முதல் பாகம் - அடையாளம் 37. கொல்லனின் சாதுரியம் திருமோகூர்க் கொல்லன் அந்த இரண்டாவது ஓலையைத் தன்னிடம் கொடுப்பதற்கு அவ்வளவு தூரம் ஏன் தயங்குகிறான் என்பது இளைய நம்பிக்குப் புதிராயிருந்தது. ஆனாலும் அந்தத் தயக்கமே ஆவலை வளர்ப்பதாகவும் இருந்தது. தன்னைச் சுற்றி இருந்தவர்களை ஒருமுறை பார்வையால் அளந்த பின் தன்னைத் தொடர்ந்து வருமாறு அவனுக்குக் குறிப்புக் காட்டிவிட்டுச் சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்றான் இளையநம்பி. கொல்லன் பின் தொடர்ந்து வந்தான். ஆனால் சந்தனம் அறைக்கும் பகுதியிலும் அவர் களுக்குத் தனிமை வாய்க்கவில்லை. அங்கே நிலவறை வழிக்குக் குறளன் காவலாக இருந்தான். குறளனைச் சில கணங்கள் புறத்தே விலகி இருக்குமாறு வேண்டிக் கொண்ட பின் திருமோகூர்க் கொல்லனை உள்ளே அழைத்தான் இளைய நம்பி, உள்ளே வந்ததுமே இளையநம்பி எதிர்பார்த்ததுபோல் உடனே ஓலையை எடுத்து நீட்டி விடவில்லை அவன். “ஐயா! இந்த ஓலையைக் கொடுப்பதற்கு முன் நான் ஏன் இவ்வளவு எச்சரிக்கையும், பாதுகாப்பும் தேடுகிறேன் என்று நீங்கள் வியப்பு அடையலாம். இதை யார் என்னிடம் சேர்த்தார்களோ அவர்களுடைய விருப்பம் அப்படி. அந்த விருப்பத்தைக் காப்பாற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன்.” “புரியும்படியாக விளக்கிச் சொல்! ‘நீ என்ன கடமைப் பட்டிருக்கிறாய்? யாருக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்?’ என்பதை எல்லாம் என்னால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.” “அரசியற் கடமைகளைவிட அன்புக் கடமை சில வேளைகளில் நம்மை அதிகமாகக் கட்டுப்படுத்தி விடுகிறது ஐயா!” “பாயிரமே பெரிதாகயிருக்கிறதே அப்பனே! சொல்ல வேண்டியதைச் சொன்னால் அல்லவா இவ்வளவு பெரிய பாயிரம் எதற்கென்று புரியும்?” “கோபித்துக் கொள்ளாதீர்கள் ஐயா! பெரியவரைக் காண்பதற்கு அவர் இருப்பிடம் செல்லுமுன் மாளிகையோடு மாளிகையாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் திருமோகூர்ப் பெரிய காராள வேளாளரைச் சந்திக்க முயன்றேன். பூத பயங்கரப் படையினர் முதலில் கடுமையாக மறுத்தார்கள். அந்தப் படையினரை என்னை நம்ப வைப்பதற்காக என் உலைக் களத்தில் அவர்கள் வாள், வேல்களைச் செப்பனிடும் பணிகளை மறுக்காமற் செய்திருந்தேன். மேலும் ‘காராளருடைய உழுபடைகளுக்கு எல்லாம் கலப்பைக்குக் கொழு அடிப்பவன் என்ற முறையில் அவரைப் பார்க்க வேண்டுமே தவிரச் சொந்த முறையில் அவரிடம் எனக்கு எந்த அரசியல் வேலையும் இல்லை! சந்தேகம் கொள்ளாமல் என்னை அவரைக் காணவிட வேண்டும்’ என்று அவர்களிடம் மன்றாடினேன். நான் அவ்வளவு மன்றாடியபின் ‘கால் நாழிகைப்போது அவரைக் காணலாம்’ என்று அவர்கள் இணங்கினார்கள். நான் அவ்வாறு பெரிய காராளரைச் சந்தித்தபோது அவருடைய திருக்குமாரி செல்வப் பூங்கோதையும் உடனிருந்தாள். நான் அந்த மாளிகையிலிருந்து வெளி யேறும்போது, பெரியகாராளர் மகள் என்னருகே வந்து ‘இந்த விஷயம் என் தந்தைக்கோ பெரியவருக்கோ தெரியக்கூடாது. தயைகூர்ந்து நான் தரும் ஓலையைத் திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரரிடம் சேர்த்துவிட முடியும் அல்லவா?’ என்று பரம ரகசியமாக என்னிடம் உதவிக்கோரினாள். அதற்கு, ‘அம்மா! இப்போது நான் கூடல் மாநகருக்குச் செல்லப் போவதில்லை. இரவோடு இரவாகப் பயணம் செய்து பெரியவர் மதுராபதி வித்தகர் புதிதாக அஞ்ஞாத வாசம் செய்யும் இடத்திற்கு வரச் சொல்லிக் கட்டளை வந்திருக்கிறது. மீண்டும் எப்போதாவது நான் கூடல் மாநகருக்குச் செல்லவேண்டியதாக நேர்ந்தால் அப்போது உனக்கு இந்த உதவியைச் செய்வேன்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன். பெரியவரைச் சந்தித்த பின் அவரே தம்முடைய ஓலையை முதலில் பெரியகாராளரைப் படிக்கச் செய்த பின்புதான் மதுரை மாநகருக்கு எடுத்துச் சென்று தங்களிடம் ஓலையைக் காண்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனால் நான் மீண்டும் திருமோகூரை அடைந்து அரிய முயற்சி செய்து கட்டுக் காவலில் இருந்த பெரியகாளாரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் தந்தைக்கும் தெரியாமல் இந்த ஓலையை என்னிடம் கொடுத்து உங்களிடம் சேர்த்துவிடச் சொல்லி அந்தப் பெண் கண்களில் நீர் நெகிழ வேண்டினாள். அந்தப் பெண்ணின் கைகளால் காராளர் வீட்டில் எவ்வளவோ நாட்கள் நான் வயிறார உண்டிருக்கிறேன் ஐயா! அவள் கண்களில் நீரைப் பார்த்ததும் என் மனம் இளகிவிட்டது. அவளுடைய வேண்டு கோளை நான் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அவள் கொடுத்த ஓலையையும் நான் வாங்கிக் கொண்டேன். பெரியவர் கொடுத்த ஓலை, நீங்கள், நான் காராளர், அழகன்பெருமாள் எல்லாரும் அறிந்தது. எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் இந்த ஓலை இதை எழுதியவரைத் தவிர நீங்கள் மட்டுமே அறியப்போவது. உங்களுக்கு மட்டுமே உரியது.” சிரித்துக்கொண்டே பட்டுக்கயிறு இட்டுக்கட்டிய அந்த இரண்டாவது ஓலையை எடுத்து இளைய நம்பியிடம் நீட்டினான் அவன். “இவ்வளவு அரிய முயற்சிகளும், செய்திகளும் அடங்கிய ஓலையையா, அவ்வளவிற்கு முதன்மையான தல்ல என்று தொடக்கத்தில் என்னிடம் கூறினாய் நீ?” என்று வினாவியபடி கொல்லன் கொடுத்த ஓலையை வாங்கினான் இளையநம்பி. திருமோகூர்க் கொல்லனும் தயங்காமல் உடனே அதற்கு மறுமொழி கூறினான்: “தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் ஐயா! ஒரு காரணத்துக்காகத் தங்கள் நன்மையையும், பெரிய காராளரின் மகளுடைய நன்மையையும் நினைத்தே நான் முதலில் எல்லார் முன்னிலையிலும் அப்படிச் சொல்லியிருந்தேன். சுற்றி நின்று கொண்டிருந்த மற்றவர்கள் கவனம், ‘இந்த இரண்டாவது ஓலை என்னவாக இருக்கும்?’ என்று இதன் பக்கம் திரும்பக் கூடாது என்பதற்காகவே, அவ்வளவிற்கு இது முதன்மையானது அல்ல என்று எல்லாரும் கேட்கக் கூறியிருந்தேன். மற்றவர்கள் கவனம் எல்லாம் உங்களிடம் நான் முதலில் படிக்கக் கொடுத்த பெரியவரின் கட்டளை ஓலையைப் பற்றியதாக மட்டுமே இருக்கட்டும் என்பதற்காக நான் இந்தத் தந்திரத்தைச் செய்தேன். இதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்குப் பதிலாக நீங்களே குறை சொல்கிறீர்களே ஐயா?” “இன்னும் சிறிது நேரம் உன்னைப் பேசவிட்டால் எது எதற்காக நான் உன்னைப் பாராட்ட வேண்டியிருக்குமோ அதற்கெல்லாம் எனக்கு வாய்ப்பே இல்லாமல் நீயாகவே உன்னைப் பாராட்டிக்கொண்டு விடுவாய் போலிருக்கிறதே? பாராட்டை எதிர்பார்க்கலாம். ஆனால் வற்புறுத்தவோ, கோரிக்கை செய்யவோ கூடாது அப்பனே!” “இப்படிக் காரியங்களுக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று முடிவு செய்த முதல் நாளிலிருந்தே அதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன் ஐயா! ஒரு விளையாட்டுக்காக அப்படி வேண்டியதை நீங்கள் என் விருப்பமென்று எடுத்துக் கொண்டு விடக் கூடாது.” “விளையாட்டு இருக்கட்டும்! இந்த ஓலையைப் படிக்குமுன் எனக்குச் சில நிலைமைகள் தெரியவேண்டும், சொல்வாயா?” “தாங்கள் கேட்பவற்றிற்குப் பணிவோடும் உண்மையோடும் மறுமொழி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன் ஐயா!” “பெரியவர் இப்போது மாறிப்போய்த் தங்கியிருக்கும் ஊரையோ, இடத்தையோ எனக்கு மட்டும் சொல்லேன். உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு...” “தங்களைவிட நான் பெரியவருக்கு இன்னும் அதிகமாகக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இப்போது தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது என்னைக் கேட்பதுபோல்தான் பெரிய காராளரும் பெரியவருடைய ஓலையைப் படித்து முடித்ததும் என்னைக் கேட்டார். அவரிடமும் இதே மறுமொழியைத் தான் நான் கூறினேன். பெரியவரே யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருக்கும் ஒன்றைத் தெரிந்து கொள்ள முயல்வது உங்களுக்கு அழகில்லை...” “அது போகட்டும் நீ கருங்கல்லைப் போன்றவன். உன்னைப் போன்ற கருங்கல்லிலிருந்து நார் உரிக்க முடியாது. பெரிய காராளர் மாளிகையைக் காவலிருக்கும் பூதபயங்கரப் படை வீரர்களால் அவருக்கு ஏதேனும் கெடுதல்கள் உண்டா? இல்லை வெறும் காவல் மட்டும் தானா?”
“கெடுதல்கள் எதுவும் கிடையாது சொல்லப் போனால் காராளரை அவர்கள் இன்னும் மதிக்கவே செய்கிறார்கள் என்று தெரிகிறது. காராளர் வீட்டைச் சுற்றி அவர்கள் விரித்திருக்கும் வலை காராளருக்காக அல்ல.”
“பின் யாருக்காக என்று நினைக்கிறாய்?” “உங்களுக்காக, எனக்காக, இன்னும் அவரைத் தேடி வந்து போகிறவர்களில் யார் யார் களப்பிரர்களுக்கு எதிரிகளோ அவர்கள் எல்லாருக்காகவும் தான்!” “அப்படியானால் உன்னை ஏன் இன்னும் அவர்கள் ஆபத்தானவனாகக் கருதவில்லை?” “அது என் சாதுரியத்தையும் அவர்களுடைய சாதுரியக் குறைவையும் காட்டுகிறது.” “இனி என்னை நம்பிப் பயனில்லை என்று இப்போது உன்னை நீயே புகழ்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது அப்பனே!” “வஞ்சப் புகழ்ச்சி எனக்கு வேண்டியதில்லை ஐயா! இன்றுவரை களப்பிரர்கள் நம்பும்படியாக நான் நடந்து கொள்கிறேன். அவர்கள் சந்தேகமும் சோதனையும் தீவிரமானால் அவர்களிடமிருந்து நானும் தப்ப முடியாது. காராளர் மகள் இன்னும் கொற்றவை கோயிலுக்கு நெய் விளக்குப் போட மாலை வேளைகளில் போய் வருகிறாள். அவளை யாரும் தடுப்பதில்லை.” “அப்படியானால் இந்த ஓலையைப் படித்தபின் தேவைப்படும் என்று நான் விரும்புகிற பட்சத்தில் ஒரு மறுமொழி ஓலை கொடுத்தால் நீ அதனை அவளிடம் கொண்டு போய்ச்சேர்ப்பதில் சிரமம் எதுவும் இராதல்லவா?” “சிரமம் இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஒரு வேளை சிரமங்கள் இருந்தாலும் அதைச் செய்ய நான் பின் வாங்கவோ தயங்கவோ மாட்டேன்.” “உன் துணிவைப் பாராட்டுகிறேன்” என்று அவனுக்கு மறுமொழி கூறிவிட்டு அந்த ஓலையைப் படிப்பதற்காகப் பிரிக்கலானான் இளையநம்பி. அவன் அதைப் படிப்பதற்கான தனிமையை அவனுக்கு அளிக்க வேண்டும் என்கிற நாகரிகத்தைத் தனக்குத்தானே குறிப்புணர்ந்து புரிந்து கொண்டவனாகத் திருமோகூர்க் கொல்லன் அந்தப் பகுதியிலிருந்து விலகி வந்து வெளியே நின்ற குறளனோடு சேர்த்து நின்று கொண்டான். அவன் இவ்வாறு செய்ததை இளையநம்பி உள்ளூறப் பாராட்டினான். |