![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 8. குறளியும் மாற்றுக் குறளியும் அரண்மனையிலும், கோட்டை யின் மற்ற உட்பகுதிகளிலும் நள்ளிரவின் அமைதி சூழ்ந்தது. காவலிருக்கும் வீரர்கள் தாங்கள் விழித்திருக்கிறோம் என்பதை அறிவிக்க ஒருவருக்கொருவர் கேட்கும்படி உரத்துக் கூவும் எச்சரிக்கைக் குரல்கள் தான் இடையிடையே அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தன. அந்தக் குரல்கள் ஒலிக்காத வேளையில் எங்கும் இருளின் மிகுதியை எடுத்துக்காட்டுவதுபோல் நிசப்தமே சூழ்ந்திருந்தது. எப்போதாவது அகழி நீரில் ஒரு பெரிய முதலை வாலைச் சுழற்றி அடிக்கும் ஓசை கோட்டை மதில்களின் சுவர்களில் எதிரொலித்தது. மதில்மேல் காவலுக்கு நிற்போரின் உருவம் நிழல்போல் இருண்டு தெரிந்தது. அன்று அந்த நள்ளிரவு வேளையில் பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைப்படி, களப்பிரர்களிடம் சிறைப்பட்டுவிட்ட தென்னவன் மாறனையும், பிறரையும் சிறை மீட்கும் முயற்சியில் அழகன் பெருமாளும் நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவுக்குச் சிறிது நேரம் கழித்து அவர்கள் அறுவரும் சிறைக்கோட்டப் பகுதியை அடைந்து விட்டனர். சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலில் நாலைந்து முரட்டுக் களப்பிரர்கள் காவல் இருந்தனர். அவர்களோடு போரிட்டுக் கொன்று விட்டு உள்ளே நுழையலாமா, அல்லது தந்திரமாக ஏதாவது செய்து அவர்களை ஏமாற்றி விட்டு உள்ளே நுழையலாமா என்று அவர்கள் தயங்கிக் கொண்டிருந்தபோது, தேனூர் மாந்திரீகன் அந்தத் தயக்கத்தைத் தீர்த்து வைத்தான். அவன் கூறினான்: - “இவர்களோடு நாம் போரிட்டுக் கொண்டிருக்கும் போதே வேறு களப்பிரர்களும் இங்கே வந்து சேர்ந்து கொண் டால் நம்மால் அவர்களை வெல்ல முடியாமல் போகும். ஆகவே, தந்திரமோ மந்திரமோதான் இந்த நிலையில் நம்மைக் காப்பற்றும். ஆகவே, நான் என்னுடைய மாந்திரீக முறைப்படி இவர்கள் கண்களைக் கட்டி ஏமாற்றிக் குறளி வேலை செய்து காட்டுகிறேன்.” “என்ன செய்யப் போகிறாய் செங்கணான்?” “சிறிது நேரம் பொறுமையாயிருந்து பாருங்கள். புரியும்.” மற்ற ஐவர் கண்களும் செங்கணானையே நோக்கின. தேனுர் மாந்திரீகன் செங்கணான் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை உச்சரித்தான். எதிரே தரையையும், மதிற் சுவரையும் கையால் சுட்டிக் காட்டினான். ஏதோ மெல்லச் சொன்னான். என்ன விந்தை! அடுத்த கணம் தரை நெடுக எங் கிருந்தோ கொண்டு வந்து குவித்தது போல் நாக சர்ப்பங்கள் படமெடுத்துச் சீறின. எதிர்ப்புறம் மதிற்சுவர் தீப்பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தது. சிறைக்கோட்ட வாயிலில் நின்ற களப்பிர வீரர்கள் நிலைகுலைந்து பதறி ஓடினர். சிலர் பாம்புகளை அடிக்க முற்பட்டனர். சிலர் தீப்பற்றிய சுவரை மருண்டு நோக்கினர். உடனே செங்கணான் தன்னைச் சேர்ந்த வர்களை நோக்கி, “இதைக் கண்டு நம்மவர்கள் பயமோ பதற்றமோ அடையக் கூடாது! இது அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப நான் செய்த குறளி வேலை. அவர்கள் இதைக் கண்டு பாம்பை அடிக்கவும் தீயை அணைக்கவும் முயன்று கொண்டிருக்கும்போதே நாம் உள்ளே புகுந்து நம்மவர்களை விடுவித்து மீட்டுக் கொண்டு வெளியேறிவிடமுடியும். வாருங்கள்” என்று துரிதப்படுத்தினான். செங்கணானைப் பின்பற்றி மற்ற ஐவரும் சிறைக்கோட்டத்திற்குள் நுழைந்தனர். வெளியே பாம்பை அடிக்கவும், தீயை அணைக்கவும் கூவி மற்றவர்களைக் கூப்பிடும் பாலிமொழிக் கூக்குரல்கள் கதறின. அழகன் பெருமாளும் நண்பர்களும் விரைந்து சிறைக்கோட்டத்தில் புகுந்து தென்னவன் சிறுமலை மாறனும், பிறரும் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் பிரவேசித்தபோது, இவர்கள் பூதபயங்கரப் படையினரின் தோற்றத்தில் இருந்த காரணத்தால் அவர்கள் இவர்களை வெகுண்டு நோக்கினர். தென்னவன் சிறுமலை மாறனும் மற்ற மூவரும் தங்களை இனம் கண்டுகொள்வதற்காக இவர்கள் கயல் என்று தொடங்கி நல்லடையாளச் சொற்களை மெல்லக் கூறிய பின்பே அவர்களும் பதிலுக்கு நல்லடையாளச் சொல்லைக் கூறி இவர்களை நோக்கி முகம் மலர்ந்தனர். உடனே இவர்கள் அறுவரும், அவர்கள் நால்வரையும் பிணித்திருந்த சங்கிலிகளையும், விலங்குகளையும் நீக்கி அவர்களைத் தங்களோடு தப்பி வெளியேறுவதற்கு ஏற்றபடி ஆயத்தமாக்கினார்கள். “உங்களையும் சிறைப்பட்டிருக்கும் நம்மவர்களையும் விடுவிக்கச் சொல்லிப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் இருந்து எங்களுக்குக் கட்டளை ஓலை வந்தது. அந்தக் கட்டளையைச் சிரமேற்கொண்டு கோட்டைக்குள் நாங்கள் ஊடுருவி வந்தோம். உடனே புறப்படுங்கள். நாம் உடனே தப்ப வேண்டும்” என்று அழகன் பெருமாள் துரிதப்படுத்தினான். தென்னவன் சிறுமலை மாறனையும், மற்ற மூவரையும் உடன் அழைத்துக்கொண்டு அவர்கள் பத்துப் பேரும் வெளியேறி ஓடினர். சிறைக்கோட்டத்தின் அந்தப் பகுதிக்கும் அவர்கள் குறளி ஏவலால் உள்ளே நுழைந்த பிரதான வாயிற் பகுதிக்கும் நெடுந் தொலைவு இருந்தது. பாதித் தொலைவு கடந்ததுமே திடீரென்று செங்கணான் அழகன் பெருமாளிடம் ஒர் எச்சரிகை விடுத்தான்: “அழகன்பெருமாள் எனக்கு ஒரு சந்தேகம் இப்போது மனத்தில் தோன்றுகிறது. களப்பிரர்களில் பலர் சூன்யம், குறளி, ஏவல், போன்ற மாந்திரீக வகைகளில் வல்லுநர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்த மதுரை மாநகர் அரண்மனை அகநகர எல்லையில் யாராவதொரு மாற்று ஏவல் வைத்துக் குறளி விடுகிறவன் விழித்துக் கொள்வதற்குள் இங்கிருந்து நாம் தப்பிவிடவேண்டும். என் மனம் எதனாலோ சில கணங்களாகப் பதறுகிறது. நிச்சயமாக இங்கே ஒரு மாற்று ஏவலாளன் இருப்பான் என்றே நான் ஐயுறுகிறேன்.” இப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலருகே வந்திருந்தனர். பிரதான வாயில் அடைத்திருந்ததைக் கண்டு அழகன் பெருமாள் திகைத்தான். மதிற்சுவர் எரிவது போல் தெரியவில்லை. தரையில் சர்ப்பங்கள் தென்படவில்லை. வெளிப்புறம் அடைக்கப்பட்ட கதவுகளின் அருகே முன்பு எத்தனை களப்பிர வீரர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ அத்தனை பேர் இப்போதும் அமைதியாகக் காத்திருந்தனர். தப்பி ஓடுவதற்கு இருந்த அழகன்பெருமாள் முதலிய பத்துப் பேரும் அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே இருந்து திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உள்ளே வரும்போது கூட அடைக்கப்பட்டிராத கதவுகள் இப்போது ஏன் அடைக்கப் பட்டிருக்கின்றன என்பது புரியாமல் அவர்கள் மருண்டனர். அழகன்பெருமாள் வினாவுகின்ற பாவனையில் தேனூர் மாந்திரீகனின் முகத்தைப் பார்த்தான். மாந்திரீகனின் முகம் கலவரமுற்றிருந்தது. அவன் பதறிய குரலில் பதில் சொன்னான்: “நான் பயந்தபடியே நடந்திருக்கிறது.” “அப்படி என்ன நடந்திருக்கிறது செங்கணான்?” “யாரோ மாற்று ஏவல் செய்திருக்கிறார்கள் இதோ நான் மீண்டும் சர்ப்பங்களையும், நெருப்பையும் ஏவுகிறேன். பலிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாமே?” என்று கூறி விட்டுக் கண்களை மூடித் தியானித்து ஏதோ முணுமுணுத்தான் தேனுர் மாந்திரீகன் செங்கணான். ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. தரையில் பாம்புகள் தோன்றவில்லை. சுவரில் தீப்பிடிக்கவில்லை. சில கணங் களுக்குப் பின் தேனூர் மாந்திரீகன் செங்கணான் வாளாவிருக்கும் போதே அவர்கள் எதிரில் திடீரென நரிகளும், ஒநாய்களும் தோன்றிக் கோரமாக வாய்களைப் பிளந்து கொண்டு ஊளையிடலாயின. தேனுாரான் தளர்ந்த குரலில் கூறலானான்: “என் ஏவல் செயல்பட மறுக்கிறது அழகன் பெருமாள்! வேறு யாரோ வலுவான முறையில் மாற்று ஏவல் விடுகிறார்கள். இந்த நரிகளும், ஓநாய்களும் அந்தப் பிறர் ஏவலின் விளைவுதான்.” இப்படி அவன் கூறி முடிப்பதற்குள் மூடிய கதவுகளின் வெளியேயிருந்து- “பாம்புக்கும், நெருப்புக்கும் குறளி விடுகின்றவர்கள் இந்த நரிகளுக்கும், ஓநாய்களுக்கும் பயப்பட மாட்டீர்கள் அல்லவா?” - என்று வினாவி விட்டுப் பேய்ச் சிரிப்புச் சிரித்தது ஒரு குரல். அந்தக் குரலுக்குரிய மனிதனைப் பார்க்க அவர்கள் பத்துப் பேருடைய இருபது விழிகளும் ஏக காலத்தில் திரும்பி நிமிர்ந்தன. எதிரே கதவுகளின் வெளியே அரசகுரு மாவலி முத்தரையர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். மாற்று ஏவலின் கைகள் யாவை என்பது தேனூர் மாந்திரீகனுக்கு இப்போது ஒருவாறு விளங்கியது. மாந்திரீக முறையிலேயே அந்த எதிரியின் கைகளை எப்படிக் கட்டிப் போடலாம் என்று விரைந்து சிந்திக்கத் தொடங்கியது செங்கணான் மனம். |