முதல் பாகம் - அடையாளம் 28. கபால மோட்சம் அழகன் பெருமாள் மீண்டும் அதையேதான் சொன்னான். ஆனால், கோபப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் சொன்னான்: “காரி, கழற்சிங்கன் முதலிய நால்வரும் பத்திரமாக இந்த மாளிகைக்குத் திரும்பி வந்து சேரக் கூடியவர்கள் என்பதைப் பொறுத்து இப்போதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நகரத்தின் பரபரப்பான சூழ்நிலைக்கேற்ப அவர்கள் முயற்சியையும் மீறி ஏதாவது நடந்திருக்குமோ என்றுதான் இப்போது சந்தேகப்படுகிறேன்.” இளையநம்பி இதற்கு மறுமொழி கூறவில்லை. புன்முறுவல் பூத்தான். சிறிது நேரம் பொறுத்து அழகன் பெருமாளை நோக்கி, “உன்னிடம் நம்பிக்கையும் இருக்கிறது! சந்தேகமும் இருக்கிறது! இந்த இரண்டில் எது எப்போது இருக்கிறது என்பதைத்தான் உன்னோடு பழகுகிறவர்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை” என்றான் அவன். “சொல்லப் போனால் வாழ்க்கையே இந்த இரண்டிற் கும் நடுவில் எங்கோதான் இருக்கிறது” - என்று அவர்களுடைய உரையாடலில் குறுக்கிட்டாள் இரத்தினமாலை. அவளுடைய இந்த வாக்கியம் தன்னையும் அழகன் பெருமாளையும் ஒன்று சேர்த்து வைக்கும் தொனி உடையதாக இருப்பது இளையநம்பிக்குப் புரிந்தது. அவன் உள்ளுற நகைத்துக் கொண்டான். மதுராபதி வித்தகரின் பயிற்சிக்குப் பின் ஓர் இளம் கணிகையும் கூடத் தேர்ந்த அரச தந்திரியா யிருப்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. அதேசமயத்தில் முழுவேகத்துடனே குத்திக் காட்டுவது போலவோ சாடுவது போலவோ ஏதாவது பேசினால்தான் அங்கிருந்து கோபித்துக் கொண்டு போய் விடக் கூடும் என்ற எச்சரிக்கையும் அவளுடைய பேச்சுக்களில் இப்போது கலந்திருப்பதை அவன் உணர முடிந்தது. ‘இவ்வளவு பெரிய சாகஸத்துக்குரியவளை உணர்வின் வசப்பட்டுத் தவறாகப் புரிந்து கொள்ள இருந்தோமே’ - என்று இப்போது, அவனுக்கே வருத்தமாகவும் வெட்கமாகவும்கூட இருந்தது. கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்ட தினத்தன்று அரண்மனைக்குப் போய் விட்டு வந்தபின், இரத்தினமாலை மறுபடி அரண்மனைக்குப் போகாததால் அரண்மனை ஒற்றர்கள் மூலமும் புதிதாக எதுவும் தெரியவில்லை. உபவனத்து முனையிலும், வெள்ளியம்பல முனையிலும் யாரும் புகுந்து புறப்பட்டு வர முடியாததாலோ என்னவோ நிலவறை மூலமாகவும் செய்திகள் தெரியவில்லை. அந்த மாளிகையில் அவர்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. இப்படியே பல நாட்கள் கழிந்தன. உணவு முடிந்த பின் அன்றிரவு முதல் முறையாக அழகன் பெருமாளும், இளையநம்பியும், இரத்தினமாலையும் மாளிகையின் நடுக்கூடத்தில் அமர்ந்து வட்டு ஆடிக் கொண்டிருந்தனர். குறளன் சந்தனம் அறைக்கும் பகுதிக்கு உறங்கப் போயிருந்தான். விளையாடத் தொடங்கியவர்கள் இரவு நெடு நேரமாகியும் நிறுத்தாமல், ஆடிக் கொண் டிருந்தார்கள். நள்ளிரவுக்கு மேலும் ஆகிவிட்டது. விளையாட்டில் தொடர்ந்து இரத்தின மாலையின் காய்களே வென்று கொண்டிருந்தன. “ஆட்டத்தின் காய்கள்கூட அழகிய பெண்களிடம் மயங்கி விடுகின்றன” என்றான் இளையநம்பி.
“ஆனால் ஆடுபவர்கள் ஒருபோதும் மயங்கு வதில்லை” என்று உடனே மறுமொழி கூறிவிட்டு, அவனை ஒரக் கண்களால் பார்த்தாள் இரத்தினமாலை. அழகன் பெருமாள் இதைக் கேட்டுச் சிரித்தான். அப்போது யாரோ ஓடிவரும் ஓசை கேட்டு விளையாட்டில் கவனமாயிருந்த மூவருமே திடுக்கிட்டுத் தலைநிமிர்ந்தனர்.
கைகால் பதறி நடுங்கக் குறளன் தூக்கம் கலைந்து சிவந்த கண்களோடு அவர்கள் எதிரே வந்து நின்றான். உடனே பேசுவதற்குச் சொற்கள் வராமல் சந்தனம் அறைக்கும் பகுதியைச் சுட்டிக்காட்டிப் பயத்தோடு வார்த்தைகளை அரற்றினான் அவன். உடனே விளையாட்டை நிறுத்தி விட்டு மூவருமே எழுந்து விட்டனர். அவனோடு சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றதும் அங்கே நடுவாக இருந்த சந்தனக் கல்லருகே காதை வைத்து உற்றுக் கேட்டு விட்டு, அழகன் பெருமாளையும் கீழே படுத்தாற்போல் சாய்ந்து அதைக் கேட்கச் சொல்லிச் சைகை செய்தான் குறளன். நால்வரிடையேயும் எதையோ எதிர்பார்க்கும் பேச்சற்ற மெளனம் வந்து சூழ்ந்தது. அழகன் பெருமாள் சந்தனக் கல்லை ஒட்டிச் செவியைச் சாய்த்துக் கேட்டபின் இளையநம்பியையும் அப்படியே கேட்குமாறு குறிப்புக் காட்டினான். அவனும் அவ்வாறே செய்தான். பின்பு இரத்தினமாலையும் கீழ்ப்பக்கமாகக் குனிந்து உற்றுக் கேட்டாள். கீழே நிலவறைப் படிகளில் யாரோ நடக்கும் ஒலி கேட்டது. அப்படி நடப்பவர் வேண்டியவராகவோ, வழிதெரிந்தவராகவோ இருந்தால் அடையாளமாகக் கல்லைத் தூக்கிக் கொண்டு மேலே வந்துவிட முடியும். அப்படி வராமல் கீழேயே நடப்பதிலிருந்து அந்நியன் யாரேனும் வந்து விட்டானோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்தது. ஒருவனுடைய காலடி ஓசைதான் கேட்கிறது என்றாலும் பின்னால் வரிசையாகப் பல பூத பயங்கரப் படை வீரர்கள் நிற்கலாமோ என்று அழகன் பெருமாளின் கற்பனையில் ஒரு சந்தேகம் மருட்டியது. பல நாட்களாக அந்த வழியின் மூலம் அங்கே யாரும் வராததாலும், வந்திருப்பவரும் உடனே அடையாளமாக மேல் வாயிலின் மூடுகல்லைத் தூக்காமல் கீழே படிகளிலேயே தடம் தெரியாமல் நடமாடுவதாலும் அவர்கள் சந்தேகப்படுவதற்கும், தயங்குவதற்கும், பயப்படுவதற்கும் நிறைய நியாயமிருந்தது. ஒரு தாக்குதலை எதிர்கொள்ள ஆயத்தமாக வேண்டிய நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். வருகிறவன் அந்நியனாயிருந்து அவன் இந்த வழியாக வெளியேறி இப்படி ஒரு வழி இருப்பதைக் கண்டு உயிர் பிழைத்து விடுவானாயின் அப்புறம் தாங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். மின்வெட்டும் நேரத்தில் இளையநம்பி ஒரு திட்டமிட்டான். அந்த அறையின் ஒரு மூலையில் கருமரத்தில் செய்த இரும்புப் பூண்பிடித்த உலக்கைகள் இரண்டு இருந்தன. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளும்படி அழகன் பெருமாளுக்குக் குறிப்புக் காட்டிவிட்டு இன்னொன்றைத் தான் கையில் எடுத்துக் கொண்டு சந்தனக்கல்லை மேற்புறம் இருந்தபடியே மெல்லத் தூக்கி நகர்த்தும்படி குறுளனுக்கும் இரத்தின மாலைக்கும் சைகை செய்தான் இளையநம்பி. அவன் திட்டப்படி வந்திருப்பவனோ, வந்திருப்பவர்களோ எவ்விதமாகவும் உயிர் தப்பமுடியாது. இந்த வழி கண்டுபிடிக்கப்பட்டுக் களப்பிரர்களிடம் அகப்பட்டு விட்டால் தங்களுடைய எல்லா வழிகளும் அடைப்பட்டு விடும் என்ற இறுதிப் பாதுகாப்பு உணர்வின் எல்லையில் அவர்கள் அப்போது மிக எச்சரிக்கையோடு இருந்தார்கள். கீழே இருப்பவன் ஏதோ வலியில் அரற்றுவது போன்ற தீன ஒலிகளுடன் மூச்சு இரைக்க இரைக்க நடந்து கொண்டிருப்பதைக் கூட அவர்கள் வெளிப்புறம் கேட்க முடிந்தது. வந்திருப்பவன் நிலவறை வழிக்கு முற்றிலும் புதியவனாக இருந்தாலொழிய இப்படி மூச்சு இரைக்க நேருவது சாத்தியமில்லை என்றும் அநுமானம் செய்தார்கள் மேலே இருந்தவர்கள். எதிரெதிர்ப் பக்கங்களில் உலக்கைகளோடு அழகன் பெருமாளும், இளையநம்பியும் நின்று கொண்டபின் மேற்புறம் மூடியிருந்த சந்தனக்கல்லை மெல்ல நகர்த்தி எடுத்தார்கள் குறளனும் இரத்தினமாலையும். ஓரிரு கணங்கள் மயான அமைதி நிலவியது அங்கே. கீழே நிலவறைத் துவாரத்தின் இருளிலிருந்து யாரும் மேலே வரவில்லை. ஆனால் உட்புறம் மூச்சுவிடுகிற ஒலி கோரமாகக் கேட்டது. மேற்பக்கம் கைகளில் உலக்கைகளோடு நின்ற இருவரும் இந்த வழியாக வெளியே நீட்டப்படும் தலைக்குக் கபால மோட்சம் அளிப்பதென்ற உறுதியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோதே கீழ்ப்புறமிருந்து வெண்மையாக ஏதோ மேல் நோக்கி எழுவது தெரிந்தது. வந்திருக்கும் மனிதனின் தலைப்பாகை என்று அதை அவர்கள் நினைத்தனர். ஆனால்... என்ன கோரம் பச்சை மூங்கில் பிரம்பில் ஒரு பயங்கரமான கபாலமே மெல்ல மெல்ல மேலே வந்தது. எதிர்பாராதவிதமாக மேலே கழியில் கோத்த மண்டை ஒடு வரவே முந்திக்கொண்டு அதை அடிப்பதற்கு ஓங்கியிருந்த உலக்கைகள் திடுக்கிட்டுப் பின் வாங்கின. இருட்பிலத்திலிருந்து மேல் நோக்கி வந்து ஆடும் அந்தக் கபாலம் அவர் களை நோக்கிக் கோரமாக நகைப்பது போலிருந்தது. கீழே அந்த மூங்கில் பிரம்பைப் பிடித்திருந்தவனின் கை நடுங்கியதாலோ என்னவோ மேலே அந்தக் கபாலமும் நடுங்கி ஆடியது. பயத்தினால் இரத்தினமாலை இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள். எல்லாருக்கும் மேனி புல்லரித்திருந்தது. தொடர்ந்து வேறெதுவும் நிகழாமல் அந்தக் கபாலமே கழியில் ஆடிக்கொண்டிருக்கவே அழகன் பெருமாள், “ஒரு தீப்பந்தம் ஏற்றிக் கொண்டு வா” என்று மெல்லிய குரலில் குறளனிடம் கூறினான். குறளன் உள்ளே விரைந்தான். சில கணங்களில் தீப்பந்தத்தோடு அவன் திரும்பி வந்தான். |