முதல் பாகம் - அடையாளம்

6. யானைப்பாகன் அந்துவன்

     கோவிலுக்குள் அவிட்ட நாள் பெருவிழாக் கூட்டம் வெள்ளமாகப் பொங்கி வழிந்தாலும் அந்த நந்தவனப் பகுதி, ஆட்கள் பழகாத காடு போல் தனிமையாகவும் அமைதியாகவும் இருந்தது. வண்டிகள் அங்கே நிறுத்தப்பட்டன. செல்வப் பூங்கோதையும், அவள் தாயும் தங்கள் வண்டியிலிருந்து விரைவாகக் கீழிறங்கி வந்து நடு வண்டியை நெருங்கினர். செல்வப் பூங்கோதை வண்டியை அணுகி உள்ளே அம்பாரமாய்க் குவிந்திருந்த செந்தாமரைப் பூக்களை விலக்கியதும் அந்தப் பூக்களின் நடுவேயிருந்து ஓர் அழகிய ஆடவனின் முகம் மலர்ந்தது. பல சிறிய தாமரைப் பூக்களின் நடுவே ஒரு பெரிய செந்தாமரைப் பூ மலர்ந்து மேலெழுவது போல் இளைய நம்பி அந்தப் பூங்குவியலின் உள்ளேயிருந்து எழுந்திருந்தான். செல்வப் பூங்கோதை மிகவும் அநுதாபத்தோடு அவனைக் கேட்டாள்: “மூச்சுவிடச் சிரமமாயிருந்ததா? பூக்களின் ஈரமும் குளிர்ச்சியும் அதிகத் துன்பத்தைத் தந்தனவா?”

     “ஒரு சிரமமுமில்லை! இப்படிப் பயணம் செய்ய முன் பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நிலவின் கதிர்களையும், பனி புலராத பூக்களின் மென்மையையும் இணைத்துச் செய்த பஞ்சணையில் உறங்குவது போன்ற சுகத்தை ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்களும் எனக்கு அளித்தன. இத்தனை சுகமான அநுபவம் இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிர மன்னனுக்குக் கூடக் கிடைத்திருக்க முடியாது பெண்ணே?”

     “அந்தப் பூத பயங்கரப் படையைச் சேர்ந்த முரடன் ‘பூக்குவியலை வாளால் குத்தி சோதனை செய்வேன்’ என்ற போது எனக்கு மூச்சே நின்றுவிடும் போலாகி விட்டது. நீங்கள் ஏறி வந்த வண்டிப் பூக்களை நாங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் அவனிடம் நான் பொய் கூற வேண்டியிருந்தது.”

     “நீ அவ்வளவு தூரம் பதறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை பெண்ணே! அப்படியே அவன் வாளால் குத்தியிருந்தாலும் எனக்கு எதுவும் ஆகியிருக்க முடியாது. நான் காதில் கேட்ட பேச்சிலிருந்து எனது கை தென்பட்ட இடத்தில் தான் அவன் வாளைச் செருகிப் பார்ப்பதாக இருந்தான் என்று தெரிந்தது. அதனால் வாள் நுனியில் இரண்டொரு தாமரைப் பூக்கள் குத்திச் சொருகிக் கொண்டு போயிருக்கலாமே தவிர வேறு எதுவும் நேர்ந்திருக்க இயலாது! கோட்டைக்குள் வந்து சேர இப்படி ஓர் அருமையான வழியைக் கூறுவதற்கு முதலில் உன் தந்தை ஏனோ தயங்கினார்?”

     “பூப்போல் பத்திரமாக வந்து சேர்வது என்பார்கள். அப்படி அக நகருக்குள் வந்து சேர்ந்து விட்டீர்கள்! இனி உங்களை, நீங்களே தான் பொறுப்போடும், கவலையோடும், அக்கறையாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...”

     “தலைவிதியா? காலக் கேடா? எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சொந்த நாட்டின் சொந்தத் தலைநகரத்திலேயே ஏதோ அந்நியன் கவலைப்படுவது போல் நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது” என்று நெட்டுயிர்த்த வண்ணம் அவளிடம் அவன் கூறிக் கொண்டிருந்த போது கருடனைப் போல வளைந்த கிளிமூக்கும், காது வரை கிழிவது போல் சிரித்த வாயுமாக ஒரு பருத்த மனிதன் அருகிலுள்ள செடிகளின் மறைவிலிருந்து வெளிப்பட்டு இளைய நம்பியின் அருகே வந்தான். கிளி மூக்கும் கோணலாக நீண்ட இளித்த வாயும் பிறவியிலேயே அவனுக்கு அமைந்து விட்டவை என்று தெரிந்தது. அருகில் வந்து சுற்றும் முற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்த பின் இளையநம்பியை நோக்கிக் ‘கயல்’ என்று அவன் கூறிய ஒலி அடங்கு முன் இளையநம்பியும் அதே நல்லடையாளச் சொல்லைத் திருப்பிச் சொன்னான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.