இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம் 9. இரத்தினமாலையின் ஊடல் அழகன்பெருமாளும் அவனைச் சேர்ந்த உபவனத்து நண்பர்கள் ஐவரும் தனக்குத் தெரியாமலும், தன்னிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே கணிகை மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்று விட்டார்கள் என்ற செய்தியை இரத்தினமாலை தன்னிடம் தெரிவித்த போது, இளையநம்பியின் கோபம் முழுமையும் அவள் மேல்தான் திரும்பியது. அந்தக் கோபத்திற்கு உரிய இலக்கு அவள் இல்லை என்றாலும் எதிரே நின்ற காரணத்தினால் அவளே அதற்கு ஆளானாள். “சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவதும், சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுகிறவர்களுக்கு உதவுவதும் தான் கோநகரத்து நாகரிகம் என்று நான் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது!” “உங்கள் கோபம் வீணானது? நாகரிகமே இல்லாத ஒரு கூட்டம் பாண்டி நாட்டை ஆண்டும் அடிமைப்படுத்தியும் வருகின்றது. அநாகரிகமானவர்களை நாகரிகங்களைக் கொண்டு மட்டுமே வென்று துரத்திவிட முடியாது. வன்மையானவர்களை மென்மையான முறைகளால் அணுகி மட்டுமே வென்று விட வழியில்லை.” “நான் களப்பிரர்களைப் பற்றி உன்னிடம் கேட்கவில்லை இரத்தினமாலை. அழகன் பெருமாள் ஏன் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருந்து போகவேண்டும்? அதைத் தான் கேட்கிறேன்?” “அவர்கள் எதை நிறைவேற்றும் குறிக்கோளுடன் போகிறார்களோ அதில் உங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர் அவர்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.” “சிறைப்பட்டு விட்ட தென்னவன் மாறனை மீட்கும் காரியத்தில் நான் ஈடுபடக்கூடாது என்றுதான் பெரியவர் கட்டளை இட்டிருக்கிறாரே தவிர அதற்காகப் புறப்பட்டுப் போகிறவர்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போக வேண்டும் என்று கட்டளை இட்டிருப்பதாக எனக்கு நினைவில்லையே?” “நீங்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தீர்கள். யாமக் கோழி கூவுவதற்கு முன்பே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். உங்கள் உறக்கத்தை அவர்கள் கலைக்க விரும்பவில்லை. தவிரவும் உங்களை எழுப்பிச் சொல்லிக் கொண்டு புறப்பட நேர்ந்து நீங்களும் உடன் வருவேனென்று வற்புறுத்துவீர் களோ எனவும் அவர்கள் தயங்கியிருக்கலாம்.” “அவர்கள் ஏன் என்னிடம் சொல்லாமல் புறப் பட்டார்கள் என்பது எனக்குத் தெரியவேண்டுமேயொழிய, அதைப் பற்றி நீ என்ன அநுமானம் செய்கிறாய் என்பது எனக்குத் தெரியவேண்டியதில்லை.” “இது அர்த்தமற்ற கோபம்.” “இந்த மாளிகைக்கு வந்ததிலிருந்து நான் அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது.”
அவனுடைய இந்த வார்த்தைகளுக்கு அவள் மறு மொழி எதுவும் கூறவில்லை. இமையாத விழிகளால் ஓரிரு கணங்கள் அவன் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்களில் அமைதியில்லை. எதையோ நினைத்து அடைந்த கோபத்தையும், பதற்றத்தையும் செலுத்துவதற்கு இலக்கு இல்லாமல் அவன் தன் மேல் செலுத்துவதை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது. ‘இங்கே வந்த பின்பு அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது?’ - என்று மனத்தைப் புண்படுத்துவது போன்ற சொற்களை அவன் கூறியிருந்தும் சுடச்சுட அதற்குப் பதில் சொல்லும் முனைப்பை அவள் வலிந்து அடக்கிக் கொண்டாள். ஒரு விருந்தினர் பேசும் கடுமையான வார்த்தைகளை அதே கடுமையான வார்த்தைகளால் எதிர்த்து உரையாட நினைப்பதும் பாவம் என்பதை அவள் மறந்து விடவில்லை. இளையநம்பியோ அந்த மாளிகையில் விருந்தினன் மட்டுமில்லை. அதைவிடச் சிறப்பும் உரிமையும் உள்ளவன். அவளால் நேசிக்கப்படுகிறவன். அவளையும் நேசிக்கிறவன். நேசிக்கிற ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவே நேர்பவை கோபங்கள் அல்ல. வெறும் ஊடல்களுக்குக் கோபங்கள் என்று கடுமையான பெயரை சூட்ட அவள் விரும்பவில்லை.
அப்போது அந்த நிலையில் அவனைத் தனியே சிந்திக்க விடுகிறவள்போல் அவள் ஒன்றும் பேசாமல் மாளிகையின் உட்பக்கமாகச் சென்று விட்டாள். கோபத்தை எதிர்கொண்டு அவிப்பதில் பெண்கள்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த அரசதந்திரிகள் என்பதை அவள் அப்போது நிரூபிக்க முற்பட்டாள். தனியே விடப்பட்ட இளையநம்பியின் சிந்தனை உள்முகமாகத் திரும்பியது. திணவெடுத்த தன் தோள்களுக்கு வேலையில்லாமல் போகும் படி யாழும், முழவும், குழலும், இசையும், பெண்களும் மட்டும் நிறைந்திருக்கும் ஒரு கணிகை மாளிகையின் எல்லைக்குள் தான் தங்கிவிடக் காரணமான கட்டளையைப் பெரியவர் மதுராபதி வித்தகர் இட்டு விட்டாரே என்று அவனுடைய ஏலாமைக்கோபம் அவர் மேல் ஒரு கணம் திரும்பியது. அடுத்த கணமே அந்தக் கோபம் அழகன் பெருமாள் மேலே திரும்பியது. ஆனால் அது அழகன் பெருமாள் மேலேயும் நிலைத்து நிற்கவில்லை. கட்டளைக்குக் கீழ்ப்படிகிறானே என்பதற்காகக் கோபப்பட்டுப் பயனில்லை என்று தோன்றவே இளையநம்பியின் கோபம் அங்கேயும் நிலைக்க முடியாமல் நழுவியது. முனைமழுங்கிய ஊசி போல் எங்கும் தைக்காத அந்தக் கோபம் இறுதியில் சுய சிந்தனையாக மாறியது. திருக்கானப்பேரிலிருந்து புறப்பட்டு வரும்போது எண்ணிய எண்ணங்களுக்கும் இப்போதிருக்கும் நடைமுறைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைத் தனக்குத் தானே நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவன். நினைத்துக் கொண்டு வந்த இளமை வேகத்திற்கும் துடிப்பிற்கும் ஏற்ப இங்கு எதுவும் நடைபெறவில்லை. மந்திரம் போட்டுப் பேய் துரத்துவதுபோல் களப்பிரர்களை அவ்வளவு வேகமாகத் துரத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. அவிட்ட நாள் பெருவிழாவன்று கோநகரில் பெரியவர் திட்டமிட்டிருந்தபடி எல்லாம் முடியாமற் போனபின் இன்னும் சிறிது காலம் வெற்றிக்காகக் காத்திருக்கத்தான் நேரிடும் போலிருக்கிறது. வைகறையின் மங்கலமானவையும் இனியவையுமான பணிகளில் கவனமாயிருந்த இரத்தினமாலை அவன் பக்கம் திரும்பவே இல்லை. நீராடி உடை மாற்றிக் கொண்டு புதுமையான உணர்வுகளுடன் அமர்ந்தபோது அவனுக்கே தன் தவறு புரிந்தது. விடிந்ததும் விடியாததுமாக அரசர்களைத் துயிலெழுப்புவதுபோல் தன்னை மங்கலம் பாடித் துயிலெழுப்பிய அவள் மேல் தான் சினம் கொண்டது தவறு என்பதை அவனே மெல்ல மெல்ல உணர்ந்தான். அவனை உண்பதற்கு அழைத்தபோதும் பணிப் பெண்களே வந்து அழைத்தனர். அவள் அவன் முன் தென்படுவதே குறைவாக இருந்தது. நண்பர்கள் அனைவரும் வெளியேறி விட்டபின் அந்த மாளிகையின் எல்லையிலேயே அவன் மனம்விட்டுப் பேசவும், பழகவும் அவள் ஒருத்திதான் இருந்தாள். அவளும் அவன் மேல் பிணக்குக் கொண்டு ஒதுங்கினாற்போல் இருக்கவே, அவன் நரக வேதனைக்கு ஆளானான். அந்த மாளிகையின் சுவர் ஓவியங்களைப் பார்ப்பதில் சிறிது நேரம் கழிந்தது. இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கருவிக் கூடத்தைக் காண்பதில் சிறிது நேரம் கழிக்க முடிந்தது. அங்கிருந்த இசை, நாடக, நடன நூற்சுவடிகள் அடங்கிய பகுதியில் சற்றே நேரம் போக்க முடிந்தது. நண்பகல் வரை அவளை அவனும் தனிமைப்படுமாறு வாட்டினான். அவனை அவளும் தனிமைப் படுமாறு வாட்டினாள். ஊடல்* நீடித்தது. அவளுடைய ஊடலை வழிக்குக் கொண்டு வர அவன் ஒரு தந்திரம் செய்தான். பெண்ணின் பலவீனமான எல்லை எது என்பதையும் புரிந்து கொண்டு, அந்தத் தந்திரத்தை அவன் செய்தான். தவறு தன்னுடையதுதான் என்று புரிந்தாலும், அவளிடம் தானாக முதலில் பேசுவதற்கு அவன் மனம் இறங்கி வரவோ, விட்டுக் கொடுக்கவோ விரும்பவும் இல்லை. எனவே அவளை வழிக்குக் கொண்டுவர, அவன் இந்தத் தந்திரத்தில் ஈடுபட்டான். (* ஊடல் - ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நேரும் நளினமான பிணக்கு) இரத்தினமாலையின் பணிமகளும் அடித்தோழியும் ஆகிய பூங்குழல் நாச்சியார் என்பவளைக் கூப்பிட்டு, “நாச்சியார் உன்னுடைய மென் விரல்களால் நீ யாழ் வாசிப்பதை நான் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன். உடனே என் விருப்பத்தை நீ நிறைவேற்றுவாய் என்று நான் நம்புகிறேன்” என்று இரத்தினமாலை அருகிலிருக்கும்போதே அவளைப் பொருட்படுத்தாதவன் போல், அதேசமயம் அவள் காது கேட்கப் பணிமகளை யாழ் வாசிக்கச் சொல்லிக் கட்டளையிட்டான். அவன் எதிர்பார்த்தபடியே நாச்சியார் இரத்தின மாலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துத் தயங்கினாள். தலைவியின் முன்னிலையில் தான் யாழ் வாசிப்பது எப்படி என்று அவள் பயந்து கூசுவதாகத் தோன்றியது. அவனோ மீண்டும் அவளை வற்புறுத்தினான். “நீ வாசித்தால்தான் என் மனம் மகிழும் நாச்சியார்!” நாச்சியாரின் முகத்தில் நாணமும் பயமும் மாறிமாறிப் பிரதிபலித்தன. அவள் இதழ்களில் வெளிப்பட முயன்ற நகை, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தலைவிக்கு அஞ்சி மறைந்து ஒளிந்தது. மீண்டும் அவன் குழைந்த குரலில் நாச்சியாரை இறைஞ்சியபோது, அங்கே அவனிடம் நேரில் பேசாமல் ஆனால் அவன் கேட்கும்படி நாச்சியாரிடம் பேசுவது போல், “இந்த மாளிகைப் பெண்கள் தலைவிக்குக் கட்டுப் பட்டவர்கள். நம்பிக்கை மாறாதவர்கள். நன்றியுடையவர்கள் என்பதை நீ உன் மறுப்பால் உன்னை வேண்டுபவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் நாச்சியார்!” - என்றாள் இரத்தினமாலை. இளையநம்பியும் பதிலுக்குப் பணிப் பெண்ணிடம் பேசுவது போலவே கேட்டான்: “விருந்தினர்களைப் பணிப்பெண்களிடம் அவமானம் அடையச் செய்வதுதான் இந்த மாளிகை வழக்கமா என்று அங்கே கேள் நாச்சியார்?” “பணிப்பெண்களின் தலைவியை அந்தப் பணிப்பெண்களுக்கு முன்பே அவமானப்படுத்த விரும்பும் எந்த விருந்தினரையும் நாங்கள் அங்கே மதிக்க முடியாது” என்று கோபம் தாங்க முடியாமல் நேரே அவனிடமே பேசிவிட்டாள் இரத்தினமாலை. ஆத்திரத்தில் தான் அவனிடம் நேரே பேசக் கூடாது என்ற பிணக்கு அவளுக்கே மறந்து விட்டது. “அப்படி வா வழிக்கு! உன்னை என்னோடு நேரே பேச வைக்கத்தான் இத்தனை நாடகமும் ஆட வேண்டியிருந்தது; எங்கே? இப்போது நீயே யாழ் வாசிக்கலாம்...” “நான் உங்களோடு பேச விரும்பவில்லை.” “பெண்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ அதை விரும்பவில்லை என்றுதான் சொல்வது வழக்கம்.” இதைக் கேட்டு இரத்தினமாலை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். அதுதான் பொருத்தமான நேரம் என்று இருவருக்கும் நல்லவளாக விரும்பிய தோழிப் பெண் நாச்சியார், அங்கிருந்து ஓடிப்போய் யாழை எடுத்துக் கொண்டு வந்து தலைவியிடம் கொடுத்து, “வாசியுங்கள் அம்மா பாவம்! கேட்க ஆசைப்படுகிறார்” என்று அவனுக்காகப் பரிந்து உரைக்கலானாள். “அடி பேதைப் பெண்ணே! ஆண்களைச் சுலபமாக நம்பிவிடாதே! அவர்களால் எதையும் சாதித்துக் கொள்ள நடிக்கவும் முடியும். என்னையே எடுத்துக்கொள் இப்போது நான் மிக எளிதில் ஏமாந்து போய்விட்டேன். ஒரு விநாடி பலவீனத்தில் என் ஊடல் எங்கேயோ போய் விட்டதே? ஆண் குலத்தை இப்படித் தொடர்ந்து வெற்றியடைய விட்டுக் கொண்டே இருப்பதால் தான் நாம் இன்னும் பேதைப் பெண்களாகவேயிருக்கிறோம் நாச்சியார்...” என்று கூறிய படியே யாழுக்குச் சுருதி கூட்டலானாள் இரத்தினமாலை. “உடனே, நன்றாகச் சுருதி சேருகிறதே” என்று குறும்பாகக் கூறினான் இளையநம்பி. அவள் ஊடல் தவிர்த்து மனம் தன்னோடு இணையத் தொடங்கியதையும் அந்த வாக்கியத்தின் மூலமே இரட்டுற மொழிதலாக அவளுக்குப் புலப்படுத்தி விட்டான் அவன். அவள் யாழ் வாசிக்க இணங்கியதன் மூலம் இளையநம்பியின் மேற் கொண்டிருந்த ஊடல் தவிர்ந்தது. |