முதல் பாகம் - அடையாளம்

3. காராளர் வீட்டு விருந்து

     “ஐயா! இது என்ன கோரம்?” என்று கேட்க நினைத்து நா எழாமல் அவன் மருண்டிருப்பதைப் பார்த்துத் தம்முடைய வெண்பற்கள் தெரியச் சிரித்தார் அவர். அந்த அகன்ற நெற்றியில் உணர்ச்சிகளைப் படிக்க முடியாமல் திகைத்தான் அவன்.

     “நீ பயப்படுவாய் என்று எனக்குத் தெரியும்! தங்கத்தைப் புடம் போடுவது போல் இந்த உடலைப் புடம் போட்டு எடுத்திருக்கிறேன். எனக்கு எதுவும் கெடுதல் வரமுடியாது.”

     அவருடைய கழுத்திலும் தோள்களிலும் முழங்கால்களிலும் கன்னங்கரிய நாகசர்ப்பங்கள் நெளிந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த புற்றின் துவாரங்களிலே மேலும் சில சர்ப்பங்கள் இருள் வழிவது போன்ற நிறந்த்தில் நெளிந்து கொண்டிருந்தன. கொடிய நஞ்சு அடங்கியது என்று கருதப்படும் காஞ்சிரங்காய் ஒன்றைக் கடித்துத் தின்று கொண்டிருந்தார் அவர்.

     எரிகின்ற தழல் போன்ற நிறத்தைக் கொண்டிருந்த மேனியில் கரிய சர்ப்பங்களையும் சேர்த்துப் பார்த்த போது ஓர் அசைப்பில் முதல் நாள் தோன்றியது போலவே ஆலமர் கடவுளின் கோலம் இளைய நம்பியின் கண்களுக்குத் தெரிந்தது. காலங்கள் செய்யும் மூப்புக்களை வென்று காலங்களையே மூப்படையச் செய்யும் வைரம் பாய்ந்த அந்த மேனியின் இரகசியம் அவனுக்கு இப்போது ஓரளவு புரிந்தது.

     பாட்டனார் சொல்லியிருந்த பெரியவரின் வயதிலிருந்து அவர் மூத்துத் தளர்ந்து போயிருக்கக்கூடும் என்று திருமோகூரில் நுழைந்த வேளையில் தனக்குத் தானே செய்து கொண்ட அநுமானம் எவ்வளவு பிழையானது என்பதை இப்போது இளைய நம்பி உணர்ந்தான். அந்த உடலில் மூப்பின் சாயல் தெரிந்தது; ஆனால் தளர்ச்சியின் சாயல் கூடத் தெரியவில்லை.

     “ஐயா! ‘சுடச் சுடரும் பொன்போல் ஒளிரும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’ - என்று நம்முடைய செந்நாப் போதர் கூறியருளியிருக்கும் குறளுக்கு இப்போது அடியேனுக்கு நன்றாகப் பொருள் புரிகிறது. இத்தனை மூப்பிலும் தங்கள் திருமேனி பொன் தழலாக மின்னுவது பெரிய சித்தி ஐயா!”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.