முதல் பாகம் - அடையாளம்

18. இன்னும் ஒரு விருந்தினர்

     தாயும் மகளும் நீராடி வீடு திரும்பியபோது மாளிகை வாயிலில் வேற்றூரைச் சேர்ந்தவன்போல் தோன்றிய ஒருவனோடு பெரியகாராளர் உரையாடிக் கொண்டிருந்தார். வந்து உரையாடிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வளவு முதுமை என்று சொல்லிவிட முடியாது. இளமை என்று கருதவும் வாய்ப்பில்லை. இளமையைக் கடந்து முதுமையின் எல்லையை இன்னும் தொடாத வயது. நீண்ட நாட்களாகவே காட்டில் வாழ்ந்தவன் ஒருவனின் சாயல், வந்து பேசிக் கொண்டிருந்தவனிடம் தென்பட்டது. புலித்தோலால் தைத்த முரட்டு அங்கி ஒன்றை அணிந்திருந்தான் அவன். வந்திருந்த புதியவனாகிய அவனுக்கும் தன் தந்தைக்கும் எதைப் பற்றியோ கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைச் செல்வப் பூங்கோதை அறிய முடிந்தது. வந்திருந்தவனால் எதையும் மெல்லிய குரலில் பேச முடியவில்லை. காற்றைக் கிழிப்பது போல் கணிரென்ற குரல் வாய்த்திருந்தது வந்திருந்தவனுக்கு. கண்களிலும், முகத்திலும் இரண்டாவது முறை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சுகிற ஒரு குரூரம் இருந்தது. நீராடி வந்த கோலத்தில் அங்கே அதிக நேரம் நிற்க முடியாததால் செல்வப் பூங்கோதை உடனே தாயுடன் உள்ளே சென்று விட்டாள். எனினும் தன்தந்தைக்கும் அந்தப் புதிய மனிதனுக்கும் நிகழ்ந்த வாக்கு வாதத்தை அவள் உட்புறம் இருந்தே கேட்க முடிந்தது. தந்தையின் மெல்லிய குரலே முதலில் ஒலித்தது.

     “உங்களை நான் இதற்கு முன்பு எப்போதும் இங்கு பார்த்ததில்லை. நீங்களோ நெடுநாள் பழகி அறிந்தவர் போல் உறவு கொண்டாடித் தேடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன மறுமொழி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.”

     “நீங்களே மறுமொழி சொல்லவில்லை என்றால் நான் வேறு எங்கு போகமுடியும்? யாரைக் கேட்க முடியும்? தயை கூர்ந்து எனக்கு வழி காட்டி உதவ வேண்டும்.”

     “விருந்தோம்புவதும் பிறருக்கு உபகாரம் செய்வதும் என்னைப்போல் ஒவ்வொரு வேளாளனுக்கும் கடமை. நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களை நான் உபசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் முதலில் வினாவியதுபோல் பாண்டிய நாட்டு அரசியல் நிலைமை பற்றி என்னை எதுவும் வினவக்கூடாது. அதைப் பற்றி என் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாது. முந்நூறு ஏர்கள் பூட்டி உழக்கூடிய நிலக்கிழமை இந்த மருத நிலத்து ஊரில் எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.“

     “ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளக்கூடாது. பெரியவர் மதுராபதி வித்தகர் இருக்குமிடத்தை அறிந்து நான் அவரைச் சந்தித்தே ஆக வேண்டும். இந்த ஆண்டு ஆவணித் திங்கள் முழுநிலா நாளில் அவிட்ட நட்சத்திரத்தன்று தொடங்கும் திருவோண விழா நாள் முதலான விழா நாள் ஏழில், இரண்டாம் நாளன்று நான் அவரைச் சந்தித்தாக வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. பாண்டிய வேளாளர் மரபில் வந்த தாங்களே இந்த நல்லுதவியைச் செய்யாவிடில் வேறு யார் செய்யப் போகிறார்கள்?”

     “நான் பாண்டிய வேளாளர் மரபில் வந்தவன் என்று அறிந்து பாராட்டும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் அந்தத் தகுதியைச் சொல்லிப் பாராட்டுவதால் உங்களுக்கு முன்னால் மட்டும் தான் அதற்காக நான் பெருமைப்படலாம். ஆனால், இதே பெருமையை இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்கு முன்னால் நான் கொண்டாடுவேனாயின் என் தலையைச் சீவிக் கழு மரத்தில் தொங்கவிட்டு விடுவார்கள்.”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.