இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 14. நவ நித்திலங்கள் கொற்கை நகரத்திலிருந்து வந்திருந்த புதிய இளைஞனும் கொல்லனும் சிலம்பாற்றின் கரையை அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி மலைச்சரிவில் ஆபத்துதவிகள் தீப்பந்தங்களுடன் இவர்கள் இருவர் வரவையும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இருளில் அந்த மலைக் கணவாயில் காற்று சுழித்து வீசிக் கொண்டிருந்தது. மேலே மலைப் பகுதிகளில் எங்கோ மழை பெய்திருந்ததனால் சிலம்பாற்றின் ஓட்டத்திலே வெள்ளமும் வேகமும் கூடியிருந்தன. இருளிலே அந்த மலைப் பிளவிலே பல்லாயிரம் போர் வீரர்கள் ஒரு சமயத்தில் உற்சாகக் குரல்களை எழுப்பிக் கொண்டே விரைந்து பாய்ந்தோடுவதைப் போன்ற ஆரவாரத்தோடும் ஓசையோடும் சிலம்பாறு துள்ளிக் குதித்துச் சுழன்று சுழித்துப் பொங்கிப் புடைத்து ஓசையெழ ஓடிக்கொண்டிருந்தது. பேயாட்டம் போடுவது போல் மரங்கள் தலைகள் சுழலக் காற்றில் ஓசையிட்டு ஆடிக் கொண்டிருந்தன. கோபம் கொண்ட தேவர்கள் கரிய வானத்தில் நீளநீளமான வெள்ளி வாள்களால் தாறு மாறாக வீசிப் போட்டாற்போல் மின்னல்கள் சொடுக்கி மறைந்தன. ஊசியால் குத்துவது போலக் குளிர்ந்த காற்று உடலில் பட்டு உறைத்தது. இந்தப் புதிய சூழ்நிலையில் உடன்வந்த இளைஞன் மருண்டு மருண்டு விழிப்பதைக் கண்டான் கொல்லன். அவனுடைய கண்களில் பாதி மருட்சியும், பாதி உறக்கச் சோர்வும் தெரிந்தது. இவர்கள் மலைச் சரிவில் மேலே ஏறிச் செல்லுமுன்பே ஆபத்துதவிகள் கீழே இறங்கி வந்து இவர்களை எதிர்கொண்டனர். வந்த ஆபத்துதவிகளில் ஒருவன் கொல்லனின் காதருகே ஏதோ இரகசியமாகச் சொன்னான். உடனே கொல்லன் தன்னோடு வந்த கொற்கை இளைஞனை நோக்கி, “ஐயா! நீங்கள் சோர்வு அடைந்து களைத்துப் போய்விட்டீர்கள். இவர்களோடு சென்றால் ஒரு மலைக் குகையில் நீங்கள் சுகமாக உறங்குவதற்கு வழி செய்து கொடுப்பார்கள். உங்களால் மேலும் நடக்க முடியாது போலத் தோன்றுகிறது. பெரியவர் இப்போது மறைந்திருக்கும் இடத்துக்குப் போக இன்னும் ஒரு மலை ஏறி இறங்கி, அடுத்த சரிவுக்குச் செல்லவேண்டும். இப்போது உங்களால் அது முடியும் என்று தோன்றவில்லை. பெரியவரும் காலையில்தான் உங்களைக் காண விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்” என்றான். அந்த இளைஞனோ புதிய மனிதர்களோடு உறங்கச் செல்வதற்குத் தயங்குவதாகத் தெரிந்தது. கொல்லன் மேலும் உறுதி கூறலானான்: “பயப்படாதீர்கள்! இவர்கள் எல்லாருமே நம்மவர்கள் தாம்! உங்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பார்கள்.” தயக்கமும் பயமும் இருந்தாலும் கூட, உறக்கம் தாங்க முடியாமல் கொல்லன் சுட்டிக்காட்டிய ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றான் அந்த இளைஞன். இளைஞனை மற்றவர்களோடு அனுப்பிவிட்டுத் தன்னிடம் செய்தியைக் கூறிய ஆபத்துதவியுடன் மலைச் சரிவில் ஏறத் தொடங் கினான் கொல்லன்.
“இந்தப் பிள்ளையாண்டானைப் போல் பத்துப்பேர் இருந்தால் போதும்! அங்கங்கே மறைந்திருந்து துடிதுடிப் புடனும் களைப்பின்றியும் பாடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான பாண்டிய வீரர்களையும் இந்தப் பத்துப்பேரே கெடுத்து விடுவார்கள். வீரர்களின் கூட்டத்தில் இவனைப் போன்றவர்கள் இருக்க முடியாது; இருக்கக்கூடாது!...” என்றான் உடன்வந்த ஆபத்துதவி. கொல்லன் அதைக் கேட்டுக் கொண்டானே தவிர தன் கருத்தை அவனிடம் வாய்விட்டுக் கூறவில்லை. அவன் மனத்தில் அப்போது மிகமிக இன்றியமையாததான வேறொரு சிந்தனை தோன்றிக் கவலையையும் எச்சரிக்கையையும் அளித்துக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களைப் புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஒரே அடையாள வார்த்தையாக எது இருந்ததோ அதைப் பூதபயங்கரப் படையைச் சேர்ந்த களப்பிர வீரன் ஒருவன் தன்னிடமே சோதித்துப் பார்க்க வந்ததை நினைத்தபோது கொல்லனுக்கு இதயம் கொதித்தது. இந்த அபாயம் உடனே தவிர்க்கப்பட முடியாவிடில் பாண்டிய நாட்டில் பல இடங்களில் பல வீரர்கள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்வார்கள் என்று தெளிவாகவே புரிந்தது. இந்த இரகசியம் எந்த முனையிலிருந்து எப்படி அவர்களுக்கு எட்டியிருக்க முடியும் என்று கொல்லனால் அனுமானம் செய்யவே முடியாமலிருந்தது. பாண்டிய வீரர்கள் இருவர் சந்திக்கும்போதே மிக அருகிலிருந்து மறைவாய்க் கவனித்து ஒட்டுக் கேட்ட யாரோ ஒரு களப்பிரன் மூலமாகவோ, அல்லது எதிரே வந்து சந்திப்பவன் யாரென்று தெரியாமலே மாற்றானிடம் அவசரப்பட்டுத் தன் நல்லடையாளச் சொல்லைத் துணிந்து கூறி விட்ட ஒரு பாண்டிய வீரன் மூலமாகவோ மிக அண்மையில் தான் இந்த இரகசியம் அம்பலமாகியிருக்க முடியும் என்று தோன்றியது. வேறு விதமாக நினைக்க முடியவில்லை.
பாண்டிய நாடெங்கும் மறைந்து ஆழமாக வேரோடியிருக்கும் பாண்டியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாளைப் பொழுது விடிவதற்குள் பழைய நல்லடையாளச் சொல்லை உடனே கைவிடவேண்டும் என்றும் புதிய நல்லடையாளம் என்ன என்றும் விரைந்து அறிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. மேலும் இரண்டு நாழிகைப் பயணத்துக்குப் பின் பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த மலைக் குகைக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்கள். உடன் வந்த ஆபத்துதவி வெளியிலேயே நின்று கொண்டான். கொல்லன் உள்ளே நுழைந்தபோது தீப்பந்த ஒளியில் அவர் ஓலைச் சுவடியில் எழுத்தாணியால் ஏதோ அழுத்திக் கீறிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு நிமிர்ந்ததும் அவர் தன்னைக் கேட்ட முதல் கேள்வியே கொல்லனை வியக்கச் செய்தது. “வா! இங்கிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது முதல் இந்த விநாடி வரை நம்முடைய நல்லடையாளச் சொல்லை. எங்காவது நீ பயன்படுத்த நேர்ந்ததா?” தன் மனத்தில் எதைப்பற்றிய சிந்தனை மேல் எழுந்து நிற்கிறதோ அதைப் பற்றியே அவரும் கேட்கிறாரே என்று மனத்தில் எழும் வியப்புடன் வணங்கி அவருக்கு மறுமொழி கூறினான் அவன். “இல்லை. ஐயா!... ஆனால்... ?” “ஆனால்... என்ன?” திருமோகூர் நெற்களத்தில் முற்றிலும் எதிர்பாராத விதமாக களப்பிரன் ஒருவன் அதே நல்லடையாளச் சொல்லுடனே தன்னை அணுகிச் சோதனை செய்ததையும் அதன்பின் நடந்தவற்றையும் ஒன்றுவிடாமல் அவரிடம் விவரித்தான் கொல்லன். எல்லாவற்றையும் பரபரப்பு எதுவும் அடையாமல் செவிமடுத்தபின் அவர் கூறலானார். “இன்று பிற்பகல் என்மனத்தில் ஏதோ பொறி தட்டுவது போல் அப்படிப்பட்டது. உடன், ‘நம்முடைய நல்லடையாளச் சொல்லை மாற்றிவிட வேண்டும்’ என்று நானே நினைத்தேன். என் மனத்தில் பட்டபடியேதான் நடந்திருக் கிறது இருக்கட்டும்... எங்கே அந்த முத்துக்கள்...?” கொல்லன் முத்துக்களைக் கொடுத்தபோது இயல்பை மீறி அவர் எழுந்து நின்று அவற்றை இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொள்ளவே, அது அவனுக்குப் புதுமையாகத் தோன்றியது. அந்த முத்துக்களில் ஏதோ மிகப் பெரிய மதிப்புக்கான அந்தரங்கம் அடங்கியிருக்க வேண்டும் என்று அவன் புரிந்துகொண்டான். இவ்வளவு பெரிய பொறுப்பைத் தாங்கி வந்த விடலை இளைஞனை எண்ணினான் அவன். இப்படி அவன் எண்ணிக் கொண்டிருப்பதை அப்படியே பிரதிபலிப்பது போல் அந்தக் கணமே, “வாகனங்களைவிட அவை எவ்வளவு மதிப்புக்குரியவற்றைச் சுமந்து வருகின்றன என்பதுதான் பெரிது. அந்த இளைஞன் நீ எதிர்பார்த்தபடி இல்லாதது உனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்!” - என்று சொல்லி முகம் மலர்ந்தார் அவர். இந்த நிலையில் அவர் முன்பாக எதையுமே நினைப்பதற்குப் பயந்தான் கொல்லன். நினைப்பில் கூட எதையும் மறைக்க விடாதவருக்கு முன், நினைக்கவே தயங்கினான் அவன். ஏதோ குழப்பம் வரலாம் என்று தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே உணர்ந்து முத்துக்களோடு வருகிறவனையும், தன்னையும் பழைய நல்லடையாளச் சொல்லைத் தவிர்க்கச் செய்த அவர் மதி நுட்பத்தை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பழைய நல்லடையாளச் சொல் தன்னையும் அபாயத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று இப்போது அவன் எண்ணினான். அப்போது மீண்டும் அவர் குரல் கணிரென்று ஒலித்தது. “பல தலைமுறைகளின் புனிதமான உணர்வுகளும் அந்தரங்கங்களும் இந்த நவநித்திலங்களில் அடங்கியிருக்கிறது. எனவே நாளை வைகறையிலிருந்து ‘நவநித்திலம்’ என்ற தொடரையே நம்முடைய புதிய நல்லடையாளச் சொல்லாக நியமிக்கிறேன். இந்தப் புதிய நல்லடையாளம் பற்றிப் பிறர் புரிந்துகொள்ள முடியாத சித்திரக் கரந்தெழுத்துக்களால் இந்த ஒலையில் எழுதியிருக்கிறேன். இந்த ஒலையை எடுத்துச் சென்று விடிவதற்குள் வையையின் திருமருத முன்துறையில், கிழக்கு மேற்காக எண்ணினால் ஏழாவது மருத மரத்தின் அடிப்பொந்தில் வைத்து விடும் பணியை நீ உடன் செய்யப் புறப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் இருந்த வளமுடையார் கோயிலிலிருந்து திருமஞ்சன நீர் எடுக்க வரும் நம் யானைப் பாகன் அந்துவன் இந்த ஏழாவது மருத மரப்பொந்தைப் பார்க்காமல் திரும்ப மாட்டான். ஓலையை அவன் பார்த்து விட்டால், புதிய நல்லடையாளம் விரைந்து எங்கும் பரவுவதற்கு ஆவன செய்யும் வழியை அவனறிவான். திருமோகூரிலும், சுற்றுப்புறங்களிலும், காராளரிடமும் இந்தப் புதிய அடையாளத்தினை நீயே சொல்லி விடலாம்.” அப்படி அந்த நவநித்திலங்களில் அடங்கியிருக்கும் மகத்துவம் என்ன என்று உடனே அறியும் ஆவலை, அவர் சொற்கள் தன் உள்ளத்தில் கிளரச் செய்திருந்தும் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து ஓலையைப் பெற்றுக் கொண்டு அவன் வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான். கால்கள் விண் விண்ணென்று வலித்தன. கடமையோ மீண்டும் அவனைத் துரத்தியது. |