![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
ஐந்தாம் பருவம் - நிறை வாழ்வு 9. நியாயத்தின் குரல் பூம்புகார்த் துறையில் இளங்குமரன் முதலியவர்கள் வந்து இறங்கியபோது இருள் பிரியாத வைகறை நேரமாயிருந்தது. துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளையும் எதிரே பரந்து கிடந்த வெள்ளிடை மன்றம் என்னும் நிலப் பரப்பையும் மெல்லிருள் கவிந்து போர்த்தியிருந்தது. அலைகளின் ஓசையும் துறையை அடுத்த கரை நிலப் பரப்பில் குவிந்திருந்த பல்வேறு பண்டங்களைக் காவல் செய்வோர் இடையிட்டு இடையிட்டுக் கூவும் எச்சரிக்கைக் குரல்களுமாகத் துறைமுகம் வேறு ஒலியற்றிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைச் சிறு குழந்தையாகக் கைகளில் ஏந்திக்கொண்டு தன் தாய் ஆதரவும் துணையுமில்லாத பேதைப் பெண்ணாய் இதே துறைமுகத்தில் வந்து நின்ற போதாத வேளையை இப்போது கற்பனை செய்து பார்க்க முயன்றது இளங்குமரனின் மனம். கரையிலிருந்த பார்வை மாடத்தில் ஏறி விடிகாலையின் அமைதியில், மெல்ல மெல்ல உறங்கிச் சோர்ந்தபோன மணப் பெண்ணைப் போலத் தெரியும் நகரத்தைச் சிறிது நாழிகை பார்த்துக் கொண்டு நின்றான் இளங்குமரன். கப்பல் கரப்புத் தீவிலிருந்து சுரமஞ்சரியோடு திரும்பிய காலை வேளை ஒன்றில் நீண்ட நாட்களுக்கு முன்பு இன்று போல இதே பார்வை மாடத்தில் ஏறி நின்று நகரத்தைப் பார்த்த நிகழ்ச்சி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அன்று பார்த்த நகரத்திற்கும் இன்று பார்ப்பதற்கும்தான் எவ்வளவு வேறுபாடு? பார்வை மாடத்திலிருந்து கீழே இறங்கி உடனிருந்த மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு நீலநாகருடைய ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குச் சென்றான் இளங்குமரன். போகும்போது வளநாடுடையார் அவனிடம் கூறலானார்: “தம்பீ! நீ பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குச் சென்று அங்கே உன்னுடைய குலப் பகைவரைச் சந்திக்கும் போது அந்த ஓவியனையும் உன்னோடு அழைத்துப் போவது அவசியம். இந்த ஓவியன் அந்த மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்த காரணத்தால் அதன் ஒவ்வொரு பகுதிகளைப் பற்றியும் இவனுக்கு ஓரளவு தெரியும்.” இதைக் கேட்டு இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்தான். பின்பு மெளனமாக மேலே நடந்தான். அவர்கள் எல்லாரும் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையை அடைந்தபோது நீலநாகர் நீராடி முடித்துத் திருநீரு துலங்கும் நெற்றியோடு கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த அருங்காலை நேரத்தில் அவர்கள் எல்லாரும் வரக்கண்டு நீலநாகர் பெருமகிழ்ச்சி கொண்டார். “இளங்குமரா! இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இந்த முறை உன் பிரிவு என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது. ஒவ்வொரு நாளும் நீ எப்போது திரும்பி வரப்போகிறாய் என்று நினைத்து நினைத்துத் தவித்துப் போய்விட்டேன் நான். நல்லவேளையாக நான் எதிர் பார்த்த காலத்துக்கு முன்பே நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்டாய்” என்று கூறி இளங்குமரனை அன்போடு வரவேற்றார். அவர். இளங்குமரன் அவரை வணங்கிவிட்டுச் சிறிது நேரம் வாயிலில் நின்றபடியே அவரிடம் பேசிக்கொண்டிருந்த பின்பு உள்ளே சென்றான். அவனைப் பின் தொடர்ந்தாற் போல் ஓவியனும் அவன் மனைவியும் கூட உள்ளே சென்றுவிட்டார்கள். வளநாடுடையார் மட்டும் நீலநாக மறவரிடம் ஏதோ தனியாகப் பேச விரும்புகிறவர் போல் நின்றார். அவர் நிற்கும் குறிப்பு நீலநாகருக்குப் புரிந்துவிட்டது. உடனே “என்ன வளநாடுடையாரே! இந்தப் பிள்ளை ஏன் இப்படிக் கலங்கிக் கறுத்துப் போயிருக்கிறான்?” என்று நீலநாகர் இளங்குமரனைப் பற்றி அவரைக் கேட்டார். “நாமிருவரும் பேசிக்கொண்டே போகலாம். நீங்கள் கோவிலுக்குப் புறப்படுமுன் ஆலமுற்றத்து மரத்தடியில் உங்களோடு சிறிது நேரம் நான் தனியாகப் பேச வேண்டும்” என்றார் வளநாடுடையார். நீலநாகரும் அதற்கு இணங்கிய பின் இருவரும் நடந்தனர். கடலருகேயுள்ள ஆலமுற்றத்துக் கரையில் மரகதத் தகடு வேய்ந்து பசும் பந்தலிட்டது போலப் பரந்திருந்த ஆலமரத்தின் கீழே மணற்பரப்பில் வளநாடுடையார் நீலநாகரோடு அமர்ந்துகொண்டார். “நீலநாகரே! இதுவரை உங்களிடம் மாற்றிச் சொல்லியிருந்த பொய் ஒன்றை இப்போது உண்மையாகவே வெளியிட நேருகிறது. அதறக்காக முதலில் நீங்கள் என்னைப் பொருத்தருள வேண்டும். அருட்செல்வ முனிவர் இறந்து போய்விட்டதாக நான் நீண்ட நாட்களுக்கு முன்பு உங்களிடம் வந்து கூறியது பொய். அவர் மணிபல்லவத் தீவில் உயிரோடு வாழ்ந்து வருகிறார். இளங்குமரன் இந்தப் பயணத்தின்போது அவரைச் சந்தித்தான். தன் பிறப்பைப் பற்றிய பல உண்மைகளை அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். முனிவர் எனக்கும் அவற்றைக் கூறினார்...” என்று தொடங்கிச் சொல்லிக் கொண்டே வந்தார். தாம் சொல்லியவற்றால் நீலநாகருடைய முகத்தில் என்ன மாறுதல் விளைந்திருக்கிறதென்று அறிய விரும்பி யவராகப் பேச்சை நிறுத்திக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். நீலநாகர் சிரித்துக்கொண்டே அவருக்கு மறுமொழி கூறினார்: “உடையாரே! இந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் மறைத்ததனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. அருட் செல்வருடைய தவச்சாலை தீப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னால் அவரே என்னைச் சந்தித்துச் சில பொறுப்புக்களையும் இளங்குமரனைக் கவனித்துக் கொள்ளும் கடமையையும் என்னிடம் ஒப்படைத்தார். அன்று அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களிலிருந்தே இவர் எங்கோ நீண்ட தொலைவு விலகிச் செல்ல விரும்புகிறார் என்று நான் அவரைப் பற்றிப் புரிந்து கொண்டேன். ஆனால் சில நாட்கள் கழித்துத் தவச்சாலையில் பற்றிய நெருப்பிலே அவரும் மாண்டு போனார் என்று நீங்கள் வந்து கூறியபோது அந்தச் செய்தி எனக்குப் பேரிடியாக இருந்தது. அதை நம்பவும் முடியவில்லை, நம்பியும் ஆக வேண்டியிருந்தது. அதனால் என்ன? நாம் உயிரோடு இருப்பதாக நினைத்து நம்பிக் கொண்டிருந்த ஒருவர் இறந்து போய் விட்டால் தான் நமக்கு ஏமாற்றம், துக்கம் எல்லாம் உண்டாகின்றன. நாம் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரோடிருக்கிறார் என்றால் நமக்கும் மகிழ்ச்சிதானே?” “இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் இப்போது நமக்குத் தெரிந்துவிட்டது நீலநாகரே! இன்னாரென்றும் எதற்காகவென்றும் தெரியாமல் இந்தப் பூம்புகாரில் இளங்குமரனுக்குக் கேடு சூழ்ந்ததற்கு மூலகாரணமானவர் யாரென்று தெரிந்துவிட்டது. நீங்கள் அந்தக் கபாலிகை யிடம் போய் விசாரித்துத் தெரிந்துகொள்ள முயன்றீர்கள். அதைவிடத் தெளிவாக இப்போது அருட்செல்வர் எல்லா வற்றையும் கூறிவிட்டார்...” என்று தொடங்கி எல்லாச் செய்திகளையும் நீலநாகருக்குச் சொல்லி முடித்தார் வளநாடுடையார். எல்லாவற்றையும் கேட்ட நீலநாகர் கொதிப்படைந்தார். இவ்வளவையும் தெரிந்துகொண்ட பின்னுமா இந்தப் பிள்ளை இளங்குமரன் இப்படி அமைதியாயிருக்கிறான்? பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய மறுகணமே அந்தப் பெருமாளிகைக்குப் போய்ச் சூறையாடியிருக்க வேண்டாமோ?” “நீங்களாகவோ நானாகவோ இருந்தால் அப்படிச் சூறையாடியிருப்போம் நீலநாகரே! இளங்குமரனை என்னால் புரிந்து கொள்ளவே முடியவிலலை. எந்த நோக்கத்துடனோ அவன் பெரிதும் அமைதியாயிருக்கிறான். ‘உன் கடமைகளை உனக்கு நினைவுபடுத்தியாயிற்று. இனி நான் என் வழியில் போக வேண்டும். சமந்த கூடத்துக் காட்டில் போய்த் தவத்தில் மூழ்கப் போகிறேன். எனக்கு விடை கொடு’ என்று அருட்செல்வ முனிவரும் மணிநாகபுரத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். இந்தப் பிள்ளையின் தாய்மாமன் மகன் குலபதி பட்டினபாக்கத்துப் பெருநிதிச் செல்வனைப் பழிவாங்குவதற்காக ஒரு படையே திரட்டி வைத்திருந்தான். அவனையும் அவன் படைகளையும்கூடத் தன்னோடு வரக் கூடாதென இவன் மறுத்து விட்டான். மணிநாகபுரத்திலிருந்து கப்பலில் திரும்பி வரும்போது ‘மேலே செய்ய வேண்டி யவைகளைப் பற்றி இனி என்ன திட்டம்’ என்று கேட்டுப் பலமுறை நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். இவன் அப்போதெல்லாம் நன்றாக முகம் கொடுத்துப் பேச வில்லை. ‘பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைக்குப் போவதாயிருந்தால் தனியாகப் போகாதே, உன்னோடு ஓவியனையும் துணையாய் அழைத்துக்கொண்டு போ’ என்று இங்கு வந்து கரை சேர்ந்ததும் கூறினேன். அதற்கும் மறுமொழி கூறாமல் மெளனமாயிருந்து விட்டான். கருணை, பரிவு, சாந்தம் என்றெல்லாம் இந்தப் பிள்ளை வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்குத் தயக்கமாயிருக்கிறது. கொலை பாதகங்களுக்கும் அஞ்சாத எதிரியிடம் இவன் வெறுங்கையோடு போய் நிற்கப் போகிறானே என்று எண்ணினால்தான் எனக்குப் பயமாயிருக்கிறது. இதைத்தான் உங்களிடம் தனிமையில் சொல்ல விரும்பினேன். இன்று பகலிலோ, மாலையிலோ, இளங்குமரன் பட்டினப்பாக்கத்திற்குப் புறப்பட்டால் அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, எப்படியாவது நீங்கள் அவனுக்குப் பாதுகாப்பாகப் பின்தொடர வேண்டும். இந்தப் பொறுப்பை உங்களிடம் கொடுத்து விட்டேன். இனி நான் நிம்மதியாகப் புறவீதியில் என்னுடைய இல்லத்திற்குச் சென்று என் மகளைப் பார்த்து இளங்குமரன் திரும்பி வந்திருக்கிற செய்தியை அவளுக்குச் சொல்லலாம். அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிற செய்தியாயிருக்கும் இது” என்று சொல்லிவிட்டு எழுந்திருந்தார் வளநாடுடையார். “உங்களுக்கு இதைப்பற்றிய பயமே வேண்டாம், வளநாடுடையாரே! எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி வளநாடுடையாருக்கு விடை கொடுத்து அனுப்பினார் நீலநாகர். பின்பு கோவிலுக்குப் போய் வழிபாட்டை முடித்துக் கொண்டு படைக்கலச் சாலைக்குத் திரும்பினார். ஓவியன் மணிமார்பனை மட்டும் தனியே அழைத்து, “நான் படைக்கலச் சாலையின் உட்புறம் இளைஞர்களுக்கு வாட்போர் பயிற்சி அளித்துக் கொண்டிருப்பேன் தம்பீ! உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும். நீ இளங்குமரனை அருகிலிருந்து கவனித்துக் கொண்டேயிரு. அவன் எங்காவது வெளியேறிச் சென்றால் உடனே அதை நீ என்னிடம் வந்து சொல்ல வேண்டும்” என்று கூறி அவனிடம் வேண்டிக் கொண்டு படைக்கலச் சாலையின் உள்ளேயிருந்த தோட்டத்துப் பக்கமாகச் சென்றார் நீலநாக மறவர். படைக்கலச் சாலையில் அதன் பின்பு அன்று மாலைப் போது அமைதியாகக் கழிந்தது. மணிமார்பன் இளங்குமரனுக்கு அருகிலேயே இருந்தான். இளங்குமரன் அன்று உணவு உண்ணவில்லை. ஏழெட்டு முறை திரும்பத் திரும்ப குளிர்ந்த தண்ணிரில் மூழ்கி நீராடிவிட்டு வந்தான். மெளனமாக உட்கார்ந்து தியானம் செய்தான். சிறிதுபோது ஏதோ உள்முகமான ஆனந்தத்தில் ஈடுபட்டதுபோல் அவன், இதழ்கள் சிரித்தன. இன்னும் சிறிதுபோது தாங்க முடியாத தவிப்பினால் உள்ளே குமுறுவதுபோல் அவனுடைய கண்கள் கலங்கி நீர் மல்கின. அருகில் இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே இளங்குமரனைக் கவனித்து வந்த மணிமார்பனுக்கு அந்த நிலையில் அவனிடம் பேசவே பயமாயிருந்தது. அன்று அவனுடைய முகத்தில் காண்பதற்கரிய தெய்வீகமான அமைதியைக் கண்டான் மணிமார்பன். “ஐயா! மணிநாகபுரத்தில் புறப்பட்ட நாளிலிருந்து இப்படிக் கொலைப் பட்டினி கிடக்கிறீர்களே? இது எதற்காக? உடம்பில் வெம்மையை அழிக்க விரும்பும் கடுந் துறவியைப் போல் கணத்துக்கு கணம் குளிர்ந்த நீரில் மூழ்கிவிட்டு வருகிறீர்களே? இதெல்லாம் என்ன கொடுமைகள்?” என்று பொறுக்க முடியாத தவிப்போடு இளங்குமரனைக் கேட்டான் ஓவியன். இளங்குமரன் இதழ்கள் பிரியாமல் மோன நகை புரிந்தான். பின்பு மணிமார்பனை நோக்கிச் சொன்னான்: “நண்பனே! மணிநாகபுரத்திலிருந்து புறப்பட்ட வேளையிலிருந்து என் மனத்திலும் உடம்பிலும் நெருப்புப் போல் ஏதோ ஓருணர்வு விடாமல் கனன்று கொண்டேயிருக்கிறது. உண்ணா நோன்பிலும், நீராடலிலும், தியானத்திலுமாக இந்தக் கனலை அவித்துவிட்டு என் மனத்தில் கனிந்த அருள் போய்விடாமல் நான் காத்துக் கொள்ள முயல்கிறேன். எந்த எந்த நிலைகளில் எந்த எந்தக் காரணங்களால் குரோதமும் கோபமும் கொண்டு கொதிக்க முடியுமோ அப்போதும் மனத்தைக் கவிழவிடாமல் சம நிலையில் வைத்துக்கொள்ள முயல்வதுதான் மெய்யான சான்றாண்மை. இரசங்களுக்கெல்லாம் மேலானதும் முதிர்ந்தும் முடிந்த முடிபாக நிற்பதுமாகிய நிறைகுணம் இந்தச் சாந்தரசம்தான். நம்முடைய கோபம் தன் முழு உருவமும் கிளர எழவேண்டிய இடம் எதுவோ அங்கேயும் கூட அதை அடக்கி நின்று சிரிப்பதுதான் உயர்ந்த அடக்கம். என்னால் அப்படி அடங்கி நிற்க முடியுமா என்று முயன்று பார்க்கிறேன் நான். முடியும் என்று தோன்றும்போது என் இதழ்களில் சிரிப்பு மலர்கிறது. முடியாதோ என்று சந்தேகம் வரும்போது என் கண்கள் கலங்குகின்றன.” “உங்கள் கோபம் நியாயமாயிருக்கும்போது நீங்கள் ஏன் அதை அடக்க வேண்டும்? எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அந்தப் பெருநிதிச் செல்வரின் முயற்சிகளில் உங்களைக் கொன்று அழிப்பதும் ஒன்றாயிருக்கிறது. உங்கள் கழுத்தின் வலது பக்கத்திலுள்ள மச்சத்தைக்கூட அடையாளத்திற்காக அந்த ஒவியத்தில் வரையவேண்டுமென்று என்னிடம் பிடிவாதம் பிடித்தார்களே அந்தக் கொடி யவர்கள்! நல்ல வேளையாக அந்த ஓவியம் இங்கே படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்துவிட்டது. இல்லா விட்டால் அதை அடையாளமாகக் கொலையாளிகள் கையில் கொடுத்து அனுப்பி உங்களைத் தேடித் தீர்த்து விடுவது அவர்கள் நோக்கமாக இருந்தது.” இதைக் கேட்டு இளங்குமரன் சிரித்தான். “நான் எந்தக் கோபத்தை அழிக்க விரும்புகிறேனோ அதே கோபத்தை வளர்க்க நீ உன் சொற்களால் முயல் கிறாய் மணிமார்பா!” என்று கூறியபடியே எழுந்து போய் விட்டான் இளங்குமரன். மறுபடி அவன் திரும்பி வந்த போது நீராடிய ஈரம் புலராத கோலத்தில் அவனைப் பார்த்தான் மணிமார்பன். அப்போது படைக்கலச் சாலையில் மரங்களிடையே மாலைவெயில் சரிந்திருந்தது. சிறிது நேரத்தில் மணி மார்பனிடமிருந்து ஓவிய மாடத்தில் பிரதி செய்து கொண்டு வந்த ஓவியங்களைக் கேட்டு வாங்கிக் கொண்டு மாலை வெயிலினிடையே நெருப்புப் பிழம்பு நடந்து போவது போல் நடந்து போய்ப் படைக்கலச் சாலையின் வாயிலைக் கடந்து வெளியேறினான் இளங்குமரன். பின்னாலேயே சிறிது தொலைவு அவனைத் தொடர்ந்து சென்ற மணிமார்பன், “பசியோடும் தளர்ச்சியோடும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் இப்போது?” ' என்று கேட்டான். இந்தக் கேள்விக்கும் இளங்குமரன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே விரைந்து போய் விட்டான். ஆனாலும் மணிமார்பனுக்கு அப்போது இளங்குமரன் போகுமிடம் புரிந்துவிட்டது. உடனே நீலநாக மறவரிடம் போய்ச் சொல்வதற்காகப் படைக்கலச் சாலையின் உட்பக்கம் விரைந்தான் அவன். படைக்கலச் சாலையின் முன்முற்றத்தில் இருந்த பவழ மல்லிகை மரத்தடியில் தற்செயலாக வந்து நின்று கொண்டிருந்த பதுமை, “அவர் எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறார்?” என்று பின்தொடர்ந்து போய்விட்டுத் திரும்பி உள்ளே வந்து கொண்டிருந்த தன் கணவரிடம் கேட்டாள். அந்தக் கேள்வி தன் காதில் விழுந்தும் அப்போதிருந்த பரபரப்பான மனநிலையில் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு நிற்கத் தோன்றாமல் நீலநாகரைத் தேடிக் கொண்டு அவன் ஓட வேண்டியிருந்தது. இளங்குமரன் பட்டினப்பாக்கத்தை அடையும்போது இருட்டிவிட்டது. அவனுடைய உடல் தளர்ந்திருந்தாலும் மனம் துய்மையான உணர்வுகளால் உறுதிப்பட்டிருந்தது. இதே பட்டினப்பாக்கத்து வீதிகளில் தான் நடக்கும் போதே தரையதிர முன்பு நடந்த காலத்தை நினைத்துச் சிரித்துக்கொண்டே சென்றான் இளங்குமரன். பசிச் சோர்வினால் அவன் கால்கள் மெல்ல மெல்ல நடந்தன. ‘என்னுடைய வாழ்க்கையே முடிவில்லாததொரு பெரிய வீதிதான். அதன் கடைக்கோடியில் அது நிறைகிற எல்லையை நோக்கி இப்போது நான் நடந்து கொண்டிருக்கிறேன். இந்த முடிவில்லாத பெரிய வீதியில் திருநாங்கூரில் ஒதுங்கியபோதும், விசாகை என்னும் புனிதவதியரிடம் பழகியபோதும் நான் கற்று நிறைந்த குணச் செல்வங்களை இதன் எல்லைக்குப் போவதற்குள் என்னிடமிருந்து யாரும் கொள்ளையடித்து விடக் கூடாது. எந்தக் கீழான உணர்ச்சித் துடிப்பினாலும் நான் என்னுடைய உயர்ந்த பாவனைகளை இழந்துவிடக் கூடாது. நான் நிறைய வேண்டும். நிறைவுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கும் நடுவில் எந்த விதத்திலும் நான் குறைபட்டுப் போய்விடக்கூடாது.’ இப்படி எண்ணிக்கொண்டே தன்னுடைய குலப் பகைமை குடியிருக்கும் ஏழடுக்கு மாளிகைக்கு முன்னால் போய் நின்றான் இளங்குமரன். சில கணங்கள் அவனுடைய கால்கள் உள்ளே நுழைவதற்குத் தயங்கின. மனத்தில் ஏதோ ஓர் உணர்ச்சி மலையாக வந்து வீழ்ந்து கனத்தது. ‘இந்த மாளிகையின் எல்லையில்தான் என் தந்தையும் தாயும் அல்பாயுளாக இறந்து போனார்கள்’ என்ற வேதனை நினைவு வந்து உடம்பைச் சிலிர்க்க வைத்தது. நெஞ்சு கனன்றுவிட முயன்றது. கைகள் துடிக்கத் தவித்தன. நடுநிலையிலிருந்து பிறழ்ந்து சரிந்துவிட முயன்ற தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அவன் அந்த மாளிகைக்குள் நுழைந்தான். வாயில் நின்று காத்துக் கொண்டிருந்த காவலர்கள் ஓடிவந்து அவனைத் தடுத்தனர். “யார் நீங்கள்? எதற்காக உள்ளே போக வேண்டும் என்று சொல்லுங்கள்?” “நான் இப்போது என்னை யாரென்று சொல்வதென எனக்கே புரியவில்லை. யாரோ ஓர் இளந்துறவி உங்களைக் காண வந்திருக்கிறான் என்று உள்ளே போய் இந்த மாளிகைக்கு உரியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்.” “இந்த மாளிகைக்கு உரியவர் நோயுற்றுப் படுத்த படுக்கையாயிருக்கிறார். இந்தத் தளர்ந்த நிலையில் அவர் யாரையும் சந்திக்க மாட்டார்.” “என்னைச் சந்திப்பார். என்னை அவரும், அவரை நானும் சந்தித்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. நீ போய்ச் சொல்.” காவலர்களில் ஒருவன் உள்ளே போனான். காவலன் உள்ளே போனபின் தற்செயலாக அந்த மாளிகையின் மேற்புரம் சென்ற இளங்குமரனின் பார்வை அங்கே ஒரு மாடத்தின் நுனியில் சித்திரம்போல் அசையாமல் நின்று கீழ்நோக்கி இமையாத கண்களால் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சுரமஞ்சரியைச் சந்தித்தது. இந்தப் பார்வைக்காக, இந்தச் சந்திப்புக்காக இவற்றுக்கென வாய்க்கும் விநாடிகளுக்காகவே யுக யுகாந்தரமாகக் காத்துக் கொண்டிருந்தது போன்ற ஆசையும் காதலும் அவள் கண்களில் தெரிந்தன. ‘என்னுடைய தவிப்பு - என்னுடைய வேட்கை எல்லாம் உங்களுடைய அழகிலிருந்து பிறந்தவை. உங்களுடைய கண்களையும் தோள்களையும் நான் சந்திக்க நேர்ந்த கணங்களிலிருந்து நான் உங்களுக்காகவே நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன்’ என்று அந்தக் கண்கள் அவனிடம் பேசின. முகத்தையே ஆர்வம் மணக்கும் பூவாக மலர்த்திக் கொண்டு காலில் விழுந்து அர்ப்பணமாகிவிடத் தவித்துக் கொண்டு நிற்பது போல நிற்கும் அவள் கண்களைத் தொடர்ந்து சந்திக்கப் பயந்து தலை குனிந்து கீழே பார்க்கத் தொடங்கினான் இளங்குமரன். உள்ளே போயிருந்த காவலன் திரும்பி வந்து தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு இளங்குமரனை அழைத்தான். அவனைப் பின்தொடர்ந்து உள்ளே போவதற்கு முன் கடைசியாக இளங்குமரன் மேலே நிமிர்ந்து பார்த்தபோது சுரமஞ்சரியின் கவர்ச்சி நிறைந்த கண்களில் ஈரம் பளபளத்து மின்னியது. அவளுடைய மயக்கும் கண்கள் இப்போது மழைக் கண்களாயிருந்தன. இதயத்தில் ஏதோ ஒரு மென்மையான பகுதிவரை ஊடுருவித்தாக்கும் அந்தப் பார்வையிலிருந்து தன்னைத் தானாகவே விடுவித்துக் கொண்டு உள்ளே புகுந்தான் இளங்குமரன். அந்தக் காவலன் அவனைப் பெருநிதிச் செல்வர் நோய்ப் படுக்கையில் இருந்த கூடத்திற்குள் அழைத்துக் கொண்டு போய்விட்டான். அந்த கூடத்திற்குள் முதல் அடி பெயர்த்து வைத்தபோது அவன் கால்கள் நடுங்கின. அவன் எந்தப் பக்கமாக அந்தக் கூடத்திற்குள் நுழைந்தானோ அந்தப் பக்கம் தலைவைத்துத் தான் கட்டிலில் அவரும் படுத்திருந்தார். தலையைத் திருப்பாமலே உள்ளே யாரோ அடிபெயர்த்து வைத்து வரும் ஓசையைக் கேட்டு உணர்ந்தே அவர் படுக்கையிலிருந்தபடி வினவினார். “யார் நீங்கள்?” “நான் ஒரு கவியின் மகன்!” “கவியின் மகனுக்கு இங்கென்ன வேலை? கவிகள் இந்த மாளிகையின் வாயிற்படியில் துணிவாக ஏறிவந்து நிற்க முடியாதே? அப்படி யாராவது கவிகள் என்று சொல்லிக்கொண்டு இந்த மாளிகையின் படிகளில் ஏறினால் கடைசி படிகளில் ஏறுவதற்குள் அவர்கள் காலை முறித்துவிடச் சொல்லிக் காவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேனே? பல ஆண்டுகளாக இந்த மாளிகையின் வழக்கமாயிற்றே இது?” “கவிகளின் பரம்பரைமேல் உங்களுக்கு ஏன் இத்தனை குரோதம்?” என்று இளங்குமரன் சிரித்துக்கொண்டே கேட்டான். அவனுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்று, “இது எங்கோ கேட்ட குரல்போல் இருக்கிறதே? நீ யார் அப்பா? இப்படி என் முகத்துக்கு முன்னால் வந்து நின்று பேசு. யாரோ சந்நியாசி என்னைத் தேடி வந்திருப்பதாக அல்லவா காவலன் கூறினான்?” என்றார் பெருநிதிச் செல்வர். சிறிது நேரம் பேசியதிலேயே அவர் குரல் கரகரத்துத் தளர்ந்திருந்தது. இளங்குமரன் தான் நின்ற இடத்திலிருந்தே அவருக்கு மறுமொழி கூறலானான். “நீங்கள் எங்கோ கேட்ட குரல்தான் இது! நியாயத்தின் குரல். எந்தப் பிறவியிலாவது உங்கள் செவிகளில் விழுந்திருக்கும். இப்போது மறுபடி அதைக் கேட்கிறீர்கள். இப்போது, உங்களிடம் பேசுவது என் குரல் அல்ல. இது நியாயத்தின் குரல். கவி அமுதசாகரருக்கும் அவருடைய காதலி மருதிக்கும், காலாந்தகருக்கும் நீங்கள் புரிந்த அநியாயங்கள் எல்லாம் பார்த்த காலத்தில் கூடப் பொறுமையாயிருந்து விட்ட நியாய தேவதை இன்று உங்களைத் தேடிவந்து இப்போது என் குரலில் பேசுகிறது” என்று அவன் கூறியபோது படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து திரும்பினார் அவர். அவருடைய கண்கள் பின்புறம் வேகமாகத் திரும்பிப் பார்த்தன. |