முதல் பாகம் - அடையாளம்

27. ஊமை நாட்கள்

     ஆறாக்கனல்போல் சிறி மேலெழும் அடக்க முடியாத சினத்தோடு வெளியேறுவதற்கு இருந்த இளையநம்பியைக் கைகூப்பி வழி மறித்தாள் இரத்தினமாலை. சற்று முன் அவனுக்குக் கடுமையாக மறுமொழி கூறிச் சாடி அவனைக் குத்திக் காட்டிப் பேசிய போது எவ்வளவுக்கு அவள் பெண் புலியாகக் காட்சியளித்தாளோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்போது ஒரு பேதையாகி இறைஞ்சி அவனை மன்றாடினாள் அவள்.

     “கருணை கூர்ந்து நான் பேசியதில் ஏதாவது பிழையிருந்தால் தாங்கள் பொறுத்தருள வேண்டும். இந்த வீட்டிலோ இந்த வீதியிலோ நீங்கள் கோபப்பட்டுப் பயனில்லை. ஆண்களின் கோபமோ, பிடிவாதமோ வெற்றி பெற முடியாத வீதி இது. பெண்கள் புன்னகைகளாலும் பார்வைகளாலும், நிரந்தரமாக வென்று கொண்டிருக்கும் போர்க்களம் இது. ஒருவகைப் பிரியத்தாலும், உரிமையாலும் நான் உங்களிடம் கூறிவிட்ட சில சொற்களைப் பெரிதாக நினைத்து நீங்கள் வைரம் பாராட்டக் கூடாது. உங்கள் அடிமை அழகாகப் பேசி நன்றாக விவாதித்தால் அதில் உங்களுக்குப் பெருமை இல்லையா?”

     “தலைவனாக இருப்பவன்தான் யார் யார் தன் அடிமைகள் என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்கோ அடிமைகளே தங்கள் தலைவன் யார் என்பதையும் கூட முடிவு செய்கிற அளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்...”

     “தலைவன் பெருந்தன்மை உடையவனாக இருந்தால் அடிமைகளும்கூடச் சுதந்திரமாய் இருக்கமுடியுமே!” இந்தச் சொற்களைக் கேட்டு அவளைச் சுட்டெறித்து விடுவதுபோல் ஏறெடுத்துப் பார்த்தான் இளையநம்பி.

     அவளை அவனால் வெறுக்கவும் முடியவில்லை. தவிர்க்கவும் முடியவில்லை. அவன் வழியின் குறுக்கே அவள் நின்றாள். துணிவாகவும் வாதத் திறமையுடனும் நேருக்கு நேர் நின்று பேசிவிட்டாள் என்பதற்காக ஒருத்தியை வெறுப்பது நியாயமில்லை என்று அவன் மனத்திற்கே புரிந்தாலும் சுளிரென்று அறைந்தாற்போல் அவள் கூறிய வார்த்தைகளின் சூடு இன்னும் ஆறாமல் அவன் செவிகளில் இருக்கத்தான் செய்தது. அதை அவனால் மறக்கவே முடியவில்லை.

     அவள் பேசியிருந்த வார்த்தைகள் அவனுடைய நெஞ்சின் மென்மையிலே இன்னும் உறுத்திக் கொண்டிருந்தன. அவள் கண்களின் பார்வையும், சிரிப்பின் நளினமும் அவனைச் சினம் அடையவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அவள் அவன்முன் மண்டியிட்டு மன்றாடத் தொடங்கியிருந்தாள்.

     கடைந்தெடுத்துத் திரட்டிய வெண்ணெயாற் செய்தது போன்ற மென்மையும் குளிர்ச்சியும் வாய்ந்த இரத்தின மாலையின் கைவிரல்களைத் தன் பாதங்களின் மேல் உணர்ந்தான் அவன். வாதிடுவதில் இருந்த உறுதி வணங்குவதிலும் இருந்ததைக் கண்டு ஒரு கணம் அவன் அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தயங்கினான். தன்னுடைய வார்த்தைகளுக்குப் பதில் வார்த்தைகள் சொல்லி உடனே குத்திக்காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவள் இப்படிப் பேசியிருந்தாலும், இப்படிப் பேசுவதற்கு முன் அவள் தனக்காகச் சாதித்துக் கொண்டு வந்திருந்த சாதனைகளை அவனும் மதித்தே ஆக வேண்டியிருந்தது. சாதனைகள் மறுக்க முடியாமல் இருந்தன.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.