![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
நான்காம் பருவம் - பொற்சுடர் 2. கப்பலில் வந்த கற்பூரம் மணிபல்லவ யாத்திரைக்காகத் திட்டமிட்டுக் கொண்டு இளங்குமரனும் வளநாடுடையாரும் பூம்புகார்த் துறைமுகத்தில் கப்பல் ஏறுவதற்கு வந்திருந்த அதே காலை நேரத்தில் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் துறைமுகத்தில் மற்றொரு பகுதியில் வந்து நின்று நங்கூரம் பாய்ச்சிக் கொண்ட வேறொரு கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை எவரும் கவனிக்கவில்லை. பொருள்களை ஏற்றிவரும் கப்பல்கள் பண்டக சாலைகளை ஒட்டிய பகுதியில் நங்கூரம் பாய்ச்சப் படுவது வழக்கம். ஆயினும் பண்டக சாலைகளை ஒட்டித் துறை கொள்ளும் கப்பல்கள் மிகவும் பெரியவைகளாக இருந்தால் அவற்றின் மேல் தளத்தில் நின்று கொண்டிருப்பவர்களால் பூம்புகார்த் துறைமுகத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகப் பார்க்க முடியும். அப்போது வந்த கப்பல் மிகவும் பெரியது. பச்சைக் கற்பூரம், குங்குமம், பனி நீர் முதலிய நறுமணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சீன தேசத்திலிருந்து பல மாதக் கணக்கில் பயணம் செய்து வந்த மிகப் பெரிய மரக்கலம் அது. சீன தேசத்திலிருந்து வந்த கப்பலில் நகைவேழம்பரும் பெருநிதிச் செல்வரும் எப்படிப் போய்ச் சேர்ந்தனர் என்பதை இப்போது கவனிக்கலாம். அந்த ஆண்டின் இந்திர விழாவில் சமயவாதம் புரிந்து வெற்றிமேல் வெற்றியாகப் புகழ் பெற்றுக் கொண்டிருந்த இளங்குமரனைத் தன்னுடைய மகளைக் கருவியாகப் பயன்படுத்தி பெருநிதிச் செல்வர் கொல்ல முயன்றதும், அந்த முயற்சியும் தோற்றபின் மகள் சுரமஞ்சரியை அவள் தோழியோடு மாடத்திலேயே சிறைவைத்ததும் பரம இரகசியமாக நடந்த சூழ்ச்சிகள். சுரமஞ்சரியை அவளது மாடத்திலிருந்து வெளியேற முடியாமல் சிறைப்படுத்திய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தான் அவளைச் சிறைப்படுத்தியிருப்பதாக மற்றவர்கள் அநுமானம் செய்யும் இடமில்லாதபடி சாமர்த்தியமாக அதைச் செய்திருந்தார் அவர். தன்னையும் நகைவேழம்பரையும் தவிர மற்றவர்களுக்கு உண்மைக் காரணத்தைத் தெரியவிடக்கூடாது என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். சுரமஞ்சரியின் தாயார், சகோதரி, பெரு மாளிகைப் பெண்கள் ஆகியோர்களிடம் எல்லாம் சுரமஞ்சரியின் ஜாதகப்படி கிரகநிலை சரியில்லாத சில காலங்களில் அவள் எங்கும் வெளியேறிச் செல்லாமல் தன் மாடத்திலேயே விரதமிருந்து பரிகாரங்கள் செய்ய வேண்டுமென்று வருவதறிந்து கூறுவதில் வல்ல பூம்புகார்க் கணிகள் கூறியிருப்பதாகவும் அதன்படி அவளைத் தனிமையில் இருக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு எவரும் அவளைச் சந்திக்கலாகாதென்றும் கூறி நம்பச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர். பெருமாளிகைப் பெண்களும், பிறரும் நம்பும் விதத்தில் அவருக்கு இந்த அற்புதமான பொய்யைச் சொல்லிக் கொடுத்தவர் நகைவேழம்பர்தான். இந்திர விழாவில் நாளங்காடியின் பொது இடத்தில் சுரமஞ்சரி தான் அணிந்துகொண்டிருந்த அணிகலன்களை யெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு ‘இந்தப் பல்லக்கு நரகத்துக்குப் போகும் வாகனம்! நான் இதில் ஏறி வரமாட்டேன்’ - என்று அடம்பிடித்த தினத்தில்தான் ‘தன்னுடைய குடும்ப இரகசியங்கள் அந்த நாளங்காடி நாற்சந்தியில் சிதறிவிடுமோ?’ - என்று முதன் முதலாக அவர் அஞ்சினார். அதே நாளில் நகைவேழம்பர் வேறு ஏதோ ஒரு கலக்கத்தைப் பிறப்பிப்பதற்குக் காரணமான மெளனத்தோடு அவரிடம் வன்மமாயிருந்தார். தன் பெண் சுரமஞ்சரி அன்று இருந்த நிலையைக் கண்டு அவளிடம் அவருக்கே பயமாகிவிட்டது. இருளில் மாடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டு விடுவாளோ என்றுகூட அன்றைக்கு அவளைப் பற்றி பயந்தார் பெருநிதிச் செல்வர். அவள் அப்படி ஏதேனும் அசட்டுக் காரியம் செய்யாமல் தடுக்க நினைத்துத் தான் அவளுடைய மாடத்தின் இருளில் தானே அவளை ஒவ்வொரு கணமும் பார்த்துக்கொண்டு நிற்பது போலத் தோன்றும்படி தன்னுடைய ஊன்றுகோலை வைத்து அரட்டினார். அதே இருளில் இன்னொரு பெரிய அவமானமும் அவருக்கு ஏற்பட்டது. பகல் முழுவதும் வெயில் நெருப்பாய்க் காய்கிற நாளில் பகல் முடிந்ததும் மழை கொட்டுவதுபோல் அன்று காலையில் தொடங்கிய அளவு மீறின அமைதியோடு இருந்த நகைவேழம்பர், இரவில் அவரிடம் ஏதோ பேசச் சென்றபோது பெருநிதிச் செல்வரிடம் எரிமலையாகக் குமுறிவிட்டார். அதன் விளைவாக எல்லோரும் உறங்கிப் போன அந்த நள்ளிரவில் நகைவேழம்பரிடமிருந்து பெருநிதிச் செல்வர் வீனில் பெற்ற அவமானம் மறக்க முடியாதது. அந்த அவமானத்துக்குப் பதிலாக அப்போதே பெருநிதிச் செல்வர் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் நகைவேழம்பரைக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பார். ஆனால் அவர் உணர்ச்சி வசப்படவில்லை. திட்டமிட்டு நிதானத்தோடு நடந்துகொண்டார். யாருக்கும் தெரியாதென்று தான் அடக்கிக் கொண்ட அந்த அவமானத்தை மேலேயுள்ள மாடத்திலிருந்து தன் மகளே பார்த்து விட்டாள் என்பதும் அவருக்குத் தெரியாது. “பகல் முழுவதும் மெளனமாயிருந்து நீங்கள் சேர்த்துக் கொண்ட ஆத்திரத்தின் விளைவு இதுதான் என்றால் இதற்காக நான் மகிழ்கிறேன் நகை வேழம்பரே!” என்று அவருக்குப் பணிந்து கொடுத்துப் பேசினார் பெருநிதிச் செல்வர். இயல்புக்கு மாறான இந்த நிதானம் நகைவேழம்பருக்கே அதிர்ச்சியை அளித்தது. நகைவேழம்பர் நிமிர்ந்து ஒற்றைக் கண்ணால் பார்த்தார். எதிரே நின்ற பெருநிதிச் செல்வருடைய இடது கன்னத்தில் ஐந்து விரல்களின் தடமும் பதிந்திருந்தது. “உங்களுடைய ஆத்திரம் இன்னும் மீதமிருந்தால் அதை மற்றொரு கன்னத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் நண்பரே. அதற்காக நான் வருந்த மாட்டேன்” என்று நகைவேழம்பரை நோக்கிச் சொல்லிவிட்டு வஞ்சகமாகச் சிரித்தார் பெருநிதிச் செல்வர். இதைக் கேட்டதும் நகைவேழம்பருக்குச் சற்றே பயம் பிறந்தது, உடலில் மெல்ல நடுக்கம் கண்டது. “மன்னிக்க வேண்டும்! அப்போது நான் மிகவும் கோபமாயிருந்தேன். அது என்னை நிதானமிழக்கும்படிச் செய்துவிட்டது.” “அதைப் பற்றிக் கவலையில்லை! நீர் நிதானத்தை இழந்துவிட்ட அதே நேரத்தில் உம்மால் இழக்கப்பட்ட நிதானமும் சேர்ந்து எனக்கு வந்துவிட்டது. ஒரே சமயத்தில் இரண்டு பேருமே நிதானம் இழந்திருந்தால் தான் கெடுதல்!... வாருங்கள். வேறு முக்கியமான காரியத்துக்காக இப்போது நமக்கு இன்னும் நிறைய நிதானம் தேவைப்படுகிறது நகைவேழம்பரே!” சோறிட்டு வளர்ப்பவனுக்குப் பின்னால் வால் குழைத்துச் செல்லும் நாய்போல் தலைகுனிந்தபடி பெருநிதிச் செல்வரைப் பின்பற்றி நடந்தார் நகைவேழம்பர். இருவரும் பெருமாளிகைத் தோட்டத்தில் தனிமை யானதோர் இடத்தை அடைந்ததும் பெருநிதிச் செல்வர் பேசலானார்: “நம்முடைய பண்டசாலைக்கு இன்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து சேர்ந்திருக்க வேண்டிய கப்பல் ஒன்று இன்றுவரை வந்து சேரவில்லை. நீரும் அதை மறந்து விட்டீர். பச்சைக் கற்பூரமும் குங்குமமும், பனிநீரும் ஏற்றி வருவதற்காகச் சீனத்து வணிகன் ஒருவனிடம் பல மாதங்களுக்கு முன்னால் ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்து ஓலை மாற்றிக் கொண்டோமே, அதை மறந்துவிட்டீர்களா? இந்த ஆண்டு இந்திரவிழாவின் முதற் கிழமைக்குள் கப்பல் இங்கு வந்து சேருமென்று அந்த வணிகன் வாக்குக் கொடுத்தான். இன்றுவரை அந்தக் கப்பலைப் பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லை...” “அந்தச் சீனத்து வணிகன் நம்மிடம் தவறு செய்ய மாட்டான்! இன்று அல்லது நாளைக்குக் கற்பூரக் கப்பல் துறைமுகம் வந்து சேர்ந்துவிடும்...” “வணிகனுக்குத் தவறு செய்ய வேண்டாம் என்ற மனச்சாட்சியே இருக்கலாகாது நகைவேழம்பரே! ஒவ்வொரு கணமும் தவறு செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைத் தேடிக்கொண்டே இருப்பவன்தான் சாமர்த் தியமான வணிகன். கற்பூர வணிகனாயிற்றே. எல்லாம் நறுமணமாகத்தானிருக்கும் என்று நம்பலாகாது. மணம் கற்பூரத்துக்குத்தான் சொந்தம். அதை விற்கிறவன் கெட்ட நாற்றமுடையவனாகவும் இருக்கலாம்.” “வேண்டுமானால் நாம் அந்தக் கப்பலை எதிர் கொண்டு புறப்பட்டுத் தேடலாமே?” என்று மறுமொழி கூறினார் நகைவேழம்பர். இந்த ஏற்பாட்டின்படி மறுநாள் காலையில் வந்து சேர வேண்டிய கற்பூரக் கப்பலைத் தேடிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள் பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும். வந்து சேர வேண்டிய நாளில் எதிர்பார்த்த பொருளுடன் ஒரு கப்பல் வரவில்லையானால் அதைத் தேடி வேறு கப்பலில் எதிர்கொள்வது அந்தக் காலத்துக் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களிடையே வழக்கமாயிருந்தது. மிகப் பெரிய கப்பல் வணிகராகிய பெருநிதிச் செல்வருக்கு அடிக்கடி இந்த வேலை ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படும் போதுகளில் அவரோடு நகை வேழம்பரும் அவருக்குத் துணை போவார். இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் சமதண்டத்து, ஆசீவகர்களோடு வாதம் புரிந்து கொண்டிருந்த நாட்களில் பெருநிதிச் செல்வரும் நகை வேழம்பரும் பூம்புகாரின் சுற்றுப்புறக் கடலில் கற்பூரக் கப்பலைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். பதினைந்து யோசனை தூரம் வரை அலைந்து திரிந்தபின் சீனத்துக் கப்பல் எதிரே வருவது தென்பட்டது. கடற் காற்றுப் பயணத்துக்கு வசதியான திசையில் இல்லாத தால்தான் இவ்வளவு தாமதமென்று காரணம் கூறினான் அக்கப்பல் தலைவனான சீனத்து வணிகன். பெருநிதிச் செல்வரும் நகைவேழம்பரும் தாங்கள் தேடுவதற்காக ஏறிச் சென்ற கப்பலைத் துறைக்குத் திருப்பிக் கொணரும் பொறுப்பை அதன் மீகாமனிடம் ஒப்படைத்துவிட்டுக் கற்பூரக் கப்பலிலேயே ஏறிக்கொண்டு பூம்புகாருக்குத் திரும்பினார்கள். அவர்கள் பூம்புகார்த் துறைமுகத்துக்குத் திரும்பிய அதே தினத்தின் காலையில்தான் இளங்குமரனும் மணிபல்லவத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். பண்டசாலைக்கு எதிரே துறை கொண்ட சீனத்துக் கப்பலின் மேல் தளத்திலிருந்து முதலில் இளங்குமரனைப் பார்த்தவர் நகைவேழம்பர்தான். அவருடைய ஒற்றைக் கண்ணில் தென்பட்டபோது இளங்குமரன் நீலநாகரை வணங்கி விடைபெற்றுக் கொண்டிருந்தான். “நான் ஒன்றைத் தேடிக்கொண்டு வந்தால் தேடி வராத வேறு காரியங்களும் அதே வழியில் எளிதாக வந்து மாட்டிக்கொள்கின்றன ஐயா! அதோபாருங்கள்...” என்று கூறிப் பெருநிதிச் செல்வருக்கு அந்தக் காட்சியைக் காட்டினார் நகைவேழம்பர். “என்னுடைய இரண்டு கண்கள் பார்க்கத் தவறி விடுவதைக் கூட உம்முடைய ஒரு கண்ணால் நீர் சில சமயங்களில் பார்த்து விடுகிறீர்” - என்று அதைக் கண்டு கொண்டே நகைவேழம்பருக்குப் பாராட்டு வழங்கினார் பெருநிதிச் செல்வர். இவர்கள் இருவரும் இவ்வாறு பார்த்துப் பேசிக் கொண்டிருந்த போதே அந்தக் கப்பலின் ஊழியர்கள் பெரிய படகு ஒன்றில் பண்ட சாலைக்குக் கொண்டு போவதற்காகக் கற்பூரத்தை இறக்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள். இடமகன்று குழிந்த படகின் உட்புறம் ஓலைப் பாய்களை விரித்துக் குவிக்கப்பட்ட கற்பூரம் அந்தப் பகுதியெல்லாம் மணத்தைப் பரப்பியது. சீனத்துக் கப்பலில் இருந்து பணியாளர்கள் கூடை கூடையாக எடுத்துக் கொடுத்த கற்பூரத்தைத் துறைமுகத்துப் பண்டசாலை ஊழியர்கள் நால்வர் படகில் இருந்து வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த அந்த நிலையில் துறையின் மற்றொரு பகுதியில் இளங்குமரன் முதலியவர்களை ஏற்றிக் கொண்ட கப்பல் புறப்பட்டு விட்டதைக் கண்டுவிட்ட பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரிடம் ஏதோ சைகை செய்தார். உடனே நகைவேழம்பர் பரபரப்போடு கீழிறங்கித் தங்கள் படகுக்குள் சென்றார். சீனர்களும் சோனகர்களுமாகிய முரட்டுக் கப்பல் ஊழியர்களையும் ஏற்றிக் கொண்டு குவித்த கற்பூரத்தைப் பண்டசாலையில் கொண்டு போய் இறக்கவும் விடாமல் அப்படியே புறப்பட்டு விட்டார் நகைவேழம்பர். தமது படகில் கற்பூரம் இறக்கிக் குவிக்கப்பட்டிருப்பதையே மறந்திருந்தார் அவர். முன்னால் போகும் மணிபல்லவத்துக் கப்பலைப் பின் தொடர வேண்டும் என்றும், அதே சமயத்தில் இன்னும் சிறிது தொலைவு சென்று கரை மறைகிறவரை தாங்கள் அந்தக் கப்பலைத் துரத்துவது போல் அதிலிருப்பவர்களுக்குத் தெரியலாகாதென்றும் படகைச் செலுத்துகிறவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் நகைவேழம்பர். தற்செயலாகச் செலுத்துகிற படகு போலவே, அந்தக் கப்பலை நெருங்காமல் விலகியபடியே பின்தொடர்ந்து கொண்டிருந்தது கற்பூரப் படகு. இதனால் வளநாடுடையாரும், அவர் இளங்குமரனை அழைத்துக்கொண்டு சென்ற கப்பல் மீகாமனும் முதலிலேயே இந்தப் படகைக் கண்டிருந்தும் அவ்வளவாக இதன்மேற் கவனம் செலுத்தவில்லை. சந்தேகமும் படவில்லை. “ஏதோ படகில் சிறு வணிகர்கள் பொருள் ஏற்றிக் கொண்டு செல்லுகிறார்கள்” என்று நினைத்து விட்டு விட்டார்கள். கரை மறைந்து தனிமையான நடுக்கடலுக்கு வந்த பின்புதான் நகைவேழம்பர் தம்முடைய சுயரூபத்தைக் காட்டினார். முன்னால் செல்லும் கப்பலை நெருங்கித் துரத்துமாறு படகு செலுத்துகிறவனுக்கு ஆணை யிட்டார். அருகில் நெருங்கியதும் தீப்பந்தங்களைக் கொளுத்தி அந்தக் கப்பலில் எறிய வேண்டுமென்றும் தம்முடன் இருந்த முரட்டு ஊழியர்களுக்கு அவசரம் அவசரமாக உத்தரவிட்டார். கப்பலின் மேலே தீப்பந்தங்களை எறிய வேண்டுமென்ற அந்த உத்தரவைக் கேட்டவுடனே படகோட்டி பதறிப்போய் ஏதோ சொல்ல வாய் திறந்தான். ஏற்கெனவே அவன் பாய்மரப் படகை வேகமாகச் செலுத்தவில்லை என்று அவன் மேல் அளவற்ற கோபத்தோடிருந்த நகைவேழம்பர் இப்போது அவன் தன்னிடம் பேச வந்ததையே விரும்பாதவராக, “வாயை மூடு ! உன் பேச்சு யாருக்கு வேண்டும்? காரியத்தைக் கவனி...” என்று இரைந்து அவனை அடக்கிவிட்டார். அவன் தான் கூற வந்த மிக முக்கியமான விஷயத்தைச் சொல்ல முடியாமல் அடங்கிப்போய் விட்டான். படகின் பாதுகாப்பானதொரு பகுதியில் வைத்துத் தீக்கடைக் கோல்களைக் கடைந்து விரைவாய்ப் பந்தங்களைக் கொளுத்தவும் தொடங்கி விட்டார்கள் ஊழியர்கள். கப்பலில் இருந்தவர்கள் தங்களை நோக்கி வேலை ஓங்குவதையும் நகைவேழம்பர் கவனித்தார். உடனே தீப்பந்தங்களை எறியத் தொடங்கும்படி உத்தரவு பிறந்தது. கப்பலை நோக்கிப் பந்தங்கள் பாய்ந்து பறந்தன. அப்போதிருந்த ஆத்திரத்தில் நகைவேழம்பர் முன் விளைவு, பின் விளைவைச் சிந்திக்கிற நிதானத்தை முற்றிலும் இழந்திருந்தார். ஏறக்குறைய அடிமைகளுக்குச் சமமான அந்த ஊழியர்களும் அவர் கட்டளை யிட்டதைச் செயலாக்க முனைந்தார்களே ஒழிய அந்த கட்டளைக்குக் கீழ்ப்பணிந்து செயல்படுவதால் வரும் விளைவுகளை நினைக்கவில்லை. கப்பலின் மற்றொரு மூலையில் கற்பூரம் குவிக்கப்பட்டிருப்பதை படகோட்டி ஒருவனைத் தவிர மற்றவர்கள் மறந்தே விட்டனர். அடிமைகளாயிருப்பவர்களுக்கு ‘நாம் அடிமைப்பட்டிருக்கிறோம்’ என்று நினைப்பதற்கே நேரமும் சுதந்திரமும் இல்லாதபோது மற்ற விளைவுகளை நினைக்க நேரம் ஏது? அந்தக் கூட்டத்தில் அடிமையல்லாதவனாகிய படகோட்டி மட்டும் ஒரு கணம் பின்விளைவை நினைத்து நகைவேழம்பரை எச்சரிப்பதற்கு வாய் திறந்தான். அவருடைய கூக்குரலையும் பயமுறுத்தலையும் கண்டு ‘நமக்கு ஏன் வம்பு?’ - என்று இறுதியில் அவனும் அடங்கிப்போய் விட்டான். இளங் குமரனை ஒடுக்கி அடக்கி இல்லாமற் செய்துவிடும் முயற்சியில் இரண்டு மூன்று முறை தாம் தோற்றுப் போய்ப் பெருநிதிச் செல்வருக்கு முன் தலைகுனிந்து நின்ற சமயங்களை இப்போது நினைத்துக் கொண்டு விட்டார் நகைவேழம்பர். அப்படித் தலைகுனிந்து தான் நிற்க நேர்ந்த சமயங்களில் புழுவைப் பார்ப்பதுபோல் பெருநிதிச் செல்வர் தன்னை அலட்சியமாகப் பார்த்த பார்வைகளும் நினைவுக்கு வந்து அவரைக் கொலை வெறியில் முறுகச் செய்தன. செய்வதன் விளைவை நினையாமற் செயற்பட்டார் அவர். இளங்குமரனைக் கப்பலோடு கடலில் கவிழ்ந்து மூழ்கச் செய்துவிட்டு அந்த வெற்றியோடு பெருநிதிச் செல்வருக்கு முன் போய் நிற்க வேண்டுமென்ற ஒரே ஆசைதான் அவருக்கு இப்போது இருந்தது. |