முதல் பாகம் - அடையாளம்

30. சாகஸப் பேச்சு

     “நீங்கள் ஒப்புக் கொண்டால் இப்போதும்கூட நான் ஒர் உதவி செய்யமுடியும்!... இன்று மாலையிலேயே இருந்த வளமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபாட்டைச் செய்தபின் உங்களுக்காக யானைப் பாகன் அந்துவனைக் கண்டுவர முடியும்.”

     “இப்போதுள்ள நிலையில் அது அபாயகரமானது” - என்றான் அழகன் பெருமாள்.

     “நீண்ட நாட்களாக இங்கே வராததிலிருந்து அந்துவனைப் பற்றியே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. அவனுக்கும் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்னவோ?” என்று ஐயத்தோடு கூறினான் இளைய நம்பி. அதைக் கேட்டுக் கலீரென்று சிரித்தாள் இரத்தினமாலை. இளையநம்பி உடனே கடுமையாக அவளை நோக்கிக் கேட்டான்:

     “ஏன் சிரிக்கிறாய்?”

     ஒருகணம் தயங்கியபின் பருகிவிடுவது போலவும், ஆவல் நிறைந்து ததும்பும் தன் விழிகளின் ஓரங்களால் அவனுடைய முகத்தைப் பார்க்க முயன்றபடியே-

     “அந்துவனைப் பற்றி நாம் இங்கிருந்து கவலைப் படுவது போல் நம்மைப் பற்றி அவனும் அங்கிருந்து கவலைப்படலாம் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது” என்றாள்.

     “அப்படியானால் அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடும் என்று நினைக்கவும் அவசியமில்லை என்கிறாயா நீ?”

     “சந்தேகமென்ன? நான் இப்போது சென்றாலும் யானைக் கொட்டாரத்தில் அவனைக் காண முடியும்!”

     “தெய்வ வழிபாட்டுக்குப் போகிற நீ என்ன காரணத்தோடு யானைக் கொட்டாரத்தில் போய் அவனிடம் பேசிக் கொண்டு நிற்க முடியும்?”

     “அது நான் படவேண்டிய கவலை. என்னால் முடியும் என்பதால்தான் நான் கவலைப்படாமல் போய்த் திரும்ப முன் வருகிறேன். ”

     “இப்படி வெடுக்கென்று மறுமொழி கூறும்போதெல்லாம்தான் உன்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது இரத்தினமாலை!”

     “ஆகா! நிறையக் கோபித்துக் கொள்ளுங்கள். எனக்கும் அது பிடிக்கிறது. திருக்கானப்பேர்க்காரர்கள் முகங்களில் புன்சிரிப்பைவிடக் கோபம்தான் அழகாக இருக்கும் போல் தோன்றுகிறது.”

     “அப்படியானால் என் கோபத்திற்கு நீ பயப்பட மாட்டாய்! அல்லவா?”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.