மூன்றாம் பாகம் - வெற்றி மங்கலம்

5. அணிவகுப்பு

     இரத்தினமாலையைப் பின் தொடர்ந்து போன இளையநம்பி சந்தனம் அறைக்கும் பகுதிக்குச் சென்று நிலவறை வழிக்கான அடைப்புக் கல்லைத் திறந்தபோது, உட்புறம் ஏற்கனவே ஒளி தெரிந்தது. உடனே இளையநம்பி இரத்தின மாலையை நோக்கி, “உன்னை ஆடல் பாடல்களில் வல்லவள் என்பதைவிட ஓர் அரச தந்திர மேதை என்றே சொல்லலாம் போலிருக்கிறதே இரத்தினமாலை! நீ என் வியப்புக்களை ஒவ்வொன்றாக வளரச் செய்கிறாய்” என்றான்.

     “எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வியக்கின்ற வியப்புக்களும் சொல்லுகின்ற புகழ் வார்த்தைகளும் என்னைச் சேரவேண்டியவை அல்ல. அவை பெரியவர் மதுராபதி வித்தகரைச் சேர வேண்டியவை. இந்தக் காரியங்களை எல்லாம் அவரே திட்டமிடுகிறார். அவரே மூலமாக இருந்து இயக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்” என்று இரத்தினமாலை மிகவும் தன்னடக்கமாக மறுமொழி கூறினாள்.

     அங்கே உள்ளே படியிறங்கிப் பார்த்ததும் நிலவறையின் இரு முனைகளிலும் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பாண்டிய வீரர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். அங்கங்கே சொருகியிருந்த தீப்பந்தங்கள் நிலவறையில் மண்டிக்கிடந்த இருளைப் போக்கியிருந்தன. படியிறங்குகிற இடத்தில் திருமோகூர்க் கொல்லன் இளையநம்பியை வணங்கி வரவேற்றான்.

     “எல்லாம் நல்ல ஏற்பாடுதான் இரத்தினமாலை! ஆனால் ஒரே ஒரு சந்தேகம். தந்திரமாக வீரர்களையும் ஆயுதங்களையும் கோ நகருக்குள் வரவழைத்து விட்டோம். உபவனத்திலும், அகநகரில் வெள்ளியம்பல மன்றத்தின் தோட்டத்திலுமாக இரு வேறு முனைகளில் இந்த நிலவறைக்குள்ளே இறங்கி வர வழிகள் இருக்கின்றன. எதிர்பாராதவிதமாகக் களப்பிரர்களின் படைகள் இன்றோ, நாளையோ இந்த இரு முனைகளையும் கண்டுபிடித்து உள்ளே இறங்கி இரண்டு பக்கங்களிலிருந்துமே நம்மை வளைத்துத் தாக்குமானால் நாம் என்ன செய்யமுடியும்?” என்று வினவினான் இளையநம்பி. அவனுடைய இந்த வினாவிற்கு ஒரே சமயத்தில் ஒரே விதமான மறுமொழியை இரண்டு குரல்கள் கூறின.

     “நீங்கள் சொல்கிறபடி செய்வதற்குப் போதுமான வீரர்களோ, ஏற்பாடுகளோ இப்போது களப்பிரர்களிடம் அக நகரில் இல்லை. தவிர இந்த இரு முனைகளிலும் யாத்திரீகர்கள்போல் தங்கி நம்மவர்கள் நூற்றுக்கணக்கில் நிலவறை வழிகளைப் பாதுகாத்து வருகிறார்கள்” என்று இரத்தினமாலையும் கொல்லனும் ஏகக் காலத்தில் கூறவே, இந்த ஏற்பாட்டை அவர்கள் மிகவும் திட்டவட்டமாக முனைந்து செய்திருக்கிறார்கள் என்பது இளையநம்பிக்கு விளங்கியது.

     “பெரியவர் எங்கே இருக்கிறார் என்பதை இப்போதாவது சொல்லமுடியுமா அப்பனே?”என்று இளைய நம்பி கொல்லனை அணுகிக் கேட்டான். கொல்லன் முதலில் மெல்லச் சிரித்தான். பின்பு சில கணங்கள் கழித்து,

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.