மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

4. புன்னகையும் வார்த்தைகளும்

     கூடற்கோநகரத்தின் வானத்தில் மழை மேகங்களோடு மெல்ல இருண்டு கொண்டு வந்த பின் மாலை வேளையில் மாளிகையின் கூடத்தில் இரத்தினமாலைக்கும் இளைய நம்பிக்கும் இடையே இந்த உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அவள் தரையில் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் அருகே அமர்ந்து அவள் பூத்தொடுக்கும் அழகைக் கண்களாலும் இதயத்தாலும் இரசித்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

     “இரத்தினமாலை! அழகன் பெருமாளும் உபவனத்து நண்பர்களும்தான் களப்பிரர்கள் வசம் சிறைப்பட்டிருக்கிறார்கள் என்று நீ சொல்கிறாய்! ஒரு விதத்தில் பார்க்கப் போனால், நானும் தான் இந்த மதுரை மாநகர எல்லைக்குள் சிறைப்பட்டிருக்கிறேன். அவர்கள் களப்பிரர்களிடம் சிறைப் பட்டிருக்கிறார்கள். நான் நம்மவர்களிடமே சிறைப்பட்டுப் போய்விட்டேன். கொலை செய்யப்பட்டுவிட்ட என் தமையன் தென்னவன் மாறனை அவர்களாலும் மீட்க முடியவில்லை. நான் மீட்பதற்கும் முயல முடியாமல் எல்லாருமாகச் சேர்ந்து என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டீர்கள். இதன் விளைவாகக் களப்பிரர்கள் காட்டில்தான் இன்னும் மழை பெய்துகொண்டிருக்கிறது. அவர்களுடைய நல் வினைக்காலம் இன்னும் முடியவில்லை போலிருக்கிறது.”

     “ஆத்திரம் வரும்போதெல்லாம் உங்களுக்கு இப்படி என்னிடம் ஏதாவது வம்புக்கு இழுத்தாகவேண்டும். என்னைப் போருக்கு இழுக்காவிட்டால் உங்களுக்குப் பொழுது போகாதோ?”

     “கோபித்துக்கொள்ளாதே இரத்தினமாலை! இங்கே நான் செய்ய முடிந்ததாக மீதமிருக்கும் ஒரே போர் இது தான்! வேறு போர்களிலிருந்தும் முயற்சிகளிலிருந்தும் நான்தான் தடுக்கப்பட்டிருக்கிறேனே?...”

     “யார் சொன்னார்கள் அப்படி? நீங்கள் செய்வதற்குப் பெரியபெரிய போர்கள் எல்லாம் மிக அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தெரிந்துகொள்வீர்கள்.”

     “விரைவில் என்றால் எப்போது?”

     “இப்போதே இன்றிரவில் கூட அது தொடங்கப் படலாம்! நான் கூறுவது மெய்...”

     “மெய்யாயிருக்கலாம். ஆனால், நீ ஒன்றை மறந்து விடக் கூடாது இரத்தினமாலை. ஆயுத பலமும், ஆள்பலமும், இல்லாமல் களப்பிரர்களோடு மோத முடியாது. போருக்கு நம்மிடம் வலிமை இல்லை. போரே இல்லா விட்டாலும் ஒரு சிறு கலகம் புரியக்கூட நம்மிடம் ஆள்வலிமை இல்லை...”

     “போருக்கும், கலகத்துக்கும், மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதாய் நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது.”

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.