முதல் பாகம் - அடையாளம்

19. சேறும் செந்தாமரையும்

     அழகன் பெருமாள் மாறன் எவ்வளவோ உறுதி கூறியும் இளைய நம்பிக்கு அந்த விஷயத்தில் இன்னும் அவநம்பிக்கை இருந்தது. அதைப் பற்றி இரத்தினமாலை முத்துப் பல்லக்கில் அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்ற பின்பு மீண்டும் மீண்டும் அழகன் பெருமாளுக்கும் இளையநம்பிக்கும் ஒரு தர்க்கமே நிகழ்ந்தது. இளையநம்பி கேட்டான்:-

     “அந்தரங்கமான செய்திகளையும், சங்கேதக் குறிப்புகளையும் இப்படி மறைவான சித்திர எழுத்துக்கள் மூலம் முகத்திலும் கைகளிலும் எழுதி அனுப்புவதாகப் பழைய காவியங்களில் நிகழ்ச்சிகள் வருகின்றன. அந்தக் காவிய நிகழ்ச்சிகள் பாலி மொழியிலும் இருக்கின்றன. களப்பிரர்களுக்கும் அவற்றைப் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயமிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது இரத்தின மாலையின் கைகளிலே நாம் தீட்டி அனுப்பியிருக்கும் வினாக்களை யாருமே சந்தேகக் கண்களோடு பார்க்காமல் விட்டு விடுவார்கள் என்பது என்ன நிச்சயம்?”

     “இன்றோ நேற்றோ புதிதாக நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை ஐயா! பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையை ஏற்று இதில் ஈடுபட்ட நாளிலிருந்து நீங்கள் கூறுவது போல் எதுவும் நடைபெறவில்லை. மேலும் காவிய நிகழ்ச்சிகளில் கூறப்பட்டுள்ள முகஎழுத்துக்களாகிய சித்திர எழுத்துக்கள் வேறு; நாம் பயன்படுத்தும் கரந்தெழுத்துக்கள் வேறு.”

     “வேறாயிருந்தால் கவலையில்லை. இந்தக் கை எழுத்துக்களே நம் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவை உண்டாக்கிவிடக் கூடாதே என்பது தான் நான் படுகிற கவலை.”

     “நம் தலை எழுத்து அவ்வளவிற்கு வலிமைக் குறைவாக இல்லை ஐயா!”

     “உன்னுடைய எல்லா மறுமொழிகளுமே நம்பிக்கை ஊட்டுவனவாகத் தான் எப்போதும் வெளிப்படுகின்றன அழகன்பெருமாள்.”

     “நான் எதைப் பற்றியும் இருள் மயமாகச் சிந்திப்பதே இல்லை ஐயா!”

     “நீ அப்படி இருப்பதனால் தான் எதைப் பற்றியும் ஒளி மயமாகவே சிந்திக்க முடியாமல் இருக்கிறது. ‘சாத்தியமாகும் என்று மட்டுமே உடன்பாடாகச் சிந்திக்கிறவனுக்கு அருகில் அது எவ்விதத்தில் ‘அசாத்தியமாகும்’ என்று எதிர் மறையாகச் சிந்திக்கிறவன் ஒருவனும் இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். அவன்தான் அபாயங்களைத் தவிர்க்க முடியும்.”

     இங்கே அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது குறளன் வந்து குறுக்கிட்டான். உடனே அழகன் பெருமாளிடமிருந்து குறளனுக்குக் கட்டளை பிறந்தது:-

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.