![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
முதல் பாகம் - அடையாளம் 26. அபாயச் சூழ்நிலை கணிகை இரத்தினமாலை தன் கால்களின் வழியே கொண்டு வந்த மறுமொழியும், விடிவதற்கு முன் நிலவறை வழியே அவசர அவசரமாக வந்து யானைப்பாகன் அந்துவன் தெரிவித்து விட்டுச் சென்ற செய்திகளும் சூழ்ந்திருக்கும் அபாயங்களை நன்றாக எடுத்துக் காட்டின. இரத்தின மாலையின் இருந்த வினாக்களுக்குக் கால்களில் கிடைத்திருந்த மறுமொழிகள் ஓரளவு அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பவை யாகத்தான் இருந்தன. விடைகளுக்குப் பதில் எச்சரிக்கைகள் பெரும்பாலும் கிடைத்திருந்தன என்றாலும் அவை பயனுள்ள எச்சரிக்கைகளாகவே இருந்தன. ‘சோனகர் நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு இறக்குமதியாகும் குதிரைகள் நிறைந்த கப்பல் கொற்கைத் துறைமுகத்திற்கு எப்போது வந்து சேரும்? அப்படி வந்து இறங்கும் குதிரைகளை எப்படி எப்போது கோநகருக்குக் கொண்டு வரப் போகிறார்கள்? கோநகருக்குக் குதிரைகளைக் கொண்டு வரும்போது களப்பிரர்கள் அதற்காகச் செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?’ -ஆகிய வினாக்களைத் தான் இவர்கள் கேட்டிருந்தார்கள். ‘குதிரைகளைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். கொற்கைத்துறையில் கரை இறங்கிய பின்பும் ஒரு மண்டலக் காலத்துக்கும் அதிகமாக அவற்றை அங்கே கொற்கையின் அருகிலுள்ள மணல் வெளிகளிலே பழக்கி வசப்படுத்தப் போகிறார்கள். அப்படிப் பழக்கி வசப்படுத்திய பின்புதான் அவற்றை கோநகருக்குக் கொண்டுவருவதைப் பற்றியே சிந்திப்பார்கள். இப்போது நீங்கள் செய்ய வேண்டிதெல்லாம் சிறிது காலம் மிக எச்சரிக்கையாகவும் தலைமறைவாகவும் இருக்கவேண்டியதுதான். ஒற்றர்கள் இருவர் பிடிபட்டதிலிருந்து களப்பிரர்கள் மிகக் கடுமையாகியிருக்கிறார்கள். எங்கும் எதையும் சந்தேகக் கண்களோடு பார்க்கிறார்கள்’ - என்பதுதான் மறுமொழியாகக் கிடைத்திருந்தது. ஏறக்குறைய இதையேதான் வேறு வார்த்தைகளில் காலையில் வந்த யானைப்பாகன் அந்துவனும் சொல்லிவிட்டுப் போயிருந்தான். தாங்கள் செய்வதற்கிருந்த காரியங்களையும், இந்த மறுமொழியையும் வைத்துச் சீர்தூக்கிச் சிந்தித்தார்கள் அவர்கள். அழகன் பெருமாள் இந்த எச்சரிக்கையையும் இதற்கு முன்பே கிடைத்திருந்த அந்துவனின் எச்சரிக்கையையும் மிகவும் பொருட்படுத்தினான். இளைய நம்பியோ இந்த எச்சரிக்கைகளைப் பற்றி ஒரளவு அலட்சியம் காண்பித்தான். “இந்த ஆண்மையற்ற எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தத் தொடங்கினால் நாம் நெடுங்காலம் இன்னிசையைச் செவிமடுத்துக் கொண்டும் ஆடல் அபிநயங்களை இரசித்துக் கொண்டும் இந்தக் கணிகை மாளிகையிலேயே முடங்கிக் கிடந்து நாட்களைக் கழிக்க வேண்டியதுதான். இன்னும் திரும்பி வந்து சேராத உபவனத்து நண்பர்கள் சிறைப்பட்டு விட்டார்களா, இல்லையா, அவர்கள் நிலை என்ன? என்பதையெல்லாம் கூட அறியவே முடியாது. வீரர்கள் அபாயங்களின் இடையேயும் வெளிப்பட்டு அவற்றை எதிர்கொள்வதுதான் முறை. அலை ஒய்ந்தபின் கடலாட முடியாது. அலை ஒயப் போவதும் இல்லை” என்று கோபம் வெளிப்படையாகத் தெரிகிற குரலிலேயே பேசினான் இளைய நம்பி. அழகன் பெருமாளும் இரத்தினமாலையும் இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. இளையநம்பி சூழ்நிலையின் அபாயங்களை நன்றாக உணரவில்லை என்றே அவர்கள் கருதினார்கள். அழகன் பெருமாள் சாந்தமான குரலிலேயே இளைய நம்பிக்கு மறுமொழி கூறினான்: “ஐயா! உலகியல் அனுபவம் அதிகமுள்ளவன் என்ற முறையில் நான் கூறுவதை நீங்கள் சிறிது பொறுமையாகக் கேட்க வேண்டும். அபாயங்களை வெல்லவேண்டும் என்ற ஆசையில் அபாயங்களிலேயே போய்ச் சிக்கிக் கொண்டு விடக்கூடாது. அலை ஒய்ந்து நீராட முடியாதுதான், என்றாலும் நீராடுவதற்காக அலைகளிலே போய்ச் சிக்கிக் கொண்டு அழிந்துவிடக் கூடாது. அந்துவன் மூலமோ, அரண்மனையில் இருக்கும் நம்மைச் சேர்ந்த ஒற்றர்கள் மூலமோ, மீண்டும் நற்குறிப்பு அறிவிக்கப்படுகிறவரை நாம் இந்த மாளிகையில்தான் மறைந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் பல நாளாக முயன்று செய்த எல்லாச் செயல்களும் பாழாகிவிடும். நம்முடைய அந்தரங்கமான பல செய்திகள் களப்பிரர்களுக்குத் தெரிந்து விடும். நிலவறை வழிகள் கண்டு பிடிக்கப்பட்டு விடும். எல்லா நேரங்களிலும் குமுறிக் கொண்டிருப்பது மட்டும் வீரனின் அடையாளமில்லை. சில நேரங்களில் மிகவும் பொறுமையாக இருப்பதும் வீரனின் இலட்சணம் தான்.” “அழகன் பெருமாள் இலட்சியங்களைக் காட்டிலும் இலட்சணங்களைப் பற்றியே எப்போதும் அதிகம் கவலைப் படுகிறாய் நீ.” “உண்மைதான் ஐயா! ஒரு முதல் தரமான இலட்சியத்தை மூன்றாந்தரமான இலட்சணங்களால் அவசரப்பட்டுத் தொட என்னால் முடியாது. நான் சிலவற்றில் மிகவும் நிதானமானவன். ஆனால், பல ஆண்டுகளாக இங்கேயே கோநகரில் இருந்து களப்பிரர்களின் போக்கை நன்கு அறிந்திருப்பவன். களப்பிரர்களின் மனப்பான்மையைப் பற்றி அந்தரங்கமாகவும் நம்பிக்கையாகவும் எதை அறிய விரும்பினாலும் பெரியவர் மதுராபதி வித்தகர்கூட அதை அடியேன் மூலம்தான் கேட்டறிவது வழக்கம். அந்த நம்பிக்கை இன்று என்மேலே உங்களுக்கும் வேண்டும்...” “நீயும் உன் நிதானமும் இங்கு தவிர்க்கப்படமுடியாமல் இருப்பது எனக்குப் புரிகிறது” என்று வேண்டா வெறுப்பாக மறுமொழி கூறினான் இளையநம்பி. அப்போது இரத்தின மாலையும் அழகன் பெருமாளோடு சேர்ந்து கொண்டாள். “அரண்மனைப் பெண்களிடமும் அந்தப்புரத்திலும் மிகவும் வேண்டியவள் என்று பெயரெடுத்திருக்கும் என்னிடமே நேற்றிரவு சந்தேகப்பட்டுப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்கள். தந்திரமாகவும், நுண்ணறிவுடனும் கைகளை விடுத்து யாராலும் பார்க்க முடியாதபடி உள்ளங் கால்களில் எழுதி வந்ததால்தான் நான் பிழைத்தேன். இல்லா விட்டால் என் கதியே அதோகதி ஆகியிருக்குமோ என்று பயந்திருந்தேன் நான்.” “பெண்கள் பயப்படுகிற விஷயங்களுக்கு எல்லாம் ஆண்களும் பயப்பட வேண்டியிருப்பதுதான் இங்கே பரிதாபத்துக்குரிய காரியம்” என்று இளையநம்பி உடனே வெட்டியது போற் கூறியதைக் கேட்டு அழகன்பெருமாள் வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். ஒரு கோபத்தில் வெடுக்கென்று இப்படிச் சொல்லி விட்டாலும் அடுத்த கணமே இப்படி ஏன் சொன்னோமென்று இளைய நம்பியே தனக்குள் தன் நாவின் துடுக்கைக் கடிந்து கொண்டான். ஆனால், இளையநம்பி கூறியதைக் கேட்டு அழகன் பெருமாள் கோபித்துக் கொண்டதைப் போல் இரத்தினமாலை கோபப்படவில்லை. அவனை ஏறிட்டுப் பார்த்து வாய் நிறையச் சிரித்தாள். கன்னங்கள் சிவந்து கண்களில் நீர் ததும்பும் வரை சிரித்தாள். நடனம் ஆடிவரும் மயில் போல் ஒவ்வோரடியாகப் பாதம் பெயர்த்து நடந்து வந்து அவனெதிரே அவனருகே மூச்சுக் காற்றோடு மூச்சுக் காற்று உராயும் இடைவெளியின் நெருக்கத்தில் நின்று கொண்டாள் அவள். தன்னுடைய மேனியின் மோகன நறுமணங்களை அவன் சுவாசிக்க முடிந்த அண்மையில் நின்று கொண்டு. “ஐயா, திருக்கானப்பேர் வீரரே! நீங்கள் ஒரு விஷயத்தை முற்றிலும் மாற்றிச் சொல்கிறீர்கள். உங்கள் வாக்கியம், ‘ஆண்கள் செய்ய முடியாத பல காரியங்களையே ஆண்களுக்காக இங்கே பெண்கள்தான் சாதித்து கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்றிருக்க வேண்டும். ஏதோ கோபத்தில் வார்த்தைகளை மாற்றிச் சொல்லி விட்டீர்கள்” என்று அவனை நயமாகச் சாடினாள் இரத்தினமாலை. அந்தக் கணிகையின் இந்தச் சொற்கள் மனத்தில் நன்றாக உறைந்து விட்டதன் காரணமாக இளையநம்பி கடுங்கோபமுற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிவிட முற்பட்டபோது, அதுவும் முடியவில்லை. மிகவும் விநயமாக அந்த முயற்சி தடுக்கப்பட்டது. |