முதல் பாகம் - அடையாளம்

4. செல்வப் பூங்கோதை

     “ஐயா! முனையெதிர் மோகர் படைக்கும் தென்னவன் ஆபத்துதவிகளுக்கும் இவ்வளவு உதவிகளைச் செய்யும் உங்களுக்குக் களப்பிரர்களால் எந்தக் கெடுதலும் வராமல் இருக்க வேண்டுமே என்பதுதான் என் கவலை” என்று உடன் நடந்துகொண்டே பெரியகாராளரிடம் கேட்டான் இளையநம்பி. அதற்கு அவர் மறுமொழி கூறினார்:

     “எனக்கு அப்படிக் கெடுதல் எதுவும் வர முடியாது. களப்பிரர்களின் அரண்மனைக் களஞ்சியங்களுக்கு வேண்டிய போதெல்லாம் நான் தான் நெல் அனுப்புகிறேன். அதனால் என்னைக் களப்பிரர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவன் என்று நம்பியிருக்கிறார்கள். தேசாந்திரிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், நாடோடி யாத்திரிகளுக்கும் உணவிடுவதற்குச் சத்திரங்களும், அறக்கோட்டங்களும், நடத்துவது போல் ஏற்பாடு செய்து அந்தச் சத்திரங்களிலும், அறக்கோட்டங்களிலும் நம்மவர்களுக்கு உணவளித்து வருகிறேன்.”

     “அதாவது தேசாந்திரிகளாகவும், நாடோடிகளாகவும் வந்த களப்பிரர்களுக்கு வெளிப்படையாக உதவுகிறீர்! இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு நாடோடிகளுக்கு உதவுவதைப் போலவும் உதவுகிறீர்.”

     “என்ன செய்யலாம்? இப்போதுள்ள சூழ்நிலையில் அப்படி மிகவும் தந்திரமாகத்தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.”

     “நான் உம்மை குறை சொல்லவில்லை காராளரே! விதியின் கொடுமையை எண்ணித்தான் கோபப்படுகிறேன். தேசாந்திரிகளாக வந்தவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம் கொண்டாடவும், இந்த மண்ணின் சொந்தக்காரர்கள் தேசாந்திரிகள் போல் சோற்றுக்கும் சுதந்திரத்திற்கும் அலையவும் நேர்ந்திருப்பதை எண்ணித்தான் நெஞ்சம் குமுறுகிறேன்.”

     “உங்களைப் போன்றவர்களின் குமுறல் வீண் போகாது! ‘நாட்டு மக்களைக் கண்ணீர் சிந்த வைக்கும் ஆட்சியை அந்தக் கண்ணீரே படைகளாகி அழித்துவிடும்’ என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.”

     “யாருடைய கண்ணீரையும் பற்றிக் கவலைப்படாமல் இவ்வளவு காலம் களப்பிரர்கள் ஆண்டு விட்டார்களே?”

     பேசிக் கொண்டே வேளாளர் திருவீதிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். வாழை மரங்கள், மாவிலைத் தோரணம், பச்சை நெற்கதிர்த் தோரணம் எல்லாம் கட்டி அலங்காரம் செய்திருந்த ஒரு பெரிய மாளிகையின் வாயிலில் அவனை அழைத்துச் சென்று நிற்கச் செய்திருந்தார் காராளர்.

     “ஐயா! இதென்ன மங்கல அலங்காரங்கள்? நீங்கள் நாள் தவறாமல் உணவளித்துக் காப்பாற்றி வரும் எண்ணற்ற நாடோடிகளோடு ஒரு புது நாடோடியாக நானும் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன். நாடு களப்பிரர்களிடமிருந்து விடுபடுகிறவரை இப்படி அலங்காரம் செய்யும் மகிழ்ச்சியைக் கூட என்னால் ஏற்க முடியவில்லை.”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.