![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
பிரியாவிடை முடிவுரை சோழ நாட்டு நகரங்களில் எல்லாம் பெருநகரமான பூம்புகாரின் செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ இந்திர விழாக்களை அறிவித்து வள்ளுவ முதுமகன் நகருக்கு முரசறைவான்! இன்னும் எத்தனையோ ஆடிப்பெருக்குகளுக்குக் காவிரியில் வெள்ளம் வரும்; தணியும். மழை பெய்யும். வெயில் காயும். பருவ காலங்களால் விளையும் புதுப்புது மாறுதல்கள் காவிரிக்கரை வாழ்க்கையில் எத்துணை எத்துணையோ நிகழ்ச்சிகளைப் படைக்கும். சமயவாதிகளும் ஞானிகளும் சந்திப்பார்கள், அளவளாவுவார்கள், பிரிவார்கள். அறிவும் செல்வமும் ஓங்கி வளரும். அந்தக் கோநகரத்துக் கவிகளின் நாவில் புதுப்புதுக் கவிதைகள் பிறக்கும். இளம் பிள்ளைகள் பலர் தோன்று வார்கள். மூத்துத் தளர்ந்தவர்கள். பலர் இறப்பார்கள். அரசர்கள் மாறுவார்கள். அரசாட்சி மாறும், ஏறும், தாழும். வாணிகருடைய வாழ்க்கை வளரும், தளரும், மாபெரும் துறைமுகத்தில் கப்பல்கள் வரும், போகும், நிற்கும், மிதக்கும். ஆனால்...? என்ன சொல்வது? அதை எப்படிச் சொல்வது? அதோ! நாளங்காடியில் ஒரு கோடியில் அந்த மரத்தின் கீழ் வாடியிருந்து கண்ணிர் சிந்துகிறாளே முல்லை, அவளுடைய நெஞ்சின் கனம் எப்போது தணியும்? அவளுடைய தாகம் எந்தப் பிறவியில் தீரும்? நூறு நூறு சமய ஞானிகளை வென்று பெற்ற வெற்றிப் பெருமிதத்தினாலும் அவள் மனம் நிறையவில்லை. யாரோ ஒருவனுக்கு என்றோ ஒருநாள் தோற்றதையே அவள் இன்னும் எண்ணி வருந்துகிறாள். எந்தக் கோலத்தையோ அரை குறையாக நிறுத்திவிட்டு இந்தத் தவக்கோலத்தை மேற்கொண்டாள் அவள். இந்தக் கோலமும் நிறையாதபடி இப்போது மனம் தவிக்கிறது. தனக்கு உள்ளேயே அடங்காமல் உள் நெருப்பாய்க் கொதிக்கிறது. மறுபடியும் அவள் இளங்குமரனைச் சந்திக்க விரும்புகிறாள். ஆனால் இந்தப் பிறவியில் இன்று நாளங்காடியில் சந்தித்தது போல இதே ஏமாற்றங்களோடு அல்ல. தன்னுடைய நிறைவடையாத நினைவுகளை நிறைவு செய்துகொள்வதற்காக அவள் இன்னொரு பிறவி எடுக்க ஆசைப்படுகிறாள். அப்போது இதே பூம்புகாரின் புற வீதியில் ஏதாவதொரு வீரக் குடும்பத்தில் இளங்குமரனும் கட்டழகனாகப் பிறந்திருப்பான். அவனை அவள் அடைவதற்கு எந்தப் பகைமையும் இருக்காது. எந்தப் போட்டியும் இருக்காது. அந்தப் பிறவி வாய்க்கிறவரை அவள் இந்த உலகத்துச் சுகங்களுக்கெல்லாம் தன்னிடமிருந்து நிரந்தரமாக விடை கொடுக்கிறாள். “வாழ்வதற்கென்று வாய்க்கும் சுகங்களே! உங்களுக்குப் பிரியா விடை கொடுக்கிறேன். மீண்டும் அடுத்த பிறவியில் என்னை வந்து சந்தியுங்கள். அப்போது நானும் அவரும் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம்” என்று கற்றும் கற்காத பேதையாய்த் தனக்குத்தானே கூறிக்கொண்டு அந்த மரத்தடியிலிருந்து எழுந்து நடக்கிறாள் அவள். சில கணங்களில் அவள் தோற்றமும் பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது. இந்திர விழாவின் பெருங்கூட்டத்தில் யாரோ ஒருத்தியாக அவளும் கலந்துவிடுகிறாள். தனியாய்த் தெரியாமல் பலரிடையே ஒருத்தியாய் மறைந்து போய்விடுகிறாள். பன்மையில் கலந்த பின்பு ஒருமையும் தனித்தன்மையும் ஏது? அவ்வளவு பெரிய கூட்டத்தில் அவளைப் போலவே வாழ்வில் விரும்பியது கைகூடாமல் துக்கப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனாலும் அவளுடைய துக்கம் பெரியது. அதற்கு இணையாக வேறு ஒன்றும் இருக்க முடியாது. அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளால் சொல்ல முடியாத அந்தத் துக்கத்துக்கு விடிவு பிறக்கட்டும் என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டு முல்லைக்கு இப்போது இந்தப் பிறவியில் விடை கொடுக்கலாம். (நிறைந்தது) |