![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 18. உட்புறம் ஒரு படிக்கட்டு அந்த ஐவரும் அழகன் பெருமாள் முதலியவர்களை மன்றாடாத குறையாகப் பணிந்து இறைஞ்சிப் பார்த்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருக்கும் சுவையான பணியாரங்களை உண்டு பசியாறுமாறு வேண்டினார்கள். மீண்டும் மீண்டும் வந்தவர்களாகிய அவர்கள் தான் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, அழகன்பெருமாளோ அவனுடன் இருந்தவர்களோ வாயைத் திறக்கவே இல்லை. வந்த ஐவரில் ஒருவன் மீண்டும் பழைய வாக்கியத்தையே திரும்பவும் சொன்னான்: “நாங்கள் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் தூதர்கள்! எங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்வதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.” அழகன்பெருமாள் இப்போது மறுமொழி கூறவில்லை. அவனுடைய சந்தேகமே தொடர்ந்து உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. வந்திருப்பவர்கள் உண்மையிலேயே உதவ வந்த நண்பர்களாகவும் மதுராபதி வித்தகரின் தலைமைக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தால் அவரை இப்படி முற்றிலும் அந்நியமான ஒரு பெயரால், ‘நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியார்’ என்று அழைக்க முடியாது. தன்மையான மனிதர்களிடம் அவரைக் குறிக்கப் பெரியவர் என்ற பெயரே மதிப்புக் குரியதாக வழங்கி வருகையில், இவர்கள் அந்தப் பெயரையே அறியாதவர்கள்போல் புதுவிதமாகக் கூப்பிட்ட வேறுபாட்டை உணர்ந்து கொண்டான் அழகன்பெருமாள். இந்த வேறுபாடு வெண்பளிங்கிற் சிவப்பு நூல் கோர்த்தது போல் தனியே நிறம் விட்டுத் தெரிந்த ஒரே காரணத்தால்தான், வந்தவர்கள் கூறிய நல்லடையாளச் சொல்லை அவன் பொருட்படுத்தவே இல்லை. தங்களை உளவு அறிய மாவலி முத்தரையர் சிறைக்குள்ளேயே அனுப்பியிருக்கும் மனிதர்களாகத்தான் இவர்கள் ஐவரும் இருக்க வேண்டும் என்று அழகன்பெருமாளுக்கு உறுதியாகப் புரிந்துவிட்டது. ஆகவே அவன் உணர்வுகள் நன்றாக விழித்திருந்தன. அப்போது வந்தவர்களில் ஒருவன் மீண்டும் பேசலானான்: “நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் ஆட்கள் என்று சொல்லியும் நீங்கள் எங்களை மதிக்கவில்லை! ‘கயல்’ என்று அடையாளச் சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறியும் ஏற்கவில்லை...” முதன்முதலாக இப்போதுதான் அழகன் பெருமாள் அவர்களுக்கு மறுமொழி கூற முன் வந்தான். வந்திருக்கும் பகைவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்கிற திட்டத்தோடு, பேசியவனிடம் அழகன்பெருமாள் வினாவத் தொடங்கினான்: “ஐயா! உங்கள் அக்கறையைக் கண்டு மிகவும் வியப்படைகிறேன். ஆனால் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியார் என்று நீங்கள் ஏதோ ஒரு பெயர் சொல்கிறீர்களே, அந்தப் பெயர்தான் எங்களுக்கு விளங்கவில்லை. இன்னும் நீங்கள் ஐவரும் இங்கே உள்ளே நுழைந்தவுடன் ‘கயல்’ என்று ஏதோ ஒரு வார்த்தை கூறினீர்கள், அதையும் எதற்காகக் கூறினர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை.” வந்தவர்களின் முகங்களில் குழப்பம் தெரிந்தது. முதலில் அழகன் பெருமாளோடு பேசியவனே திரும்பவும் பேசத் தொடங்கினான்: “விளங்காமல் இருப்பதற்கும் விளங்காமல் இருப்பது போல் பாவனை காட்டுவதற்கும் வேறுபாடு தெரிய முடியாத அளவுக்கு நாங்கள் சிறுபிள்ளைகள் இல்லை. புரியாமல் இருப்பதற்கும் புரியாததுபோல் நடிப்பதற்கும் உள்ள வேறு பாட்டை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.” புதியவனின் இந்த மறுமொழியில் இருந்த உணர்ச்சி வேகமும் கோபமுமே அழகன் பெருமாளின் சந்தேகம் நியாய மானது என்பதை நிரூபித்துவிட்டன. வந்திருப்பவர்களின் உரையாடலில் தமிழ்ச் சொற்கள் எல்லாம் தீர்ந்து போய்த் தாங்கள் களப்பிர ஒற்றர்கள் என்பதை அவர்களாக அறிவிப்பது போல் இயல்பாய் அவர்களால் பேச முடிந்த பேச்சைப் பேசுகிறவரை விடுவதில்லை என்ற பிடிவாதத்துடன் அவர்களைத் திகைக்கச் செய்தான் அழகன் பெருமாள். அவன் எண்ணி எதிர்பார்த்தது நடந்தது. நடிப்பதற்குரிய வார்த்தைகள் தீர்ந்து வந்தவர்கள் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க நேர்ந்த சமயம் பார்த்து அழகன்பெருமாள் சிரித்துக் கொண்டே... “நல்லது! நீங்கள் விடைபெற்றுப் புறப்படவேண்டிய நேரம் வந்து விட்டது. இதோ உங்கள் பணியாரக் கூடையையும் எடுத்துக் கொண்டு போகலாம். களப்பிரர்கள் விருந்தினருக்கு நஞ்சு கலந்த பணியாரங்களை உணவாகப் படைக்கும் அசுர வழக்கத்தை எப்போது கற்றார்கள் என்று எங்களுக்கு வியப்பாயிருக்கிறது. ஆனாலும் அதற்காக உங்களை நாங்கள் மன்னிக்க முடியும்...” “குற்றவாளிகள் மன்னிக்க முடியாது. மன்னிக்கப்பட முடியும்!” “உண்மைதான்! யார் குற்றவாளிகள் என்பது தெரிந்து தான் நான் உங்களை மன்னிக்க முடியும் என்று சொன்னேன். உணவில், நீரில், பாலில் நஞ்சிடுபவர்களை விடப் பெரிய குற்றவாளிகள், நரகத்தில் கூட இருக்க முடியாது.” “யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரிந்துபேசுங்கள்!” “அதுதான் முதலிலேயே தெரிந்துவிட்டதே ஐயா! தெரிந்துதான் ஒன்றுமே பேசாமல் இருந்தேன். பேசாமல் இருந்தவனை நீங்கள் தான் பேசவைத்தீர்கள். இப்போதோ நான் பேசினால் உங்களுக்கே கோபம் வருகிறது. தப்பிச் செல்ல உதவுவதற்கு வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தீர்கள். விரோதியைப் போல் கோபித்துக் கொண்டு புறப்படுகிறீர்கள். நீங்கள் நண்பர்கள் போல் வந்ததற்கும் நாங்கள் பொறுப்பில்லை. நீங்கள் விரோதிகள் போல் இப்போது இப்படிக் கடுங்கோபத்தோடு திரும்புவதற்கும் நாங்கள் பொறுப்பில்லை.” “சிறைப்பட்டிருப்பவர்களுக்கு இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாது.” “சிறைப்படுத்தியிருப்பவர்களுக்கு இவ்வளவு மமதை இருந்தால், சிறைப்பட்டவர்களுக்கும் ஏதாவது இருக்கத் தானே செய்யும்?” இதைக் கேட்டு அழகன்பெருமாளை உறுத்துப் பார்த்தார்கள் அவர்கள். அழகன்பெருமாளும் நண்பர்களும் ஒதுங்கி நின்று அவர்களுக்கு வழிவிட்டனர். வந்தவர்கள் ஐவரும் ஏமாற்றத்தோடும் பணியாரக் கூடையோடும் திரும்பிச் சென்றபின், “இது ஒரு பெரிய சூழ்ச்சி நாடகம்! நம்மை மாட்ட வைப்பதற்கு மிகமிகத் தந்திரமாக வலை விரித்திருக்கிறார்கள் களப்பிரர்கள். விழிப்பாக இருந்ததால் பிழைத்தோம்” என்று நண்பர்களை நோக்கிக் கூறினான் அழகன்பெருமாள். எல்லாரும் பசிக்களைப்போடு இருந்தாலும் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் தப்பிவிட்டோம் என்ற மனநிறைவு புதிய தெம்பைக் கொடுத்திருந்தது. சில கணங்களுக்குப் பின் அழகன் பெருமாள் தேனூர் மாந்திரீகன் செங்கணானை நோக்கி, “செங்கணான்! காரியத்தைக் கவனிக்கலாம்! தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் அடைப்பட்டிருக்கும் பாதாளச்சிறை இப்போது இங்கே நாம் நின்று கொண்டிருக்கும் தளத்திற்கு கீழே இருக்கிறது என்றாய்! அதோடு நாம் நிற்கும் இந்தக் கல்தளத்தில் எங்கோ ஓர் கோடியில் சிறைக்குச் செல்லும் படிக்கட்டு ஒன்று இருப்பதாகவும் என்னிடம் இரகசியமாகத் தெரிவித்தாய்! அந்தப் படிக்கட்டை அடைவதற்கு எந்த இடத்தில் தளத்தின் மேற்பகுதிக் கற்களைப் பெயர்க்க வேண்டும் என்பதை வந்து காட்டு!” எனக் கட்டளையிட்டான். மாந்திரீகன் மைச்சிமிழை மீண்டும் எடுத்துப் பார்த்துவிட்டுச் சிறிது சிந்தித்த பின் ஈசானிய மூலையில் இரண்டு வரிசையான அடுத்தடுத்த தளக்கற்களை அவற்றின் மேல் நடந்து காட்டி அடையாளம் சொன்னான். உடனே அழகன் பெருமாள் தன்னோடு இருந்தவர் களை அருகில் கூப்பிட்டு அதிக ஒலி எழாமல் அந்த இருதளக் கற்களைத் தூக்கி நகர்த்துமாறு உத்தரவிட்டான். அவர்கள் மூச்சு திணறும்படி முதற்கல்லைத் தூக்க முயன்று கொண் டிருந்தனர். மூச்சு இரைக்கும் அந்த ஒலி கூடக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது அழகன் பெருமாளுக்கு. சிறிது நேரத்தில் முதற் கல்லைப் பாதி நகர்த்திவிட்டார்கள் நண்பர்கள். கீழே இறங்கும் படிக்கட்டுகள் கூடத் தெரிந்தன. பாசி படிந்து வழுக்கலாக இருந்த முதற் படியைக் கைநீட்டித் தொட்டுப் பார்க்கக் கூட முடிந்தது. அந்த நேரம் பார்த்து வெளியே வீரர்கள் புடை சூழ மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் துழைந்து இவர்கள் இருந்த சிறைக்கோட்டக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே வரலானார்கள். அழகன் பெருமாள் திடுக்கிட்டுப் போனான். செய்துகொண்டிருந்த காரியத்தை எப்படி உடனே மறைப்பது என்று புரியவில்லை. பின்புறம் திரும்பி நண்பர்களுக்கு அவன் சைகை செய்யக் கூட அவகாசம் இல்லை. அவர்களும் உள்ளே வரத் தொடங்கிவிட்டார்கள். வருகிறவர்களை முன்பாகவே எதிர் கொண்டு சென்றான் அழகன்பெருமாள். திகைப்பினால் அவன் நெஞ்சு விரைந்து அடித்துக்கொண்டது, பதறியது. |