இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 7. விரக்தியில் விளைந்த நன்மை கலிய மன்னனின் பார்வையில் கருணையும் நிதானமும் வறண்டிருப்பதைக் காமமஞ்சரியும் குறிப் பால் புரிந்து கொண்டாள். அவன் தன்னை நம்பவில்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. “சொந்த வனப்புக்களைச் சாகஸமாக்கி ஒப்படைத்த காரியத்தை வெற்றிபெறச் செய்யாத முதல் களப்பிரப் பெண்ணை இப்போது தான் நான் சந்திக்கிறேன்” - என்றான் அரசன். அவனோடு அரச குரு மாவலி முத்தரையரும் சேர்ந்து கொண்டார்: “பெண் சபலங்களின் வடிவம் என்பதை நீயும் நிரூபித்து விட்டாய் காமமஞ்சரி! தன்னுடைய சபலங்களையே அடக்கி வெற்றி கொள்ள முடியாதவளால் பிறரை வெற்றி கொள்ள முடியாதுதான்.” “இதில் சபலங்களைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை ஐயா! நீங்கள் வீணாக என் மேல் பழி சுமத்துகிறீர்கள். நானும் என்னால் முடிந்தவரை முயன்றுதான் பார்த்தேன். எதிராளி உணர்ச்சிகளால் வெல்ல முடியாதவனாக இருக்கும்போது நான் எத்தகைய சாகஸம் புரிந்தாலும் பயனில்லை” - என்று காமமஞ்சரி கூறிய வார்த்தைகளையும் மாவலி முத்தரையர் ஏற்கவில்லை. அவர் கூறினார்: “மயக்க வேண்டியவளாகிய நீயே மயங்கியிருப்பாய். அதனால்தான் உன்னால் காரியத்தைச் சாதிக்க முடிய வில்லை! பெண்களிடமுள்ள தவிர்க்க முடியாத நோய் இது. அழகிய ஆண்பிள்ளைகளிடம் ஒற்றறிய இவர்களை நம்பி அனுப்பினால் அந்த ஆண் பிள்ளைகளிடம் இவர்களே வயமிழந்து மயங்கிப் போகிறார்கள்.” காமமஞ்சரி இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளருகே நின்றுகொண்டிருந்த பூத பயங்கரப் படைத் தலைவன், அரசரின் கோபமோ, மாவலி முத்தரையரின் கோபமோ தன் மேலேயே திரும்பிவிடக் கூடாதே என்ற கவலையுடனும் முன்னெச்சரிக்கையுடனும் அரசருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தான். “ஐயா! அந்தப் புலித்தோல் அங்கி அணிந்த இளைஞனை மறுபடியும் சிறையில் அடைத்து விட்டேன்” - என்று மாவலி முத்தரையரை நோக்கிச் சொன்னான் அவன். மாவலி முத்தரையரோ, கலிய மன்னனோ அப்போதிருந்த மன நிலையில் இந்தச் சொற்களைக் காதில் வாங்கியதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. காம மஞ்சரியால் ஒற்றறிய முடியாமற் போய்விட்டது என்பதே அவர்களுடைய வருத்தமாக இருந்தது. “நீ போகலாம்! இனிமேல் இப்படிக் காரியங்களில் உன்னையும் நம்பமுடியாது” - என்று கலிய மன்னன் கூறிய போது காமமஞ்சரி அந்தக் குரலில் வேற்றுமை கண்டாள். வழக்கமாக இப்படிக் காரியங்களின் முடிவில் பொன் ஆரமும், முத்தும், மணியும், இரத்தினமும் வைத்துப் பரிசு கொடுக்கும் அரசன், இன்று தன்னை வெறும் கையளாக அனுப்புவதோடு மட்டுமின்றிச் சந்தேகத்துக்கு உரியவளாகவும் கருதுவதைப் புரிந்து கொண்டாள். அவளுள்ளே பெண்மை சீறியது. பதினாறடி வேங்கை போன்ற அந்தப் பாண்டியகுல வாலிபனை வெற்றி கொள்ள முடியாத ஏமாற்றத்தால் ஏற்கெனவே துடித்துக் கொண்டிருந்த அவள் மனத்தை அரசனும், மாவலி முத்தரையரும் இப்போது இன்னும் அதிகமாகச் சோதனை செய்திருந்தனர்.
‘அவனிடமிருந்து நான் தப்புவதற்காக அவனைத் தப்ப விடுவதுபோல் பேசினேன்’ என்று தான் கூறியதை அரசன் இரசிக்கவில்லை என்று அவளுக்கே புரிந்தது. அந்த வார்த்தைகளைக் கூறியபோதுதான் கலிய மன்னனுக்குத் தன் மேல் கடுமையான சந்தேகம் மூண்டது என்பதையும் அவள் உணர்ந் திருந்தாள். அரசனும், மாவலி முத்தரையரும் நடந்து கொண் டதிலிருந்து அவள்மனம் விரக்தியின் எல்லைக்குப் போயிருந்தது. முறைகளையும், சம்பிரதாயங்களையும் துறந்து அரசனிடமோ, மாவலி முத்தரையரிடமோ சொல்லி விடைபெற்றுக் கொள்ளாமலே அங்கிருந்து வெளியேறினாள் அவள்.
அங்கிருந்து அவள் வெளியேறும்போது அரசகுருவோ கலிய மன்னனோ அவளைப் பொருட்படுத்தவில்லை. கலிய மன்னன் கொலு மண்டபத்துப் புலவர்களின் புகழ்ச்சியிலே மீண்டும் குளிர்காயப் போய்விட்டான். மாவலி முத்தரையரோ மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கு அடுத்த உபாயமாக எதை மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனார். அடிபட்ட பெண் புலியின் சீற்றத்தோடு திரும்பிக் கொண்டிருந்த காமமஞ்சரி போகிற போக்கில் களப்பிரர்களுக்கு மனம் அறிந்தே ஒரு பெரும் கெடுதலைச் செய்து விட்டுச் சென்றாள். இந்தக் கெடுதலை அவள் செய்ததற்குக் காரணம், அவள் மனத்திலிருந்த ஒரு பெரும் சந்தேகம்தான். “ஐயா! சுந்தர வாலிபரே! தயை கூர்ந்து நீங்கள் இங்கிருந்து உடனே எப்படியாவது வெளியேறி விடுவது நல்லது. இல்லாவிட்டால் நாளைக்குச் சூரியோதயத்திற்குள் உங்களைச் சிரச்சேதம் செய்துவிடுவதாக ஏற்பாடு ஆகியிருக்கிறது. அப்படி நீங்கள் சிரச்சேதம் செய்யப்படுவதற்குள் உங்களிடமிருந்து என்னென்ன இரகசியங்களை ஒற்றறிய முடியுமோ அவற்றை எல்லாம் அறிவதற்கே நான் வந்தேன்” என்று தனியறையில் உணர்ச்சி வசப்பட்டு எதிரியிடம் தான் கூறியவற்றை எல்லாம் தனக்கே தெரியாமல் வெளியில் மறைந்திருந்து காத்துக் கொண்டிருந்த பூதப்பயங்கரப் படைத் தலைவன் கேட்டிருந்து அப்படியே அவற்றை எல்லாம் அரச குருவிடமோ அரசனிடமோ போய்ச் சொன்னால் தன் நிலைமை என்ன ஆகும் என்றெண்ணியே இப்போது காமமஞ்சரி அஞ்சினாள். இந்த அச்சமும், சந்தேகமுமே அவளை விரக்தியுடையவளாக்கியிருந்தன. அவள் தனியறையிலிருந்து வெளியேறும் முன்பே, முற்றிலும் எதிர்பாராத விதமாகப் பூதபயங்கரப் படைத்தலைவன் உள்ளே நுழைந்ததனால்தான் அவளுக்கே இந்தப் பயம் வந்திருந்தது. தன்னை அவர்கள் முழுவதும் நம்பியிருக்கவில்லை என்ற எண்ணமும் அவளை அச்சுறுத்தியது. புலித்தோல் அங்கி இளைஞனை ஒற்றறிய தன்னை அனுப்பிவிட்டுத் தன்னை ஒற்றறியப் பூதபயங்கரப் படைத் தலைவனை அனுப்பியிருந்தார்களோ என்ற சந்தேகமும் அவளுள் கிளர்ந்தது. ‘தான் அபாயத்துக்கு ஆளாகி விட்டோம்’ என்ற பதற்றத்தில் அவள் முழுவிரக்தி அடைந்தாள். அந்தப்புர உரிமை மகளிர் பகுதிக்கு நடைப்பிணமாக அவள் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவள் வழியில், எதிரே அந்தப்புரத்திற்கும் சிறைக் கோட்டங்கள் இருந்த பகுதிக்கும் வழிகள் பிரியும் முனையிலே பூதபயங்கரப் படை வீரர்கள் அறுவர் நின்று கொண்டிருந்தனர். எதற்கோ தயங்கி நின்ற அவர்கள் அறுவரும் தன்னைக் கண்டதும் ஏன் அவ்வளவு மருள்கிறார்கள் என்பது அவளுக்குப் புரியாவிட்டாலும், அவர்கள் முன் தன்னையறியாமலே அவள் தயங்கி நின்றாள். அவர்களை உற்றுப் பாாததாள். அவர்கள் அறுவரில் ஒருவன் முன்வந்து சற்றே திருந்தாத மழலைப் பாலியில், “சித்திரமாடத்து உப்பரிகைக்கு எந்த வழியாகச் செல்லவேண்டும்? அங்கே அடைக்கப்பட் டிருக்கும் பாண்டிய நாட்டு வீரன் ஒருவனை மீண்டும் சிறையில் கொண்டு போய் அடைக்குமாறு எங்களுக்குக் கட்டளை இடப்பட்டிருக்கிறது” என்று அவளிடம் கேட்டான். இதற்கு முதலில் பதில் எதுவும் சொல்லாமல் அவர்களைப் பார்த்துச் சிரித்தாள் அவள். அவளுடைய சிரிப்பைக் கண்டு அவர்கள் அறுவரும் ஓரளவு பதறினாலும் அவர்களில் முதலில் பேசியவனே மீண்டும் அவளைக் கேட்டான். “ஏன் சிரிக்கிறாய் பெண்ணே?” “சிரிக்காமல் வேறென்ன செய்வது? உங்களுக்குப் பாலியில் பேசவும் தெரியவில்லை; அரண்மனையில் உள்ள இடங்களுக்கு வழியும் தெரியவில்லை. மொழியும் வழியும் தெரியாதவர்கள் எப்படி இந்த அரசின் ஆணையின் கீழ்ச் சேவை செய்யும் பூத பயங்கரப் படை வீரர்களாக இருக்க முடியும் என்று நினைத்தேன். உடனே சிரிப்பு வந்தது.” “நாங்கள் பெரும்பாலும் புறநகரப் பகுதிகளிலும், பாண்டிய நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் இருந்த பூத பயங்கரப்படை வீரர்கள். அதிகமாகத் தமிழ் வழங்கும் பகுதிகளில் பழகியவர்கள். புதிதாக இங்கே வந்திருக்கிறோம். மொழியும் வழியும் புரியாததற்கு அதுவே காரணம்.” “மொழியும், வழியும் புரியாதவர்கள் என்று மட்டும் உங்களை நான் நினைக்கவில்லை; இன்னும் எதை எதையோ எல்லாம் புரிந்து கொள்ளத்தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் தேடி வந்திருக்கும் புலித்தோல் அங்கி இளைஞர் இப்போது சித்திர மாடத்தில் இல்லை. இங்கே என் எதிரே நின்று மழலைப் பாலி பேசும் உபவனத்து அழகன்பெருமாள் மாறனாருக்கு என் பாராட்டுக்கள்!” இந்த வாக்கியத்தை அவள் கூறி முடிக்கும் முன்னே உருவியவாளின் நுனி ஒன்று அவளுடைய அழகிய கழுத்தில் உராயத் தொடங்கியிருந்தது. “என்னை எப்படித் தெரியும் உனக்கு?” “அரண்மனை அந்தப்புரத்து உரிமை மகளிருக்கு எத்தனை முறை பூக்களும், மாலைகளும், சந்தனமும் கொடுக்க வந்திருப்பீர்கள்? நீங்கள் என்னதான் மாறு வேடத்தில் இருந்தாலும் எனக்கு உங்களைப் புரிகிறது!” “இந்த நிலையில் நீ எங்களைக் காண்பித்துக் கொடுத்தால் உயிர் தப்ப மாட்டாய் காமமஞ்சரி!” “இனி என் உயிரைப் பற்றிப் பெரிதாகப் பேசி ஒரு பயனும் இல்லை ஐயா! நீங்கள் விட்டுவிட்டாலும் எங்கள் அரச குருவோ, பூத பயங்கரப் படைத் தலைவனோ கூட விரைவில் என்னைக் கொன்று விடலாம். நான் துரோகி என்று அவர்களும் நினைக்கிறார்கள். மெய்யாகவே துரோகியானால்கூட நல்லது என்று எண்ணும் அளவுக்கு அவர்கள் என்னை விரக்தி அடையச் செய்து விட்டார்கள்” என்று தொடங்கி நடந்தவை எல்லாவற்றையும் இவர்களிடம் கூறி விட்டாள் காமமஞ்சரி. அவர்களுடைய விரக்தியைப் பயன்படுத்திக் கொண்டு பூதபயங்கரப் படை வீரர்கள் போல் அரண்மனையில் ஊடுருவியிருந்த அழகன் பெருமாளும் ஏனைய உபவனத்து நண்பர்களான காரி, கழற்சிங்கன், சாத்தன், குறளன், தேனூர் மாந்திரீகன், செங்கணான் ஆகிய ஐந்து பேரும் அவளிடமிருந்து அறிய முடிந்த இரசியங்களை எல்லாம் அப்போது உடனேயே அறிந்தனர். தென்னவன் சிறுமலை மாறனைச் சித்திரமாடத்து உப்பரிகையில் வைத்து தான் மயக்க முயன்றதையும் அவன் மயங்காததையும், அவன் மேல் இனம்புரியாத மையலால் தான் ஆட்பட்டதையும் எல்லாம் காமமஞ்சரி அவர்களுக்குக்கூறி, அவனும் மற்றப் பாண்டிய வேளாளர்களும் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கோட்டத்துக்கு வழியும் கூறி விட்டுச் சென்றாள். அவ ளுடைய விரக்தி அவர்களுக்கு இந்த நன்மையைச் செய்தது. |