மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

14. கொற்றவை சாட்சியாக...

     எதிர்பாராத விதமாகத் தன்னை நோக்கிப் பெருகும் அந்தப் பரிவின் காரணம் அவளுடைய அநுமானத்திற்கும் எட்டாததாகவே இருந்தது. பெரியவர் திருமோகூருக்கு வந்திருப்பதையோ, தான் போய் அவரைச் சந்தித்ததையோ தாயிடம் கூட அவள் சொல்லவில்லை. இரவு நெடுநேரம் உறக்கமின்றி அவள் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்த போதும், “பெண்ணே அந்தி மயங்குகிற வேளையில் புறப்பட்டுப் போய்க் கொற்றவைக் கோவிலில் இப்படி உறங்காமலிருக்க வரம் பெறுவதற்காகத்தான் அவ்வளவு நாழிகை காத்திருந்து வேண்டிவந்தாயா!” என்றுதான் தாயே அவளைக் கடிந்து கொண்டாள். தான் கொற்றவைக் கோவிலுக்குச் சென்று வருவதாகச் சொல்லி விட்டுப் பெரியவர் அனுப்பியிருந்த ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றதைப் பற்றித் தாய் ஐயுறவில்லை என்பதை அவளுடைய சொற்களாலேயே விளங்கிக் கொண்டாள் செல்வப்பூங்கோதை.

     மறுநாள் காலை பொழுது புலர்ந்து நீராடி முடித்ததுமே உரலில் தினை இடிக்கத் தொடங்கினாள் அவள். இப்படி அடிக்கடி அவள் தினை இடிப்பதும் வழக்கமான காரியமே என்பதனால் தாய் அதைப் பற்றியும் அவளை எதுவும் கேட்கவில்லை. பெரியவரே வாய் திறந்து கேட்டிருக்கிறார் என்பதனால் நல்ல செந்தினையாக எடுத்து முறத்தில் இட்டு நொய்யும், துறுங்கும் களைந்து புடைத்த பின்பே உரலில் கொட்டி இடிக்கலானாள். நாவின் சுவைக்கு ஆசைப்பட்டுத் தான் பெரியவர் தேனும் தினைமாவும் கொண்டு வரச் சொல்லித் தன்னை வேண்டிக் கொண்டதாக அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. கசப்பு நிறைந்த காஞ்சிரங் காயையும் வேப்பிலைக் கொழுந்தையும் தின்று உடலை வைரம் பாய்ந்ததாக்கிக் கொண்டிருப்பவர், தேனுக்கும் தினைமாவுக்கும் ஆசைப்பட்டுத் தன்னை வரவழைத்துப் பேசியிருக்கமுடியும் என்பதை அவளால் ஒப்புக்கொள்ளவும் இயலவில்லை. வேறு ஏதோ பெரிய வேண்டுகோளைத் தன்னிடம் கேட்பதற்கு ஏற்ற பரிவையும் பக்குவத்தையும் உண்டாக்குவதற்குத் தக்கபடிதான் இருப்பதையும், இல்லாததையும் சோதித்து ஆழம் பார்க்கவே இந்த ஏற்பாடோ என்று அவளுக்குச் சந்தேகமாயிருந்தது. சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் மிகவும் சிரத்தையாகத் திணைமாவை இடித்துப் பிசைந்தாள் அவள். மாளிகைப் பணியாட்களிடம் நல்ல கொம்புத் தேனாகத் தேடி இறக்கிப் பிழிந்து வருமாறு அனுப்பினாள். பிற்பகலுக்குள் செங்குழம்பாகப் புத்தம் புதிய கொம்புத் தேன் பிழிந்த நுரையோடு வந்து சேர்ந்தது. பதம் பார்த்து அளவாகவும் சுவையாகவும் கலந்து நெல்லிக்கனிப் பிரமாணத்திற்கு உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டாள். தனியே ஒரு சிறிய குவளையில் தேனும் எடுத்துக் கொண்டாள். பெரியவரைத் தேடி அவள் மாளிகையிலிருந்து புறப்படும்போது பிற்பகல் கழிந்து மாலை வேளை தொடங்கியிருந்தது. முதல் நாளைப் போலவே கொற்றவைக் கோயிலுக்குச் சென்று வலங்கிவிட்டுத் திரும்பி வருவதாகத்தான் தாயிடம் சொல்லிக் கொள்ள முடிந்தது. இன்றும் ஆபத்துதவிகள் தன்னைத் தேடி வந்து அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று எதிர்பார்த்திராமல் அவளே புறப்பட்டிருந்தாள். வழியில் கொற்றவைக் கோயிலை வலம் வந்து வணங்கிச் செல்லவும் நேரம் இருந்தது. அந்த வழிபாட்டையும் குறைவின்றி நிறைவேற்றிக் கொண்டு அப்புறம் ஆலமரத்தடிக்குச் சென்றாள் அவள்.

     அங்கே அவள் சென்றபோது உள்ளே அமர்ந்து கொண்டிராமல் ஆலமரத்தின் விழுதுகளிடையே குறுக்கும் நெடுக்குமாக நடந்து உலவிக் கொண்டிருந்தார் பெரியவர். அவளைப் பார்த்ததும் அவரருகே மரத்தடியில் நின்றிருந்த ஆபத்துதவிகள் இன்றும் தொலைவாக விலகிச்சென்று நின்று கொண்டனர்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.