறுத்திய வார்த்தைகளால் சுருக்கமாக ஒரு கேள்வி கேட்டார். “பயப்படுகிற எதையும் நீங்கள் செய்வதே இல்லையோ?” பெருநிதிச் செல்வர் இதைக் கேட்டு அப்படியே வெலவெலத்துப் போனார். இந்தக் கேள்வியின் மூலமாக நகைவேழம்பர் எதை நினைவுபடுத்துகிறார் என்று பழைய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கவும் முயன்றார். எதையும் நினைவுபடுத்துகிறாற் போலவும் இல்லை. எல்லாவற்றையும் நினைவுபடுத்திக் குத்திக் காட்டுவது போலவும் இருந்தது. எல்லாவற்றிலும் பயங்கரமான ஏதோ ஒன்றை மட்டும் நினைவுறுத்துவது போலவும் இருந்தது. இந்தக் கேள்வியைக் கேட்கிறபோது நகைவேழம்பரின் பேச்சும் வன்மையாகவே இருந்தது. மனத்தில் ஏதேதோ அதிர்ச்சிகள் பேசிட, வாய் ஒன்றும் பேசாமல் நகைவேழம்பரைப் பின்பற்றிப் பாம்புப் பிடாரன் இருந்த இடத்துக்கு நடந்தார் பெருநிதிச் செல்வர். கொடி கொடியாய்க் கிளை விட்டு வளர்ந்திருந்த அந்தப் புற்றுக்களின் நுனித் துவாரங்களைப் பார்த்தவாறே கவனம் கலையாமல் மகுடி ஊதிக் கொண்டிருந்தான் அந்த முரட்டுப் பிடாரன். தனக்குப் பின்னால் மிக அருகில் யாரோ இருவர் வந்து நிற்பதை அறிந்து கொண்டானாயினும் அவன் திரும்பிப் பார்க்க வில்லை. பயத்தினால் புற்று நுனிகளெல்லாம் பெருநிதிச் செல்வருக்குச் சர்ப்பங்களாகவே தோன்றின. நெருப்பில் காட்டிய தருப்பைப் புல்லின் அழலோடிய துணிகளைப் போல் செக்கச் செவேலெனப் பிளந்த நாக்குகள் நெளிய ஒரு படம் புற்றிலிருந்து வெளி வந்து தெரிந்தது. பெரு நிதிச் செல்வர் பயந்து பதுங்கி நகைவேழம்பரைத் தழுவிக் கட்டிக்கொள்வதுபோல அவரோடு அவராக ஒண்டினார். சாதிக்காயின் மேல் நரம்போடிப் படர்ந்த சாதிப் பத்திரிபோல் நச்சு நாவுகள் நெளியப் புற்றுத் துளையிலிருந்து பொங்கி ஒழுகிப் பெருகி வழியும் கருமையாய் ஒரு பெரிய கருநாகம் வெளிவந்தது. மகுடியை ஒரு கையாலேயே வாசித்துக் கொண்டு மற்றொரு கையால் சர்ப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த வேரைப் பிடித்தான் பிடாரன். தரையில் அவனைச் சுற்றிலும் பாம்பைச் சிறைப் பிடித்து அடைத்துக் கொண்டு போகும் பேழைகள் கிடந்தன. பயத்தின் மிகுதியால் நகைவேழம்பரையும் இழுத்துக் கொண்டு பின்னுக்கு நகர்ந்தார் பெருநிதிச் செல்வர். கூடை போலப் பிரம்பினால் நெருக்கமாய்ப் பின்னிய வட்டப் பேழையில் சாமர்த்தியமாக அந்தச் சர்ப்பத்தை அடைத்து மூடி அதன்மேலே சிறு கல் ஒன்றையும் தூக்கி வைத்தான் பிடாரன். பின்பு விலகி நிற்கும்படி அவர்களுக்குச் சொல்லிவிட்டு மேலும் மகுடி ஊதலானான். புற்றில் இன்னொரு படம் தெரிந்தது. தொடர்ந்து வேறு வேறாக அடுத்த இரண்டு துவாரங்களிலும் படங்கள் தெரிந்தன. பிடாரன் சாதுரியமாய் வேலை செய்தான். அவனிடம் மீதமிருந்த பேழைகளும் நிரம்பின. கிடைத்த பாம்புகளையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டு அவன் மகுடியை நிறுத்திவிட்டு எழுந்தான். நகைவேழம்பர் அவனைப் பற்றி அவனிடமே விசாரித்தார். இந்திர விழாவில் வேடிக்கை விளை யாட்டுக்கள் செய்து பாம்பாட்டிக் காட்ட வந்திருப் பதாகவும் அது தன் தொழில் என்றும் அவன் சொன்னான். நகைவேழம்பர் அவனிடமே மேலும் கேட்டார். “இந்த நச்சுப் பாம்புகளை எப்படிப் பொது இடங்களில் வைத்து ஆட்டுவாய்? இவற்றைக் கண்டாலே மக்கள் பயப்படுவார்களே?” “ஆட்டுவதற்குக் கொண்டு போகும் முன்பே நச்சுப் பல்லைப் பிடுங்கி விடுவோம் ஐயா! பிடுங்கா விட்டாலும் இவற்றை ஆட்டும் வேர் எங்களிடம் உண்டு” என்றான் பிடாரன். நகைவேழம்பர் மிக அருகில் சென்று குழைவான குரலில் அவனிடம் வேண்டினார்: “நீ எங்களுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்...” “என்ன செய்ய வேண்டும் ஐயா?” “நீ உன் பாம்புப் பேழைகளுடன் எங்களோடு எங்கள் தேரில் வரவேண்டும்..” என்றார் நகைவேழம்பர். பிடாரன் எதற்காகவோ தயங்கினான். “இந்திர விழாவின் எல்லா நாட்களிலும் சேர்த்து நீ எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாத்தியத்தை விட அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பைச் சில நாழிகைகளிலேயே உனக்கு நான் ஏற்படுத்தித் தர முடியும்.” பாம்புகளைச் சிறைப்படுத்திய தைரியசாலி ஆசைக்குச் சிறைப்பட்டான். நச்சுப் பாம்புகளே தன்னை தீண்டாமல் பிடித்தவன் ஆசைப் பாம்புக்குக் கடிபட்டான். “ஐயையோ! தேரிலா? பாம்புப் பேழைகளும் இவனும் வந்தால் நாம் எப்படிப் போவது?” என்று பதறிய பெருநிதிச் செல்வரின் காதருகே சென்று. மந்திரம் போட்டது போல ஏதோ சொன்னார் நகைவேழம்பர். அவ்வளவுதான். பெருநிதிச் செல்வர் முகம் மலரச் சம்மதம் தந்துவிட்டார். பாம்புப் பிடாரன் பேழைகளும் தானுமாகத் தேரின் பின் பக்கத்துச் சட்டத்தில் ஏறிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். பேழைகளைக் கவனமாகப் பற்றிக் கொள்ளும்படி அவனை எச்சரித்துவிட்டு நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் தங்கள் இடங்களில் ஏறிக்கொண்டனர். தேர் பட்டினப் பாக்கத்துக்கு விரைந்தது. மாளிகைக்குத் திரும்பியதும் பெருநிதிச் செல்வரை மட்டும் உறங்குவதற்கு அனுப்பிவிட்டுப் பிடாரனை அழைத்துக் கொண்டு தம் பகுதிக்குச் சென்ற நகைவேழம்பர் பணியாட்களை எழுப்பி மாளிகைத் தோட் டத்திலிருந்தும் வெளியேயுள்ள பூங்காக்களிலிருந்தும் குவியல் குவியலாகப் பூக்களைக் கொண்டு வரச் செய்தார். பூக்கள் குவிந்தன. பொழுதும் புலர்ந்தது. |