முன்னுரை தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன். சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பது கூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற் போல் மாறி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு களப்பிரர் காலத்தைப் பற்றி எழுத எண்ணித் திட்டமிட்டு அதன் பின் வரலாற்று நாவல்கள் எழுதுவதை நான் நிறுத்தியிருந்த சமயத்தில் விகடன் காரியலத்தார் 1970 ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினமலரிலிருந்து விகடனில் வெளியிட ஒரு சரித்திர நாவல் எழுதுமாறு வேண்டினார்கள். என் பழைய எண்ணமும் இந்த அவசியமும் இணைந்த வேளையில்தான் நான் 'நித்திலவல்லி' நாவலை மேற்கொண்டு எழுத நேர்ந்தது. ஒரு மங்கலான காலப் பகுதியைப் பற்றி அதிக ஆராய்ச்சிகளையும், சான்றுகளையும் தேடித் தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:-
"களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோல் ஓச்சி வெண்குடை நிழற் றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித் தன்பால் உரிமை நன்கனம் அமைத்த மானம் போர்த்த தானை வேந்தன் ஓடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னவன்." இனி இலக்கிய ஆதாரங்கள் வருமாறு:- கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவல் மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள்வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீராதிண் டேர் சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான். வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்திச் செருவென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றல் கந்தப் பொழில்சூல் மதுராபுரி காவல் கொண்டான்.
(திருத்தொண்டர் புராணம் மூர்த்தி... 1, 12) படைநான் குடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப
(கல்லாடம் - 56) இந்த இலக்கிய ஆதாரங்களைத் தவிர, பல்லவர் வரலாறு - டாக்டர் இராசமாணிக்கனார் பாண்டிய வரலாறு - டி.வி. சதாசிவ பண்டாரத்தார் South Indian Inscriptions (Volumes) Mahavamsam (Volumes) Pandyan Kingdom - K.A. Neelakanda Sastry சாஸனத் தமிழ்க்கவி சரிதம் - மு. ராகவையங்கார் ஆராய்ச்சிக் கட்டுரைகள் - மு. ராகவையங்கார் பரிபாடல் புறநானூறு கலித்தொகை பெருந்தொகை தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை ஆகியவற்றிலிருந்து இதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆதாரங்களே முழுமையான கதையாகிவிட முடியாது என்றாலும், முழுமையான கதைக்கு இந்த ஆதாரங்களும் இருக்க வேண்டியதாகிய அவசியம் உண்டு. கதை நிகழ்ந்த காலத்து மதுரை அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை. ஆகவே கதையின் பெரும் பகுதியில் மதுரையின் கோலாகலங்களை அதிகமாகச் சித்தரிக்க முடியாமல் போயிற்று. பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். இன்னும் சிலர் இரத்தினமாலை தான் நினைத்து நினைத்து மகிழ ஏற்ற பாத்திரம் என்றார்கள். இளையநம்பிதான் கதாபாத்திரங்களில் முதன்மையானவன் என்கிறார்கள் மற்றும் பலர். அழகன் பெருமாள், மல்லன், கொல்லன், யானைப்பாகன் அந்துவன், காராளர் போன்ற துணைக் கதாபாத்திரங்களே சிறந்தவர்கள் என்பதும் சிலருடைய கருத்தாகும். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த வரலாற்று நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை: சமீப காலத்து நூற்றாண்டுகளில் நாட்டைப் பிறரிடமிருந்து மீட்கும் பல சுதந்திர போராட்ட வரலாறுகளைப் பல நாடுகளில் பார்த்திருக்கிறீர்கள். அதுபோல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்று நாவல் என்ற எண்ணத்தோடு இதை அணுக வேண்டுகிறேன். இதற்கு மேல் இந்த முன்னுரையில் நான் சொல்வதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை. இந்த நாவலைத் தொடர் கதையாக வேண்டி வெளியிட்ட விகடன் காரியாலயத்தாருக்கும், புத்தகத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனங்கனிந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் நா. பார்த்தசாரதி |