முதல் பாகம் - அடையாளம்

12. வையைக்கரை உபவனம்

     நிலவறைப் பாதை முற்றிலும் நடந்து வையைக்கரை உபவனத்தின் புதரடர்ந்த பகுதி ஒன்றிலிருந்து வெளிப்படும் வாயில் வழியே இளையநம்பியும் அழகன் பெருமாளும் வெளியேறிய போது கிழக்கே சூரியோதயம் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது.

     அந்த மாபெரும் உபவனத்தின் சூழ்நிலை திடீரென்று திருக்கானப்பேர்க் காட்டிற்கே மறுபடி திரும்பி வந்து விட்டது போன்ற பிரமையை இளைய நம்பிக்கு உண்டாக்கியது. வனத்தை ஒட்டி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி புண்ணிய நறும்புனல் பெருக்கிக் கொண்டிருந்தாள். கதிரவன் உதிக்கும் கீழ் வானத்து ஒளிக்கதிர்கள் பட்டு மின்னும் வையை நீரின் பிரவாகத்தை மரம் செடி கொடிகளும் பன்னிற மலர்கள் பூத்துக் குலுங்கும் பூவகைகளும் நிறைந்த அந்த உபவனத்தில் இருந்து காண்பது பேரின்பம் தருவதாயிருந்தது. சிறு சிறு ஓடங்களில் அக்கரையில் செல்லூருக்கும் பிற பகுதிகளுக்கும் செல்வோர் சென்று கொண்டிருந்தனர்.

     கரையோரங்களில் இருந்த புன்னை, பாதிரி, நாகலிங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து வையையின் கரையை ஒட்டிய நீர்ப்பரப்புச் சிறிது தொலைவுக்குப் பூக்களாலேயே மூடப்பட்டுப் பூம்பரப்பாகத் தோன்றியது. நெடுநேரம் வௌவால் நாற்றமும் நிலவறையின் புழுக்கமும் படர இருளில் நடந்து வந்திருந்த இளையநம்பிக்கு உபவனத்தின் பசுமை மணமும், பல்வேறு மலர்களின் கதம்பமான வாசனைகளும், சில்லென்று மேனியையும் கண்களையும் வந்து தழுவும் குளிர்ச்சியும் சொல்லால் சொல்லி விளக்க முடியாத சுகத்தை அளித்தன.

     உபவனத்தின் புல்வெளியில் இளம் புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. பூமியில் வந்து நெருக்கமாகச் சிதறிய நட்சத்திரங்களைப் போல் வெகுதொலைவு பசும் பரப்பாகப் பரந்திருந்த மல்லிகைச் செடிகளில் பூக்கள் அடர்த்தியாகப் பூத்திருந்தன. மனோரஞ்சிதப் புதர்களில் எங்கெங்கோ இடம் தெரியாமல் பூத்திருந்த பூமடல்களின் நறுமணம் தேவலோகத்தின் படிகளில் நடந்து போவது போல் அவனுடைய நடையையே கம்பீரமாகவும் உல்லாசமாகவும் மேலே ஊக்கியது. பூக்களின் மிக மிக நுண்ணிய நறுமணத்திற்கும், இசையின் பேரினிமைக்கும் மனிதனின் நரம்புகளில் முறுக்கேற்றி அவன் எங்கோ பெயர் புரியாத மண்டலங்களின் வீதிகளில் மிதப்பது போன்ற களிப்பை அளிக்கும் ஆற்றல் இருப்பதை இளையநம்பி பலமுறை உணர்ந்திருக்கிறான். இன்று இப்போதும் அதே உணர்வை இங்கே அடைந்தான் அவன்.

     எதிரே தரையை ஒட்டித் தாழ்வாகச் சாய்ந்திருந்த ஒரு சுரபுன்னை மரத்தின் கிளைகளில் நாலைந்து மயில்கள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒரு மயில் குதூகலமாகத் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. மாமரங்களில் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. கிளிகளும், குயில்களும் கூவிக் கொண்டிருந்தன. தோட்டப்பரப்பில் இடையிடையே இருந்த சிறு சிறு வாவிகளிலும், பொய்கைகளிலும் வட்ட வட்ட இலைகளின் நடுவே வெண்மையும், சிவப்புமாகப் பனிபுலராத பூக்கள் சிலிர்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தன. அந்த உல்லாச மனநிலையில் உடன் வந்து கொண்டிருந்த அழகன் பெருமாள் மாறனை மீண்டும் வம்புக்கு இழுத்து அவன் வாயைக் கிளறிப் பார்க்க வேண்டும் போலிருந்தது இளையநம்பிக்கு. அவனுக்கும் தனக்கும் பிணக்கு ஏற்படக் காரணமாக இருந்த உரையாடலையே மீண்டும் இரு பொருள்பட இரட்டுற மொழிதலாகக் கேட்டான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.