மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

12. எதிர்பாராத அழைப்பு

     புறத்தே பெய்த புது மழையைப் போல் இதயத்திலும் ஒரு புது மழை பெய்தாற் போன்ற மகிழ்ச்சி நிலவியதை அடுத்து முற்றிலும் எதிர்பாராதவிதமாய் மின்னலைப் போல் வந்து தோன்றிய கொல்லன், இளையநம்பியின் அந்த ஓலையைக் கொடுத்து விட்டுப் போகவே, செல்வப் பூங்கோதையின் உவகை கட்டுக்கடங்காத பூரிப்பாகப் பெருகியது. பல நாள் வெம்மையைப் புறத்தே போக்கிவிட்ட அந்தப் புது மழையைப் போல் தன் இதயத்தின் கோபதாபங்கள் எல்லாமே உடன் மறைந்து விட்டாற் போலிருந்தது அவளுக்கு. காத்தற் கடவுளாகிய இருந்த வளமுடைய பெருமாளே தன் துயரங்களுக்கு இரங்கி அருள் புரிந்து விட்டதாக அவள் உணர்ந்தாள். தானே உருகி உருகி ஓலைகளை எழுதிக் கொண்டிருந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து அவரிடம் இருந்தும் ஓர் ஓலை தனக்கு மறுமொழியாகக் கிடைத்ததைத் திருவிழாக் கொண்டாடி வரவேற்கலாம் போலிருந்தது. அதை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வதற்கு ஏற்ற தனிமையை நாடி மாளிகையின் பின்புறமிருந்த மலர்வனத்திற்குச் சென்றாள் அவள். மாலை வேளையின் இதமான சூழ்நிலையும் அவ ளுடைய உல்லாசத்திற்குத் துணை புரிவதாயிருந்தது. தாயின் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமான உற்சாகத்தோடு அந்த ஓலையைப் படிக்க விரும்பினாள் அவள்.

     “என்மேல் அன்பு செய்வதையே ஒரு நோன்பாக இயற்றி வரும் ஆருயிர்க் காதலை உடைய செல்வப் பூங்கோதைக்கு இளைய நம்பி வரையும் மடல்! சூழ்நிலை இயைந்து வராத காரணத்தால் நீ ஆறுதலடையும்படி என் கைப்பட இதுவரை நான் எதுவும் உனக்கு எழுத முடியவில்லை. என் பக்கம் அது ஒரு குறைதான். ஆனால் அந்தக் குறை நீ எனக்குக் ‘கடுங்கோன்’ என்று குரூரமாகவும், கோபமாகவும் பெயர் சூட்டிச்சபிக்கும் அளவிற்குப் பெரியது என்பதை அண்மையில் நீ எழுதியதைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். ஆருயிர்க் காதலனுக்குச் சாபம் கொடுக்கும் அளவிற்கு அன்பில் உரிமையும் அதிகாரமும் உள்ள பெண்கள் திருமோகூரில்தான் பிறக்க முடியும் என்று தெரிகிறது. காராளர் குடும்பம் பாண்டிய அரச வம்சத்துக்கு இணையான பெருமை உடையது. அந்தக் குடும்பத்து இளம்பெண் ஒருத்திக்குத் தன் காதலன் மேற் சாபம் விடும் அளவு கோபம்கூட இருக்கலாம்தான். ஆனால், உன் கோபத்தில் திரும்பத் திரும்ப நீ சுமத்தியிருக்கும் ஒரு குற்றத்தை நான் மறுக்க முடியும். நான் ஏதோ உன்னை அடியோடு மறந்து போய்விட்டது போலவும், நீ மட்டுமே என்னை நினைத்துத் தவித்துக் கொணடிருப்பது போலவும் எழுதுகிறாய். நான் மறந்ததை நீ எப்படி அறிய முடியும்? நீ என்னை மறவாமல் நினைந்துருகுவதை நிரூபிக்க நான் எல்லாவற்றையுமே மறந்து விட்டதைப்போல ஒரு குற்றத்தை என் தலையில் சுமத்த வேண்டியது அவசியம்தானா? நியாயம்தானா? நீ கொற்றவைக் கோயிலுக்கு ஒரு மண்டலம் நெய் விளக்குப் போட்டதும், இருந்தவளமுடையாரை ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சித்ததும் ஒருபோதும் வீண் போகாது. என் பிரிவு உன்னை மெய்யாகவே ஊமையாக்கி விட்டதாக இரண்டு ஓலைகளிலுமே திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறாய்! பேச்சுத்தான் ஊமையாகி இருக்கிறதே ஒழிய உன் கோபதாபங்கள் இன்னும் ஊமையானதாகத் தெரியவில்லை.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.