இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்

11. இரும்பும் இங்கிதமும்

     பெரியவரின் ஆணையைப் பெற்றுத் திருமோகூர் திரும்புவதற்காகச் சிறிது தொலைவு வரை மலைச் சரிவில் கீழிறங்கி வந்து விட்ட கொல்லனை மறுபடியும் இரண்டு ஆபத்துதவிகள் பின் தொடர்ந்து துரத்தி வந்தனர்.

     “இரவெல்லாம் வழி நடந்து ஓடி வந்திருக்கிறாய்! இங்கு வந்ததும் வராததுமாக மறுபடி திருமோகூருக்கு ஒட நேர்ந்திருக்கிறது. பசியாறுவதைப் பற்றிய நினைப்பே உனக்கும் இல்லை. நாங்களும் மறந்துவிட்டோம். இதோ இவற்றைப் போகிற வழியில் சிலம்பாற்றங்கரையில் அமர்ந்து உண்டுவிட்டுப் போ” - என்று வேக வைத்த பனங்கிழங்குகள் சிலவற்றையும், நாலைந்து கதலிக் கனிகளையும், இரண்டு விளாம்பழங்களையும் அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர் அந்த ஆபத்துதவிகள். அவனும் அவற்றை வாங்கித் தன் மேலாடையில் முடிந்துகொண்டான். அவர்கள் அப்படித் தேடிவந்து தன் பசியை எண்ணிக் கவலையோடும், சிரத்தையோடும் நடந்து கொண்டது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

     புதிய இடத்தில் தங்களுக்கு என்று சிரமப்பட்டுச் சேகரித்து அவித்த பனங் கிழங்குகளில் சிலவற்றையும், பழங்களையும் துரத்தி வந்து தந்த ஆபத்துதவிகளை அவன் மனம் வாழ்த்தியது. நன்றியோடு பாராட்டியது.

     ‘களப்பிரர்கள் நாட்டைத்தான் பாண்டியர்களிடமிருந்து பறித்துக் கொள்ள முடிந்ததேயொழியப் பிறர்க்குதவும் பண்பு, பிறர் பசியை அறிந்து உணவிடும் பெருந்தன்மை ஆகிய குடிப் பண்புகளை ஒருபோதும் பறிக்க முடியாது’ என்று இறுமாப்போடு தோள்கள் விம்மி எழ எண்ணினான் அவன்.

     விண்ணவர் அமுதைப் பருகுவது போல் விரும்பிப் பருக ஏற்ற சிலம்பாற்று நீரோடு அந்தச் சிறிய அளவு உணவை உண்டு முடிந்த பின் நடையைத் தொடர்ந்தான் அவன். கைகளிலும் வாயிலும் விளாம்பழ வாசனை இன்னும் தொடர்ந்தது. இன்னும் பல நாட்கள் தொடர்ந்து தங்க நேரிட்டாலும் விளாம்பழங்களும் நல்ல மலைவாழைக் கனிகளும் அந்த மலையில் போதுமான அளவு கிடைக்கும் என்று தோன்றியது. அடிவாரத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கவும் வழி இருந்தது. மிகப் பல ஆண்டுகளாக மறைந்து வாழும் பாண்டிய ஆபத்துதவிகளும் முனை எதிர்மோகர்களும், வாய்க்குச் சுவையாக உண்ண இயலாமல் இப்படித்தான் அங்கங்கே கிடைத்த உணவுகளை உண்டு நிறைவுகொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தனர். விருந்துகளையும், உண்டாட்டுக்களையும் ஆள்பவர்கள் அநுபவிக்க முடியாது என்று புரிந்திருந்தும், பாண்டிய வீரர்கள் தியாக மனப்பான்மையோடு தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பணி புரிந்து வந்தனர். நாட்டை விடுவிக்கும் வேட்கையில், பசியையும் ருசியையும் கூட மறந்திருந்தனர். பாண்டியர்குடிப் பண்பான அதே கட்டுப்பாடு திருமோகூர்க் கொல்லனிடமும் இருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து வந்து கொடுத்துவிட்டுப் போகவில்லையென்றால் அவன் உணவையும் மறந்து விட்டே பயணத்தைத் தொடரும்படி ஆகியிருக்கும். ஞாபகமாகத் தன் பசியை நினைவு கூர்ந்து தேடித் துரத்தி வந்து தனக்குக் கொடுத்துவிட்டுப் போன அந்த ஆபத்துதவிகள் தம் அளவில் இன்னும் பசியாறினார்களோ இல்லையோ என்று சிந்தித்தபோது அவன் உள்ளம் உருகியது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.