முதல் பாகம் - அடையாளம் 2. மதுராபதி வித்தகர் அந்தப் பெண் தன்னை எச்சரித்து விட்டுச் சென்றது எவ்வளவிற்குப் பயன் நிறைந்தது என்பதை அந்தப் பாதையில் சிறிது தொலைவு நடந்ததுமே இளையநம்பி புரிந்து கொள்ள நேர்ந்தது. கயல் என்னும் அந்த நல்லடையாளச் சொல்லின் மந்திர சக்தியையும் அவன் விளங்கிக் கொள்ள முடிந்தது. இருபுறம் மரங்கள் அடர்ந்து செழித்திருந்த பாதையின் மருங்குகளில் அங்கங்கே உருவிய வாளுடன் நின்ற வீரர்கள் அவன் 'கயல்' என்று கூறியவுடனே வாளை உறையிலிட்டு வணங்கி வழி விட்டனர். அவர்கள் தோற்றத்திலிருந்து களப்பிரர் ஆட்சி வந்த பின் பாண்டிய நாட்டில் மறைந்து வாழ்ந்த தென்னவன் ஆபத்துதவிகளின் வழிமுறையினராகவும், எதையும் எதிர்கொள்ளவல்ல முனையெதிர் மோகர்களின் வழிமுறையினராகவும் இருக்க வேண்டுமென்று தோன்றியது. நல்லடையாளம் கிடைத்ததும் அந்த வீரர்களில் ஒருவன் முன் வந்து அவனை அழைத்துச் சென்றான். எதிரே நிலப்பரப்பின் பெரும்பகுதியைத் தன் விழுதுகளால் ஊன்றியிருந்த மாபெரும் குடையை ஒத்த ஆலமரம் ஒன்று தெரிந்தது. இவ்வளவு பெரிய ஆலமரத்தை மிகப் பெரிய திருக்கானப்பேர்க் காட்டில் கூட அவன் கண்டதில்லை. மறைகின்ற கதிரவனின் மஞ்சள் கலந்த செவ்வொளி இடையிடையே தெரியப் பெரும்பெரும் விழுதுகளை ஊன்றியிருந்த அந்த ஆலமரத்தின் அடிப்பாகம் எங்கிருக்கிறதென்று காணவே முடியவில்லை. ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தூண்கள் இறக்கியது போன்ற விழுதுகளைக் கடந்த ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடந்தார்கள். நெடுந்தொலைவு சென்றதும் ஒரு பெரிய கல்மண்டபம் போன்ற அதன் அடிமரம் தெரிந்தது. அந்த அடி மரத்தின் கீழ்ப்பகுதியில் மரப் பொந்து போல் இயல்பாகவே ஒரு வாயிலும் தென்பட்டது. திருக்கானப்பேர்க் காட்டில் பல பழைய மருத மரங்களும், புளிய மரங்களும் இப்படிப் பெரிய பெரிய அடிப்பொந்துகளை உடையதாக இருப்பதை அவன் கண்டிருக்கிறான். ஆனால் இந்த மரப் பொந்திலோ உள்ளே மிகப் பெரிய இடம் இருக்கும் என்று தோன்றியது. அடி மரத்தின் பிலம் போன்ற வாயைச் சுட்டிக்காட்டி உள்ளே போகலாம் என்பது போல் இளைய நம்பிக்குச் சைகை செய்துவிட்டு வெளிப்புறமே ஒதுங்கி நின்று கொண்டான் உடன் வந்த வீரன். விரைந்து துடிக்கும் நெஞ்சத்தோடு உள்ளே நுழைந்த இளைய நம்பி தன் கண்களின் எதிரே மெய் சிலிர்க்கும் காட்சியைக் கண்டான். வியப்பினால் அவன் கண்கள் இமையாமல் நேர் எதிரே பார்த்தன. ஒரு காலைச் சாய்த்து மடக்கி மறு காலைக் கீழே தொங்க விட்டபடி திடீரென்று உள்ளே நுழைகிறவர்களின் கண்களில் தென் திசைக் கடவுள் ஆலமரத்தடியில் யோகியாக அமர்ந்து தென்படுவது போல் தென்பட்டார் மதுராபதி வித்தகர். அந்தத் தட்சிணாமூர்த்தியின் அருள் கூட இனிமேல் பாண்டியர் பரம்பரையினருக்கு இந்தத் தட்சிணாமூர்த்தியின் உதவியால் தான் கிடைக்க வேண்டும் போலும் என்று அவனுக்குத் தோன்றியது. வெண்மையின் ஒளியும், கருமையின் கூர்மையும் தனித்தனியே தெளிவாகத் தெரியும் இரண்டு அற்புதமான கண்கள் அந்தப் பரந்த முக மண்டலத்திலிருந்து வெண்ணெயில் கரு நாவற்பழம் பதித்தது போல் அவனை நோக்கி விழித்தன. வெண்சாமரம் போன்று நன்றாக நரைத்து வெளுத்துவிட்ட சடைமுடிக் கற்றைகள் அவிழ்ந்து தோள்களிலும் பிடரியிலும் சரிந்திருந்தன. ஒரு கிழச் சிங்கம் அமர்ந்திருப்பது போல் அந்தப் பிடரி மயிரும் நேரே பார்க்கும் பார்வையும் அவன் கண்களுக்கு அவரைக் காட்டின. அந்த அரிமா நோக்கின் கூர்மை அவரிடம் பேசுவதற்கு என்று அவன் நினைத்த வார்த்தைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் குத்திக் கீழ் விழச் செய்தது. அங்கிருந்த அகல் விளக்கின் ஒளியில் அவர்கள் கையிலிருந்த வெள்ளெருக்கம் பிரம்பும் மிகப்பெரிய படைக்கருவி போல் தோன்றி அவன் பார்வையை மருட்டியது. சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து அந்த மாபெரும் இராஜதந்திரியை வணங்கினான் இளையநம்பி. அவன் அறிமுக உறவு சொல்லிக் கொள்ளு முன் அவரே அவனைப் பெயர் சொல்லி அழைத்தார்.
அவருடைய கணீரென்ற குரல் அவனை வாழ்த்தியது. எழுந்து நின்றவன் என்னென்ன வார்த்தைகளையோ அவரிடம் பேச நினைத்து முடிவில் தொடர்பில்லாமல் ஏதோ மூன்று வார்த்தைகளைச் சொன்னான்.
"நன்றாக இருட்டி விட்டது." "ஆமாம்! பாண்டிய நாட்டில் இருட்டிப் போய் நெடுங்காலமாகிறது தம்பீ!" இந்த வாக்கியத்தின் பொருளாழம் அவனுக்குப் புரிந்தது. "மன்னிக்க வேண்டும் ஐயா! பொழுது சாய்வதற்குள் தங்களைக் காண்பேன் என்று பாட்டனாரிடம் சொல்லி விட்டு வந்தேன்; இந்த இடத்துக்கு நான் வருவதற்குள்..." "மிகவும் துன்பப்பட்டிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். எப்படி வரவேண்டும், என்னென்ன நல்லடையாளச் சொற்கள் பயன்படும் என்றெல்லாம் உன் பாட்டனாருக்கு நான் விவரமாகச் சொல்லியனுப்பியிருக்க முடியும். இவ்வளவு சிரமங்களையும் கடந்து நீ இங்கு வந்து சேர்கிற திறன் உடையவனா, இல்லையா என்று அறிவதற்காகவே நான் எதையும் சொல்லவில்லை." "பெரிய சோதனை இது!" "சோதனைகள் அதிகம் எதிர்ப்படாத வாழ்வு வீரனுடைய வாழ்வாக இருக்க முடியாது." "தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியினால் தான் சோதனைகளைத் தாங்கும் வலிமை அடியேனுக்குக் கிடைக்க வேண்டும்." கூறிக்கொண்டே பிறர் புரிந்து கொள்ள எந்த உணர்ச்சிகளும் தெரியாததும், பிறரைப் புரிந்து கொள்ள எல்லாச் சாதுரியங்களும் கருவிகளும், ஊடுருவுகிற பார்வைகளும், எதுவும் தப்பிவிடாமல் பிடித்திழுக்கும் கண்களும் அமைந்த அந்த விசாலமான முகத்தை நன்றாகப் பார்த்தான் இளையநம்பி. அளக்க முடியாத அளவும் பொருளும், கலக்க முடியாத நிலையும் தோற்றமும் உடைய ஒரு பெரிய மலையோ, கரை காணாத மகா சமுத்திரமோ எதிரே அமைந்திருப்பது போல் பிரமை தட்டியது. "என்ன பார்க்கிறாய்? பெரும்படையும், ஆயுதங்களும், கோட்டை கொத்தளங்களும் உடைய களப்பிரரை வெறும் வெள்ளெருக்கம் பிரம்போடு ஆலமரத்தடியில் அகல் விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருக்கிற இந்தக் கிழவனா வென்று விடப் போகிறான் என்று தானே நினைக்கிறாய்?" "நான் அப்படி நினைக்க மாட்டேன் ஐயா! மனிதர்களை எதிர்க்கத்தான் ஆயுதங்கள் வேண்டும். பேய்களை விரட்ட வெள்ளெருக்கம் பிரம்பே போதும். களப்பிரர்கள் பேய்கள் போல்தான் இந்த மண்ணைப் பிடித்திருக்கிறார்கள்." "வாழ்க! உன் நெஞ்சின் ஆழத்திலிருக்கும் தேசபக்தி என்ற நெருப்பு இன்னும் அவியவில்லை. உன் வார்த்தைகள் அதைக் காட்டுகின்றன." "இப்படிப்பட்ட உள்நெருப்பு அவியாதவர்கள் இந்த மாபெரும் பாண்டி மண்டலத்தில் எல்லா ஊர்களிலும் இன்னும் நிச்சயமாக இருப்பார்கள் ஐயா." "அவர்களைத் தேடி ஒன்று சேர்ப்பதுதான் என் வேலையாக இருக்கிறது தம்பீ! இந்தத் திருமோகூரிலும் கூடல் மாநகரிலும் மறையவர் திருவீதிகளில் யாக சாலைகள் இருக்கும். அந்த யாக சாலைகளில் எவனோ ஒரு முதல் முனிவன், என்றோ பல்லூழி காலத்திற்கு முன் ஏற்றிய புனித நெருப்பு ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்னும் அவியாமல் காக்கப்படுகிறது. மிக மூத்த அரச குலங்களில் ஒன்றாகிய பாண்டியர் குலத்தின் தேசபக்தியும் அப்படிக் காக்கப்பட வேண்டும். அந்த நெருப்புச் சிறிதா பெரிதா என்பது கேள்வியில்லை. நெருப்புக்கும் விதை நெல்லுக்கும் சிறிய அளவிலிருந்து பெரிய அளவைப் படைக்கும் ஆற்றல் உண்டு." "நம்முடைய வேள்விச் சாலையில் நீறு பூத்திருக்கும் தேச பக்தி என்ற நெருப்பை வளர்க்கும் ஒரே முனிவராக இன்று நீங்கள் இருக்கிறீர்கள் ஐயா!" "தம்பி! உன்னுடைய புகழ் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கமாட்டா. வார்த்தைகளில் நான் என்றுமே மகிழ்வதில்லை. புலவர்களின் சொற்களில் மகிழலாம். இராஜதந்திரிகள் சாதனைகளில்தான் மகிழ முடியும். நீ சொல்லிச் செலவழித்துவிடும் வார்த்தைகள் உன்னிடமிருந்து வெளியேறிப் போய் காற்று என்னும் சப்தங்களை உள்ளடக்கும் மகாசப்த சாகரத்தில் மூழ்கிக் கரைந்து விடுகின்றன. நீ இதுவரை சொல்லாத வார்த்தைகள் தான் இனி உனக்குச் சொந்தம். நம் பாண்டிய மன்னர்களையும், அவர்களது கோநகரான மாமதுரையையும், பூம்புனல் ஆறாகிய வையையும் எத்தனை எத்தனை வார்த்தை அலங்காரங்களால் புகழ்ந்து புலவர்கள் வருணித்தார்கள்? அந்தப் புகழ் இன்று எங்கே போயிற்று? அந்தச் சங்கப் புலவர்கள் இன்று எங்கே போனார்கள்? அவர்கள் கொலுவீற்றிருந்த தமிழ்ச் சங்கம் தான் இன்று எங்கே போயிற்று? அவர்கள் வளர்த்த தமிழ் எங்கே போயிற்று? அந்த நாகரிகம், அந்தக் கலைகள், அந்த வாழ்வு எல்லாவற்றையும் இன்று களப்பிரர்கள் இருளடையச் செய்து விட்டார்களே!" "ஒவ்வோர் இருட்டுக்குப் பின்னும் ஒரு வைகறை உண்டு ஐயா!" "வெறும் வார்த்தைகளை அலங்கரித்துப் பந்தல் போடும் அந்தக் கவிகளின் குணம் உனக்கும் சற்று இருக்கும் போலிருக்கிறது தம்பீ! புகழை நம்பாதே. உன்னைப் புகழ்கிறவர்கள் உன்னுடைய கடந்த காலத்துக்கு அந்த வார்த்தைகள் மூலம் உன்னை ஏணி வைத்து ஏற்றிச் செல்கிறார்கள். இருளுக்குப் பின் வைகறை வரும் என்று சோம்பியிராதே. வைகறையை எதிர்கொள்ளப் பாடுபடு! விழித்திரு! நீ உறங்கிக் கொண்டிருப்பாயானால் உன்னால் வைகறையைக் கூடக் காண முடியாது." "பாட்டனார் என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார் ஐயா! நான் மதுரை மாநகரில் என்னென்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்களோ அவற்றை எல்லாம் குறைவுபடாமற் செய்து வரச் சித்தமாயிருக்கிறேன்." "களப்பிரர்கள் இப்போது செய்திருக்கும் கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையானவை. அகநகரிலும் புறநகரிலும் பூதபயங்கரப் படையினர் மாறுவேடத்தில் திரிகிறார்கள். எந்த வழியாகவும் நீ அகநகரில் கோட்டைக்குள் நுழைவது என்பது பெரு முயற்சியாகத்தான் இருக்கும்." "ஐயா! நாளைக்கு வைகறை வேளையில் நான் கோட்டைக்குள் போவது ஓரளவு சுலபமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். விடிந்தால் மதுரையில் அவிட்ட நாள் பெருவிழா. தலைநகரம் கோலாகலமாகவும், மக்கள் கூட்டம் நிரம்பியும் இருக்கும். பாதுகாப்பு விதிகள் அவ்வளவு கடுமையாக இருப்பது திருவிழாக் காலங்களில் சாத்தியமில்லை. இருந்த வளமுடையாரையும், அந்தர வானத்து எம்பெருமானையும் தொழுவதற்காகப் பாண்டி நாட்டின் பல்வேறு திசையிலிருந்தும் மக்கள் கூடும் நாளில் அடியேனும் அந்நகருக்குள் போவது சுலபமாயிருக்கும் என்றே தோன்றுகிறது." "இளையநம்பி! நீ நினைப்பது தவறான அநுமானம். நம்முடைய திருவிழாக்களை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாட விடுவதற்குக் களப்பிரர்கள் மனம் ஒப்ப மாட்டார்கள். இந்தப் பேய்கள் விரட்டப்படுகிறவரை பாண்டியர் தலைநகரில் உன்னுடைய முன்னோர்களின் புகழ்பெற்ற திருவிழாக்கள் கிடையாது." வாளின் நுனிபோல் கூரியதாயிருந்த அவரது நாசியையும், அழுத்தமான பெரிய உதடுகளையும், அதனிடையே வெளேரென்று ஒளிவீசும் பற்களையும், சிவந்த முகமண்டலத்தையும் ஏறிட்டுப் பார்த்து அவர் கூறியதை மறுக்கத் துணிவின்றி நின்றான் இளையநம்பி. அதன் பின் நீண்ட நேரம் களப்பிரர் ஆட்சி சில தலைமுறைகளில் செய்துவிட்ட கொடுமைகளை ஒவ்வொன்றாக அவனுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர். அவற்றைக் கேட்கக் கேட்க அந்த இளம் வீரனின் தோள்கள் தினவு எடுத்து விம்மின. இரத்தம் கொதித்தது. "தம்பீ! இரவு நெடுநேரமாகிவிட்டது! உன்னுடைய தோட் கோப்பிலிருந்து திருக்கானப்பேர்க் கட்டுச்சோறு மணக்கிறது. திருக்கானப்பேரில் தயிர் அமிர்தமாக இருக்கும். நெடுங்காலத்திற்கு முன் உன் பாட்டனார் விழுப்பரையரோடு விருந்துண்டு மகிழ்ந்திருக்கிறேன். இப்போது நீ உண்டு முடித்த பின் அங்கேயே உறங்கலாம். நீ மதுரை மாநகருக்குப் போவது பற்றி நாளை விவரம் சொல்லுகிறேன்." "ஐயா! திருக்கானப்பேர்த் தயிரை இவ்வளவு புகழும் நீங்கள் இந்தக் கட்டுச் சோற்றை என்னோடு பகுத்துண்ணலாம் அல்லவா?" "நானா? இரவில் உண்பதை நான் நிறுத்திப் பல ஆண்டுகள் ஆயிற்றுத் தம்பீ! பகலில் கூட நான் உண்ணும் உணவுகள் பிறருக்குக் கசப்பானவை." "தாங்கள் கூறுவது விளங்கவில்லையே?" "போகப் போகத் தானே விளங்கிக் கொள்வாய்? இப்போது நீ உண்ணலாம். அந்த மூலையில் மண் கலத்தில் பருக நீர் இருக்கிறது. உண்டு முடித்ததும் இதோ இந்தப் பட்டைக் கல்லில் படுத்து உறங்கு. வழிப்பயணக் களைப்போடு உறக்கத்தையும் கெடுத்துக் கொள்ளாதே. எனக்கு இரவில் சிறிது தொலைவு காலார நடக்கும் வழக்கம் உண்டு. நான் திரும்பி வர இரண்டு நாழிகை ஆகலாம். அதுவரை எனக்காக நீ விழித்திருக்க வேண்டும் என்பதில்லை" என்று கூறிவிட்டு வெளியேறுவதற்காக எழுந்து நின்றார் மதுராபதி வித்தகர். அந்தத் தோற்றத்தின் உயரம் திடீரென்று தன்னைச் சிறியவனாக்கி விட்டது போல் உணர்ந்தான் இளையநம்பி. சாமுத்ரிகா லட்சணங்கள் எல்லாம் அமைந்த ஒரு யவன வீரனைத் தமிழ்நாட்டுக் கோலத்தில் மூப்போடு பார்த்தது போலிருந்தது அவர் நின்ற காட்சி. சிங்கம் பார்ப்பது போல் நேர் எதிரே நிலைக்கும் அந்தப் பெரிய கண்கள், அவர் அங்கிருந்து வெளியேறிய பின்பும் தன்னை இடைவிடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. எதிராளியின் நினைவில் ஓர் எச்சரிக்கை போல் பதியும் அந்தக் கண்களைப் பற்றியே நினைத்து வியந்து கொண்டிருந்தான் இளையநம்பி. உண்டு முடித்ததும் பலகை போலிருந்த அந்தக் கல்லில் படுத்த போது தான் சற்று முன் அவர் அமர்ந்திருந்த கல்லை ஒட்டி ஒரு பெரிய புற்று இருப்பதை அவன் காண நேர்ந்தது. எப்போதென்று தெரியாத ஏதோ ஒரு நேரத்தில் அவன் தன்னையறியாமலே அயர்ந்து உறங்கிவிட்டான். அவனுடைய சொப்பனத்தில் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போடும் அந்தப் பேரழகியான திருமோகூர்ப் பெண் வந்தாள். கலப்பைக்குக் கொழு அடிக்கும் அசுர ஆகிருதியோடு கூடிய அந்தக் கரும்பொற்கொல்லன் வந்தான். இன்னும் யார் யாரோ வந்தார்கள். குளிர்ந்த காற்றும் வைகறையை வரவேற்கும் பறவைகளின் பல்வேறு ஒலிகளும் அவனை எழுப்பின. எழுந்து உட்கார்ந்து எதிரே பார்த்தவன் குருதி உறைந்து போகும்படியானதொரு காட்சியைக் கண்டான். அவனுக்குப் பேச நா எழவில்லை. உடல் புல்லரித்தது. அந்தப் பெரிய விழிகள் எப்போதும் போல் அவனை இமையாமல் நோக்கிக் கொண்டிருந்தன. |