![]() எமது இந்த சென்னை நூலகம் இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 20 செப்டம்பர் 2025 06:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 2 |
மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம் 15. போர் மூண்டது அன்று அதிகாலையிலிருந்தே பாண்டிய நாட்டின் கோநகரமாகிய மதுரை எதையோ விரைந்து எதிர்பார்ப்பது போன்ற மர்மமான அமைதியில் திளைத் திருந்தது. அரண்மனைக்குள்ளும், கோட்டை மதில்களின் புறத்தேயும் வெறிச்சோடிக் கிடந்தது. பிரதான வாயில்களிலும் முக்கிய இடங்களிலும் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள களப்பிர வீரர்கள் கூரிய, வேல்களை ஏந்தியபடி காத்துக் கொண்டிருந்தனர். கோநகரப் பொதுமக்கள் எதையோ புரிந்து கொண்டது போலவும், எதையோ வரவேற்பது போலவும், எதற்கோ ஆயத்தமாயிருப்பது போலவும் தோன்றினர். வெள்ளியம்பல மன்றத்தில் வெள்ளம்போல் பெரிய யாத்திரிகர் கூட்டம் கூடியிருந்தது. பெருமழை பெய்ய மேகங்கள் கூடி மூட்டம் இருட்டிப்பது போல் நகர் எங்கும் ஒரு மர்மமான சூழ்நிலை மூடியிருந்ததைக் கூர்ந்து நோக்குகிற எவரும் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் கட்டுப்படுத்திவிட முடியாத ஓர் உணர்ச்சி, நகர் எல்லையில் மெல்ல மெல்லப் பொங்கிப் புடைத்துக் கிளர்ந்து எழுந்து கொண்டிருந்தது. இருந்த வளமுடையார் கோவிலிலும், ஆலவாய் இறையனார் திருக்கோயிலிலும், ஆறுபோற் பெருங்கூட்டம் வழிபட திரும்பிக் கொண்டிருந்தது. திருப்பரங்குன்றிலிருந்து கோநகருக்கு வந்து சேரும் அரச வீதியாகிய புறச்சாலையில் கடல்போற் பெரிய மக்கள் கூட்டம் தென்பட்டது. எல்லாரும் அகநகரைச் சேர்ந்தவர் களாகவும் தெரியவில்லை. புலவர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். உழுதுண்ணும் வேளாண்குடி மக்களைப் போல் சிலர் தோன்றினார்கள்; மற்போர் மைந்தர்களைப் போல் சிலர் தோன்றினார்கள். எல்லாரும் ஒரே நோக்க முடையவர்கள்தான் என்பது போல் அவர்களைப் பற்றி அநுமானம் செய்து கொள்ள மட்டும் இடமிருந்தது. வந்திருப்பவர்களின் தோற்றங்கள் வேறு வேறாக இருந்தாலும், நோக்கம் ஒன்றாகவே இருக்கும் என்று நினைக்க முடிந்த விதத்திலேயே அவர்கள் ஒருவருக் கொருவர் பழகிக் கொண்டனர். கலகத்துக்குக் கருக் கொள்வது போல் பகல் முழுவதும் இதே நிலை நீடித்தது. கதிரவன் மலையில் விழுகிற நேரத்துக்கு முதற் கலகம் விளைந்தது. இரத்தம் சிந்தியது. வெள்ளியம் பல மன்றில் இறங்கித் தங்கியிருக்கும் யாத்திரிகர் கூட்டம் முழுமையுமே மாறுவேடத்தில் வந்திருக்கும் பாண்டிய வேளாளர் படையோ என்ற ஐயப்பாட்டோடு பிற்பகலில் மாவலி முத்தரையர், கலியரசனைக் கண்டு பேசி எச்சரித்தார். கொற்கையில் இருந்து போர் முனைகளுக்குப் போக வேண்டிய குதிரைகள் போகவில்லை என்பதும் அவரால் கலியரசனுக்குத் தெரிந்தது. “கலியா குடிமுழுகி விட்டது. முன்பு பழைய அவிட்டநாள் விழாவின்போது அவர்கள் ஏமாந்தார்கள். இப்போது நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். கோநகரில் இந்தக் கணத்தில் ஆயிரக்கணக்கான பாண்டிய வீரர்கள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று அறிகிறேன். புறநகரிலும் அவர்கள் கூடி வளைத்திருக்கிறார்கள். நம்முடைய எல்லா வலிமையையும் எல்லைகளில் குவித்து விட்டதால் இங்கே இப்போது நாம் பலவீனமாயிருக்கிறோம்! கப்பலில் வந்திறங்கிய குதிரைகளும் பாண்டிய வேளாளர்களால் கைப்பற்றப்பட்டிருக்குமோ என அஞ்சுகிறேன்.” இதைக் கேட்டுக் களப்பிரக் கலியரசன் துள்ளி எழுந்தான். முன் கோபத்தில் பற்களை நறநற வென்று கடித்தான். தீயெழ விழித்தான். சீறினான். அரண்மனை எல்லையிலிருந்த சில நூறு வீரர்களை ஒன்று திரட்டி மாவலி முத்தரையர் தலைமையில் உடனே வெள்ளியம் பல மன்றத்திற்குத் துரத்தினான். அரண்மனை உட்கோட்டை மதில்களை அடைத்துக் கொண்டான். உள்ளேயிருந்த எஞ்சிய களப்பிர வீரர்களை மதில்மேல் ஆங்காங்கே மறைந்திருந்து மதிற்புறத்தை வளைக்க வரும் பாண்டிய வீரர்கள் மேல் வேலெறிந்தும், அம்பெய்தும், தாக்குமாறு கட்டளையிட்டான். பதற்றத்தில் அவனுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தடுமாறினான். மாவலி முத்தரையர் தன்னுடன் கலியரசன் அனுப்பிய நூறு களப்பிர வீரர்களோடு வெள்ளியம்பல மன்றத்தை நெருங்குவதற்கு முன்பே நிலைமை கை மீறிப் போயிருந்தது. வெள்ளியம்பல மன்றிலில் இருந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்களும், தேசாந்திரிகளின் கோலம் மாறிப் போர் வீரர்களாக எழுந்து நின்றனர். அவர்கள் மூட்டை முடிப்புக்கள் எல்லாம் அவிழ்க்கப்பட்டு ஆயுதங்களாக வெளிப்பட்டு வேலாகவும் வாளாகவும் கேடயங்களாகவும் விளங்கின. “நீங்கள் முன்னேறிச் சென்று எதிரிகளைத் தாக்குங்கள்!நான் இதோ வருகிறேன்...” என்று வெள்ளியம்பல மன்றிலின் எதிரே இருந்த ஜைன மடத்திற்குள் நுழைந்த மாவலி முத்தரையர் மறுபடி வரவே இல்லை. பாண்டியர் பெரும்படையின் நடுவே சிக்கிய நூறு களப்பிர வீரர்களில் பெரும்பாலோர் மாண்டனர். சிலர் சின்னாபின்னமாகி மூலைக்கொருவராகச் சிதறி ஓடினர். பாண்டியர் படைக்கும் ஓரளவு சிறு இழப்பு ஏற்பட்டது. படையணியின் முன்னே வெள்ளியம்பல மன்றிலின் வாயிலில் தலைமை ஏற்று நின்ற கொற்கைப் பெருஞ்சித்திரன் போரில் மாண்டு போனான். குறிப்பிடத்தக்க அந்த மரணம் பாண்டிய வீரர்களின் குருதியில் சூடேற்றி வெறியூட்டியது. பழிக்குப் பழியாகப் பல களப்பிர வீரர்களை வெட்டி வீழ்த்தினார்கள், அவர்கள். அரண்மனை உட்கோட்டையை வளைத்துப் பிடிக்கப் பாண்டியர் படை முன்னேறியது. எண்ணிக்கையிற் சிறிய அளவினராக வந்த களப்பிர வீரர்கள் தாக்குதலைத் தொடங்கிய வேகத்தில் பாண்டியர் அணியின் தலைவனும் இளவரசர்களில் ஒருவனும் ஆகிய கொற்கைப் பெருஞ்சித்திரனைக் கொன்று விடவே, பாண்டியர் அணிக்கு அடக்க முடியாத ஆத்திரம் மூண்டு விட்டது. வெள்ளியம்பல மன்றிலின் மன்றிலில் போரின் முதல் களப்பலியாகப் பாண்டியர்கள் பக்கமிருந்து பெருஞ்சித்திரன் மாண்டான் என்றால், களப்பிரர்கள் பக்கம் பல வீரர்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள். கதிரவன் மறைந்து நன்றாக இருட்டுவதற்குள் அகநகர் எல்லையில் போர் முழு அளவில் மூண்டுவிட்டது. சில நாழிகைப் போதிலேயே அரண்மனை உட் கோட்டையைத் தவிர அகநகரிலும், புறநகரிலும் எல்லாப் பகுதிகளிலும் பாண்டியர் படையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிவிட்டன. உட்கோட்டை மதில்களை முற்றுகையிட்டும் உள்ளே இருந்தவர்கள் முற்றுகைக்கு வீழ்ந்து விடாமல் நேரத்தைக் கடத்தி வந்தார்கள். மதில்மேல் அங்கங்கே மறைந்திருந்த சில களப்பிர வீரர்கள் கீழே முற்றுகையிட்டிருந்தவர்கள் மேல் கல்லெறிதல், அம்பு எய்தல் போன்ற தாக்குதல்களைச் செய்து கொண்டுதான் இருந்தனர். முற்றுகை தொடங்கியதுமே நடந்தவற்றை இளைய நம்பிக்கு அறிவிக்க உடனே ஒரு பாண்டிய வீரன் கணிகை மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்தான். கணிகை மாளிகையின் நிலவறையில் பல நூறு வீரர்களோடு இளையநம்பியும், காராளரும், கொல்லனும் ஆயுதபாணிகளாகப் போர்க் கோலம் பூண்டு காத்திருந்தனர். புறத்தாக்குதலைப் பற்றிய விளைவுகளை அறிந்து நிலவறை வழியே உட்கோட்டையில் அரண்மனைக்குள் ஊடுருவி வெளியே மதிற்புறத்தை வளைத்துக் கொண்டிருக்கும் தங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவியாக இருப்பது, கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்டு அவர்களை உள்ளே ஏற்பது போன்ற செயல்களுக்கு ஆயத்தமாக இருந்தார்கள். இளைய நம்பி முதலியவர்கள், முன்னணிப் படையோடு பெரியவர் மதுராபதி வித்தகர் ஓலை மூலம் இட்டிருந்த கட்டளைப்படியே பெருஞ்சித்திரனை அனுப்பிவிட்டு இப்படி ஆயத்தமாகக் காத்திருந்தவர்களுக்குப் பெருஞ்சித்திரன் வெள்ளியம்பலத்துக்கு முன்னால் நடந்த போரில் மாண்டு விட்டான் என்ற செய்தி பெரிதும் அதிர்ச்சியை அளித்தது. “பெருவீரனான ஒரு தமையனையும் களப்பிரர்கள் கொன்று விட்டார்கள். பயந்த சுபாவமுள்ளவனான ஒரு தம்பியையும் இப்போது களப்பிரர்கள் கொன்றுவிட்டார்கள். நான் மட்டும் இந்த அரசைப் போரிட்டு வென்று என்ன செய்யப் போகிறேன்?” என்று கண் கலங்கியபடி மனம் சோர்ந்து பேசினான் இளையநம்பி. காராளரும் கொல்லனும் எவ்வளவோ ஆறுதல்கூறிப் பார்த்தனர். சோர்வின்றி உடனே தாங்கள் உட்கோட்டையில் நுழைந்து தாமதமின்றிக் கோட்டைக் கதவுகளைத் திறந்து வெளியே மதிலை வளைத்துக் கொண்டிருப்பவர்களை உள்ளே ஏற்றுக் கொண்டு வெற்றிக்குப் பாடுபடவேண்டும் என்பதை அவர்கள் இளைய நம்பியிடம் எடுத்துக் கூறினார்கள். “ஐயா! தங்களைப்போல்தான் நீண்ட காலத்துக்கு முன் குருட்சேத்திரப் போர்க்களத்தில் மகாவீரனான அர்ச்சுனனும் சேர்ந்து நின்றான். அப்போது அவன் சோர்வைப் போக்குவதற்குக் கரியமேனிக் கடவுளாகிய கண்ணபிரானே அறிவுரை கூற வேண்டியிருந்தது. தங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு நான் ஞானியில்லை. ஆகினும் ‘அரசகுலத்தோர் போர்க்களத்தில் சோர்ந்து நிற்பது, அறமாகாது’ என்பதை மட்டுமே கூற என்னால் முடியும்” என்றார் காராளர். அவருடைய சொற்களும், பாரதப் போரைச் சுட்டிக்காட்டி அவர் கூறிய போர் அறமும் இளையநம்பியின் தளர்ச்சியைப் போக்கி அவனை உறுதிப்படுத்தின. இரத்தினமாலையும் அவனுக்கு ஆறுதல் கூறினாள். அவளும் கணிகை மாளிகைப்பெண்களும், ‘வாகை சூட வேண்டும்’ என்று வாழ்த்தொலி இசைத்து வெற்றித் திலகமிட்டு இளையநம்பிக்கு விடை கொடுத்தனர். நிலவறைப் படை விரைந்து புறப்பட்டது. காராளரும், கொல்லனும் உபவனத்துக் குறளனும் பின் தொடர இளையநம்பி படை நடத்திச் சென்றான். வெள்ளியம்பலத்தில் படை வெளியேறி மீண்டும் நள்ளிரவில் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் நுழைந்தது. அங்கிருந்து குறளன் காட்டிய நிலவறை வழியே அரண்மனை உட்கோட்டையில் புகுந்தனர். அந்த வழியாக நேரே சென்றால் அழகன்பெருமாள் முதலியவர்கள் அடைக்கப்பட்டிருந்த பாதாளச் சிறைக்கூடம் இருந்த பகுதிக்குள் செல்ல முடியும் என்று குறளன் கூறினான். பெரியவர் கட்டளைப்படி முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை நினைவூட்டினார்கள் காராளரும் கொல்லனும். எல்லாமே திட்டமிட்டதுபோல் காலத்துடன் நிறைவேறின. உட்கோட்டையிலோ, சிறைகூடப் பகுதிகளிலோ இவர்களை எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. அங்கங்கே இருந்த களப்பிர வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்துப் பாண்டியர்களின் மதிற்புற முற்றுகையாகிய உழிஞைப் போரை எதிர்க்க நிறுத்தியிருந்தார்கள். கோட்டை மிக எளிதாக வீழ்ந்துவிடும் என்று உள்ளே நுழைந்ததுமே இளையநம்பிக்குப் புரிந்தது. பெரியவரே தம் ஓலையில் ஒப்பிட்டுச் சொல்லியிருந்ததுபோல் அப்போதுள்ள நிலையில் அது வெறும் மணல்கோட்டைபோல்தான் இருந்தது. எல்லாமே பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன. உள்ளே நுழைந்ததும் இவர்கள் சிறைக்கூடங்களைத் தகர்த்து விடுவித்தபோது அந்த இருட் கூடத்தில் யார் எதற்காகக் கதவுகளை உடைத்துத் தங்களை விடுவிக்கிறார்கள் என்பதை முதலில் அழகன் பெருமாள் முதலியவர்களே புரிந்து கொள்ள முடியவில்லை. அருகில் வந்து தழுவிக் குரல் கொடுத்தபோது தான் நண்பர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். நல்ல உணவும், நல்ல காற்றும், நல்ல ஒளியும் இல்லாமல் அவர்கள் அந்தச் சிறையில் வாடித் தளர்ந்திருந்தனர். பாதாளச் சிறைப் பகுதியிலிருந்து மேற்புறம் அரண் மனைப் பகுதிக்கு வந்தவுடன் அவர்கள் எதிர்பாராதது ஒன்று நடந்தது. உடன் வந்துகொண்டிருந்த திருமோகூர் அறக்கோட்டத்து மல்லன் திடீரென்று வெறி கொண்டவனாக மாறி அருகே நின்றிருந்த கொல்லனின் இடைவாளை உருவிக் கொண்டு, “தென்னவன் மாறனைக் கொன்ற அந்தப் பாவியைப் பழி தீர்க்காமல் விட மாட்டேன்” என்று உரத்த குரலில் சூளுரைத்தவாறே உருவிய வாளுடன் அரண்மனைக் குள் பாய்ந்து ஓடினான். மின்னல் வேகத்தில் புயல் புறப்பட்டதுபோல் பாய்ந்து ஓடிய அவனை யாராலும் அப்போது தடுக்க முடியவில்லை. “மல்லா பொறு... ஆத்திரப்படாதே” என்று காராளர் கூறியதையும் அவன் பொருட்படுத்தவில்லை. இளையநம்பியின் தலைமையில் நிலவறை வழியாக அரண்மனைக்குள் நுழைந்த வீரர்கள் நான்கு வேறு அணிகளாகப் பிரிந்தனர். இளையநம்பி ஓரணியையும், காராளர், கொல்லன், அழகன் பெருமாள் ஆகிய மற்ற மூன்று அணிகளையும் தலைமை தாங்கி நடத்திக் கோட்டைக் கதவுகளைத் திறந்தனர். வெளியே முற்றுகை இட்டிருந்த பாண்டிய வீரர்களும் உள்ளே நுழைந்ததால் பாண்டியர் படைபலம் கடலாகப் பெருகியிருந்தது. கோட்டை வீழ்ந்து விட்டது. அரண்மனை வாயிலில் பல்லாயிரம் பாண்டிய வீரர்கள் வாழ்த்தொலி முழக்க இளஞ்சிங்கம் போல் நின்று கொண்டிருந்தான், இளைய நம்பி. அவன் கண்காணக் களப்பிரர் கொடி கீழிறக்கப்பட்டது. காராளர் முதலியவர்கள் எல்லாரும் பயபக்தியோடு அவனருகே நின்று கொண்டிருந்தனர். அந்த வேளையில் அரண்மனையின் உட்புறமிருந்து அதே பழைய வெறிக்குரலோடும் உருவிய வாளோடும் ஓடி வந்தான் மல்லன். இப்போது அவன் கை வாளில் குருதி படிந்திருந்தது. “பழி தீர்ந்தது... என் எதிரியைக் கொன்று விட்டேன்” என்று வெறியோடு கூவியபடியே ஓடிவந்து அந்தக் குருதி படிந்த வாளை இளைய நம்பியின் காலடியில் வைத்து விட்டு மூச்சு இரைக்க அவனை வணங்கி நின்றான் மல்லன். |