முதல் பாகம் - அடையாளம்

16. முத்துப்பல்லக்குப் புறப்பட்டது

     இளையநம்பி தன் மனத்தில் எழுந்த ஐயப்பாட்டை அழகன் பெருமாளிடமோ, இரத்தினமாலையிடமோ கேட்பதற்கு முன் அங்கே அந்தக் கூடத்தில் சித்திர வேலைப் பாடுகள் அமைந்த அழகிய சிறிய முத்துப் பல்லக்கு ஒன்றைப் பணியாட்கள் தூக்கிக் கொண்டு வந்து வைத்தார்கள். ஒளிவீசும் கொற்கை வெண்முத்துக்கள் பதிக்கப்பட்ட அந்தப் பல்லக்கு அங்கே வந்ததும் சந்திரோதயமே ஆகியிருப்பது போன்றதோர் அழகு வந்து பொருந்தியது.

     குறளனிடமிருந்து செம்பஞ்சுக் குழம்பு பேழையையும், அதைத் தீட்டும் தந்த எழுதுகோலையும் பெற்றுக்கொண்டு ஒரு தோழிப் பெண் முதலில் பல்லக்கில் ஏறிக்கொண்டபின் இளைய நம்பியையும், அழகன் பெருமாளையும் நோக்கிப் புன்முறுவல் பூத்தபடி கணிகை இரத்தினமாலையும் அதில் ஏறிக்கொண்டாள்.

     பல்லக்குப் புறப்படு முன் மீண்டும் வெளியே தலையை நீட்டி இளைய நம்பியைப் பார்த்து ஆளைக்கிறங்கச் செய்யும் ஓர் அரிய மோகனச் சிரிப்போடு, “ஐயா திருக்கானப் பேர்க்காரரே! இந்தக் கைகள் மேற்கொண்ட எந்தக் காரியங்களிலும் இதுவரை தோற்றதில்லை” - என்று தன் அழகிய கைகளைக் காண்பித்துச் சொன்னாள் இரத்தினமாலை. அதுகாறும் அவளைப் பொறுத்தவரை கல்லாயிருந்த அவன் மனமும் இப்போது மெல்ல இளகியிருக்க வேண்டும். அந்த நெகிழ்ச்சியின் அடையாளமாக முத்துப் பல்லக்கிலிருந்து தெரியும் அவளுடைய சுந்தர மதிமுகத்தை ஏறிட்டுப் பார்த்து, “புரிகிறது! உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வெற்றி யோடு திரும்பி வா” என்றான் இளையநம்பி.

     முதல்முதலாக அந்த அழகிய வாலிபன் தன்னை மதித்துப் புரிந்துகொண்டு சுமுக பாவத்தில் முகமலர்ச்சியோடு பேசிய இச்சொற்கள் அந்தப் பேதைக் கணிகைக்கு உள்ளக் கிளர்ச்சியை அளித்திருக்க வேண்டும் என்பதை அவள் வதனம் சிவந்து நாணி மலர்ந்ததிலிருந்து அறிய முடிந்தது.

     தன்னுடைய பதற்றத்தில் அவளைத் தவறாக மதிப்பிட்டு விட்டதற்காக இளைய நம்பியின் மனம் கூசி நாணத் தொடங்கியிருந்தது இப்போது. அழகன் பெருமாளிடமும் குறளனிடமும் கூடக் கண்களாலேயே குறிப்புக் காட்டி விடை பெற்றாள் இரத்தினமாலை.

     முத்துப் பல்லக்கு வீதியில் படியிறங்குகிறவரை அவள் பார்வை இளைய நம்பியின் மேல்தான் இருந்தது. பல்லக்கு வீதியில் இறங்கி மறைந்ததும் இப்பால் தன்னுடைய பதற்றங்களையும், சினத்தையும் மறந்து பொறுத்துக் கொண்ட தற்காக அழகன் பெருமாளைப் பாராட்டிச் சில சொற்கள் கூறினான் இளையநம்பி.

     “ஐயா! நீங்கள் இந்த உபசார வார்த்தைகளைக் கூறாவிட்டாலும் நானோ, இரத்தினமாலையோ, எங்களைச் சேர்ந்தவர்களோ கடமைகளில் ஒரு சிறிதும் தளர்ச்சி அடைந்து விட மாட்டோம். பெரியவர் மதுராபதி வித்தகரிடம் கையடித்துச் சத்தியம் செய்து கொடுத்து விட்டுக் களப்பிரர் ஆட்சியை மாற்றுவதற்குச் சூளுரைத்திருக்கிறோம். அந்தச் சபதத்தை நாங்கள் ஒருகாலும் மறக்கவே முடியாது” என்றான் அழகன்பெருமாள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.