![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நான்காம் பருவம் - பொற்சுடர் 15. பாவங்களின் நிழல் நகைவேழம்பர் நிலவறைக்குள்ளே படிப்படியாய் வீழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் பெருநிதிச் செல்வர் மேலே மாளிகைக்குள் தன் மகள் வானவல்லியிடம் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். “நீ நல்ல காரியம் செய்தாய் பெண்ணே! என் குறிப்பைப் புரிந்துகொண்டு நீ திரும்பிவிடாமல் நிலவறைக்குள் இறங்கி வந்ததனால்தான் நான் இவ்வளவும் செய்ய முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் நீதான் இன்று என்னைக் காப்பாற்றியிருக்கிறாய்.” “எங்களுக்காக நகைவேழம்பர் முத்துக்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது நீங்கள் நிலவறை யிலிருந்து ஒசைப்படாமல் வெளியேறுவதற்கு முன் ‘நான் போகிறேன். நீங்களும் முத்துக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தாமதமின்றி உடன் மேலே ஏறி வந்துவிடுங்கள்’ என்பதுபோல் எனக்குச் சைகை செய்தீர்களே; அப்போது தான் உங்கள் குறிப்பும் நோக்கமும் எனக்கு நன்றாகப் புரிந்தது அப்பா. நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அப்போது அந்த மனிதரிடமிருந்து விலகித் தப்பிச் சென்றுவிட எண்ணுகிறீர்கள் என்று நான் ஒருவாறு அனுமானித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. என்னோடு வந்திருந்த தோழிப் பெண்களையும், அம்மாவையும் இழுத்துக்கொண்டு நான் படியேறி மேலே திரும்பி வருகிறவரை எனக்கும் பயம்தான். நாங்கள் எல்லாரும் மேலே வந்து சேர்ந்தவுடன் கதவருகே காத்திருந்த நீங்கள் நிலவறையை மூடிய பின்புதான் எனக்கு நிம்மதியாக உயிர்ப்பு வந்தது அப்பா!” “நிலவறைக்குள் நீங்கள் எல்லாரும் முத்துத் தேர்ந்தெடுக்க நுழைகிறவரை அங்கே எனக்கு உயிர்ப்பே இல்லை வானவல்லி! நான் எதையோ நினைத்து அந்தக் குருடனை நிலவறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றேன். கடைசியில் அது வேறுவிதமாக மாறி என் உயிரையே நான் இழக்கும்படி நேரும்போல ஆகிவிட்டது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவனுடைய கோபத்தை அவன் இழக்கும்படி செய்ய வேண்டுமானால் அதைவிட அதிக மதிப்புள்ளவற்றையும் நான் அவனுக்காக இழந்துவிடத் துணிவதுபோல அவனுக்கு எதிரே ஒரு போக்குக் காட்ட வேண்டும். அவன் ஆத்திரப்படும்போது எல்லாம் நான் இப்படிப் போக்குக் காட்டித்தான் அவனுடைய ஆத்திரத்தைத் தனித்துப் பழையபடி அவனை என்னுடைய நன்றிக்கு அடிமை யாக்கிக் கொள்வது வழக்கம். இன்றும் அதே முறையை மேற்கொள்ளத்தான் அவனை இந்த மாளிகையின் செல்வங்கள் எல்லாம் குவிந்திருக்கும் நிதியறையான நிலவறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றேன். ஆனால் இன்று அவனுடைய ஆத்திர நோய்க்கு என்னுடைய பழைய மருந்து பொருந்திக் குணம் தரவில்லை. என்னுடைய தந்திரங்களே தம் ஆற்றலில் நலிந்து போய் மிக நல்ல சமயத்தில் என்னைக் கைவிட்டு விட்டன. நான் விழிப்பாயிருக்கத் தவறிவிட்டேன். ‘நம்முடைய வழக்கமான பழைய தந்திரங்களில் அவற்றுக்கு ஆளாகிறவர்கள் சந்தேகப்படத் தொடங்கி விட்டார்கள் என்று அறியும்போதே நாம் புதிய தந்திரங்களுக்கு மாறிவிட வேண்டும்’ என்று அரச தந்திரிகளுக்குச் சொல்லியிருக்கிற இரகசியத்தை என்னைப் போன்ற வாணிகர்களும் கடைப்பிடிக்கலாம் பெண்ணே! நான் எதற்காக இப்படியெல்லாம் சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டும் சூழ்ச்சிகளுக்கு ஆளாகியும் துன்பங்களையும் அடைகிறேன் என்று புரியாமல் உங்களுக்கெல்லாம் என்மேல் சந்தேகம் உண்டாகலாம். ஆனால் என் வாழ்க்கை இவற்றில்தான் கிடக்கிறது. இவற்றால் தான் நடக்கிறது. இவற்றால்தான் முடியவும் போகிறது” என்று மகளிடம் உணர்ச்சி குமுறக் குமுறப் பேசினார் பெருநிதிச்செல்வர். அதுவரை எதிரே நின்று கேட்டுக்கொண்டிருந்த வானவல்லிக்கு இப்போது தந்தையாருடைய முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. தான் அவரிடமிருந்து கேட்கக் கூடாததும், கேட்க வேண்டாததுமாகியவற்றைக் கேட்பதாக உணர்ந்து அஞ்சினாள் அவள். ஆனால் அவரோ நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். “சிறு வயதில் நீ கற்றிருக்கிற அற நூல்களும், நீதி நூல்களும் இவற்றையெல்லாம் பாவம் என்று உனக்குக் கற்பித்திருக்கும். ஆனால், உலகத்தில் தோன்றியிருக்கிற அறநூல்கள் எல்லாம் எவை எவைகளைப் பாவங்களாகச் சொல்லியிருக்கின்றனவோ அவைகளோடு மட்டும் உலகிலுள்ள பாவங்களின் எண்ணிக்கை முடிந்து விடுவதாகத் தெரியவில்லை. எத்தனை எத்தனையோ புதிய பாவங்கள் வளர்கின்றன. பெண்ணே! நான் எல்லாவகைப் பாவங்களிலும் அழுந்தி நிற்கிறேன். இன்னும் விரும்பிச் செய்வதற்குப் புதிய பாவங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன். அப்படித்தான் என்னால் இருக்க முடியும். ஆனால் இந்தக் குருடனைப் போல் எனக்கே பாவங்களைச் செய்கிறவனை என்னால் மன்னிக்க முடியாது. உலகில் கழுத்து வரை பாவங்களில் அழுந்திக் கொண்டு நின்றாலும் - நான் தான் பிறரை அழித்துக்கொண்டு நிற்க வேண்டும். என்னை யாரும் அழித்துவிட முயலக்கூடாது. இது என் வாழ்க்கையின் இரகசியம்.” வெறி முற்றுவதுபோல் பேச்சு வளர வளரத் தந்தையின் முகம், கண்களில் குருதியை உமிழ்ந்து கொண்டே எதிரே வந்து நிற்கும் பேயின் முகம் போல மாறித் தெரிவதைக் கண்டு வானவல்லி அங்கிருந்து உடனே ஓடிவிட வேண்டும்போல அவ்வளவு அதிகமாக அச்சமடைந்தாள். அவர் கூறிக்கொண்டு வருகிறவைகள் எல்லாம் தனக்கு எச்சரிக்கையா, பயமுறுத்தலா, அல்லது ஆத்திரத்தில் விளைகிற வெறும் பேச்சா என்று புரிந்துகொள்ள முடியாமல் மனம் குழம்பினாள் அவள். இதற்கு முன்பு என்றும் அவளிடம் அவர் இப்படிப் பேசியதில்லை. இப்படித் தன்னிடம் பேசுவதில் அவருடைய பலம் தெரிகிறதா, பலவீனம் தெரிகிறதா என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. கேட்கிறவரைச் சிந்திக்கவிடாத விரைவுடன் வெள்ளமாகப் பாய்ந்து வருகிற முரட்டுப் பேச்சாக இருந்தது அது. பேச்சு நிற்கிற இடைவெளியாக வாய்க்கும் சில கணங்களிலும் இடியிடியென்று கொடிய பேய்ச் சிரிப்புச் சிரித்தார் அவர். தன் தாயும் தோழிகளும் அந்தப்புரப் பகுதிக்குச் சென்றபோது தானும் அவர்களோடு வெளியேறிப் போய்விடாமல் அவரோடு தங்கியது தவறு என்று இப்போதுதான் வானவல்லி உணர்ந்தாள். அவர் எவனோ ஒரு ஊழியனை வரவழைத்துச் சோறும் நீரும் கொண்டு வரச்செய்து நிலவறைக் கதவை மெல்லத் திறந்து உள்ளே வைத்துவிட்டு மூடியபோதும் அவள் அவரருகே தான் இருந்தாள். அடுத்துச் சிறிது நாழிகைக்குப் பின் உள்ளே நிலவறையில் சோற்று மிடாவும் நீர்க்கலயமும், உடைபடுகிற, ஒசையும், தொடர்ந்து வேறு பல ஓசைகளும் கேட்டபோதும் கூட அவள் அவரோடுதான் இருந்தாள். நிலவறையிலிருந்து அந்த ஒசை மேலே ஒலி மங்கிய விதத்தில் கேட்கும் போதெல்லாம் தந்தையின் முகத்தில் உணர்ச்சிகள் மாறிவருவதையும் வானவல்லி கூர்ந்து கவனித்தாள். அவரைப் புரிந்துகொள்ள அவளால் முடியவில்லை. விதம் விதமாக மாறினார் அவர். “அடிபட்ட நாயாய் உள்ளே சிறைப்பட்டுக் கிடந்து உடம்பில் கொழுப்பு வற்றி எலும்பும் தோலுமாய்க் காய்ந்துபோய் மறுபடி இந்த நிலவறையிலிருந்து வெளியேறும்போது, இவன் நான் விடுகிற மூச்சுக் காற்றில் தடுமாறி விழ வேண்டும். மறுபடி என்னிடம் ஆத்திரப்பட்டு என்னை எதிர்ப்பதற்கு இவனிடம் ஆத்திரமோ, வலிமையோ மீதமிருக்கக் கூடாது. அப்படிக் காய வைத்தால்தான் புத்தி வரும் இந்தக் குருடனுக்கு!” இவ்வாறு பேசிக்கொண்டே வந்த தந்தையார் தாம் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தின் வாயில் நிலையருகே இருந்த தமது ஊன்றுகோலைப் பார்த்து விட்டு அதை எடுப்பதற்காகக் காலைச் சாய்த்து நடந்து விரைந்ததைக் கண்டு தானே முந்திச் சென்று எடுத்து வந்து அதை அவர் கையில் கொடுத்தாள் வானவல்லி. அதைப் பெற்றுக்கொள்ளும்போது அவருடைய கைகள் நடுங்கின. அப்படி நடுங்குவதை அவர் மறைத்துக் கொள்ள முயன்றும் வானவல்லி கூர்ந்து பார்த்துத் தெரிந்துகொண்டாள். “இந்த ஊன்றுகோல் ஒன்றுதான் நான் மெய்யாக நம்ப முடிந்த துணை பெண்ணே! சில சமயங்களில் மனிதர்களை மட்டும் நம்பிக்கொண்டு காலூன்றி நிற்க முடிவதில்லை. முதல் வசதி மனிதர்களைப் போல் இதற்கு மனம் இல்லை. மனம் இருந்தால் இதுவும் எனக்கு எதிராக முயன்று ஏதாவது செய்து என் காலை இடறிவிட முயன்றாலும் முயலலாம்” என்று வான வல்லியிடம் சொல்லிக்கொண்டே வேறு புறமாகத் திரும்பி அந்த ஊன்றுகோலின் பிடியை மெல்லத் திருகினார் பெருநிதிச்செல்வர். அதுதான் சமயமென்று வானவல்லி அங்கிருந்து நழுவிவிட முயன்றாள். அவள் அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவதற்குத் தவிக்கிறாள் என்பதை ஏற்கெனவே தெரிந்து வைத்துக் கொண்டிருந்தது போல் “இரு போகலாம்” என்றார் அவர். தந்தையார் ஊன்றுகோலின் கைப்பிடியை ஏதோ செய்துகொண்டு தன் பக்கம் திரும்பிப் பார்க்காமலே இப்படிக் கூறியதைக் கேட்டபோது அவருடைய கட்டளையை மீறிப் பயந்து அங்கேயே நின்றுவிடுவதா என்று சிந்தித்தபடி நின்ற இடத்திலேயே சிறிது தயங்கினாள் வானவல்லி. அப்போது அவரே ஊன்றுகோலின் பிடியைத் திருகி அழுத்திக்கொண்டு அவள் பக்கமாகத் திரும்பினார். “பெண்ணே! நில், நீ போவதற்கு ஒன்றும் அவசரமில்லை. சற்று முன்பு இந்த ஊன்றுகோலைப் போல மனமும் சிந்தனையும் இல்லாத பொருள்கள் யார் காலையும் இடறிவிடாமல் ஊன்றி நின்றுகொள்ளத் துணை புரியுமென்று கூறினேனே! அதுவும் தவறான கருத்துத்தான். இப்படிப் பொருள் கூடச் சில சமயங்களில் நிற்கத் துணை புரியாது காலை இடறி ஏமாற்றி விடுகின்றன. இதோ பார்!” என்று கூறி, அந்த ஊன்று கோலை வீசி எறிந்தார். அது பிடி வேறு, தண்டு வேறாகக் கழன்று பிரிந்து விழுந்தது. அப்போது வானவல்லி சீற்றம் கொதிக்கும் அவருடைய முகத்தில் பாவங்களின் நிழலை எல்லாம் பார்த்தாள். |