நான்காம் பருவம் - பொற்சுடர் 7. வசந்தமாலையின் தந்திரம் “உங்கள் தந்தையார் கடற் பயணத்திலிருந்து திரும்பி வந்துவிட்டார் போலிருக்கிறதம்மா! கீழே அவருடைய பேச்சுக் குரல் கேட்கிறது” என்று வசந்தமாலை அன்று சாயங்காலம் கூறியபோது சுரமஞ்சரி தான் அதற்காக எந்தவிதமான மனக் கிளர்ச்சியும் அடைந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை. அதைக் கேட்காது போலவே இருந்துவிட்டாள். ஒளி சாய்ந்து இருட்டுத் தொடங்கியிருந்த பொழுதாகையால் தலைவியின் முகத்தையும் அப்போது வசந்தமாலையால் பார்க்க முடியவில்லை. தோழி மறுபடியும் பேச்சுக் கொடுத்தாள்: “தந்தையாரோடு கூடப் போயிருந்த நகைவேழம்பர் திரும்பி வரவில்லையாம் அம்மா! தந்தையார் மட்டும் மிகவும் களைப்போடு திரும்பி வந்திருக்கிறாராம். வழக்கமாக வந்து போகிற பணிப்பெண்தான் இதையும் சொன்னாள். நெடுந்தொலைவு கடற் பயணம் செல்லும் போதெல்லாம் இருவரும் சேர்ந்து போவதைப் போல் திரும்பும் போதும் சேர்ந்தே திரும்பி வருவார்கள். இந்தப் பயணத்தின்போது முதன் முறையாக இன்றுதான் அந்த வழக்கம் மாறியிருக்கிறது. உங்கள் தந்தையார் மட்டும் தனியே திரும்பி வந்திருக்கிறார்! பல நாட்களுக்குப் பின்பு பெருமாளிகையில் மீண்டும் அவருடைய குரல் தனியாகக் கேட்கிறது.” “போதுமடி வசந்தமாலை ! இவர்கள் இரண்டு பேரையும் தவிர வேறு யாரையாவது நல்லவர்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசு. குழப்பங்களையும், கவலைகளையும் உண்டாக்கும் மனிதர்களைப் பற்றியே எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டிராதே!” என்று வேதனை யோடு சலித்துக் கொண்டாள் சுரமஞ்சரி. தலைவியின் இந்த வார்த்தைகளில் இருந்த கசப்பை உணர்ந்தபின் சிறிது நேரத்துக்குத் தான் எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்துவிட்டால் மிகவும் நல்லது என்று உணர்ந்தாள் வசந்தமாலை. ஒரு நோக்கமுமின்றி மாடத்தின் முன்புறமாகப் போய் மின்னத் தொடங்கியிருந்த வானத்து நட்சத் திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுரமஞ்சரி. சற்றைக்கெல்லாம் ஏதோ திடுமென்று நினைத்துக் கொண்டவள் போலத் தோழியிடம் மறுபடியும் திரும்பி வந்து அவளே பேசலானாள்: “வசந்தமாலை! ஒரு காரியம் எனக்கு மறந்தே போயிற்று. முதல் வேலையாக ஐம்படை அணிகளும் கோத்த இந்தப் பொன் ஆரத்தை ஊன்றுகோலின் குழலில் இட்டு யாளி முகப்பிடியையும் திருகிக் கீழே கொடுத்து அனுப்பிவிடு. தந்தையார் ஊர் திரும்பி விட்டார். இந்தப் புதிர் இங்கே இருக்கிறவரை நமக்கு நிம்மதியில்லை. தந்தையார் கடற்பயணம் போன மறுநாளிலிருந்து இன்று வரை நானும் நீயும் எப்படி யெப்படியெல்லாமோ முயன்று சிந்தித்துப் பார்க்கிறோம். நமக்கு இதில் அடங்கியிருக்கும் உண்மை விளங்கவில்லை. இந்த ஐம்படைத்தாலி யாருடையது? இதை ஊன்றுகோலில் இட்டு வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன? என்று நமக்குப் புரியவே இல்லை. என் தந்தையாருக்கு மக்களாக வாய்த்த நாங்கள் இருவருமே பெண்கள். பெண் குழந்தைகளுக்கு இந்த ஐம்படை ஆரத்தைக் காப்பாகக் கட்டமாட்டார்கள். பொன்னும், மணியும், முத்துமாக இந்த மாளிகை முழுவதும் செல்வம் இறைந்து கிடக்கிறது. இவ்வளவு பெரிய செல்வக் குவியலின் மேல் வீறுடன் நிமிர்ந்து நிற்கிற என் தந்தைக்கு இந்தச் சின்னஞ்சிறு பொன் ஐம்படைத்தாலியை இப்படிப் பாதுகாத்து ஒளித்து வைத்துப் போற்ற வேண்டிய அவசியம் என்னவென்பதுதான் எனக்குப் புரியவில்லை.”
“ஒன்றா, இரண்டா? இந்த மாளிகையில் இப்படிப் புரியாதவை எத்தனையோ? ஆனால் இதைப் பற்றி புரிந்துகொள்ள மட்டும் நாம் ஆவல் காட்டுவது பொருத்தமானதுதான் அம்மா! இந்த ஊன்றுகோலை உங்கள் தந்தையார் இங்கே வைத்ததிலேயே நமக்குப் பலவிதமான சந்தேகங்கள். தற்செயலாக இதன் பிடி சுழன்ற பின்போ இன்னும் பல புதிய சந்தேகங்கள். இதைப்பற்றி வலுவில் நாம் முயற்சி செய்யாமலே நமக்குச் செய்திகள் தெரிய வேண்டுமானால் அதற்காக ஒரு தந்திரம் செய்யலாம்” என்று வசந்தமாலை கூறிய வற்றில் சுரமஞ்சரி அக்கறை கொள்ளாதவள் போல மறுத்துவிட்டாள்:
“நாம் ஒரு தந்திரமும் செய்ய வேண்டாம்! மற்றவர்கள் தந்திரத்துக்கு நாம் ஆளாகித் தவிப்பதே இன்னும் ஏழு பிறவிக்குப் போதுமடீ! நம்முடைய தந்திரத்துக்கும் வேறு சிலர் ஆளாகித் தவிக்க வேண்டாம். தந்திரங்களால் வருகிற குழப்பங்களையும், துன்பங்களையும் பார்க்கும்போது இந்த உலகத்தில் கடவுள் எல்லா மனிதர்களையும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவே படைத்திருக்கக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது. மறுபேச்சுப் பேசாமல் அந்த ஐம்படை ஆரத்தை ஊன்றுகோலின் உள்ளே முன்பு இருந்ததைப் போலவே இட்டுப் பிடியையும் நன்றாகத் திருகி யாராவது பணிப்பெண் இங்கு வருகிறபோது கொடுத்துத் தந்தையாரிடம் சேர்க்கச் சொல்லிவிடு. இது இங்கிருந்து போனால் நம்மைப் பிடித்த தொல்லை முக்கால் பங்கு தீர்ந்தது போலத்தான்.” தன்னுடைய தலைவியின் குரலில் இருந்த கண்டிப்பு வசந்தமாலையையே வியக்கச் செய்தது, ஆனால் அவள் தன் வியப்பை மறைத்துக்கொண்ட குரலில் பேசினாள்; “அதற்கில்லை, அம்மா! செல்வக் குவியலின் மேல் நிமிர்ந்து நிற்கும் உங்கள் தந்தை, கேவலம் இந்தச் சின்னஞ்சிறு பொன் ஆரத்தை ஒளித்துப் பாதுகாப்பதன் காரணம் விளங்கவில்லை என்று சற்று முன்னால் நீங்களே மருண்டீர்களே! உங்களுடைய அந்த மருட்சியைப் பார்த்துத்தான் இதன் காரணம் விளங்குவதற்கு நாம் ஏதாவது தந்திரம் செய்யலாமா என்று கேட்டேன்.” “அவசியமில்லை! தந்திரத்தால் வாழ்பவர்களைப் பார்த்து வியந்துகொண்டே தாமும் தந்திரத்தில் இறங்குவது நியாயமாகாது. இந்த மாளிகையின் வாழ்க்கையைப் பார்த்துச் சில சமயங்களில் நான் பயப்படுகிறேன். சில சமயங்களில் நான் வியக்கிறேன். வேறு சில சமயங்களில் நான் எனக்குள்ளேயே சிரிக்கிறேன். அதுவும் முடியாத போது புத்தரைப்போல் மனத்துக்குள்ளேயே அழுகிறேன். இதற்கெல்லாம் காரணம் தேடி அலைவதற்குத் தந்திரங்கள் செய்யத் தொடங்கினால் நாம் செய்ய வேண்டிய தந்திரங்கள் நூற்றுக்கணக்கில் இருக்கும், வசந்தமாலை! நானும் சமய ஞானம், தத்துவ ஞானம் எல்லாம் கற்காமல் போனது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? அவற்றையெல்லாம் கற்றிருந்தால் இளங்குமரனை காதலிக்க முடியாவிட்டாலும் அவருடைய எதிரியாயிருந்து வாதம் புரிகிற பாக்கியமாவது எனக்குக் கிடைத்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. ஒருவருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பதைப்போல் நல்ல எதிரிகள் கிடைப்பதும் கூடத் தவப் பயன்தான். இராவணனுக்கு இராமன் கிடைத்தது போல் கல்யாண குணங்கள் நிரம்பிய அழகிய எதிரியை அடைவதும் முற்பிறவியின் நற்பயன் போலும், காதலராக அடைய முடியாது தவிப்பதற்குப் பதில் நான் இளங்குமரனை எதிரியாகவாவது அடைந்திருக்கலாம். ஆயிரம் குரூரமான நட்பையும், அழகில்லாத உறவையும் பெறுவதைவிட ஓர் அழகிய எதிரி கிடைப்பது மிகப் பெரும் பாக்கியமென்று நினைக்கிறேனடி வசந்தமாலை! உனக்கு என்ன தோன்றுகிறது?” “இப்போது நீங்கள் சொல்வது நியாயம் என்று மட்டும் தோன்றுகிறது.” “மெய்யாகத்தான் சொல்கிறாயா, வசந்தமாலை! நான் பித்துக் கொண்டு விட்டேனோ என்று என் மேல் சந்தேகப்பட்டு என் பேச்சுக்கு மாறுபடாமல் என்னோடு ஒத்துப் பாடுகிறாயா?” “இல்லை! இல்லை! மெய்யாகவேதான் சொல்லுகிறேன் அம்மா!” தலைவியிடம் பதில் பேசிக்கொண்டே முன்புறம் வந்து கீழே வீதியைத் தற்செயலாகப் பார்த்த வசந்த மாலை அங்கே அந்த வழியாக அப்போது நடந்து போய்க் கொண்டிருந்த இருவரைச் சுட்டிக் காட்டி. “அதோ பாருங்கள்” என்று தலைவியிடம் கூறினாள். சுரமஞ்சரி முன்னால் வந்து அவர்களைப் பார்த்ததும் வியந்தாள். |