முதல் பாகம் - அடையாளம்

9. நம்பிக்கையின் மறுபுறங்கள்

     செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் தங்களிடம் இளைய நம்பியும், யானைப் பாகன் அந்துவனும் விடை பெற்றுச் சென்ற பின்பும் நெடுநேரம் அவர்களைப் பற்றிய நினைவுகளையும் கவலைகளையும் தவிர்க்க முடியாமல் இருந்தனர்.

     ‘இந்த விநாடியில் யானைப் பாகன் அந்துவனோடு அவர் எங்கே போயிருப்பார்? எவ்வளவு தூரம் போயிருப்பார்? யார் யாரை அவர் எதிர்கொண்டு சந்திக்க நேரிடும்’ என்று நினைவை இளைய நம்பியின் பின்னே அலையவிட்டபடி உடலால் மட்டும் தன் தாயின் பின்னே இயங்கிக் கொண்டிருந்தாள் செல்வப் பூங்கோதை. தாய் எதையோ கேட்டால் அதற்குத் தொடர்பில்லாமல், வேறு எதையோ அவளிடம் மறுமொழியாகச் சொன்னாள் இவள்.

     ‘பயப்படாதே! உனக்கு அபயம்’ என்பதுபோல் வண்டியில் நிறைந்திருந்த தாமரைப் பூக்களுக்கு நடுவே தென்பட்ட அந்தப் பொன்நிற உள்ளங்கையைச் செல்வப் பூங்கோதையால் மறக்கவே முடியவில்லை. அந்தக் கையை ‘அது கை இல்லை, தாமரைப்பூ’ என்று அவள் புனைந்து கூறிய போது, ‘இல்லை! அது கையேதான்’ என்று மறுக்கத் தயங்கி அந்தப் பூதபயங்கரப் படை வீரனே அது தாமரைப்பூதான் என்று நம்பிவிடும் அளவுக்குப் பூவோடு அது ஒப்பிடப் பொருத்தமாயிருந்தது. அந்தக் கை மலர் அவள் நினைவில் பசுமையாய் வந்து தங்கியிருந்தது இப்போது.

     “ஒரு வீரனின் கை பூப்போல் மென்மையாக இருக்கக் கூடாதுதான்! வாளும், வேலும் பற்றிச் சுழற்றிக் காய்த்துப் போயிருக்க வேண்டிய கை இது. தாமரைப் பூப்போல் மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும், சிவப்பாகவும் ஒரு கவிஞனின் கையைப் போல் இருக்கும்படி இந்தக் கை வாளும் வேலும் ஏந்த முடியாமல் செய்துவிட்ட களப்பிரர்கள் மேல் திரும்பியது அவள் ஆத்திரம் எல்லாம். இளையநம்பியின் பூம்பட்டுக் கையை எண்ணியபோது பழைய இலக்கிய நிகழ்ச்சி ஒன்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. பல போர்களில் வெற்றி வாகை சூடிய பேரரசன் ஒருவன், ஒரு கவிஞரின் வலது கரத்தைப் பற்றித் தழுவி அவரைப் பாராட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்லைப் போல் காய்ந்துத் தழும்பேறிய தன் கையும் பூப்போல் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடிய புலவர் கையும் இணைந்த போது -

     “ஐயா, புலவரே! உங்கள் கை மட்டும் எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறது!” என்று ஓர் அதிசயத்தைக் கண்டவன் போல் வியந்து வினவினான் அந்த அரசன்.

     “இதில் வியப்பென்ன அரசே? நீ அன்போடு அளிக்கும் உணவை உண்டு வருந்தும் தொழிலைத் தவிர வேறு உழைப்பின் துயரங்கள் படியாத கைகள் இவை. இவை மென்மையாக இராமல் வேறு எப்படி இருக்க முடியும்? உன் கைகள் வன்மையாக இருப்பதற்கும் இவை மென்மையாக இருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். துயரங்களை எல்லாம் உன் கைகளே தாங்கிக் கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம்” - என்று அந்த அரசனுக்கு அந்தப் புலவர் மறுமொழி கூறினாராம்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.