முதல் பாகம் - அடையாளம் 22. புலியும் மான்களும் எண்ணெய் நீராடிய களைப்பில் உண்டதும் அயர்ந்து உறங்கி விட்டான் அந்தப் புதிய மனிதன். அறங் கோட்டத்து மல்லனும் காராளரின் குறிப்புப்படி உறங்கி எழுந்திருந்த பின்பே அந்தப் புதியவனைத் தன்னோடு வருமாறு அழைத்தான். “எங்கே அழைக்கிறாய் என்னை? பயனில்லாத காரியங்களுக்காக அலைய எனக்கு இப்போது நேரமில்லை” என்று மல்லனிடம் சீறினான் அவன். ‘ஐந்து தினங்களானாலும் நான் உறக்கத்தைத் தாங்குவேன்?’ என்று சொன்னவன் உண்ட களைப்புத் தாங்காமல் உடனே உறங்கி விட்டதைக் கண்டபோது தொடர்ந்து பல நாட்கள் அவன் உறங்க முடியாமற் கழிந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. வீரம் பேசிச் சூளுரைப்பதும் உடலின் இயலாமையால் உடனே அதற்கு முரண்டு படுவதுமாக இருந்த அவன் மனம் ஆத்திரம் அடையாதபடி, “பயனில்லாது எங்கேயும் உங்களை அழைக்க வில்லை. எங்கே போக வழி கேட்டு வந்தீர்களோ அங்கே உங்களை அழைத்து வரச்சொல்லிக் கட்டளை கிடைத்திருக்கிறது” என்றான் மல்லன். மறுபேச்சுப் பேசாமல் உடனே மல்லனைப் பின் தொடர்ந்தான் புதியவன். மல்லனோடு நடந்து செல்லும்போது, “உங்களது அறக்கோட்டத்தைப் புரந்து வரும் அந்த வேளாளர் எங்கே?” என்று கேட்டான் அவன். “அவர்தான் இந்தக் கட்டளையை என்னிடம் சொல்லி விட்டுச் சென்றார்” - என்றான் மல்லன். “நல்லது! இவ்வளவு நேரத்துக்குப் பின்பாவது அவருக்கு என்மேல் கருணை வந்ததே? முதலிலேயே இந்தக் கருணையைக் காட்டியிருந்தாரானால் எவ்வளவோ பெரிய உதவியாயிருக்கும்.” இப்படிக் கூறிய புதியவனுக்கு மல்லன் மறுமொழி எதுவும் கூறவில்லை. சிறிது தொலைவுவரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமலே நடந்தனர். நல்லடையாளச் சொல்லைப் பற்றி அந்தப் புதியவனுக்குக் குறிப்பிட்டு விளக்க வேண்டிய சமயம் வந்து விட்டது என்பதை உணர்ந்து, அதைப் பற்றிச் சிறிது நேர மெளன நடைக்குப் பின் சொல்லத் தொடங்கினான். புதியவனும் அதை அமைதியாவும் கவனமாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டான். நல்லடை யாளச் சொல்லைப் பற்றி விளக்கிய சில கணங்களுக்குப் பின் இருந்தாற் போலிருந்து, சற்றே தயங்கித் தயங்கி அந்தப் புதியவனை ஒரு கேள்வி கேட்டான் மல்லன்: - “இந்த ஆட்சியில் களப்பிரர் அல்லாத பொதுமக்கள் வெளிப்படையாக வாளோ, வேலோ, ஆயுதங்களோ ஏந்திப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா ஐயா?” “தெரியும். தெரிந்தால் என்ன? அந்தத் தடைக்கு நான் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று எந்த வேதத்தில் எழுதியிருக்கிறது?”
“வேதத்தில் எதுவும் எழுதவில்லை என்றாலும் இந்த வாளை வைத்திருப்பது உங்களுக்கு அபாயத்தைத் தேடிக் கொண்டுவரும்...”
“என்னைத் தேடிவரும் அபாயங்களை நான் சுகமாகத் திரும்பிச் செல்ல விட்டுவிட மாட்டேன். அந்த அபாயங்களையே நான் இந்த வாள் முனையில்தான் சந்திப்பேன். வருகின்ற அபாயங்கள் இந்த வாளின் கூர்மையான நுனியில் மோதிச் சாகத்தான் முடியும்.” இந்த வாக்கியங்களைக் கூறும் போது அந்தப் புதியவனின் கண்கள் நெருப்புக் கோளங்களாகச் சிவந்து மின்னின. ஒருகணம் பாயப் போகிற புலி போலவே மல்லனின் கண்களுக்குத் தோன்றினான் அவன். “அதிருக்கட்டும்! உங்கள் அறக்கோட்டத்தை நடத்தும் பெரிய காராள வேளாளர் தனக்கு அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாதென்று முதலில் என்னைச் சந்தித்தபோது ஒரேயடியாகச் சாதித்தாரே? இப்போது எப்படி என்னை நம்பினார்?” “நீங்கள் சந்தேகத்துக்கு உரியவர் அல்லர் என்று அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம்” என்றான் மல்லன். அவர்கள் பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த ஆல மரத்தடிக்குச் செல்லுகிற வழியில் அங்கங்கே மறைந்திருந்து வழியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஆபத்துதவிகள் அந்தப் புதிய மனிதனோடு தங்களில் ஒருவனான மல்லன் துணை வருவதைக் கண்டு ஐயப்பாடு தவிர்த்தனர். அவர்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது பெரியவர் ஆலமரத்தின் வடபகுதியில் குன்றின் கீழிருந்த புல்வெளியில் இருந்தார். அந்தப் புல்வெளியின் பசுமையில் அப்போது கண் கொள்ளாக் காட்சியாய்ச் சிறுசிறு புள்ளிமான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. மிகவும் சிறியதும் மருண்டு மருண்டு நோக்கும் அழகிய விழிகளை உடையதும் ஆகிய ஒரு புள்ளிமானைத் தடவிக் கொடுத்தபடியே புல்வெளியில் அமர்ந்திருந்த பெரியவர் திடீரென்று தன் கைப் பிடியிலிருந்த மானைத்தவிர மற்றெல்லா மான்களும் தலைதெறிக்க ஓட்டம் எடுப்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தபோது புலித்தோல் அங்கியோடு கூடிய அந்த மனிதனுடன் மல்லன் அங்கே வந்து கொண்டிருந்தான். வந்து கொண்டிருப்பவனுடைய புலித் தோல் அங்கி மேய்ந்து கொண்டிருந்த மான்களை மருட்டி விரட்டுவதை எண்ணி உள்ளுறச் சிரித்துக் கொண்டே, “வா! வா! ‘ஏதடா தென்னவன் மாறன் இன்று வர வேண்டுமே! இன்னும் காணவில்லையே’ என்று நானும் இவ்வளவு நேரமாக உன்னைத்தான் எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னுடைய புலித்தோல் உடையே இங்கு மேய்ந்து கொண்டிருந்த மான்களை விரட்டியதுபோல் களப்பிரர்களையும் இங்கிருந்து விரட்டிவிடப் போதுமானது என்று நினைக்கிறாய் போலிருக்கிறது” என்றார் பெரியவர். மறுமொழி கூறாமல் அவர் முன்னிலையில் ஒரு புலி கிடந்து வணங்குவது போல் தரை மண் தோய வணங்கினான் ‘தென்னவன் மாறன்’ என்று குறிக்கப்பட்ட அந்த மனிதன். அப்போது மிக அருகே தென்பட்ட அவனுடைய புலித்தோல் அங்கியைக் கண்டு பெரியவர் கைகளின் தழுவலில் இருந்த அந்தப் புள்ளி மானும் மருண்டு ஒடத் திமிறியது. அவர் அதை விடுவித்தார். வலது கையை உயர்த்தி அவனை வாழ்த்தினார். தன்னிடம் ‘அவர்கள் இருவரும் பேசும்போது நீ அருகே இருக்க வேண்டாம்’... என்று காராளர் கூறியனுப்பியிருந்ததற்கு ஏற்ப மல்லன் விலகி நின்று கொண்டான். ஆனாலும் பெரியவரையும் அவரைக் காண வந்திருந்த புதியவனையும் தெளிவாகக் கண்காணிக்க முடிந்த தொலைவில்தான் நின்று கொண்டிருந்தான். காராளரும் மல்லனுக்கு அப்படித்தான் சொல்லியனுப்பி இருந்தார். உரத்த குரலை உடையவனாக இருந்ததால் தென்னவன் மாறன் என்னும் அந்தப் புதிய மனிதன் கூறிய மறுமொழிகள் மல்லன் நின்று கொண்டிருந்த இடம் வரையிலும் கேட்டன. ஆனால் மதுராபதி வித்தகர் அவனை வினாவிய வினாக்கள் மட்டும் அவ்வளவு தெளிவாகக் கேட்கவில்லை. “ஐயா! தென்னவன் சிறு மலையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மட்டும் ஈராயிரம் இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்திருக்கிறேன். விற்போர் வல்லமை, வேலெறியும் திறன், மற்போர் ஆண்மை ஆகிய எல்லாத் துறையிலும் தேர்ந்த அந்த ஈராயிரவர் இந்தக் கணமே நீங்கள் கட்டளையிட்டாலும் புறப்பட்டு வந்து சேரத் தயங்கமாட்டார்கள்.” இவ்வளவு உரத்த குரலில் இந்த விஷயத்தை அவன் சொல்லியிருக்கக் கூடாது என்று பெரியவர் அவனைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும் என்று விலகி நின்ற மல்லனாலேயே அநுமானித்துக் கொள்ள முடிந்தது. ஏனென்றால் அடுத்த கணத்திலிருந்து தென்னவன் மாறனின் குரலும் அவனுக்குக் கேட்கவில்லை. பெரியவரிடம் அவன் ஏதோ பேசி வாதித்துக் கொண்டிருப்பதை மட்டும் மல்லன் பார்க்க முடிந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கியைக் கழற்றி வலது தோளின் மேற்புறத்தைப் பெரியவரிடம் காட்டி ஏதோ சொன்னான் தென்னவன் மாறன். பேச்சு வளர்ந்தது. பேச்சின் நடுவே இருந்தாற் போலிருந்து தென்னவன் மாறன் வாளை உருவவே கண்காணித்துக் கொண்டிருந்த மல்லன் பதறிப்போய் நெருங்கிச் சென்றான். ஆனால் அடுத்த கணமே தென்னவன் மாறன் செய்த காரியத்தைக் கண்டு மல்லனுக்குப் புல்லரித்தது, மெய்சிலிர்த்தது. கூசும் மருண்ட கண்களை மூடி மூடித் திறந்தான் மல்லன். |