![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 16. யார் இந்த ஐவர்? “என்னப்பா இது? உன்னைப் போல் மந்திரக்காரர்களையும், தந்திரக்காரர்களையும் நம்பினால் இப்படித்தான் பாதிக் கிணறு தாவ முடியும் போலிருக்கிறது!” என்று கழற்சிங்கன், தேனூர் மாந்திரீ கனைக் கோபித்துக் கொள்ளத் தொடங்கியபோது, ‘இப்படி எல்லாம் பேசாதே! வாயை மூடு’ - என்பது போல் கழற்சிங்கனைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அழகன்பெருமாள். கழற்சிங்கன் உடனே பேசுவதை நிறுத்திவிட்டான். அழகன்பெருமாள் சிறிது நேரம் யாரிடமும் எதுவும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தங்கள் தலைவனின் ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்து கொண்டு அதை மதிப்பது போல் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அழகன் பெருமாள் மேல் விளைவுகளை நினைத்தான். ‘அரச விசுவாசமுள்ள பாண்டியர் குடி மக்கள் போல் நேற்றுவரை நானும் என்னைச் சேர்ந்தவர்களும் புறநகரில் உபவனத்திலும், அகநகரிலும் உரிமையோடும், பயமின்றியும் பழக முடிந்தது போல் இனிமேல் பழகமுடியாது. என்னுடைய அந்தரங்கமும், என்னோடு உபவனத்தில் உடனுறைந்து வாழ்கிறவர்களின் அந்தரங்கமும் களப்பிரப் பேரரசுக்குத் தெரிந்த பின் இனிமேல் நாங்கள் எந்தச் சார்பும் அற்ற மனிதர்களாக எங்களைக் காண்பித்துக் கொள்ள முடியாது. காதும் காதும் வைத்தாற்போல் மீட்க வந்தவர்களையும் மீட்டுக் கொண்டு தப்பியிருந்தோமானால், கவலையில்லை. அப்படி மீட்கவும் தப்பவும் முடியாததால், என்னதான் மாறு வேடத்தில் இருந்தும் பயனில்லை. இன்றில்லாவிட்டாலும் நாளைப்பொழுது புலர்ந்ததும் யார் யார் என்று எதிரிகளுக்கு நம்மைப் பற்றிப் புரிந்துவிடும். பாண்டியர்களின் மனிதர்கள் என்றுதான் இதுவரை பொதுவாகப் புரிந்திருக்கும். அந்தக் காமமஞ்சரிக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருந்தாலும் மாவலி முத்தரையருக்கோ, பூத பயங்கரப்படைத் தலைவனுக்கோ இன்னும் அவ்வளவு தெரிந்திருக்க நியாயமில்லை. ‘பூத பயங்கரப் படையினர் போன்ற வேடந்தாங்கித் தங்களவர்களைச் சிறை மீட்க வந்த பாண்டியர்களின் ஆட்கள்’ என்று மட்டும்தான் இந்த விநாடி வரை அவர்கள் நம்மைப் பற்றி அறிந்திருக்க முடியும் என்றாலும் தொடர்ந்து இங்கே சிறையில் இருக்க நேரிடுகையில் இதைவிட அதிகமாகக் களப்பிரர்கள் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள முயலுவார்கள். விரைந்து தப்பாவிடில் பல தீய விளைவுகள் இருக்கும்’ - என்று சிந்தித்தான் அழகன் பெருமாள். நண்பர்கள் ஏதேதோ வழிகளைச் சொன்னார்கள். மனநிலை தெளிவாக இல்லாததால், ‘விடிந்த பின்பு சிந்திப்போம்’ என்றான் அழகன்பெருமாள். ஆனாலும் அந்தக் குழப்பமான மனநிலையில்கூட “களப்பிரர்களில் யார் இங்கே வந்தாலும், எதை வினவினாலும் அவசரப்பட்டு முந்திக்கொண்டு யாரும் எந்த மறுமொழியையும் சொல்லிவிடாதீர்கள். மறுமொழியாக நான் என்ன சொல்கிறேன் என்று பொருத்திருந்து பார்த்த பின் அதற்கு ஏற்ப நீங்களும் நடந்து கொள்ளவேண்டும். பதற்றமோ அவசரமோ கூடாது. எதிரிகள் நண்பர்கள் போல் வந்து பேச்சுக் கொடுப்பதும், இங்கே இருக்கும். எச்சரிக்கை தேவை.” என்று தெளிவாக அறிவுரை கூறியிருந்தான் அவன். இதைக் கூறிய பின் தேனூர் மாந்திரீகனிடம் அவன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்: “செங்கணான்! உன்னிடம் மைபோட்டுப் பார்க்கத் தேவையான சாதனங்கள் இருக்குமானால் தயைகூர்ந்து நம் தென்னவன் மாறனையும், மல்லனையும் இந்த அரண்மனைக்குள்ளோ, சிறைக் கோட்டத்திற்குள்ளோ எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?” செங்கணான் உடனே தன் மேலாடை முடிப்பிலிருந்து யாளியின் முகம் போன்ற அமைப்பை உடைய ஒரு சிமிழை எடுத்துத் திறந்து ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கண்களை மூடி எங்கேயோ, எதையோ, மனக் கண்ணில் பார்ப்பவனைப் போல் தேடிவிட்டுச் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தான். எல்லோரும் அவன் என்ன கூறப்போகிறான் என்பதையே ஆவலோடு கவனித்தார்கள். “இப்போது நாம் நின்று பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சிறைக் கோட்டத்துக்கு நேர் கீழே இருட்கிடங்காக இருக்கும் பாதாளச் சிறையில் தென்னவன் மாறனும் மல்லனும் இருக்கிறார்கள். அந்தப் பாதாளச் சிறைக்கோட்டம் கோட்டையின் அகழிகளுக்கும் கீழே இருப்பதால் நீர் கசியும் தரையில் அமரவும் முடியாமல், படுக்கவும் வழியின்றி அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு செய்தி...” என்று சொல்லிக் கொண்டே வந்த மாந்திரீகன் திடீரென்று தன் மனத்தை மாற்றிக் கொண்டவன்போல் அந்தச் செய்தியை மட்டும் அழகன் பெருமாளின் காதருகே கூறினான். அந்தச் செய்தி என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் மற்ற வர்கள் மனத்தில் அதிகரித்தது. அந்த இரகசியச் செய்தியை மாந்திரீகன் தன் காதருகே கூறிக் கொண்டிருந்தபோது அழகன் பெருமாளின் முகம் மலர்ச்சி உற்றதையும் அவர்கள் கண்டிருந்ததனால் அவர்களுடைய ஆவல் இன்னும் பெருகியிருந்தது. மைச்சிமிழை மூடி மறுபடியும் மேலாடையில் முடிந்து கொண்டான் மாந்திரீகன். அதற்குப் பின் விடியும்வரை அவர்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சிறைக் கோட்டத்தின் கரடு முரடான கல் தளத்தில் உடலைச் சாய்ப்பதும், உறங்குவதும் களைப்புக் காரணமாகச் சிரமமானவைகளாகத் தெரியவில்லை அவர்களுக்கு. அழகன்பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் அருகருகே படுத்திருந்ததனால் இடையிடையே மெல்லிய குரலில் தங்களுக்குள் மட்டும் ஏதோ உரையாடிக்கொள்ள முடிந்தது. மற்றவர்களுக்கோ ஆவலின் காரணமாக, உரையாடாமல் வாளா இருந்த நேரத்தில் கூட அவர்கள் ஏதோ இரகசியம் பேசிக் கொண்டிருப்பது போல் கேட்டது. சிறிது நேரம்தான் இந்த ஆவல், பரபரப்பு எல்லாம் இருந்தன. அப்புறம் அயர்ந்துவிட்ட காரணத்தால் யாருக்கும் எதுவும் நினைவிருக்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்தது. நண்பர்கள் எட்டுப் பேருக்கும் பயங்கரமான பசி. களப்பிரர்கள் சிறைப்பட்ட எதிரிகளுக்கு உணவு தருவார்களா, அல்லது சிறைப்பட்டவர்களே தங்களுக்கு உணவுதானே என்று சாகவிட்டு விடுவார் களா என்பது தெரியவில்லை. அந்த நிலையில் முற்றிலும் எதிர்பாராமல் ஐந்து புதிய மனிதர்கள் அவர்களைத் தேடிச் சிறைக்கோட்டத்துக்கு வந்தனர். அவர்கள் தமிழர்களைப் போல் தோன்றினர். உடை, சாயல் எல்லாம் அப்படியே இருந்தன. வந்தவர்களிடம் ஒரு பெரிய ஓலைக்கூடை நிறைய பிட்டு அப்பம் முதலிய பணியாரங்கள் இருந்தன. சிறைக் கோட்டத்துக் கதவுகளை எல்லாம்கூட அவர்கள் திறந்து கொண்டு உள்ளே வந்து, பணியாரக் கூடையை அழகன் பெருமாள் முதலியவர்களை வணங்கி விட்டு எதிரே வைத்தனர். வைத்தவுடனே மூவரும் சொல்லிவைத்தது போல் ஒன்றாகத் தலை நிமிர்ந்து இந்த எட்டுப் பேரையும் பார்த்து இரகசியம் பேசுவதை ஒத்த குரலில் ‘கயல்’ என்றார்கள். அழகன் பெருமாள் பதிலுக்கு அந் நல்லடையாளச் சொல்லைக் கூறாததோடு வந்தவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். மற்றவர்களுக்கோ பசிக்கு வழி பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ‘கயல்’ என்று கூடச் சொல்லி விடலாம் போலிருந்தது. ஆனால், யாரும் தன்னை முந்திக் கொண்டு பேசக் கூடாது என்று முந்திய இரவில் அழகன் பெருமாள் கட்டளையிட்டிருந்ததை நினைத்து மெளனமாக இருந்தனர். வந்த ஐவரில் ஒருவன் கூறலானான்: “நீங்கள் இங்கிருந்து தப்பிச் செல்ல உதவுவதற்கு வந்திருக்கிறோம். இதோ உங்கள் பசிக்குப் பணியாரங்கள் ஏற்றருள வேண்டும். நாங்கள் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் தூதர்கள்.” இன்னும் அழகன் பெருமாள் சிலை போல்தான் நின்று கொண்டிருந்தான். பேசியவனுக்கு மறுமொழியும் கூறவில்லை. நல்லடையாளச் சொல்லைப் பதிலாகவும் அளிக்க வில்லை! அந்தப் பணியாரக் கூடையை அங்கீகரித்துக் கொள்ளவும் இல்லை. அழகன் பெருமாளின் இந்தப் பெரிய தயக்கம் மற்ற எழுவரையும் எச்சரிக்கை செய்தது. |