முதல் பாகம் - அடையாளம்

34. மணக்கும் கைகள்

     மாளிகையில் எல்லாரும் உறங்கிவிட்ட நிலையில் தனியாக இரத்தினமாலையோடு மேல் மாடத்திற்குச் சென்றான் அவன். தன்னை மேல் மாடத்திற் கொண்டு போய் விட்டுவிட்டு, அவள் உடனே திரும்பி விடுவாள் என்று நினைத்தான் இளையநம்பி. அவளோ மேல் மாடத்தில் இருந்த பள்ளியறையை ஒட்டி அமைந்த நிலா முற்றத்தில் நின்று அவனை விட்டுப் பிரிய மனமில்லாதவள் போல் உரையாடிக் கொண்டிருந்தாள்.

     “தென்றல் பொதிகை மலையில் பிறக்கிறது. ஆனால் மதுரைக்கு வரும்போது அது இன்னும் அதிகச் சிறப்படைகிறது. அதிகப் புகழ் பெற்று விடுகிறது.”

     “அதாவது மதுரைத் தென்றல் தமிழ்த் தென்றலாக வீசுகிறது என்றுதானே சொல்கிறாய்? ஆம். ஒரு தென்றல் இன்னொரு தென்றலுடன் இங்கே கூடுகிறது. மொழிகளிலே தென்றலாகிய தமிழ் காற்றின் இளவரசியாகிய மந்தமாருதத்தைச் சந்திக்கும் இடம் இந்த நான்மாடக்கூடல் நகரம்தான்.”

     “நீ கூறுவதை ஒப்புக் கொள்கிறேன் இரத்தினமாலை! ஆனால் ஒரு சிறு பாடபேதம். இந்த இடத்தில் இப்போது இரண்டு தென்றல்கள் இருப்பதாக நீ சொல்கிறாய். ஆனால் மூன்று தென்றல்கள் இங்கு சூழ்ந்து கொண்டு குளிர்விப்பதை இப்போது நான் காண்கிறேன்.”

     “அது எப்படி?”

     “பொதியமலைத் தென்றலாகிய மந்தமாருதம்! மதுரைத் தென்றலாகிய தமிழ்! அழகுத் தென்றலாகிய நீ!”

     இதைக் கேட்டு அவள் தலை குனிந்தாள். அவளது வலது கால் கட்டைவிரல் தரையில் மனத்தின் உணர்வுகளைக் கோலமிட்டுப் பார்க்க முயன்றது. ‘நீ வென்று கொண்டிருக்கிறாய், வென்று கொண்டிருக்கிறாய்’ என்று அவளுடைய மனம் அவளை நோக்கி உள்ளேயே குதூகலக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘உன் வெற்றியை உன் முன் தோற்றுப் போய்க் கொண்டிருப்பவனுக்கே புரிய விடாமல் அவனே வென்றிருப்பதுபோல் உணரச் செய்!’ என்றும் அவள் உள் மனம் அவளை எச்சரித்துக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் அவள் உணர்ச்சிகளால் மிகவும் நெகிழ்ந்து, மலர்ந்து, தளர்ந்து பலவீனமான அனிச்சம் பூப்போல் ஆகியிருந்தாள். தன்னால் அழகுத் தென்றல் என்று புகழப்பட்ட அந்த மந்த மாருதம் தன்னுடைய தோள்களையும் மார்பையும் தழுவி வீசிக் குளிர்விப்பதை இளையநம்பி உணர்ந்தான்.

     இனிமையாக யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பட்டாற் போன்ற அவளுடைய மெல்லிய நீண்ட பொன் விரல்களைத் தன் விரல்களோடு இணைத்துக் கொண்டான் அவன். இணைப்பிற்கும் அணைப்பிற்கும் ஆளான கைகளை விட்டுவிடாமல்,

     “இந்தக் கைகளில் சந்தனம் மணக்கிறது பெண்ணே!” என்று மெல்லிய குரலில் அவள் செவியருகே கூறினான் அவன். பொன்னாற் செய்த பேரியாழ் போன்ற அவள் உடல் இப்போது இளையநம்பியின் அரவணைப்பில் இருந்தது. அவள் இனிய குரலில் அவன் கேட்க உழற்றினாள்:-

     “இந்தப் பரந்த மார்பிலும், தோள்களிலும் என் கைகளினால் அள்ளி அள்ளிச் சந்தனம் பூச வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது அன்பரே!”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.