நான்காம் பருவம் - பொற்சுடர் 25. மணிநாகபுரத்து மண் பயப்பட்டதற்கு ஏற்ப எந்தத் தீய விளைவும் இல்லாமலே மெல்ல மெல்ல ஏழாற்றுப் பிரிவின் ஆரவாரம் மிக்க கடற்பகுதியைக் கடந்து முன்னேறியிருந்தார்கள் அவர்கள். தூரத்தில் நேர் எதிரே மரகதப் பசுமை மின்னிடத் தெரிந்த தீவை எல்லாருக்கும் சுட்டிக் காண்பித்தான் கப்பல் தலைவன். “அதோ பாருங்கள்! எவ்வளவு ஆனந்தமான காட்சி! சங்குவேலித் துறையும் அப்பால் மணிநாகபுரமும் தெரிகின்றன! துறையை நோக்கிச் சாரி சாரியாகக் கப்பல்களும் படகுகளும் நெருங்கும் காட்சி கடற்பரப்பில் வியூகம் வகுத்தாற் போலத் தோன்றுகிறதே!” என்று வியந்து கூறியபடியே அவன் காண்பித்த காட்சியை எல்லாரும் கண்டார்கள். அந்தக் காட்சியைக் கண்டபின் இளங்குமரன் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையை உள்முகமாகத் திருப்பித் தியானத்தில் மூழ்கினான். ‘இவ்வளவு அழகான கடலும் அதனிடையே இத்துணை வனப்பு வாய்ந்த தீவும் தோன்றக் காரணமா யிருந்த முழுமுதற் பேரழகு எதுவோ அதை என் நெஞ்சும் உணர்வுகளும் இந்தக் கணமே வணங்கு கின்றன’ என்று தூய்மையான அழகுணர்ச்சியில் தோய்ந்து நின்றான் அவன். தொடுவானமாகத் தொலைவில் தெரிந்த கடலும் தீயும் ஆகாயமும் சந்திக்கிற கோட்டில் மயில் கழுத்து நிறம்போலத் தெரிந்த எழுதாத வண்ணத்தை மூடிய கண்களுடனேயே தன் நினைவுக்குக் கொணர்ந்து தந்து கொண்டு எண்ணத்தில் ஆழ்ந்தான் அவன். அவனிடம் சற்று முன் பேச்சில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக விலகியிருந்த வளநாடுடையார் இப்போது மீண்டும் அவன் அருகே வந்தார். அவனோடு ஏதோ பேசுவதற்கு நிற்கிறவர் போல் தயங்கிக் காத்து நின்றார். இளங்குமரன் கண்கள் திறந்து பார்த்ததும் அவர் அங்கு வந்து நிற்பதையும் நிற்கும் நோக்கத்தையும் புரிந்து கொண்டான். “தம்பீ! இப்போதாவது என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் நான் சொல்வதைக் கவனமாகக் கேள். வீரம் என்பது உடம்பின் வலிமையாகிய ஆற்றலா, மனத்தின் வலிமையாகிய கருணையா என்பதைப் பற்றி இப்போது நான் உன்னிடம் வாதிட வரவில்லை. அதைப்பற்றி நாம் இதுவரை பேசியவற்றைக் கூட நீ இந்தக் கணத்திலேயே மறந்துவிடலாம். இப்போது நான் சொல்லப் போவது இங்கே பயணம் செய்து வந்ததன் அவசியத்தைப் பற்றியே ஆகும். பூம்புகார்த் துறையிலிருந்து நாம் புறப்படுவதற்கு முன் நீலநாக மறவர் உன்னிடம் கூறியவற்றை இப்போது மீண்டும் நினைவூட்டிக் கொள். ‘இந்தப் பயணத்தினால் உனக்கு நிறைய நன்மையிருக்கிறது. நீ ஆலமுற்றத்தில் உடம்பின் வலிமையைக் கற்றுத் தெரிந்து கொண்டாய். திருநாங்கூரில் அறிவின் வலிமையைக் கற்றுத் தெரிந்துகொண்டாய். இப்போது மணிபல்லவத்தில் போய் உன்னைத் தெரிந்துகொண்டு வா’ - என்று அவர் கூறியதை நீ என்னவென்று புரிந்து கொண்டாய்?” என்று வளநாடுடையார் தன்னைக் கேட்டபோது அவருக்கு என்ன மாற்றம் கூறுவது என்று சிந்தித்துச் சிறிது நேரம் தயங்கினான் இளங்குமரன். பின்பு அவருக்கு மறுமொழி கூறலானான்: “எல்லாரும் அந்த வார்த்தைகளிலிருந்து என்ன புரிந்துகொள்ள முடியுமோ அதைத்தான் நானும் புரிந்து கொண்டேன். பொதுவாக மணிபல்லவத்துக்குப் போகிறவர்களுக்குப் பழம் பிறவியைப் பற்றிய ஞானம் உண்டாகும் என்று பூம்புகாரில் நீண்ட காலமாக ஒரு புனித நம்பிக்கை இருந்து வருகிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டுதான் அவரும் என்னை அப்படி வாழ்த்தி வழியனுப்பியிருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். என்னுடைய வாழ்வில் இதுவரை ஏற்பட்டிருக்கிற ஒவ்வொரு பெரிய மாறுதலும் பூம்புகாரில் ஏதாவதொரு இந்திரவிழாத் தொடங்கும் போதாவது முடிந்த உடனேயாவது நேர்ந்திருக்கிறது. இந்த யாத்திரையிலும் அப்படி ஏதேனும் நேரலாமென்றுதான் புறப்பட்டபோது என் மனத்தில் அவதி ஞானமாக ஓர் உணர்வு பிறந்தது. அந்த ஒரு கணம் மட்டும்தான் அதைப்பற்றி நான் நினைத்தேன். அப்புறம் இப்போது மறந்துவிட்டேன். எது நேர்ந்தாலும் தாங்கிக் கொண்டு அந்த அநுபவத்தினாலும் வளர்ந்து நிற்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டு விட்டேன். மணிபல்லவத்துக்குப் பயணம் புறப்பட வேண்டும் என்று நீங்கள் ஆலமுற்றத்தில் வந்து என்னை அழைத்த போதுகூட நான் அப்படி நினைத்துக் கொண்டுதான் புறப்பட்டேன்.” இப்படி இந்த வார்த்தைகளை வெகு நிதானமாகத் தன்னிடம் பேசிவிட்டு நின்ற இளங்குமரனைப் பார்த்து அவனுக்கு அப்போது தான் சொல்லியாக வேண்டிய ஓர் உண்மையை எப்படித் தொடங்கி எந்த விதமாகச் சொல்லி முடிப்பதென்று மலைத்துத் தயங்கினார் வளநாடுடையார். அவர் சொல்ல வேண்டிய விஷயத்துக்கு அவருக்கே தொடங்கும் விதமும், முடிக்கும் விதமும் புலப்படவில்லை.
இளங்குமரனுக்கு முன் அவர் இவ்வாறு தயங்கி நின்றிருந்த போது கரை நெருங்கியிருந்தது. கப்பல் தலைவனும் ஊழியர்களும் மரக்கலத்தைக் கரை சேர்த்து நிறுத்தி நங்கூரம் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். மணிமார்பனும் அவர்களுக்கு உதவியாகச் சென்றிருந்தான். அவன் மனைவி பதுமை கப்பல் தளத்தின் ஒரு பகுதியில் நின்று மணிநாகபுரத்தின் மாடமாளிகை களையும் அவற்றின் மேற்பகுதிகளில் தெரிந்த படநாகக் கொடிகளையும், வரிசையாய்ச் சங்கு ஒதுங்கிய கரையையும் பார்த்து வியந்து கொண்டிருந்தாள். கரையருகே ஆழம் குறைவாயிருந்ததினால் சிறிது தொலைவிலேயே கப்பலை நிறுத்த வேண்டியிருந்தது.
இந்த நிலையில் வளநாடுடையாருக்கும் இளங்குமரனுக்கும் கப்பல் தளத்தில் போதுமான தனிமை வாய்த்திருந்தது. நாகநாட்டுப் பெருந்தீவில் இறங்கிக் கரை சேருவதற்கு முன்பே தனது நினைவிலிருப்பதை அந்தப் பிள்ளையாண்டானிடம் சொல்லத் தொடங்கிவிட் வேண்டுமென்று தவித்தார் அவர். அவருடைய மனமோ நினைவில் மூடுண்டு கிடக்கும் அந்த இரகசியத்தை உடனே அவனிடம் சொல்லிவிடப் பறந்தது. அப்படி உடனே சொல்லிவிடுவதும் பொருத்தமானதாக அமையாதென்று மெதுவாக அந்த விநாடியில் எப்படித் தொடங்க வேண்டுமென்று தோன்றியதோ அப்படியே தொடங்கிச் சொல்லலானார் அவர்: “தம்பீ! நீ பூம்புகாரிலிருந்து திருநாங்கூருக்குப் புறப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பழைய இந்திர விழாவை உனக்கு நினைவிருக்கிறதல்லவா? அந்த இந்திர விழாவிற்கு முதல் நாள் பின்னிரவில்தான் சம்பாபதி வனத்தில் அடிபட்டுக் கிடந்த அருட்செல்வ முனிவரை நீ எங்கள் வீட்டுக்குத் தூக்கிவந்து தங்கச் செய்து காப்பாற்றினாய். அன்றைக்கு ஒருநாள் காலையில் உன்னை என் மகள் முல்லையோடு பூத சதுக்கத்துக்குத் துணையாக அனுப்பிய பின்பு புறவீதியில் என் இல்லத்தில் நானும் உன்னை வளர்த்து ஆளாக்கிய அருட்செல்வ முனிவரும் தனியாக இருந்தோம். அப்படி தனியாயிருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அன்று நான் அவரிடம் அந்தரங்கமாக ஒரு கேள்வி கேட்டேன். அது வேறு எந்தக் கேள்வியுமில்லை. உன்னைப் பற்றிய கேள்விதான். ‘துறவிகளுக்கு ஒளிவு மறைவு கூடாதென்பார்கள். நீங்களோ மிகமிகப் பெரிய செய்திகளையெல்லாம் ஒளித்து மறைத்துக் காப்பாற்றி வருகிறீர்கள், இன்று வரை நீங்கள் வளர்த்து ஆளாக்கிய இந்தப் பிள்ளை இளங்குமரனுடைய பிறப்பு வளர்ப்பைப்பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்களே?’ - என்று கேட்டேன். ‘என் இதயத்துக்குள்ளேயே நான் இப்போது இரண்டாவது முறையாக எண்ணிப் பார்ப்பதற்குக்கூட பயப்படுகிற செய்திகளை உங்களிடம் எப்படிச் சொல்ல முடியும்’ என்று அருட்செல்வ முனிவர் அன்று எனக்கு மறுமொழி கூறினார். நான் மேலும் தூண்டிக் கேட்டபோது அந்த உண்மைகளையெல்லாம் இப்போது வெளியிடுவதனால் இளங்குமரனுக்குப் பகைவர்களை அதிகமாக உண்டாக்க நேரிடும் என்று மறுத்துவிட்டார்.” வளநாடுடையார் இவ்வளவில் பேச்சை நிறுத்தி விட்டு இளங்குமரனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அருட்செல்வ முனிவருடைய ஞாபகத்தினால் அவன் கலங்கித் தலைசாய்த்து நின்று கொண்டிருந்தான். நாத் தழுதழுத்து நெகிழ்ந்த குரலில் குனிந்து தலை நிமிராமலே அவன் வளநாடுடையாரிடம் சொன்னான். “ஐயா! அந்த முனிவர் என்னுடைய தெய்வம். என்னை வளர்த்து ஆளாக்கியதற்காக நான் அவருக்கு எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருடைய முதுமையில் அவருக்கு நிறையப் பணிவிடைகள் புரிந்து அந்த நன்றிக் கடனையெல்லாம் தீர்த்துக் கொள்ள எண்ணியிருந்தேன். ஆனால் எப்படியோ முடிந்துவிட்டது அவர் வாழ்க்கை. உங்களிடம் அந்தப் பழைய இந்திரவிழாவின் இரண்டாம் நாள் பகலில் என்ன மறுமொழி சொல்லியிருந்தாரோ அதையேதான் அதற்கு முந்திய நாள் இரவு அவர் எனக்கும் சொல்லியிருந்தார். என் தாயைப் பற்றி நான் அவரிடம் கேட்ட போதெல்லாம் அவர் எனக்குப் புதிராகவே இருந்தார். இறுதியாக அந்த ஆண்டு இந்திரவிழா இரவின்போது நான் அறிய விரும்பியதை எனக்குக் கூறுவதற்காக நள்ளிரவில் சம்பாபதி வனத்து நாவல் மரத்தடிக்கு என்னை வரச் சொல்லியிருந்தார். அங்கே போய்ச் சேர்ந்தபோதுதான் அன்று எனக்கும் அவருக்கும் அப்படி பயங்கர அநுபவங்கள் ஏற்பட்டன. அப்புறம் அவரும் தம் தவச்சாலை தீப்பட்டதனால் மாண்டு போய்விட்டார். கடைசி கடைசியாக நானும் இந்தப் பூமியையே என் தாயாகவும், வானத்தையே தந்தையாகவும் நினைத்துக்கொண்டு மன அமைதி அடைந்துவிட்டேன்” என்று இளங்குமரன் கூறினான். இதற்குள் கப்பலை நங்கூரம் பாய்ச்சியிருந்தார்கள். படகுகளில் இறங்கிக் கரையை அடைய வேண்டு மென்றான் தலைவன். மற்றவர்களையெல்லாம் வேறு படகுகளில் அனுப்பிவிட்டு இளங்குமரனை மட்டும் தனியாக ஒரு படகில் அமரச் செய்து கரைக்கு அழைத்துக் கொண்டு போனார் வளநாடுடையார். படகில் போகும்போது இளங்குமரன் ஆவலோடு எதிர்பார்த்த வேறு ஒரு சந்திப்பும் அவனுக்குக் கரையிலிருந்து கிடைத்துவிட்டது. கரையில் வரைவரையாய்க் குவிந்திருந்த சங்குக் குவியல்களுக்கு அப்பால் விசாகையும் கூட்டத்தினிடையே நின்றிருப்பதை அவன் பார்த்து விட்டான். நாக நாட்டுப் பெருந்தீவுக்கு முதல் முனையாகிய மணிநாகபுரத்துத் துறையில் இளங்குமரன் இறங்கி நின்றபோது சிறிது தொலைவில் நின்ற விசாகை அவனருகே வந்து நலம் விசாரித்தாள். அவன் மணிநாகபுரத்து மண்ணில் நின்ற வேளை அவனுடைய வாழ்வில் மிக நல்ல வேளை என்று அவனிடம் அந்தக் கடலே குறிப்பாய் சொல்வதுபோல் புரண்டு வந்த அலையொன்று நாலைந்து பொன்னிறச் சங்குகளை அவன் பாதங்களில் கொணர்ந்து இடுவதென ஒதுக்கியது. “தம்பீ! இந்த மண்ணில் இறங்கியபின் இழந்துவிட்ட நம்பிக்கைகளையெல்லாம் நீ அடையப் போகிறாய். மணி பீடகமும், புத்த பீடிகையும், பழம் பிறவி ஞானத்தைத் தரும் என்கிறார்கள். உனக்கோ இந்தப் பிறவியைப் பற்றிய ஞானமே இந்தத் தீவிலிருந்துதான் கிடைக்கப் போகிறது” என்று வளநாடுடையார் அவன் காதருகே வந்து ஆவலோடு கூறினார். “கடற்கரையில் நிற்கிறபோது காலடியில் தானாகவே சங்கு வந்து ஒதுங்குவது மிகப் பெரிய நற்சகுனம் எனச் சொல்வார்கள்” என்றான் ஓவியன் மணிமார்பன். இளங்குமரனுடைய மனம் அந்த மண்ணில் நின்றபோது எதற்காகவோ ஏங்கியது. எதற்காகவோ நெகிழ்ந்தது. எந்த நிறைவையோ எதிர்பார்த்துக் குறைபட்டு நின்றது. அவன் தன் கண்களை மலர விழித்து நிமிர்ந்து பார்த்தான். மறுபடியும் ஒரு பெரிய அலை கடற்கரையோரத்துச் செடியிலிருந்தோ மரத்திலிருந்தோ உதிர்ந்த செந்நிறப் பூங்கொத்து ஒன்றையும் நாலைந்து முத்துச் சிப்பிகளையும் அவன் பாதங்களில் கொணர்ந்து குவித்தது. ‘நிறைக நிறைக’ என்று விசாகை அப்போது அவனை மனம் நிறைய வாழ்த்தினாள். நான்காம் பருவம் முற்றும் |