முதல் பாகம் - அடையாளம்

1. நல்லடையாளச் சொல்

     திருக்கானப்பேர்க் காட்டிலிருந்து மதுரை மாநகருக்குப் போகிற வழியில், மோகூரில் மதுராபதி வித்தகரைச் சந்தித்து விட்டுப் போக வேண்டும் என்று புறப்படும் போது பாட்டனார் கூறியிருந்ததை நினைத்துக் கொண்டான் இளையநம்பி. அவன் வாதவூர் எல்லையைக் கடக்கும் போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூட்டடையும் பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடென்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன.

     தோட்கோப்பாக வலது தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த கட்டுச் சோற்று மூட்டையைக் கரையில் கழற்றி வைத்துவிட்டு, ஒரு தாமரைப் பொய்கையில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டு அமுதம் போன்ற அந்தப் பொய்கை நீரைத் தாகம் தீரக் குடித்தான் இளையநம்பி. குளிர்ந்த நீர் பட்டதும், வழி நடையால் களைத்திருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சூடேயிருந்த கண்களில் சில்லென்று தண்ணீர் நனைந்ததும் பரம சுகமாயிருந்தது.

     இருட்டுவதற்குள் மோகூரை அடைந்து விட வேண்டும் என்பது அவன் திட்டம். மோகூரில் மதுரபதி வித்தகர் இருக்கும் இடத்தைக் கேட்டறிய வேண்டும். களப்பிரர்களின் கொடுமைக்கு அஞ்சி இப்போதெல்லம் அவர் ஒரே இடத்தில் இருப்பதில்லையாம். பல ஆண்டுகளாக ஆட்சியுரிமையைப் பெற்றிருந்தும், கொள்ளையடித்தவர்கள் தாங்கள் கொள்ளை கொண்ட பொருளுக்கு உண்மையிலேயே உரியவன் எப்போதாவது அவற்றைத் தேடி வந்து மீட்பானோ என்ற பயத்துடனேயே இருப்பது போல்தான் களப்பிரர்களும் பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

     மறுபடி பாண்டியர் குலம் தலையெடுக்க யார் யார் உதவுகிறார்கள் என்று சந்தேகப்பட்டாலும் அப்படிச் சந்தேகத்துக்கு உரியவர்களை ஈவிரக்கமின்றி துன்பப்படுத்தியும், கொலை செய்தும், சிறை பிடித்தும், சித்திரவதைகள் செய்தும் கொடுமை இழைக்கக் களப்பிரர்கள் தயங்கியதில்லை.

     பாண்டிய மன்னர்களுக்கு அரச தந்திரங்களையும், உபாயங்களையும் சொல்லும் மதி மந்திரிகளின் பரம்பரையின் கடைசிக் கொழுந்தையும் கூடக் கிள்ளிவிடக் களப்பிரர்களுக்கும் ஆசை தான். ஆனால், அது அவர்களால் முடியாத காரியமாயிருந்தது. மூத்துத் தளர்ந்து போயிருந்தாலும் மதி நுட்பத்திலும், தந்திர உபாயங்களாலும் சிறிதளவு கூடத் தளராமல் மங்கலப் பாண்டிவள நாட்டின் பல்வேறு ஊர்களிலும் மறுபடி பாண்டியராட்சி மலர்வதற்கு ஓர் இரகசிய இயக்கத்தையே கட்டி வளர்த்து உருவாக்கிக் கொண்டிருந்தார் மதுராபதி வித்தகர். மதுராபதி வித்தகரைப் பற்றிப் பாட்டனார் சொல்லியிருந்ததெல்லாம் இளையநம்பிக்கு ஒவ்வொன்றாக நினைவு வந்தன. கொள்ளைக்காரர்களைப் போல் வந்து பாண்டிய நாட்டைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கும் களப்பிரர்களிடமிருந்து அதை மீட்க முயன்று கொண்டிருக்கும் ஓர் இணையற்ற இராச தந்திரியைச் சந்திப்பதற்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. அவரை எப்படி வணங்குவது, எந்த முதல் வாக்கியத்தினால் அவரோடு பேசத் தொடங்குவது, தான் இன்னான் என்று எப்படி அவரிடம் உறவு சொல்லிக் கொள்வது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே மோகூரில் நுழைந்தான் இளையநம்பி.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.