முதல் பாகம் - அடையாளம்

8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி

     வருகிறவன் தன்னை நோக்கித்தான் வருகிறானா அல்லது வேறு காரியமாக வருகிறானா என்று இளையநம்பி சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே அவன் சொல்லி வைத்தது போல் இவன் எதிரே வந்து நின்று நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு இவனிடமிருந்து நல்லடையாளம் கிடைத்ததும் வணங்கினான். இருவரும் நல்லடையாளச் சொல்லைப் பரிமாறிக் கொண்டு தங்களுக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவுடன் இளையநம்பி ஏதோ பேசத் தொடங்கிய போது வந்தவன் தன் வலது கை ஆள்காட்டி விரலை வாயிதழ்களின் மேல் வைத்துப் பேச வேண்டாம் என்பது போல் குறிப்புக் காட்டித் தன்னைப் பின் தொடருமாறு சைகை செய்துவிட்டு நடந்தான். வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறத்திலிருந்த தோட்டத்தின் மற்றொரு கோடி வரை அவனை அழைத்துச் சென்றான் வந்தவன். அங்கிருந்த மதிற் சுவரை ஒட்டி ஒரு பாழ் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள். அந்த இடத்திற்கு வந்ததும் அவனே தன் மௌனத்தைக் கலைத்து விட்டுப் பேசினான்.

     “சற்று முன்னே நான் வெள்ளியம்பலத்துக்குள் நுழைந்த போது நகரப் பரிசோதனைக்காகத் தெருவில் அலைந்து கொண்டிருந்த களப்பிர வீரர்கள் சிலர் என்னைப் பின் தொடரக் கூடும் என்ற சந்தேகம் இருந்தது. அதனால் தான் அங்கே நின்று நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம் என்று பார்த்தேன்! திருமோகூரில் பெரியவர், காராளர் எல்லோரும் நலமாயிருக்கிறார்களா? முதல் முதலாகக் கோநகருக்கு வந்திருக்கிறீர்கள்! கோநகரைக் களப்பிரர்கள் அசோக வனத்திலே சிறைப்பட்ட சீதையை வைத்திருப்பது போல் வைத்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.”

     தொடக்கத்தில் அளவு கடந்த மௌனமாக இருந்து விட்டதற்காகவும் சேர்த்து இப்போது பேசுவது போல பேசினான் அந்தப் புதியவன். இளையநம்பி அவனுக்கு மிகச் சுருக்கமாகச் சில வார்த்தைகளில் மறுமொழி கூறினான். அந்த பாழ் மண்டபத்தை ஒட்டியிருந்த பகுதிகளில் மரங்களின் அடர்த்தி குறைவாக இருந்ததனால் அதிக இருள் இல்லை. அதனால் அந்தப் புதியவனை இளைய நம்பி ஓரளவு காண முடிந்தது. முடி, உடை உடுத்தியிருந்த முறை, மீசை எல்லாவற்றாலும் ஒரு களப்பிரனைப் போல் தோன்றினான் அவன். அதைக் கண்டு இளைய நம்பி அவனைக் கேட்டான்:

     “களப்பிரர்கள் ஆட்சியில் கள்ளும் காமமும் கொள்ளையாய் மலிந்திருப்பதை இந்த வெள்ளியம்பலத்தில் நுழைந்ததுமே கண்டேன். வருந்தினேன். இப்போது என் எதிரே தெரிகிற தோற்றத்திலிருந்தே, கள்ளும் காமமும் மலிந்திருக்கும் அதே வேளையில், தமிழ் நடை உடை நாகரிகங்கள் எல்லாம் நலிந்திருப்பதையும் காண முடிகிறது.”

     “கொலை வெறியர்களாகிய களப்பிரர்களின் நடுவே ஊடாடி நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள இப்படி நமக்கே விருப்பமில்லாத பொய்க்கோலங்களை நாம் ஏற்கவும் வேண்டியிருக்கிறது ஐயா...”

     “விந்தைதான்! பொய்க்கு வேண்டிய கோலம் மெய்க்கும் வேண்டியதாக இருக்கிறது என்று நீ கூறுகிறாய் போலிருக்கிறது.”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.