![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
ஐந்தாம் பருவம் - நிறை வாழ்வு 7. வெறுப்பு வளர்ந்தது அவனுடைய அருமைத் தாய்க்கு இளங்குமரன் மகனாகப் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி இது. அந்தக் குடும்பம் பூம்புகாரின் பெரிய வாணிகர் ஒருவரைப் பகைத்துக் கொள்ள நேர்ந்ததும் அதன் காரணமாக ஆள் வலிமையும், செல்வாக்குமுள்ள அந்த வாணிகரின் மனத்தில் வெறுப்பும் குரோதமும் வளர்ந்ததும் மறக்க முடியாதவை. தொடர்ந்து கெட்ட கனவு காண்பது போன்ற வேதனையான அநுபவங்களை அந்தக் குடும்பத்துக்கு அளித்தவை. அந்த வேதனை தொடங்கிய நாளிலிருந்து அந்தக் குடும்பத்துக்கும் அதன் வழிமுறையினருக்கும் போதாத காலம் பிறந்தது. மனிதனுடைய வெறுப்புக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதைக் காட்டும் கதை அது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வைசாக பூர்ணிமைக்கு இரண்டு நாட்களிருக்கும் போது பூம்புகாரிலிருந்து அலங்கார மயமான பெரிய மரக்கலம் ஒன்று நாகநாட்டுப் பெருந்தீவுக்குப் புறப்பட்டிருந்தது. கடலில் மிதந்து கொண்டே நகரும் மாடமணி மாளிகை போன்ற அந்த மரக்கலத்தில் மூவரும் பயணம் செய்தனர். பயணம் செய் தவர்களில் முதன்மையானவர் பட்டினப்பாக்கத்து எட்டி குமரன் பெருநிதிச் செல்வர், அவருடைய நண்பராகவும் அமைச்சராகவும் சில சமயங்களில் ஊழியராகவும் சமயத்துக்கேற்றபடி அவருக்குப் பயன்படக்கூடிய ஒற்றைக் கண் மனிதர் ஒருவரும், மூன்றாவதாக ஏழைக் கவிஞன் ஒருவனும் அந்த மரக்கலத்தில் அவரோடு பயணம் செய்தார்கள். கப்பல் பயணத்தின் போது பெருஞ்செல்வரும் திருமணமாகாத இளைஞருமாகிய அந்தப் பெருநிதிச் செல்வருக்கு உற்சாகமூட்டும் படியான கவிதைகளைப் புனைந்து பாட வேண்டும் என்பது அந்தக் கவிஞனுக்கு இடப்பட்டிருந்த பணி. அரசர்களுக்கு அவைக் கவிஞர்களைப் போலப் பூம்புகாரின் வாணிக மன்னர்களும் இப்படித் தங்கள் மாளிகைகளில் எல்லாம் சிறந்த கவிஞர்களை வைத்துப் பேணி வருவது வழக்கமாயிருந்தது. சொந்த மகிழ்ச்சிக்காகக் கிளியையும் புறாவையும் கூண்டில் அடைத்து வளர்ப்பதைப் போலக் கவிகளையும் வளர்த்தார்கள் இந்தச் செல்வர்கள். சோழர் கோநகரான பூம்புகாரின் மிகப் பெரிய வாணிகரும், திருமணமாகாத இளைஞருமாகிய எட்டி குமரன் பெருநிதிச் செல்வரின் மாளிகையில் அவைக் கவிஞனாக வாய்த்திருந்த இளைஞன் தான் படைக்கும் கவிதைகளைப் போலவே வனப்பு வாய்ந்த கட்டெழில் தோற்றத்தையுடையவன். அமுதசாகரன் என்று தோற்றத்திலன்றிப் பெயரிலும் இனிமையைப் பெற்றிருந்தான் அவன். கடலைப் போலப் பரந்த மனம். குழந்தையைப் போலக் கள்ளங்கபடமறியாத வெள்ளைத்தனம். உலகத்து அழகுகள் எல்லாம் தன்னுடைய கவிதைக்கு மூலதனம் என்று உரிமையுடனே எண்ணும் வசீகரமான நினைவுகள். அந்த நினைவுகளோடு பரந்த அநுபவங்களைத் தேடி உலகத்தைப் பார்க்கும் வசீகரமான கண்கள். வசீகரமான முகம். இந்த உலகத்து அழகுகளையெல்லாம் எப்போதுமே ஒன்றுவிடாமல் அங்கீகரித்துக் கொள்வது போல வசீகரமான புன்னகை.இவையெல்லாம் சேர்ந்துதான் அமுதசாகரன் என்னும் இளம் பருவத்துக் கவியாயிருந்தன. பட்டினப்பாக்கத்து எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரே இந்த அழகிய கவிஞனின் தோற்றத்திலிருந்த வனப்பைத் தன்னுடைய குலப் பகைமையாக எண்ணும் படியான விளைவு அந்த முறை அவர்கள் நாகநாட்டுப் பெருந் தீவுக்குக் கடற்பயணம் சென்றபோது ஏற்பட்டது. அந்த விளைவுக்குப் பின் கவியின் போதாத காலமும் எட்டி குமரனுடைய குரோதமும் ஒன்றாகப் பிறந்து வளரத் தொடங்கிவிட்டன. கடல் கடந்த நாகநாட்டுப் பெருந்தீவிலுள்ள இரத்தின வாணிகர் குடும்பத்துப் பெண்ணொருத்தி இணையற்ற பேரழகி என்று கேள்விப்பட்டு அவளுடைய ஒவியத்தையும் இரகசியமாக வருவித்துப் பார்த்த பின் அவளைத் தான் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலோடு எட்டிகுமரன் பயணம் புறப்பட்டிருந்தார். அந்தக் காலத்தில் சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பெரு மன்னர்களும் கூட இந்த வகையில் நாகநாட்டுப் பெண்களின் அழகில் மயங்கிப் போய் இரகசியமாக நாக நங்கையர்களைக் காந்தர்வ விவாகம் செய்து கொண்டு திரும்புவது வழக்கமாயிருந்தது. அவரும் அந்த ஆவலினால் தான் புறப்பட்டிருந்தார். வைசாக பூர்ணிமையன்று நாகநாட்டு மணிநாகபுரத்தில் போய் இறங்கிய பின்பே கவி அமுதசாகரனுக்கு அவர்கள் பயணத்தின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. எல்லாக் கடற் பயணத்தின் போதும் உடன் புறப்படுகிற வழக்கப்படிதான் இந்தப் பயணத்தின்போதும் அவன் புறப்பட்டிருந்தான். மணிநாகபுரத்தில் இறங்கிப் பொன்னும், மணியும், முத்துமாகப் பரிசுப் பொருள்களை ஊழியர்கள் பின்னால் சுமந்துவர, அவர்கள் மணம் பேசப் புறப்பட்ட கோலத்தை உடன் சென்று கண்டபோது தான் கவி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டான். அந்த நாக நங்கையின் பெயர் மருதி என்று சொன்னார்கள். அவள் தமையனாகிய காலாந்தக தேவரை எட்டிகுமரன் முதலில் சந்தித்து மணம் பேசினார். காலாந்தக தேவரும் பெரிய இரத்தின வாணிகர் என்று அமுதசாகரன் அந்த மாளிகையைப் பார்த்ததுமே அறிந்து கொண்டான். விலை மதிப்பற்ற பரிசுப் பொருள்களை எதிரே வரிசையாகக் குவித்துக் கொண்டு எட்டிகுமரனும் அவருடைய அமைச்சராகிய நகைவேழம்பர் என்னும் ஒற்றைக்கண் மனிதரும், மருதியின் தமையனாகிய காலாந்தகதேவரிடம் மணப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கும் போது தானும் அங்கு அவர்களோடு உடன் அமர்ந்திருக்கக் கூசிய கவிஞன் அந்த மாளிகையையும், அதன் சுற்றுப் புறத்திலுள்ள பூம்பொழில்களையும் சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையில் அவர்களை விட்டுத் தனியாய்ப் பிரிந்து புறப் பட்டான். பார்த்த இடமெல்லாம் இரத்தின மயமான அந்த மாளிகையின் காட்சிகள் அவன் மனத்தில் உல்லாச நினைவுகளை மலரச் செய்தன. அந்தக் காட்சிகளாலும் நெடுந்தொலைவு பயணம் செய்து வந்து காணும் புதிய நகரத்தின் தோற்றப் பொலிவுகளாலும் அவன் மனத்தில் வசீகரமான எண்ணங்கள் பொங்கி ஏதாவது கவிதை வடிவில் அந்த எண்ணங்களை வெளியிட வேண்டும் என்னும் தவிப்புப் பிறந்தது. இப்படிப்பட்ட இங்கிதமான செளந்தரியத் தவிப்போடு அந்த மாளிகைக்கும் அதை அடுத்தாற்போல் இருந்த நாக தெய்வக் கோட்டத்துக்கும் நடுவிலே உள்ளதொரு மலர்ப்பொழிலில் அமுதசாகரன் நுழைந்தபோது அங்கே ஓர் அற்புதமான காட்சியைக் கண்டான். அந்தப் பொழிலில் பூத்த மலர்களுக்கு நடுவே உயிருள்ள பெண் மலராய்க் கந்தர்வ உலகத்திலிருந்து மண்ணில் இறங்கி வந்தவளைப் போன்ற தோற்றத்தை உடைய யுவதி ஒருத்தி தனக்குள் சிரித்துக் கொண்டும் பாடிக் கொண்டும் பந்தாடிய வண்ணம் இருந்தாள். அடர்ந்த பூங்கொடி ஒன்றின் பின் ஒதுங்கி நின்று இந்தக் காட்சியைச் சிறிது நேரம் பார்த்த அமுதசாகரன் தன்னை மறந்த நிலையில்,
சந்தநகை சிந்தியிதழ் கொஞ்சிவர இந்துதுதல் நொந்துவியர் முந்திவரக் கொந்தளக பந்திமிசை முல்லைமலர் தந்தமண மண்டியெழ முந்திவரு பந்துபயில் நங்கையிவள் கொண்டஎழில் நெஞ்சிலலை பொங்கியெழ வந்த மதியோ? என்று தன் மனத்தில் தோன்றியதை மெலிந்த குரலில் பாடிவிட்டு நிமிர்ந்தபோது அந்தப் பெண்ணே பந்தாடுவதை நிறுத்திவிட்டு இவன் எதிரே வந்து நின்றாள். விநாடிக்கு விநாடி பார்வைக்குப் பார்வை புதிய ஆச்சர்யங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு பார்ப்பதுபோல் அவனை நோக்கி அவள் மருண்டாள். மகிழ்ந்தாள். ஆவலடங்காத கண்களால் பார்த்துப் பார்த்து அந்தப் பார்வையில் அவன் கண்களும் தன்னோடு எதிர்கொண்டு கலந்தபோது அவள் நாணித் தலைகுனிந்தாள். தரையைப் பார்த்தாள். நிமிர்ந்தும் நிமிராமலும் நாணமும் ஆசையும் போராடக் கடைக்கண்ணால் அவனை நோக்கித் தேன் வெள்ளமாய் இனித்துப் பெருகும் குரலில் ஒரு கேள்வி கேட்டாள் அவள்: “யாரைப் பற்றிய பாட்டோ இது! இதில் வருகிற வருணனைக்குப் பொருளாகி அமைந்தவள் பாக்கியசாலி தான்.” “அந்தப் பாக்கியசாலி இப்போது என் எதிரே தான் நிற்கிறாள்” என்றான் அமுதசாகரன். அவனிடமிருந்து இதைக் கேட்ட விநாடியில் தன் இரண்டு கண்களுமே சிருங்கார ரசத்தைப் பேசும் காவியங்களாக, மாறினாற்போல மலர்ந்திட அவனை நிமிர்ந்து நோக்கினாள் அந்தப் பெண். அப்படியே சில விநாடி கண்களால் பேசினாள். பின்பு நாவினாலும் பேசுவதற்குத் தொடங்கியவளாகி மாறிக் கூறினாள். “இந்தச் சொற்களுக்காக நான் என்னை அர்ப்பணம் செய்கிறேன். இவை அழகியவை, உயர்ந்தவை. இவற்றுக்கு என்னுடைய உணர்வுகளும் நானும் ஆட்படுகிறோம்!” “மிக்க நன்றி, பெண்ணே!” “இப்போதே உங்கள் நன்றியை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை! ஏனென்றால் நீங்கள் என்னைப் பற்றி இன்னும் ஏதாவது பாட வேண்டும்.” “நான் பாட வேண்டுமானால் நீயும் மறுபடி பந்தாட வேண்டும் பெண்ணே!” அவன் இவ்வாறு கூறிய மறுகணமே அவள் கையில் பந்து சுழன்றது. இதழ்களில் சிரிப்பும் நெஞ்சில் பரவசமும் கண்களில் அநுராகமும், கைகளில் உற்சாகமும் சுழன்றன. மானைப்போல் விழித்துத் தேனைப் போலப் பேசி இளமயிலைப் போல் ஆடும் அவள் கோலத்தைக் கண்டு அமுதசாகரன் மேலும் பாடினான்:
“முத்துச் சிலம்பின் ஒலி தத்தித் தவழ்ந்துவரச் சித்தத் தலத்தின்மிசை மெத்தக் குழைந்துமலர் ஒத்துத் திகழ்ந்தவிழி கற்றுத் தெரிந்த நயம் சற்றுக் குறித்த தொனிபெற்றுப் புரிந்துவர மெல்லக் குழைந்தமொழி வெல்லப்பாகுசெயச் சொல்லில் உரைத்தகுறை கண்ணில் நிறைத்துவரக் கண்ணில் மறைத்தகுறை சிரிப்பிற் பிறந்துவரப் பெண்ணின் குலத்திலொரு புதுமை நிறைக்கின்றாய்.” அமுதசாகரன் நிறுத்தியதும் அந்தப் பெண் பந்தாடுவதை நிறுத்தவிட்டு அவனருகில் வந்து நின்றாள். வார்த்தைக்கு வார்த்தை ஆச்சரியங்களைச் சிருஷ்டித்துக் கொண்டு மீண்டும் அவனை நோக்கிப் பேசினாள். “நவரசங்களில் சிருங்காரத்தை மட்டும் உங்கள் சொற்களுக்காகவே படைத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.” “எனக்கு அப்படித் தோன்றவில்லை பெண்ணே! நவரசங்களுமே உன் கண்களிலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று அமுதசாகரன் சொல்லிக் கொண்டிருந்த போது அந்தப் பெண்ணின் தோழி ஓடிவந்து அவள் காதருகில் ஏதோ கூறி அவளை அவசரமாகக் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு மாளிகைக்குள்ளே போய்விட்டாள். அவள் போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்ற அமுதசாகரன், ‘பாவம்! யாரோ நல்ல இரசிகையாக இருக்கிறாள்’ என்று எண்ணியபடியே மேலே நடந்தான். அவன் அந்தப் பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் மாளிகைக்குள்ளே வந்த போது பட்டினப் பாக்கத்து எட்டிகுமரனும் மணிநாகபுரத்து இரத்தின வணிகராகிய காலாந்தக தேவரும் மணப்பேச்சில் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். மணப்பேச்சு நிகழ்ந்து கொண்டிருந்த கூடத்தின் ஒரு மூலையில் கவி அமுதசாகரனும் அடக்க ஒடுக்கமாகப் போய் நின்று கொண்டான். அங்கு நிகழ்வதைக் கவனிக்கலானான். “அன்புக்கு உரிய எட்டி குமரரே! நீங்களும் எனக்குச் சமமான ஒரு வணிகர். உங்களுக்கு மகட்கொடை நேர்வதில் எனக்கும் பெருமை உண்டு. என் தங்கையை நீங்கள் மணக்கக் கருதிப் பரிசுப் பொருள்களுடன் தேடி வந்திருக்கிறீர்கள். நாகநாட்டு வழக்கப்படி இப்போது என் தங்கை மருதியை அழைத்து உங்களுக்கு அடையாள மாலை சூட்டச் சொல்கிறேன்” என்றார் காலாந்தகர். அமுதசாகரன் தன் தலைவராகிய பெருவணிகருக்கு வாய்க்கப் போகும் மங்கல மனையாளைக் காண்பதற்கு ஆவல் கொண்டான். கையில் மாலையேந்திக் குனிந்த தலை நிமிராமல் தோழிகளோடு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த பெண்ணைப் பார்த்தபோது அமுதசாகரனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘சற்று முன் பூம்பொழிலில் பந்தாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்தானா மருதி?’ என்று மாலையை ஏந்திக்கொண்டு வரும் மற்றொரு பூமாலையாக அவள் வந்து கொண்டிருக்கும் கோலத்தை நோக்கி அமுதசாகரன் வியந்தான். அவன் வியப்பை அதிர்ச்சியாகவே மாற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் அந்தப் பெண். அருகில் வந்ததும் தைரியமாக நிமிர்ந்து எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்த பின்பு, அந்த ஏழைக்கவி அமுதசாகரனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டுச் சிரித்துக் கொண்டே அவன் பக்கத்தில் நின்றுவிட்டாள் மருதி. மின்னல் வெட்டும் நேரத்தில் இது நடந்தபோது அந்தக் கூடத்தில் பிரளயமே வந்ததுபோல் சீற்றம் எழுந்தது. எட்டிகுமரன் பெருநிதிச் செல்வரும் அவருடைய அமைச்சராகிய நகை வேழம்பரும் கண் பார்வையாலேயே பொசுக்கி நீறாக்கி விடுவது போலக் கவிஞனைப் பார்த்தார்கள். அவள் தமையனார் காலாந்தக தேவரும் சினம் கொண்டு கூறினார். “மருதீ! இதென்ன காரியம் செய்தாய் அம்மா! இதோ அமர்ந்திருக்கும் இந்தப் பெருஞ்செல்வர் பொன்னும் இரத்தினமுமாகப் பரிசுப் பொருள்களுடன் உன்னை மணம் பேசி இங்கே வந்திருக்கும்போது இவரோடு வந்திருக்கும் ஊழியனான கவிஞனுடைய கழுத்தில் நீ மாலை சூடிவிட்டாயே!” “நீங்கள் சொல்கிறவரிடம் இரத்தினங்கள் இருக்கலாம். ஆனால் இந்தக் கவியின் சொற்களே இவரிடமுள்ள இரத்தினங்களாக இருக்கின்றன. இவை விலைமதிப்பற்றவை. ஒவ்வொரு நாட்டுப் பெண்ணுக்கும் தனக்கு வேண்டிய நாயகனைச் சுயமாக வரித்துக் கொள்வதற்கு உரிமை உண்டு. நான் சிறிது நேரத்திற்கு முன்பு நமது பூம்பொழிலில் இவரைச் சந்தித்தபோது இவருக்கு என் மனத்தைத் தோற்கக் கொடுத்துவிட்டேன்” என்று மருதி பேசிய சொற்களைக் கேட்டபோது எட்டிகுமரன் பெருநிதிச் செல்வர் இரண்டு கண்களும் நெருப்பாகச் சிவந்து சினம் பொங்க அமுதசாகரனையும் அவன் அருகில் நின்ற மருதியையும் ஒரு பார்வை பார்த்தார். அவருடைய பார்வையைத் தாங்கிக் கொள்ளவே பயந்து கூசி நின்றான் அந்தக் கவி. அந்தக் கணமே அடிபட்ட வேங்கைபோல் அவமானம் அடைந்து தலைகுனிந்து வெளியேறிய பெருநிதிச் செல்வரும், அவருடைய அமைச்சரும் அந்த மாளிகையின் கடைசி வாயிற்படியில் இறங்கி வெளியேறுமுன் செய்து விட்டுப் போன சூளுரை மிகவும் கொடுமையாக இருந்தது. காலாந்தக தேவர் அவர்களை ஆற்றுவிக்க முயன்றதும் வீணாயிற்று. கவி அமுதசாகரன் ஓடிப்போய்த் தன் தலைவரின் கால்களைப் பற்றிக்கொண்டு, “ஐயா! நான் ஒரு பாவமும் அறியேன். என்மேல் சினம் கொள்ளாதீர்கள். இந்த மாளிகையைச் சுற்றிப் பார்க்கும்போது இவளைப் பொழிலில் பார்த்தேன். நிர்மலமான மனத்தோடு சில கவிதைகள் பாடினேன்” என்று கதறினான். இப்படி அவன் அவர் கால்களில் வீழ்ந்தபோது உடனிருந்த ஒற்றைக் கண்ணர் தன் உடைவாளை உருவிக்கொண்டு அவனைக் குத்திவிடுவது போலப் பாய்ந்தார். அப்போது இதைப் பார்த்துக்கொண்டிருந்த நாகநங்கை மருதி மிகப் பெரிய வீராங்கனையாக ஓடிவந்து அவர் கையில் இருந்த வாளைப் பறித்து எறிந்துவிட்டு, “இவர் என் அன்புக்கு உரியவர்! இவரை நான் எனக்குரியவராக வரித்துக் கொண்டேன். நீங்கள் போகலாம். இவருக்குக் கெடுதல் செய்ய முயன்றால் நீங்கள் இருவரும் இந்தத் தீவின் எல்லையிலிருந்து உயிரோடு பூம்புகாருக்குத் திரும்ப மாட்டீர்கள்” என்று அறை கூவினாள். இதைக் கேட்டுப் பெருநிதிச்செல்வர் எரிமலையாகச் சீறினார்: “யார் உயிரோடு வாழ முடியும், யார் உயிரோடு வாழ முடியாது என்பதைக் காலம் சொல்லும், பெண்ணே! என்னுடைய சூளுரையை ஞாபகம் வைத்துக்கொள். இந்த ஏழைக் கவிஞனுடைய உயிருக்கு நீ என்னிடமே வந்து மன்றாடிப் பிச்சை கேட்கிறபடி நான் செய்வேன் என்பதை மறந்துவிடாதே” என்று கூறிவிட்டு நகைவேழம்பரையும் கைப்பற்றி இழுத்துக் கொண்டு சங்குவேலித் துறையில் வந்து பூம்புகாருக்குக் கப்பலேறி விட்டார் எட்டிக் குமரன் பெருநிதிச் செல்வர். அருமைத் தங்கையின் ஆசைக்கு மறுப்புக் கூற முடியாத நிலையில் காலாந்தகன் அந்த கவிக்கே அவளை மணம் செய்துகொடுத்துத் தன் மாளிகையோடு அவனைத் தங்கச் செய்துகொண்டான். அமுதசாகரன் எட்டுத் திங்கட்காலம் மணிநாகபுரத்தில் காவிய வாழ்வு வாழ்ந்தான். மருதி அவனைத் தன் அன்பு வெள்ளத்தில் மூழ்கச் செய்தாள். அவனுடைய சொற்களுக்குத் தன் அழகை மூலதனமாக்கி எண்ணற்ற கவிதைகளைப் படைத்துக் கொண்டாள். ஒன்பதாந் திங்களில் தான் பூம்புகாருக்குப் போய்த் திரும்ப வேண்டும் என்று விரும்பினான் அமுதசாகரன். “பூம்புகாரில் யார் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்! அந்தக் கொடிய செல்வரைத் தேடிப் போய் மீண்டும் அவரைச் சந்திக்கும் கருத்து உங்களுக்கு இருக்கலாகாது” என்றாள் மருதி. “எனக்கு வேண்டிய முனிவர்கள் பூம்புகாரின் சக்கரவாளத்துத் தவச்சாலையில் பலர் இருக்கிறார்கள். அருட்செல்வர் என்ற துறவியின் தவச்சாலையில் போய் நான் தங்கிக்கொள்வேன். ஒரு திங்கட்காலம் மட்டும் உன்னைப் பிரிந்து பூம்புகாருக்குப் போய் வர நீ எனக்கு விடை கொடு” என்று கேட்டான் அமுதசாகரன். அந்தப் பேதையும் அவனுக்கு விடை கொடுத்தாள். தமையனான காலாந்தகனிடம் சொல்லி ஒரு தனிக் கப்பலில் அளவிட முடியாத செல்வங்களை நிறைத்து அமுதசாகரனைப் பூம்புகாருக்கு அனுப்பினாள் மருதி. அவனுக்கு விடை கொடுக்கும்போது மருதி கருக் கொண்டிருந்தாள். கணவன் பூம்புகாரிலிருந்து திரும்பியதும் அவனிடம் அந்த மகிழ்ச்சிச் செய்தியைக் கூறி அவனைக் களிப்பு வெள்ளத்தில் ஆழ்த்த வேண்டும் என்று அவள் எண்ணியிருந்தாள். பேதைப் பெண்ணின் ஆசைக் கனவுகளுக்கு அளவு ஏது? பாவம்! அமுதசாகரன் பூம்புகாரில் வந்து அருட் செல்வருடைய தவச்சாலையில் தங்கினான். மணநாகபுரத்தில் தன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களையும் பெருநிதிச் செல் வரின் சீற்றத்தையும் அவரிடம் கூறினான். பூம்புகாரில் உள்ள வாணிகக் குடும்பத்து நங்கை ஒருத்தியையே பெருநிதிச் செல்வர் மணம் புரிந்து கொண்டுவிட்டார் என்ற செய்தியை முனிவர் அமுதசாகரனுக்குக் கூறினார். “திருமணமான பின்பு அவருடைய மனம் அமைதி யடைந்திருக்கும். நான் அவரைப் பார்த்து வரலாமல்லவா?” என்று முனிவரை வினவினான் அமுத சாகரன். அருட்செல்வர் அவன் கருத்தை அவ்வளவாக விரும்பவில்லை. “உன் விருப்பம்! ஆனால் அந்த வாணிகனும் அவனோடு திரியும் ஒற்றைக் கண்ணனும் மிகவும் கெட்டவர்கள். நீ சூதுவாதில்லாத அப்பாவியாதலால் உனக்கு அவர்களுடைய உள்வேடம் தெரியாது. அவர்களுடைய மிகப்பெரிய வாணிகம் கடல் கொள்ளையும் கொலையும்தான்” என்றார் அவர். அமுதசாகரன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. முனிவருடைய அறிவுரையை மீறிக்கொண்டு பெருநிதிச் செல்வரைச் சந்திக்க புறப்பட்டான். அப்படிப் புறப்பட்டுப் போனவன் திரும்பவே இல்லை. எட்டுத் தினங்கள் வரை பொறுமையாக இருந்த அருட்செல்வர் ஒன்பதாவது நாள் காலையில் பொறுமை கலைந்து பட்டினப்பாக்கத்திற்குப் போய்ப் பெருநிதிச் செல்வரைச் சந்தித்துக் கேட்டார்: “உங்களைத் தேடிக்கொண்டு எட்டு நாட்களுக்கு முன்பு இங்கே வந்த கவி அமுதசாகரன் இன்னும் திரும்ப வில்லையே?” “திரும்பமாட்டான்! என்றும் திரும்ப முடியாத இடத்திற்கு அந்தத் துரோகியை அனுப்பியாயிற்று. நீங்களும் அந்த இடத்திற்குப் போக விரும்பினால் அங்கே உங்களையும் அனுப்பி வைக்கிறேன்” என்று முனிவரை இழுத்துச் சென்று அந்த மாளிகையின் பாதாள அறையில் புலிக் கூண்டுகள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய்க் குரோதத்தோடு காண்பித்தார் பெருநிதிச் செல்வர். “நீ நன்றாக இருப்பாயா பாவி” என்று குமுறி அலறிய அருட் செல்வரின் சாபங்களை அவன் இலட்சியம் செய்ய வில்லை. இடிஇடியென்று சிரித்தான். “நான் நன்றாக இருக்க வேண்டும் என்று தேடி மணந்து கொள்ளச் சென்ற பெண்ணைத் தான் கவர்ந்த நன்றி கெட்டவனின் அழகிய உடம்பையும் அதில் ஓடிய பச்சைக் குருதியையும் இந்தப் புலிகளின் வயிற்றில் தேடிப் பாருங்கள் முனிவரே!” என்று கொலை வெறியோடு கூவிக் கொண்டே அருட்செல்வ முனிவரைப் பிடரியில் கை கொடுத்துத் தள்ளியபடியே அந்த மாளிகையின் வாயிலில் கொண்டுவந்து வீழ்த்தினான் அவன். அன்று தவச் சாலைக்குத் திரும்பிய அருட்செல்வர் ஓராண்டு காலம் சக்கரவாளத்திலிருந்தே வெளியேறாமல் இந்தப் பாவத்தை எண்ணி எண்ணி வேதனைப்பட்டார். மோன விரதம் இருந்தார். கடுமையான தவங்களில் ஈடுபட்டார். அவருடைய மனப்புண் எதனாலும் ஆறவில்லை. இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில் இந்திர விழாவின் முதல் நாள் அதிகாலையில் எழுந்து அவர் தம்முடைய தவச்சாலையின் வாயிலுக்கு வந்தபோது அங்கே வைகறைப் பெண்ணான உஷையே எதிரில் வந்து நிற்பது போல் பேரழகு வாய்ந்த இளம் பெண்ணொருத்தி கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தாள். “நீ யார் அம்மா?” “நான் மருதி! இந்தத் தவச் சாலையில் உங்களோடு தங்கியிருக்கும் கவி அமுதசாகரனைப் பார்க்க வேண்டும்.” அவள் யாரென்று அருட்செல்வருக்குப் புரிந்தது. கண்களில் நீர் பெருகியது, பொற்சிலை போன்ற குழந்தை யோடு செளந்தரியவதியாக வந்து நிற்கும் அந்தப் பெண்ணிடம் நிகழ்ந்த கொடுமைகளை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவருடைய நாவில் சொற்களே வரவில்லை. இருள் புலராத காலைப் போதாகையினால் தன்னுடைய கண்களில் நீர் அரும்புவதை அவள் பார்த்துவிடாமல் மேலாடையால் துடைத்துக் கொண்டு வேறு புறமாக முகத்தைத் திரும்பியபடி, “நீ இங்கே தங்கியிரு. அம்மா” என்று சொல்லிவிட்டு நீராடச் சென்றார் முனிவர். அவர் நீராடிவிட்டுத் திரும்பி வந்தபோது அவளுடைய பிள்ளைக் குழந்தை அந்த ஆசிரமத்தின் முன்புறம் தளர்நடை நடந்து கொண்டிருந்தது. அவரைப் பார்த்ததும் வேற்று முகம் நினையாமல் குறுஞ் சிரிப்போடு ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டது. தெய்வமே குழந்தையாகப் பிறந்து வந்தது போல அழகு வடிவாயிருந்த அமுதசாகரனின் பிள்ளை தன்னுடைய கால்களைக் கட்டிக் கொண்டபோது கோவென்று கதறியழ வேண்டும் போலிருந்தது அந்த முனிவருக்கு. அமுதசாகரன் தான் புறப்பட்டு வந்திருந்த கப்பல் திரும்பி மணிநாகபுரத்திற்குப் புறப்பட்டபோது அதன் தலைவனிடம் பூம்புகார் துறையில் இறங்கியவுடனே மருதிக்கு ஓர் ஓலை எழுதிக் கொடுத்திருந்ததாக அருட்செல்வரிடம் சொல்லியிருந்தான். மருதி அந்த ஒலையைத் தானாகவே அவரிடம் காண்பித்தாள். “ஐயா! இங்கு வந்து இறங்கியதும் பூம்புகார்த் துறையிலிருந்தே அவர் எனக்குக் கொடுத்தனுப்பிய ஒலை இது.” அவள் அளித்த அந்த ஒலையை வாங்கிப் படித்த போது முனிவருக்கு மேலும் அழுகை பொங்கியது. நவரசங்கள் உன் கண்ணிலிருந்து பிறந்தன... என்று தொடங்கி மீண்டும் அவளைச் சந்திக்கப் போகிற நாளை ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியிருப்பதாக அமுதசாகரன் பாலைத் தினைப் பொருளமைத்து மருதிக்காகப் பாடிய கவிச் சொற்கள் அந்த ஓலையில் இருந்தன. “இப்போது அவன் வாழ்வது இந்தக் கவிதைகளில் மட்டும்தான் அம்மா!” என்று அழுகை பொங்கச் சொன்னார் அவர். “ஐயா! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் என் மனம் இங்கு வந்து இறங்கிய வேளையிலிருந்து எதற்காகவோ காரணமின்றிப் பதறுகிறது. வலக்கண் துடிக்கிறது. துறைமுகத்தில் நான் வந்து இறங்கிய போது அந்தப் பெருநிதிச் செல்வரும், அவருடைய அரைக் குருட்டு அமைச்சரும் என்னைத் தற்செயலாகச் சந்தித்து விட்டார்கள். அவர்கள் என் அருகில் வந்து இந்தக் குழந்தையையும் உற்றுப் பார்த்துவிட்டு ஏளனமாகச் சிரித்தார்கள். எனக்குப் பயமாக இருந்தது. துறைமுகத்திலிருந்து மீண்டும் அவர்கள் பார்வையிலே படாமல் தப்பி உங்களுடைய தவச்சாலைக்கு வழி கேட்டுக் கொண்டு இங்கு வந்து சேர்ந்துவிட்டேன். என் கணவர் மணிநாகபுரத்திலிருந்து புறப்படும்போது உங்கள் தவச் சாலையில் வந்து தங்கப் போவதாகத்தான் என்னிடம் கூறினார். உங்களையன்றி நான் வேறு யாரிடம் போய் அவரைப் பற்றிக் கேட்பேன்!” “யாரிடம் கேட்டும் பயனில்லை, பெண்ணே! உன் மனத்தைத் திடமாக்கிக்கொள். பின்பு சொல்வதைக் கேள். உன்னுடைய காதல் உனக்குக் கொடுத்த செளபாக்கியம் இந்தக் குழந்தையோடு முடிந்துவிட்டது. இந்த உலகத்தில் நல்லவை நீடிப்பதில்லை” என்று தொடங்கிச் சொல்லி விட வேண்டும் என்று மனத்திற்குள் தவித்துக் கொண்டிருந்த உண்மையை மெல்ல மெல்ல அவளிடம் சொல்லி முடித்தார். அதைக் கேட்டபோது இடிவிழுந்த மரம் போலச் சில நாழிகை முகம் பட்டுப்போய் ஆடாமல் அசையாமல் சிலையாக வீற்றிருந்தான் மருதி. அப்போது அவள் சிறுவன் பசித்து அழுதான். எந்த நிலையிலும் கலங்காத கர்மயோகியைப் போல் குழந்தையை இடையில் எடுத்துக்கொண்டு அவள் பாலூட்டினாள். நெடுநேரம் குழந்தை அவள் இடுப்பிலேயே இருந்தது. முனிவர் எரியோம்புவதற்காக வேள்விச் சாலைக்குள்ளே சென்றிருந்தார். வேள்வி வழிபாடுகளை முடித்துக் கொண்டு இரண்டு நாழிகைப்போது கழித்து அவர் திரும்பிவந்து பார்த்தபோது மருதியின் குழந்தை தரையில் தூங்கிக் கொண்டிருந்தது. மருதியைக் காணவில்லை. குழந்தையின் அருகே ஓர் ஏடு கிடந்தது. பரபரப்போடு சென்று முனிவர் அதை எடுத்துப் பார்த்தார். “நான் எந்தக் காரியத்துக்காகப் போகிறேனோ அது என்னால் நிறைவேறவில்லையானால் என் மகனை வளர்த்து ஆளாக்கி அவனால் அதை நிறைவேற்றுங்கள். உங்கள் தவச்சாலையில் வேள்விக் காரியங்களுக்காக சந்தனமும் சமித்தும் வெட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் கோடாரியை நான் என்னோடு எடுத்துச் செல்வதற்காக என்னைப் பொறுத்தருள்க. இந்த அவசரத்தில் வேறு ஆயுதங்கள் எவையும் எனக்குக் கிடைக்கவில்லை” என்று எழுதியிருந்தாள் மருதி. “ஐயோ! இந்தப் பெண்ணும் அந்தப் பாவியிடம் தேடிப் போய் அழிந்துவிடப் போகிறாளே” என்று தவித்தார் முனிவர். அப்போது குழந்தை அழுதது. ஓடிப் போய் அந்தப் பெண்ணைத் திரும்பி அழைத்துவர எண்ணினார். குழந்தையை அந்தக் காட்டில் யாரிடம் விட்டுப் போவதெனத் தயங்க நேர்ந்தது. ‘தெய்வ சித்தப்படி நடக்கட்டும்’ என்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தவச்சாலையிலே குழந்தைக்குப் பாதுகாப்பாக அவர் இருந்துவிட்டார். மறுநாள் காலை சக்கரவாளத்துக் காவலர் தலைவரான வீரசோழிய வளநாடுடையார் மூலம் அந்தச் செய்தி அவருக்குத் தெரிந்தது. “யாரோ முரட்டு நாகநங்கை ஒருத்தி பட்டினப் பாக்கத்து எட்டிகுமரனைக் கோடாரியால் காலில் ஓங்கி, அடித்துவிட்டு தானும் அங்கேயே வீழ்ந்து மாண்டு போனாளாம்” என்று வளநாடுடையார் வந்து தெரிவித்த போது அருட்செல்வர் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டார். அந்தப் பெண்ணின் மரணத்துக்காக அவர் மனம் மட்டுமே அழுதது. அதற்குப் பின் அந்த ஆண்டு இந்திரவிழாவின் கடைசி நாளன்று பூம்புகார்த் துறையில் பெருநிதிச் செல்வரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த வேளையில் அவர் நேரே நடக்க முடியாமல் ஒரு காலைச் சாய்த்துச் சாய்த்து நடப்பதையும் அருட்செல்வர் தாமே கவனித்தார். அப்போது அருட்செல்வரை அவரும் கவனித்துவிட்டார். மிக அருகில் நெருங்கி வந்து அருட் செல்வரின் காதருகே குனிந்து, “அமுதசாகரனின் குழந்தை உங்களிடம்தான் வளர்க்கிறான் போல் இருக்கிறது” என்று குரோதம் தொனிக்கச் சொல்லிவிட்டுப் போனான் அந்தப் பாவி. அதுவே பயங்கரமான எச்சரிக்கையாகத் தோன்றியது முனிவருக்கு. மருதியின் மகன் தன்னிடம் பூம்புகாரில் வளர்வது கவலைக்குரியது என்று அஞ்சிய முனிவர் அன்றே மணிநாகபுரத்திற்குப் பயணம் புறப்பட்டிருந்த துறவி ஒருவரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் கூறியனுப்பிக் காலாந்தகனை உடனே புறப்பட்டு வந்து தன் மருமகனும் மருதியின் குழந்தையுமாகிய உயிர்ச் செல்வத்தை மணிநாகபுரத்திற்கு அழைத்துப் போய்விடுமாறு வேண்டிக் கொண்டிருந்தார். இரண்டு திங்கள் காலத்துக்குப் பின் மனம் நிறைந்த துக்கத்துடனும் மருமகனுக்குக் காப்பணிவிப்பதற்காக நவரத்தினங்கள் பதித்துப் பொன்னில் செய்த ஐம்படைத் தாலியுடனும் காலாந்தகன் பூம்புகாருக்குப் புறப்பட்டு வந்தான். அவன் வந்த கப்பல் முன்னிரவில் பூம்புகார்த்துறையை அடைந்திருந்தது. அதே நேரத்தில் துறையில் வேறு காரியமாக வந்து நின்றிருந்த பட்டினப்பாக்கத்துப் பெருநிதிச் செல்வரும், நகைவேழம்பரும் காலாந்தகன் அங்கு வந்திருப்பதைக் கண்டு கொண் டார்கள். காலாந்தகன், துறையில் இறங்கி சக்கரவாளக் கோட்டத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலைக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தான். தனக்கு மிகவும் வேண்டியவளாகிய கபாலிகையான பைரவியை அனுப்பிக் காலாந்தகனுக்கு வழிகாட்டுவது போல அவனை அழைத்துச் சென்று வன்னிமன்றத்துக்குப் பின்புறம் கொண்டு போய் நிறுத்துமாறு ஏற்பாடு செய்த நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரோடு அங்கே பின் தொடர்ந்து போய்க் காலாந்தகனைக் கைப்பற்றினார். வஞ்சகமாகக் காலாந்தகன் அன்றிரவில் அவர்களால் கொல்லப்பட்டான். அவனிடமிருந்த செல்வங்களும், நவரத்தின ஐம்படைத் தாலியும் கொள்ளையடிக்கப்பட்டன. நான்கு நாட்களுக்குப் பின்னர். இதை மறைந்து பார்த்துக் கொண்டிருந்த வேறொரு கபாலிகன் மூலம் இந்தப் பயங்கர இரகசியம் அருட்செல்வ முனிவருக்குத் தெரிந்தபோது, ‘இவ்வளவு கொடுமைகளுக்குப் பின்பும் இந்தக் குழந்தையை எப்படி வளர்த்து, ஆளாக்கப் போகிறேனோ?’ என்று அவர் பெருங்கலக்கம் கொண்டார். காலாந்தகனின் மனைவிக்கும் மகன் குலபதிக்கும் முனிவரால் அவனது சாவு தெரிவிக்கப்பட்டபின் அதே வேதனையில் நோய்ப் படுக்கையாகக் கிடந்து மாண்டாள் குலபதியின் தாய். தன்னிடம் வளர்ந்து வந்த மருதியின் பிள்ளைக்கு இளங்குமரன் என்று பெயர் சூட்டினார் முனிவர். நாளுக்கு நாள் அந்தப் பிள்ளையைப் பெருநிதிச் செல்வரும் அவருடைய துன்மந்திரியும் கழுகுகளாக வட்டமிடுவதைக் கண்டு அஞ்சிய முனிவர் வயது வந்ததும் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று கருதி நீலநாகமறவருடைய படைக்கலச் சாலையில் அந்தப் பிள்ளையைச் சேர்த்துவிட்டார். பின்பு நாளடைவில் மணிநாகபுரத்து வாணிகக் கப்பல்களை எல்லாம் பெருநிதிச்செல்வரின் ஏவலர்கள் நடுக்கடலில் கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர் துணையோடு சூறையாடுவதாகப் பலமுறை கேள்விப்பட்டார் அருட்செல்வ முனிவர். இரண்டு பெண்களுக்குத் தந்தையாகி வாழ்ந்து மூத்த பின்பும் இந்த வெறுப்பை மறக்க முடியாத மனம் எட்டிகுமரனுக்கு இருப்பதைக் கண்டு அஞ்சினார் அவர். ‘மருதியின் மகனான இளங்குமரன் வளர்ந்து பெரியவனான பின் இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்கச் செய்யலாம் என்று தோன்றியது அவருக்கு. அந்தக் குடும்பத்தின் புதிய தலைமுறைக்குத் தன்னைப் பாதுகாவலராகப் பாவித்துக் கொண்டு குலபதி, இளங்குமரன் இரண்டு பிள்ளைகளின் வளர்ச்சிக்காகவும் இடை விடாமல் மனத்தினாலும் செயல்களாலும் தவம் செய்துகொண்டு வந்தார் அருட்செல்வர். அவ்வப்போது குலபதிக்குத் தக்கவர்கள் மூலம் செய்தி சொல்லியனுப்பிக் கொண்டிருந்தார் முனிவர். உதிர் சருகுகள்போல் ஆண்டுகள் பல கழிந்து கொண்டிருந்தன. அந்த முனிவர் மூத்துத் தளர்ந்தாலும் அவருடைய இலட்சியமும் உட்கருத்தும் தளரவில்லை. படித்தவற்றிலிருந்து இவற்றை எல்லாம் உணர்ந்து கொண்டு இளங்குமரன் தலை நிமிர்ந்தபோது பொழுது புலர்ந்து மாடங்களின் வழியே ஒளிக்கதிர்கள் பாய்ந்து கொண்டிருந்தன. வெளியே தாழிட்டிருந்த கதவுகளும் அதே வேளையில் திறந்தன. திறந்த கதவுகளுக்கு அப்பால் அவன் ஒரு புதிய காட்சியைக் கண்டான். |