முதல் பாகம் - அடையாளம்

15. கரந்தெழுத்து

     இரத்தினமாலை தன் கைகளுக்குச் செம்பஞ்சுக்குழம்பு தீட்டிக் கொள்வதற்கும் தான் வந்திருக்கும் காரியத்திற்கும் என்ன தொடர்பு என்று இளையநம்பிக்குப் புரியவில்லை. ஆனால் இரத்தின மாலையோ உடனே அழகன் பெருமாளின் வேண்டுகோளுக்கு இணங்கிக் குறளனிடம் தன் கைகளை நீட்டி அலங்கரித்துக் கொள்ள முன்வந்தாள்.

     “ஆகா! நான் காத்திருக்கிறேன்” - என்று கூறியபடி குறளனுக்கு அருகே சென்று ஓர் அழகிய மயில் தோகை விரிப்பது போல் மண்டியிட்டு அமர்ந்து வெண் தந்த நிறத்து உள்ளங்கைகளை அவன் முன் மலர்த்தினாள் அவள். எழுத்தாணி போல் யானைத் தந்தத்தில் செய்த ஒரு கருவியால் குறளன் முதலில் அவல் வலது கையில் செம்பஞ்சுக் குழம்பு* (* மருதாணி இடுவது போல் ஓர் அலங்காரம்) தீட்டத் தொடங்கினான். ஓவியம் தீட்டுவது போல குறளன் கை விரைந்து இயங்கியது.

     அதைக் கண்டு ஆண்மைச் செருக்கும் மான உணர்வும் நிறைந்த இளையநம்பியின் கண்கள் சினத்தினாற் சிவந்தன.

     ‘இருக்கட்டும்! இந்த அழகன்பெருமாள் என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான்? மயக்கும் சக்திவாய்ந்த அழகிய பெண்களைத் தேடிச் சுகம் அடையவா நான் இங்கே கோ நகருக்கு வந்தேன்? என்னை அழைத்து வந்து இங்கே இவளருகில் நிறுத்திக் கொண்டு ‘பெண்ணே! உன் கைகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு தீட்டி அலங்கரித்துக் கொள்’ - என்று ஓர் இளம் கணிகையை வேண்டும் இவன் என்னைப் பற்றி எவ்வளவு கீழாக எண்ணியிருக்க வேண்டும்!’ - என்று குமுறியது இளைய நம்பியின் உள்ளம்.

     ஓர் ஆண் மகனின் முன்னே இன்னோர் ஆண் மகனையும் அருகில் வைத்துக் கொண்டு, மூன்றாவதாக மற்றோர் ஆண் மகனிடம் செம்பஞ்சுக் குழம்பு தீட்டக் கைகளை நீட்டும் நாணமற்ற அவளை வெறுக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ‘அவளாவது கணிகை! இந்த அழகன் பெருமாளுக்கு அறிவு எங்கே போயிற்று? என்னைப் போல் நற்குடிப் பிறப்பு உள்ள ஓர் இளைஞனுக்கு முன் இப்படி நடந்து கொள்ளும் அளவுக்கு இவன் அறிவிலியாயிருப்பான் என்று நான் நம்ப முடியவில்லையே?’ என்று இளையநம்பி எண்ணி எண்ணி வேதனையும், கோபமும் கொண்டான். அந்தச் சினத்தை அடுத்த விநாடியே அவன் அழகன் பெருமாளை விளித்த குரலில் கேட்க முடிந்தது;

     “அழகன் பெருமாள்! இப்படி வா! உன்னோடு தனியாக சிறிது நேரம் பேசவேண்டும்” - என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டே சந்தனம் அறைக்கும் பகுதியை நோக்கி நடந்தான் இளையநம்பி. அவனுடைய குரலில் இருந்த கோபத்துக்குக் காரணம் புரியாதவனாக அழகன் பெருமாளும் பின் தொடர்ந்தான். இளையநம்பியின் முகத்திலும் குரலிலும் எள்ளும் கொள்ளும் வெடிப்பது எதற்காக என்பது அவனுக்கு விளங்கவில்லை. இருவரும் சந்தனம் அறைக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்து அந்த இடத்தின் தனிமையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் இளையநம்பி அழகன் பெருமாளை நோக்கிக் கடுமையான குரலில் கேட்டான்:

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.